 |
கு.சித்ரா
வள்ளுவனைத் தேடி
பெண்களை கொன்றழிக்கும் அரைத்தல், கரைத்தல், சமைத்தல், துவைத்தல், கழுவுதல் போன்ற நச்சு வேலைகளிலிருந்து, அவ்வப்போது என்னைத் துண்டித்துக் கொண்டு, மனிதர்களின் கரங்களும், கால்களும் பட்டு அதிகம் மாசுபடாத, மழை மறைவு பிரதேசங்கள் போல, மனித மறைவு பிரதேசங்களை நாடிச் செல்வது என் வழக்கம். இது போன்ற பயணங்கள் என்னை நானே புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய சிந்தனைக்கு ஊற்றுக்கண்ணாகவும் உதவும். மிகப் பெரும்பாலும் தனியாகத்தான் செல்வது வழக்கம். அப்படி சமீபத்தில் நான் சென்று வந்த இடம் தான், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள பொன்னூர் மலை
சென்னையிலிருந்து 3 மணி நேர பயணத்தில் வந்தவாசி. இது மெல்ல மெல்ல பேரூராக முயன்று கொண்டிருக்கும் ஒரு சிற்றூர். கடும் காவி நிறத்தில் இனிப்புகளும், அதைவிட அழுத்தமான நிறங்களில் சேலைகளும், காட்டுப்பூக்களினாலான கதம்பச்சரங்களுமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த 10/20 கடைகளின் நடுவே அமைந்திருந்தது பேருந்து நிலையம். இங்கிருந்து உள்ளூர் பேருந்தில் அரை மணி நேர பயணத்தில் அமைந்திருப்பது தான் பொன்னூர் மலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்களும் அதன் பசுமையும், ஓங்கி உயர்ந்த மலைகளும் அவற்றின் ஆளுமையும், பெயர் தெரியாத பறவைக் கூட்டங்களும் அவற்றின் விதவிதமான சப்த ஜாலங்களும், காற்றில் கசிந்து வந்த மூலிகைகளின் பச்சை வாசமும், மரங்களில் கூட்டம் கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்த நம் மூதாதையர்களும், இவற்றையெல்லாம் உள்ளடக்கி, என்னை இறுகக் கட்டித்தழுவிய அமைதியும், ஏகாந்தமும், எத்தனைக் கோடி இன்பமடா மனிதா உனக்கு.
தமிழகத்தின் பகுதிகளான காஞ்சிபுரம், செஞ்சி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி போன்ற இடங்களில் சமணர்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய சித்தாந்தப்படி, திருக்குறளை இயற்றியவர் குந்தகுந்தர் எனப்படும் அவர்களுடைய ஆச்சாரியார் ஆவார். இவர் கி.மு 52 முதல் கி.பி.45 வரையான 96 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். இவருக்கு பத்மநந்தி, வக்கிரகிரிவர், ஏலாச்சாரியார் போன்ற பெயர்களுமுண்டு. இவரைப்பற்றிய பாடல்கள் சிலாசாசனமாக சிரவணபெலகோலாவிலுள்ளது. இப்போது கடலூர் என்றழைக்கப்படும் ஊர் அந்நாட்களில் திருப்பாதிரிப்புலியூர் என்றழைக்கப்பட்டது. அந்த ஊரிலிருந்த சமண சங்கத்திற்கு தலைவராகவும் இவர் இருந்துள்ளார். மிகப்பெரும் அறிஞரான இவர் பிராகிருத மொழியில் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றுள் பஞ்சாஸ்தி காயம், பிரவசனசாரம், ஸமயசாரம் என்ற மூன்று நூல்கள் மிகச்சிறந்தவையாகும். இம்மூன்றும் “பிரப்ருதத்திரயம்” என்றழைக்கப்படுகிறது.
இவ்வாச்சாரியார் தமிழில் ஒரே ஒரு நூல் இயற்றியுள்ளார். அதுவே உலகப்பொதுமறை என்றழைக்கப்படும் திருக்குறளாகும். குந்தகுந்தர் என்பவர் தான் திருவள்ளுவர் என்பதும், திருக்குறள் முழுக்க முழுக்க சமணத்தத்துவத்தை பிழிந்தெடுத்து வார்க்கப்பட்டிருக்கும் நூல் என்பதும், அத்தகைய திருக்குறளை, அவர் பொன்னூர் மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் இயற்றினார் எனவும் பின் அங்குதான் முக்தியடைந்தார் என்பதும் சமணர்களின் நம்பிக்கை. இதை நம் காலத்திய அறிஞர்கள் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இவருடைய நினைவாக ஒரு ஜோடித்திருவடிகள் மலையின் மேல் செதுக்கப்பட்டிருக்கிறது.
மலையின் அடிவாரத்தில், தங்கும் வசதியுடன் கூடிய வழிபாட்டுத்தலம் உள்ளது. சில வடநாட்டு மார்வாடிகளை குடும்பமாக காண முடிந்தது. இங்கு வர்த்தமான மகாவீரரும், ஆச்சாரியார் குந்தகுந்தரும் வழிபடு தெய்வங்களாக இருக்கின்றனர். மலையடிவாரத்தில் சமண தத்துவத்தின்படி அமைந்த ஒரு ஸ்தூபி உள்ளது. அதன் நாலாபுறங்களிலும் திருக்குறள் செதுக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்திலிருந்து மேலே செல்ல நல்ல படி வசதிகள் உள்ளன. ஆனால் மிகவும் செங்குத்தான மலைதான். பாதிதூரம் சென்றவுடன் உட்கார்ந்த நிலையிலுள்ள திருவள்ளுவரின் சிலை அகர முதல என்ற குறளுடன் காணப்பட்டது. மெதுவாக ஏறினாலும், 20 நிமிடத்தில் உச்சியை அடைந்துவிடலாம். உச்சியில் ஒரு சிறிய மண்டபம் காணப்பட்டது. அங்கே கல்லில் செதுக்கப்பட்ட இரு பாதங்கள் இருந்தன அவை திருவள்ளுவருடையது என்கின்றனர். அதற்கருகில் வர்த்தமானரின் சிறிய அளவிலான, நுணுக்கமான வேலைப்பாடமைந்த நிர்வாண சிலை காணப்பட்டது. மண்டபத்தை சுற்றியிருந்த, மலைப்பிரதேசங்களில், சமண முனிவர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் குகைகள் சில உள்ளன.
நான், குந்தகுந்தரின் திருவடிகள், வர்த்தமானரின் சிலை, வண்டுகளின் ரீங்காரம், உயிரைத்தழுவிச்செல்லும் சுத்தமான காற்று, உரசிச்செல்லும் கருமேகங்கள், அமானுஷ்யமான தனிமை---இந்த உலகத்திலேயே மனித ஜீவராசி நான் மட்டுமே என்று தோன்றியது. ஆதாம் இல்லாத ஏவாள் எத்துனை இனிமை. முன்சென்மம், மறுசென்மம் இவற்றில் நம்பிக்கையற்ற நானே, காலச்சக்கரத்தில் பின்னோக்கி பயணித்து கி.முக்குச் சென்று, திருவள்ளுவரின் சீடர் குழுவில் அமர்ந்திருந்தேன்.
மெல்ல, கீழே இறங்கி வந்து, மலையடிவாரத்தில் முன்னர் கண்ட வழிபாட்டுத்தலத்திற்க்குள் நுழைந்தேன். ஒரு கணம் திகைத்தேன். 40 முதல் 80 வயது வரை பிராயமான 7 அல்லது 8 நிர்வாண சாமியார்கள் வஜ்ராசனத்தில் அமர்ந்திருந்தனர். சிலர் மொட்டைத் தலையுடனும், சிலர் நீள்முடி, தாடியுடனும் காணப்பட்டனர். வெள்ளுடைத்தரித்த பெண் சாமியாரினிகளும் சிலர் இருந்தனர், அவர்கள்” மாதாஜி” என்றழைக்கப்பட்டனர், அவர்களைச்சுற்றி வடநாட்டுச் சமணர்கள் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
சூழ்நிலைக்கு சிறிதும் சம்பந்தமற்ற என்னைத் தீடிரென்று கண்ட போதும், அவர்கள் எந்தவிதமான சலனத்தையும் காட்டவில்லை. மிக இயல்பாக என்னைப் பார்த்து புன்னகைத்து, தம் பேச்சை தொடர்ந்தார். சுற்றியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் பல இளம் பெண்களும் இருந்தனர். ஆயினும் வெகு சகஜமாகவே அவர்கள் பழகினர். ஒரு தாயின் முன் குழந்தையைப் போன்றே, வெகு இயல்பான நிர்வாணமாக அது அமைந்திருந்தது.
ஆயின், எனக்குள் ஒரு கேள்வி, ஆண் துறவிகள் திகம்பரர்களாக (நிர்வாணிகளாக) இருக்கும்போது, பெண் துற்விகள் மட்டும் ஏன் சுவேதம்பரர்களாக(வெள்ளுடை) இருக்கிறார்கள்? பெண் துற்விகளே தயங்குகிறார்களா? பெண்ணின் நிர்வாணம், ஆணை சஞ்ஞலப்படுத்தும் என்ற கட்டுப்பாடா? பெண் துறவிகளின் பாதுகாப்பு குறித்த அச்சமா? பெண்களின் உடல் ரீதியான பிரச்சனைகளா? சமூக எதிர்ப்பு குறித்த எச்சரிக்கையுணர்வா? எதுவாக இருக்க முடியும் என்று யோசித்ததுக்கொண்டே இருந்தேன்.
இப்படியே, இவர்களுடனே இருந்துவிடலாமா, நம்மை இவர்களுடன் இணைத்துக் கொள்வார்களா? அதற்கு இவர்கள் விதிக்கும் வரைமுறைகள் என்னவென்று அவர்களையே விசாரிக்கலாமா என சிந்தித்கொண்டே நடந்தேன். அந்த சிறிய ஹாலில் நடுநாயகமாக வீற்றிருந்த திருவள்ளுவர்:
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றின்
போய் பெறுவது என்?
என்று என்னை நோக்கிச் சிரித்தார்.
காலையில் கிளம்பும் போதே நான் ஊறவைத்துவிட்டு வந்திருந்த அரிசியும், உளுந்தும். அவை இன்றிரவே மாவாக மாறி, நாளைக் காலையில் இட்லி சட்னியாக பரிணமித்து, தட்டில் வந்து விழும்வரை, நான் அதற்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் என் நினைவுக்கு வந்தது. அடுத்த நிமிடம், சென்னை செல்லும் பேருந்தை பிடிக்க புறப்பட்டேன்.
- கு.சித்ரா ([email protected])
|