 |
ஞாநி
ஒளிவதற்கு இடமில்லை!
சில மாதங்களாக நான் வசித்து வரும் மும்பை மாநகரத்தில், தொடர்ந்து நான்கு நாட்கள் தாங்க முடியாத மழை பெய்ததும், பல நண்பர்கள் ‘‘ஏன் அந்த ஊரில் போய் சிக்கிக்கொள்கிறாய்? திரும்ப சென்னைக்கு வந்துவிடு’’ என்றார்கள். அடுத்து வெயிலடித்த தினத்தில், சிவசேனைக்காரர்கள் பஸ்ஸை எரித்து வன்முறை செய்து, போக்குவரத்தையே நிலைகுலையச் செய்ததும், நண்பர்களின் கவலை அதிகரித்தது. மறுபடி மழை பொழியவேண்டிய நாளில், ரயில்களில் குண்டுகள் வெடித்து, நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோருக்குக் காயங்கள். ‘ஆபத்தான மும்பையில் தொடர்ந்து இருக்கத்தான் வேண்டுமா, திரும்பிவிடு!’ என்று எனக்கு அன்புக் கட்டளைகள் தொடர்கின்றன.
ஆழமாக யோசித்துப் பார்த்தால், ஆபத்திலிருந்து இப்படியெல்லாம் தப்பி ஓடி ஒளிந்துவிட முடியுமா? மும்பையில் மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். எல்லாரும் எங்கே போய் ஒளிவது?
மும்பையில் மட்டுமா குண்டு வெடிக்கிறது? கோவையிலும் வெடித்தது. பெங்களூரிலும் வெடித்தது. ஒவ்வொரு வருடமும் புதுப் புது ஊர்களில் வெடிக்கிறது.
தவிர, சாலை விபத்து, ரயில் விபத்து, விமான விபத்து, கொலை, கொள்ளை, திருட்டு, பயங்கரவாதம் என ஆபத்துகள் பல வடிவங்களில் இருக்கின்றன.
மும்பையில் கலவரம் நடந்த வாரத்தில், சென்னையில் என் உறவினர் வீட்டு ஜன்னல் வழியே நள்ளிரவில் திருடன் எட்டிப் பார்த்ததை, விழித்திருந்த ஒரு குழந்தை பார்த்துவிட்டுக் கத்தியதும், ஓடிப் போனான். இன்னொரு வீட்டில், ஜன்னல் வழியே என் அண்ணன் மகளின் செல்போன், கைப்பைகள் திருடப்பட்டன. அதையடுத்து ஜன்னல் ஓரங்களில் முக்கியப் பொருட்களை வைக்காமல் தவிர்ப்பது, எளிதில் நுழைய முடியாதபடி வாசல் கதவுகளைப் பூட்டிவைப்பது என என்உறவினர்களும் நண்பர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
சாலை விபத்துக்களைத் தவிர்க்க, எச்சரிக்கையுடன் நிதானமாக வண்டி ஓட்டலாம். ஆனால், இது போல் கோவை, பெங்களூர், மும்பை குண்டு வெடிப்புகளை எல்லாம் வருமுன் தவிர்க்க முடியுமா?
இந்தியாவின் மொத்த வருமான வரி வருவாயில், 31 சதவிகிதத்தை மும்பை மட்டும் தருகிறது. சுங்க வரியில் 60 சதவிகிதம் மும்பையின் பங்களிப்பு. எல்லாவிதமான வரிகளின் மூலமாகவும் மும்பை ஆண்டொன்றுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசுக்கு அளிக்கிறது. ‘பதிலுக்கு எங்கள் பாதுகாப்புக்கு என்ன செய்தீர்கள்? எதுவும் செய்ய வில்லையே!’ என்ற கோபக் குரல்கள் மும்பையில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.
கோரிக்கை நியாயமானதுதான். ஆனால், மும்பை கொடுத்த தொகையிலிருந்து மறுபடியும் மும்பைக்கென்றே கணிசமாகச் செலவு செய்தால், மும்பை தெருக்கள் வெள்ளக் காடாகாமல் தடுக்கலாம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். ஆனால், பயங்கரவாதத்தைத் தடுக்க பணம் செலவழித்து பாதுகாப்பு தருவது மட்டுமே போதுமா?
ஒவ்வொரு குண்டு வெடிப்புக்குப் பிறகும், ஒவ்வொரு கலவரத்துக்குப் பிறகும், அரசாங்கங்கள் உடனடியாக போலீஸ், ராணுவ அமைப்புகளின் அதிகாரங்களைக் கூட்டுகின்றன. பொடா, தடா என்ற பெயரில் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பெயரில் அதிகாரம் அதிக ரிக்கப்படுகிறது. ஆள் பலமும் கூட்டப் படுகிறது. ஆனால், மறுபடியும் இன்னொரு முறை குண்டுகள் வெடிக்கின்றன... இன்னொரு இடத்தில்; இன்னொரு வழிமுறையில்!
பயங்கரவாத நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், தேசமே பரபரப்பாக விவாதிப்பது என்ன? இது எப்படி நடந்தது? எங்கிருந்து வந்தார்கள்? யார் அனுப்பினார்கள்? எப்படி குண்டு வைத்தார்கள்? அதை யார் கண்டுபிடிக்கத் தவறினார்கள்? இந்த விவாதமும் ஆராய்ச்சியும் தேவைதான். ஆனால், இவை பயங்கரவாதத்தை தடுக்கவோ, தவிர்க்கவோ, புரிந்துகொள்ளவோ போதாது.
பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எது? எப்படி நடந்தது என்ற ஆராய்ச்சியுடன், ஏன் நடந்தது என்பதும் யோசிக்கப்பட வேண்டும். எல்லை தாண்டி நின்று ஒருவர் தூண்டினார் என்றால், தூண்டினவரின் நோக்கத்தை எளிதில் யூகிக்கலாம். ஆனால், இங்கேயே இருக்கும் தூண்டப்படுபவர் ஏன் அந்தத் தூண்டுதலுக்கு இரையாகிறார் என்று யோசிக்கவேண்டும்.
சமூகத்தில் அதிருப்தியும், சமூக அமைப்புகள் மீது நம்பிக்கையின்மையும்தான் பயங்கரவாதத்தின் ஆரம்ப விதைகள். சாதி, மதம், வர்க்கம், மொழி, இனம் எனப் பல அடிப்படைகளில் பிரித்துப் பார்க்கப்படும் சமத்துவமில்லாத சமூகம் நாம். இதே அடிப்படைகளில் சம வாய்ப்புகளும் இல்லாத சூழல் நிலவும் சமூகம் நம்முடையது.
இந்த நிலை தொடரும்வரை எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எதன் பெயரிலும் தூண்டிவிடுவதோ, மூளைச் சலவை செய்து தற்கொலைப் படையாக்குவதோ, பயங்கரவாத திட்டத்தின் முழுமை தெரியாமலே அதன் கருவியாக வேலை செய்ய வைப்பதோ மிகவும் சுலபம்.
சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு தளத்திலும் எல்லா மொழி, இன, மத, சாதி, வர்க்கத்தினருக்குச் சம வாய்ப்பு உறுதி செய்யப்படும்வரை, பயங்கரவாதத்துக்குச் சிப்பாய்கள் கிடைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அவர்களை இயக்குவது உணர்ச்சிவெறியாக இருக்கலாம். ஆனால், அதன் உந்துசக்தியாக இருப்பது சமூக அதிருப்திதான். அந்த அஸ்திவாரம் தகர்க்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தில் நிலவும் பல்வேறு அதிருப்திகளை, பல லட்சக்கணக்கான போலீஸாரால், ராணுவத்தினரால் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், சில நூறு அரசியல்வாதிகளாலும், உளவுத் துறையினராலும் கண்டறிய முடியும். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகளும் சரி, உளவுத்துறை போன்ற நிர்வாக அதிகாரிகளும் சரி, உடனடி தற்காலிக லாபங்களுக்கு மட்டுமே வேலை செய்கிறார்கள்; தொலைநோக்கில் அல்ல!
ஒரு சமூகத்தின் அதிருப்திகளுக்கு முதலில் வடிகால் வேண்டும். எல்லா அதிருப்தி உணர்ச்சிகளும் விவாதிக்கப்படக்கூடிய களம் வேண்டும். தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு அதிருப்தியாளருக்கும் ஏற்படவேண்டும். அது இல்லாதபோது பயங்கரவாதத்துக்குப் பலம் கூடிவிடும்.
ஒரு ஜனநாயகத்தில் பயங்கரவாதத்தைத் தடுக்க, பயத்தைப் பயன்படுத்த முடியாது. மக்களைப் பயமுறுத்தி அமைதியாக இருக்கச் செய்வது, சர்வாதிகாரத்துக்கே சாத்தியம். ஜனநாயகத்தின் அடிப்படையே ‘இதில் எனக்கும் பங்கு இருக்கிறது; எனக்கும் அதிகாரம் உண்டு’ என்று ஒவ்வொருவருக்கும் ஏற்படும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை, அரசாங்கத்தின் பகிரங்க செயல்பாடுகளால் மட்டுமே வர முடியும்.
செக்ஸ் பற்றிப் பகிரங்கமாக விவாதிக்கவேண்டிய அவசியம் நாட்டுக்கு வந்துவிட்டது என்று, சென்ற டிசம்பர் எய்ட்ஸ் தினத்தில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். (இன்னமும் விவாதம் தொடங்கவில்லை என்பது வேறு விஷயம்.) அதே போல, பகிரங்கமாக விவாதிக்க வேண்டிய இன்னொரு விஷயம், நம்முடைய வெளிநாட்டுக் கொள்கைகள். முன்பு எப்போதையும் விட, அமெரிக்காவுடன் இன்று நாம் அணி சேர்ந்துவிட்டதால், அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத சக்திகளின் ஹிட் லிஸ்ட்டில் நாமும் சிக்கிவிட்டோமா என்று விவாதிக்கவேண்டும். அணி சேரா நாடாக நாம் நீடித்திருந்தால், இன்று மேலை நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதிகளைக்கூட பேச்சு வார்த்தை மேசைக்கு இழுத்து வரும் வல்லமை நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டோமா என்று ஆராய வேண்டும்.
உள்ளூர் போலீஸின் உளவுப்பிரிவின் தோல்விகள் முதல் வெளியுறவுக் கொள்கைக் கோளாறுகள் வரை எதையும் இனி ஒளிக்க முடியாது. ஒளிக்கலாகாது. ஒளிக்க ஒளிக்க, சிக்கல்கள்தான் அதிகமாகும்!
எதிலும் ஒளிவுமறைவு இல்லாத செயல்பாடு வேண்டுமென்ற விதத்தில், விஜய்காந்த் ஸ்ரீரங்கம் சென்றபோது, கோபத்தில் தன் உதவியாளரை பெரும் மக்கள் திரளுக்கு முன்னே பகிரங்கமாகக் கன்னத்தில் அறைந்ததை வரவேற்கிறேன்!
கோபமும், இன்னொருவரை அடிப்பதும் நிச்சயம் தவறுகள்தான். குற்றம்தான். ஆனால், அரசியல்வாதிகள் அதை ரகசியமாகச் செய்துவருகிறார்கள். Ôஒரு தலைவர் தஞ்சாவூர் வட்டாரத்துக் கெட்ட வார்த்தை வசவுகளைப் பொழிவதிலும், போனில் கூப்பிட்டு எரிந்துவிழுவதிலும் புகழ் பெற்றவர். இன்னொரு தலைவர் கோபத்தில் செருப்பை எடுத்தே அடித்து விடுவார். பிறிதொருவர் பெல்ட்டால் அடித்திருக்கிறார். இன்னொருவர் பாதி வழியில், உச்சி வெயிலில் பொட்டல் காட்டில் காரிலிருந்து இறக்கிவிட்டு நடக்கச் சொல்லித் தண்டித்தவர்Õ என்றெல்லாம் அரசியல் தலைவர்கள் சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால், இதில் எதுவும் மீடியாவில், பத்திரிகைகளில் அப்பட்டமாக வந்துவிடாமல் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அந்த அரசியல் வழிமுறையைப் பின்பற்றாமல், விஜய்காந்த் வெளிப்படையாக நடந்துகொண்டதைத்தான் வரவேற்கிறேன்!
உரிமையோடு அறைந்த தன் பால்ய கால நண்பர் ரவிக்கு, அதேபோல் தன்னை அறையும் உரிமையை விஜயகாந்த் இந்தப் பொது வாழ்க்கையில் ஏற்படுத்தித் தந்தால் மகிழ்வேன்!
தவிர, தலைவர்கள் இனி இன்னொன்றை உணர வேண்டும். முன்பு எப்போதையும்விட, இன்று பத்திரிகைகளும் மீடியாவும் பல்லாயிரம் கண்களுடன் வலம் வருகின்றன. யாருக்கும் இங்கே முன்புபோல் ஒளிவதற்கு இடமில்லை!
ஆனந்தவிகடன் – 30/7/2006
|