 |
ஞாநி
அன்பெனும் அடைக்கும் தாழ்!
ஒவ்வொரு விஷயத்திலும் பெண் உரிமை, பெண் சமத்துவம் என்றெல்லாம் வலியுறுத்தி வருபவர்கள் அவ்வப்போது சில ‘சங்கடமான’ கேள்விகளைச் சந்திக்க நேர்வதுண்டு. உண்மையில், அவை சங்கடமான கேள்விகள் அல்ல; கேட்பவர்கள் அப்படி நினைத்துக்கொள்ளக்கூடும். அவ்வளவுதான்!
அண்மையில், இந்த வகையில் என்னிடம் பலர் எழுப்பிய கேள்வி... ‘இந்த மாதிரிப் பெண்களுக்கு எல்லாம் உரிமையும், சமத்துவமும் தேவையா? அதெல்லாம் கொடுத்தால், இதைவிட மோசமாக நடக்க மாட்டார்களா?’
இந்தக் கேள்விக்குக் காரணமாக அமைந்தவை இரண்டு கொலைகள். தலைச் சுற்றுலாவுக்குச் (ஹனிமூன் - தலைதீபாவளி போல) சென்ற இடத்தில் ஒரு கணவனும், கணிசமான காலக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு ஒரு கணவனும் அவரவர் மனைவிகளால் கொல்லப்பட்ட நிகழ்ச்சிகள்!
கணவனைக் கொன்ற ‘பத்தினி’கள் வழக்குகளில் அசல் உண்மை எது, போலி உண்மை எது என்பதை விசாரணைகளும் நீதிமன்றங்களும்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் ஊடகங்களில், பத்திரிகைகளில் வரும் தகவல்களின் அடிப்படையில் பலரும் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு, முதலில் எழுப்பும் கேள்வி... ‘இப்படிப்பட்ட பெண்களுக்கு உரிமை வேண்டுமா? சமத்துவம் வேண்டுமா?’
ஒரு பாலியல் தொழிலாளியைக் காவல் நிலையத்தில் வன்புணர்ச்சி செய்யும்போதும், ஒரு மனைவியுடன் அவள் விருப்பத்துக்கு மாறாகக் கணவன் உறவு கொள்ளும்போதும், ‘இதிலென்ன தப்பு?’ என்ற தொனியில் சிலர் பேசுவதுண்டு. ‘தன் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்யும்படி எந்த மனிதரையும் இன்னொரு மனிதர் நிர்ப்பந்திக்கக்கூடாது’ என்பதுதான் ஆரோக்கியமான மனித உறவுகளுக்கான அடிப்படை விதி.
இரண்டு கொலைநிகழ்ச்சிகளிலும் இதுவரை வந்திருக்கும் தகவல்களில் தெரியவரும் முதல் உண்மை, சம்பந்தப்பட்ட பெண்களுக்கு விருப்பம் இல்லாத உறவுகளில் அவர்கள் தொடர்ந்து இருக்கும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதாகும். அதன் விளைவாக, விருப்பமான உறவை ரகசியமாகவும், திருட்டுத்தனமாகவும் தொடரவேண்டியவர்கள் ஆகிறார்கள்.
தனக்கு விருப்பம் இல்லாத ஒன்றைத் தொடர்ந்து செய்யும்படி கட்டாயப்படுத்தப்படும் மனிதர், அடுத்து எப்படிப்பட்டவராக ஆவார்? மூன்றே மூன்று சாத்தியங்கள்தான் உள்ளன. தன் மீதுள்ள தளையை அறுத்து எறியும் புரட்சிக்காரராக ஆகலாம். இது தளையே இல்லை, சுகமான சுமைதான் என்று ஏற்றுக்கொண்டுவிடும் அடிமை ஆகலாம். தன் மீது கவிந்திருக்கும் இரண்டு வகை வாழ்க்கைகளின் துன்பங்களும் கூடாது; இரண்டின் இன்பங்கள் மட்டுமே வேண்டும் என்று அதற்காகத் தந்திரோபாயங்களை வகுத்து, சூழ்ச்சிகள் செய்து சுயநலத்தின் உச்சத்தில் குற்றவாளிகள் ஆகலாம். இதில் ஆண்&பெண் வேறுபாடு இல்லை. இருபாலார்க்கும் பொது நீதி இது.
நமது சமூகத்தில், முதல் வகையினர் மிகக் குறைவு. கடைசி வகையினர் அதைவிடச் சற்று அதிகம். இரண்டாம் வகை வாழ்க்கையைத்தான் பெரும்பாலோர் வாழ்கிறோம். நம்பர் டூ நபர்களுக்கு நம்பர் த்ரீ குற்றவாளி ஆகவும் விருப்பம் இல்லை; நம்பர் ஒன் புரட்சியாளர் ஆகவும் துணிச்சல் இல்லை. ஆனால், இந்த நடுநிலைப் பிரிவிலிருந்துதான் புரட்சியாளரும் வருவார்; குற்றவாளியும் உதிப்பார். நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிற அடிமைத்தனத்தில் இருந்து நமக்கே சகிக்கமுடியாத அலுப்பு ஏற்படும்போது, எந்தப் பக்கம் குதிக்கப் போகிறோம் என்பதுதான் கேள்வி.
மாட்டிக்கொள்ளாதவரை குற்றவாளிகளாக இருப்பதைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றொரு கோட்பாடு நாளுக்கு நாள் இங்கே வலுவடைந்து வருகிறது. மாட்டிக்கொண்டுவிடுவோம் என்கிற பயமே பலரைக் குற்றவாளிகள் ஆகாமல் தடுத்துக்கொண்டும் இருக்கிறது. இந்த மனப்பான்மைகளை நமது கல்வியும், குடும்பமும், அரசியலும்தான் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றன.
எது குற்றம் என்பதைப் பற்றிய சமூக வரையறைக்கும், சட்ட வரையறைக்கும், தனி மனிதர் கருத்துக்கும் தொடர்பு இல்லாதபோது, குழப்பங்கள் அதிகரித்து குற்றங்களும் அதிகரிக்கின்றன.
பரபரப்பாக ஒரு மாதத்துக்கு மேலாக விவாதிக்கப்பட்டு வரும் இரு கொலை நிகழ்ச்சிகள் பற்றி இதுவரை கூறப்பட்டுள்ள ‘உண்மைகளின்’ அடிப்படையில் பார்ப்போம். (பின்னர், முற்றிலும் வேறுவிதமான ‘உண்மைகள்’ வந்தாலும், அலசலின் லாஜிக் மாறிவிடாது.)
ஒரு பட்டதாரிப் பெண், படிக்காத ஆட்டோ டிரைவரைக் காதலிக்கிறாள். அவனையும் படித்தவனாக ஆக்க முயற்சிக்கிறாள். அவளுடைய பெற்றோர் இந்த நட்பை ஏற்கவில்லை. வேறு இடத்தில் அவளுக்குத் திருமணம் செய்கிறார்கள். விருப்பமில்லாத திருமணம். தலைச்சுற்றுலாவுக்குச் சென்ற இடத்தில் காதலனுடன் சேர்ந்து, கணவனைக் கொன்றுவிடுகிறாள்.
‘அப்பாவியான அவனை ஏன் கொல்லவேண்டும்? பெற்றோர் சொன்னதைப் பொருட்படுத்தாமல், காதலனுடன் ‘ஓடிப்’போய் வாழ்ந்திருக்கக்கூடாதா?’ என்று கேள்வி எழுகிறது. செய்திருக்கலாம்தான். அப்படிச் செய்திருந்தால், அந்தப் பெண் புரட்சிக்காரி ஆகியிருப்பாள். ஆனால், பெற்றோரை மீற முடியவில்லை. மீற முடியாததற்குப் பாசம், அவர்களுடைய கவுரவம் என எத்தனையோ வகைக் காரணங்கள். ‘சரி, மீறாமல் கல்யாணம் செய்துகொண்டதும், காதலனை மறந்துவிட்டு, கிடைத்த கணவனுடன் வாழ்ந்துவிட்டுப் போவதுதானே? நாங்களெல்லாம் அதைத்தானே செய்கிறோம்?’ என்று இன்னொரு தரப்பில் கேள்வி. அப்படிச் செய்திருந்தால், அந்தப் பெண் ஆயிரமாயிரம் அடிமைப் பெண்களில் இன்னொருத்தியாக வாழ்ந்திருப்பாள். தவிர, காதலனை அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது என்பதற்கும் வகை வகையான காரணங்கள் இருக்கமுடியும். எஞ்சியிருக்கும் ஒரே சாத்தியப்படி, இரு வேறு உலகத்தின் இன்பத்தையும் அனுபவிக்க விரும்பி, குற்றவாளியாகிவிட்டாள்.
இன்னொரு பெண், விருப்பமில்லாதபோதும் குடும்பக் கஷ்டநிவாரணத்துக்காக தாய் மாமனை மணந்திருக்கிறாள். இன்னொரு உறவுப் பையனுடன் ஏற்பட்ட காதல் உறவு ரகசியமாகப் பல காலம் நீடிக்கிறது. அது அம்பலமான பிறகு, காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்கிறாள்.
‘ஐயோ, ஏன் கொல்லவேண்டும்? விருப்பமில்லாத கணவனை விவாகரத்து செய்துவிட்டுக் காதலனுடன் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமே?’ என்றால், ...கலாம்தான். அது புரட்சியாக இந்தச் சமூகத்தில் கருதப்படும். புரட்சிக்கும் பயந்து, சராசரி அடிமைத்தனத்தில் வாழவும் விரும்பாத மனம், குற்றவாளியாகத்தான் மாறும்.
இந்தக் குற்றங்களின் வேர் எங்கே இருக்கிறது?
திருமணம், குடும்பம் பற்றிய நம்முடைய பார்வைகளில் தொடங்குகிறது. விருப்பமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி ஒன்று சேர்க்கும் அதிகாரம் தங்களிடம் இருப்பதாக ஒவ்வொரு பெற்றோரும் நம்புவதில் இருக்கிறது. விரும்புகிறவர்களைப் பிரிப்பது அவர்கள் நன்மைக்காகத்தான் என்று அன்பின் பெயரால் அதிகாரம் செலுத்துவதில் இருக்கிறது. விவாகரத்து என்பதைச் சட்டம் அங்கீகரித்தாலும், மதத்தின் பெயராலும், மரபுகளின் பெயராலும் அதைப் பாவச் செயலாகவே சமூகம் கருதுவதில் இருக்கிறது.
திருமணம் மட்டுமல்ல, குழந்தைகளின் கல்வி முதல் கலாசாரப் பழக்க வழக்கங்கள் வரை எல்லாமே அவர்கள் மீது நம் விருப்பங்களைத் திணிக்கும் விஷயங்களாக இங்கே மாற்றப்பட்டுவிட்டன. எல்லாம் அன்பின் பெயரால்தான்!
இந்த நிர்ப்பந்தங்கள் ஒவ்வொன்றும் எதிர்காலக் குற்றத்தின் விதையா, புரட்சியின் விதையா என்று அறிய முடியாமல் காத்துக்கொண்டு இருக்கின்றன. விதைகள் அழுகி, விளைச்சலே இல்லாத அடிமைத்தனமாக மாறிவிடும் வரையில், சமூக ‘நிம்மதி’ காப்பாற்றப்படுகிறது.
‘குற்றவாளிகள்கூட சமூகத்துக்கு நன்மை தருகிறார்கள்’ என்பார் கார்ல் மார்க்ஸ். ஏனென்றால், ஒவ்வொரு புதுக் குற்றத்துக்குப் பின்னர்தான், அது தொடர்பான நீதிக் கொள்கையை (யிuக்ஷீவீsஜீக்ஷீuபீமீஸீநீமீ) சமூகம் வகுத்துக்கொள்ள முடிகிறது.
சமூகத்தில் நடக்கும் எந்தக் குற்றமும் நியாயப்படுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால், ஒவ்வொரு குற்றத்துக்கும் அதனதன் நியாயம் என்று ஒன்று இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த நியாயத்தை அதற்கு வழங்குவது, சமூகத்தின் சட்டத் தவறுகளும், கலாசாரக் கோளாறுகளும் ஆகும். அவற்றைக்களையும்படி நமக்கு அடிக்கும் எச்சரிக்கை மணிகளாகவே இத்தகைய கொலைகளைப் பார்க்க வேண்டும்.
‘அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ என்றார் வள்ளுவர். அன்பே அடைக்கும் தாழ் ஆகமுடியும் என்கிறது நிகழ் காலம்!
ஆனந்தவிகடன் – 23/7/2006
|