 |
ஞாநி
சட்டசபையில் ‘ருசிகர’ சம்பவம்?!
ஜெயலலிதா பள்ளி இறுதி வகுப்பில் கணக்கில் 200க்கு 200 வாங்கினாரா இல்லையா என்கிற சர்ச்சை, தமிழக சட்டப் பேரவையில் நடந்திருக்கிறது. சர்வ தேச முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னைக்குப் போதுமான விவாத நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பது குறித்து, உலக அரசியல் நோக்கர்களுக்கெல்லாம் ஒரே கவலை.வரவு&செலவு திட்ட விவாதங்கள் முடிவடைவதற்குள் எப்படியும் இந்தப் பிரச்னைக்குப் போதுமான நேரமும், கவனமும் கிடைக்க அவைத் தலைவர் ஆவன செய்துவிட வேன்டும் என்று தமிழர்கள் பிரார்த்திக்கலாம்!
நிமிடத்துக்குப் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு பிடிக்கும் சட்டப் பேரவை, மக்களவைக் கூட்டங்களில் எந்த அளவுக்குப் பயனுள்ள விவாதங்கள் நடக்கின்றன என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். ‘சட்ட சபையில் ருசிகர சம்பவம்’ என்ற தலைப்பில் பத்திரிகைகளை ஆக்கிரமிக்கும் விஷயங்களுக்கெல்லாம், எவ்வளவு நேரமும், பணமும் செலவாகியது என்று ஆய்வு செய்தால், ரத்தம் கொதிக்கும்.
எதையுமே பொழுதுபோக்கு அம்சமாகமாற்றி விடும் இயல்பு, தமிழ் மரபில் இருப்பதாகத் தோன்றுகிறது. அதனால்தான் காலங்காலமாக, ‘படி தாண்டாப் பத்தினி’, ‘நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்’ என்று ருசிகர விவாதங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன.
ஜெயலலிதா ஆட்சியின்போது, தினசரி ஜெயா டி.வி&யில் ஒளிபரப்பப்பட்ட சட்டப் பேரவை நிகழ்ச்சித் தொகுப்பின் டி.ஆர்.பி. ரேட்டிங், மெகா சீரியல்களுக்குச் சமமானதாகவே இருந் திருக்க வேண்டும். மற்றபடி அரசியலில் துளியும் அக்கறையோ, அறிவோ இல்லாத பல இளைஞர்கள் என்டர்டெயின்மென்ட்டாக அதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அன்றைய சட்டப் பேரவையின் என்டர்டெயின்மென்ட் வேல்யூவுடன் ஒப்பிடும்போது, இப்போது குறைவாகவே இருக்கிறது. தலைவி நாமாவளிகள், தலைவியின் தடாலடி குறுக்கீடுகள் இல்லாததே இதற்குக் காரணம்.
வரவு & செலவு பற்றிய புள்ளிவிவரங்கள், திட்ட ஒதுக்கீடுகள் போன்ற வறட்சியான விஷயங்களைப் பேசுவதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் அலுப்பைப் போக்கிக்கொள்ள இப்படி அவ்வப்போது வெட்டி அரட்டைகள் அவர்களுக்குத் தேவைப்படுகின்றனவா என்று உளவியல் மருத்துவர்கள்தான் ஆராய வேண்டும்.
கணக்குப் பாடத்தில் ஜெயலலிதா 42 வருடங்களுக்கு முன்னால் வாங்கிய மதிப்பெண்கள் இப்போது ஏன் விவாதிக்கப்படுகின்றன? தன்னைப் பெரும் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள ஒரு தரப்பும், நீ ஒன்றும் அந்த அளவுக்குப் புத்திசாலி இல்லை என்று காட்ட இன்னொரு தரப்பும் நடத்தும் அற்ப அரசியலே காரணம்.
பள்ளிக்கூடக் கணக்கு மதிப்பெண்ணுக்கும், அரசியல் கணக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கணக்கில் ஜெயலலிதா அளவுக்கு மார்க் வாங்காத கருணாநிதியைவிட, அரசியலில் ஜெயலலிதா போட்ட தப்புக் கணக்குகளே அதிகம்.
அரசியல்வாதிகளின் படிப்பறிவு, பட்டம், மதிப்பெண், கோல்ட் மெடல் விவரங்கள் விவாதிக்கப்படுவது தமிழக அரசியலில் மட்டுமல்ல; இந்திரா காந்தி லண்டனில் என்னதான் படித்தார், ராஜீவ் காந்தி எதில் ஃபெயிலானார், சோனியா காந்தி உண்மையில் பட்டதாரியா இல்லையா என்ற சர்ச்சைகளை வடக்கே அவ்வப்போது சுப்பிரமணியம் சுவாமி போன்ற சிலர் எழுப்புவது உண்டு.
அரசியல்வாதியின் படிப்பு விஷயங்கள் சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உட்படுத்தப்படுவதில் இரு அணுகுமுறைகள் உள்ளன. ஒரு தலைவரை ஒன்றும் தெரியாதவர் என்று காட்டுவது ஒன்று; எல்லாம் தெரிந்தவர் என்று காட்டுவது இன்னொன்று. இந்தப் போக்கை நமது தலைவர்களே ஊக்குவிக்கிறார்கள். எழுத்தறிவு இல்லாத மக்கள் அதிகம் இருக்கும் நமது சமூகத்தில் தலைவர்கள் ரொம்பப் படித்தவர்கள் என்ற பிம்பத்தை அவ்வப்போது காட்ட முயற்சிப்பது உண்டு. இந்திரா காந்தி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களுடன் இலக்கிய விவாதம் நடத்துவார். கருணாநிதியும், வைகோவும் தங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் வந்தால் பயன்படுத்துவார்கள். நிபுணர்கள் கூட்டத்தில் முழு ஆங்கில உரையை வாசிப்பது, அல்லது ஒரு நீண்ட ஆங்கில மேற்கோளைப் படித்துக் காட்டிக் கைதட்டல் வாங்குவது எல்லாம் இதற்கான சில உத்திகள். தங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள முயற்சிக்காமல் இருந்த, மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் காமராஜரும், எம்.ஜி.ஆரும்தான்.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளில், பெரும்பாலான காலம் ஆட்சிப் பொறுப்பு பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள் வசம்தான் இருந்திருக்கிறது. தங்கள் படிப்பறிவைப் பற்றி அரசியல்வாதி களுக்கு இருக்கும் சுய மதிப்பீடுகள், அரசு நிர்வாகத்தை இயக்கும் படிப்பாளிகளுடன் அவர்கள் கொள்ளும் உறவைத் தீர்மானிக்கின்றன.
கருணாநிதியும் ஜெயலலிதாவும், அரசு அதிகாரிகளைவிடத் தாங்கள் மெத்த அறிந்தவர்கள் என்ற தோரணையில் இயங்குபவர்கள். எம்.ஜி.ஆரும், காமராஜரும் படித்தவர்களின் அறிவுக்கு மரியாதை அளித்து, அவர்களை இயக் கியவர்கள். அதிகாரத்தில் அமர்ந்த பின், இன்னும் கற்க நிறைய இருக்கிறது என்ற அடக்க உணர்வை வெளிப்படுத்தியவர், மெத்தப் படித்தவரான அண்ணா.
டாக்டர், வக்கீல், கணினி நிபுணர், ஆடிட்டர் என எந்தத் தொழிலானாலும் அதற்குத் தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது; ஆனால், அரசியல்வாதிகளுக்குத்தான் எந்தத் தகுதி நிர்ணயமும் இல்லை என்று அங்கலாய்ப்பது, படித்த நடுத்தர வர்க்கத்தின் இயல்பாக இன்று இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கூக்குரல் கிளம்புகிறது. இத்தகைய சூழலில்தான், நடுத்தர வர்க்கத்தைத் திருப்திப்படுத்த, தங்கள் படிப்பறிவை அரசியல்வாதிகள் அவ்வப்போது பல வழிகளில் காட்டிக்கொள்ள முயற்சிக் கிறார்கள்.
அரசியல்வாதிக்குத் தகுதிகளை நிர்ணயிக்க முடியுமா? முடியும். நிர்ணயிக்க வேண்டும். ஆனால், அவை இதர தொழில்களுக்கு இருப்பதைப் போல இருக்க முடியாது. காரணம், அரசியல் ஒரு தொழில் அல்ல என்பதுதான். அது அப்படி ஆக்கப்பட்டு இருப்பதை நாம் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ கூடாது.
அரசியலுக்குச் சமூகத்தின் எந்தத் தொழிலில் இருப்பவரும் வரலாம்; விவசாயி முதல் நடிகர் வரை இதற்கு வரலாம் என்று இருப்பதே இது தொழில் அல்ல, தொண்டு என்பதால்தான்!
டாக்டர் தொழிலின் கடமை நோயாளியைக் குணப்படுத்துவது. எனவே, அவர் அதற்கான வழிகளைக் கற்றிருக்க வேண்டும். அதற்கான பாடத்திட்டம், கல்லூரிகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது போல, அரசியலின் நோக்கம் என்ன என்று வரையறுத்துக் கொள்வோம். பணம் குவிப்பது, அதிகார அராஜகம் செய்வது என்று ஆக்கப்பட்டு இருப்பதுதான் சிக்கல். அசல் நோக்கத் தைச் சிதைப்பது என்பது மருத்துவம் முதல் மீடியா வரை எல்லாத் துறை களிலும்தானே நடக்கிறது! அதற்காக நோக்கத்தையே மாற்றி வரையறுத்துவிட முடியாதல்லவா!
எனவே, அரசியலின் நோக்கத்தை வரையறுக்க, அரசியல்வாதியின் இன்னொரு பெயர் ‘மக்கள் பிரதிநிதி’ என்பதைக்கொண்டு தீர்மானிக்கலாம். மக்களின் தேவைகளை நிர்வாக இயந்திரத்தின் துணையுடன் பூர்த்திசெய்வதுதான் அரசியல்வாதியின் நோக்கம், கடமை என எளிமைப்படுத்தி வைத்துக்கொள்ளலாம்.
சரி, இதைச் செய்ய வேண்டிய அரசியல்வாதிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்?
மூன்று தகுதிகள்தான். மக்களின் நிஜமான தேவைகள் என்ன என்று அவர்களுடன் நெருங்கிப் பழகி அறியும் ஆற்றல். அதை நிறைவேற்ற வேண்டிய நிர்வாக இயந்திரத்தைச் செயல்பட வைக்கும் துடிப்பு. அந்தச் செயல்பாட்டில் நேர்மை. மூன்றில் எந்த ஒன்று இல்லாதவர்களைத் தேர்வு செய்தாலும், அது மக்கள் போட்ட தப்புக் கணக்காகிவிடுகிறது.
ஆனால், இன்று நம்முடைய பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை உள்ள பாடத்திட்டங்களில் இந்த மூன்று தகுதிகளையும் கற்றுத் தர வழிவகை இல்லை. குடும்பமும், பள்ளியும் இந்த மூன்று தகுதிகளையும் ஒருவருக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு அரசியலுக்கு யார் எந்தத் துறையிலிருந்து வந்தாலும் மக்களுக்குச் சிக்கல் இருக்காது. மக்கள் மன்றங்களின் நேரங்களும், ‘ருசிகர’ சம்பவங்களில் வீணாகிக்கொண்டு இருக்காது.
ஆனந்தவிகடன் – 20/8/2006
|