 |
ஞாநி
குழந்தைக்குப் பாலூட்டினால் அம்மாவுக்குத் தங்க வளையல்?!
தமிழ் மீதும் நல்ல தமிழ்த் திரைப்படம் மீதும் காதல் கொண்ட அன்பர்கள் மகிழவும் வருந்தவும் ஒரே சமயத்தில் சில நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு இருக்கிறது.
படப்பிடிப்புக் கட்டணத்தைக் குறைத்தல், மூடப்பட்ட எம்.ஜி.ஆர். திரைப்பட நகரத்தை இன்னொரு வடிவில் திரைப்படக் கல்லூரியுடன் இணைத்துப் புதுப்பித்தல் போன்று தமிழ்த் திரைப்படத் துறையின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவக்கூடிய பாராட்டுக்குரிய சில ஆரோக்கியமான நடவடிக்கைகளை கலைஞர் அரசு எடுத்துள்ள அதே வேளையில், வரவு செலவு திட்டத்தில் அறிவித்துள்ள இன்னொரு முடிவு கடும் கண்டனத்துக்குரியது.
தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கெல்லாம் கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு தரப்படும் என்கிறது அரசு. மேம்போக்காகப் பார்த்தால் இது தமிழுக்கும் திரையுலகுக்கும் உதவும் திட்டம் போலத் தோன்றலாம்.
ஆனால், இதனால் தமிழுக்கும் பயனில்லை. நல்ல தமிழ் சினிமா தழைக்கவும் இது தூண்டுதல் இல்லை. அரசுக்குப் பெரும் பொருள் இழப்பு ஏற்படுவதும், ஒரு சில தனியாருக்கு அரசுப் பணம் கை மாறுவதும் மட்டுமே நடக்கும்.
முதலில் தமிழ்நாட்டுக்குள், ஒரு தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவதற்கு ஊக்கத் தொகையோ சலுகையோ தரப்பட வேண்டும் என்பதே பெரும் கொடுமை. குழந்தைக்குப் பாலூட்டினால், அம்மாவுக்கு தங்க வளையல் வாங்கித் தருவேன், பட்டுப் புடவை வாங்கித் தருவேன் என்று சொல்வதற்கு சமமான அபத்தம் இது.
இதே தர்க்கப்படி, குடும்பத்தில் குழந்தைகளுக்கு தயாநிதி, ஜெயலலிதா என்றெல்லாம் வடமொழிப் பெயர் சூட்டாமல் அருட்செல்வன், வெற்றிச் செல்வி என்றெல்லாம் இனிய தமிழ்ப் பெயர்கள் சூட்டினால், ரேஷனில் அதிக அரிசியும் சர்க்கரையும் தரப்படும் என்று அடுத்து அரசு அறிவிக்குமோ?
கடைகள்/அலுவலகங்கள் தமது பெயர்ப் பலகையில் தமிழில் எழுதியாக வேண்டும் என்பதை மட்டும் சட்டமாகவும் அதை மீறினால் தண்டனை என்றும் சொல்கிறது அரசு. ஆனால், அதே பெயர் விஷயத்தில் சினிமாக்காரர்களிடம் மட்டும் ஏன் இப்படி செல்லம் கொஞ்சி, பொதுப் பணத்தை அள்ளி வீச வேண்டும்? கடைகளும் நிறுவனங்களும் இனி தமது பெயர்களை ‘கட்டுக்கழுத்தி கம்பி வழி ஊடகக் காட்சியகம்’ என்பது போல் தூய தமிழிலேயே மாற்றியமைத்துக்கொண்டால், அவற்றுக்கெல்லாம் அரசு வரி விலக்கு அளிக்க முன்வருமா?
தமிழ்ப் பெயர் வைக்க சினிமாக்காரர்களுக்கு Ôஊக்கத் தொகைÕ என்ற பெயரில் லஞ்சம் தர முன்வந்துள்ள அரசு, பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இனி தமிழ் கட்டாய மொழிப் பாடம் என்று வலியுறுத்துவது எப்படி நியாயம்? தமிழை மொழிப் பாடமாக எடுத்துக்கொள்ளும் மாணவர்களுக்கெல்லாம் இனி எந்த வகையான பள்ளிக் கட்டணமும் கிடையாது என்று அவர்களுக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டாமோ?
அரசின் சலுகை அறிவிப்பு உண்மையில் திரைப்படங்களின் தரத்தை மேம்படுத்துமா என்றால் இல்லை. வரிவிலக்கு இனி வரும் படங்களுக்குத்தான் என்றாலும் எப்படிப்பட்ட படங்கள் சலுகை பெறும் என்று உணர கடந்த கால எடுத்துக்காட்டுகளிலிருந்து உய்த்துணரலாம். கொழுந்தன் மீது காமுற்ற அண்ணியைக் கதையாகக் கொண்ட சினிமாவுக்கு தலைப்பு தமிழில் என்பதால் வரி விலக்கு கிட்டும். துளியும் ஆபாசமும் வன்முறையும் இல்லாத தீங்கற்ற தமிழ்ப் படமான ‘இம்சை அரசன் 23 .ம் புலிகேசி’யின் பெயரில் இம்சை என்ற வட மொழி இருப்பதால் அதற்கு வரி விலக்கு கிடைக்காமல் போகும்.
தந்தை பெரியார் என்று பெயரிட்ட படத்துக்கு தமிழக அரசு 95 லட்சம் ரூபாய்களைத் தந்ததைப் போல, நாளை இன்னொரு அரசு கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை யாரேனும் படமாக்கும்போது நிதி உதவி அளிக்க இயலாது. காரணம், படத்தின் தலைப்பில் ‘கருணாநிதி’ இருந்தால், அது வடமொழி தலைப்பாகிவிடுமே!
ஒரு படத்திலிருந்து அரசுக்குக் கிடைக்கும் கேளிக்கை வரி குறைந்தபட்சம் அரைக் கோடி ரூபாய்கள் என்று வைத்துக்கொண்டாலும், வருடத்தில் 50 படங்களில் அரசு இழக்கப் போவது சுமார் 25 கோடி ரூபாய்கள். இது குறைந்தபட்சக் கணக்கு. ரஜினிகாந்த்தின் ‘சந்திரமுகி’ மாதிரி படங்களில் ஒரு படத்திலேயே அரசுக்குக் கிடைக்கக்கூடிய கேளிக்கை வரி அளவு சுமார் 5 கோடி ரூபாய்.
இந்த அளவு தன் வருவாயைத் தியாகம் செய்து, தமிழுக்கும் சினிமாவுக்கும் அரசு சாதிக்கப் போவது என்ன?
தூய தமிழில் எழுதினார் என்பதற்காகவே ஒரு ஆபாச எழுத்தாளருக்கு அறிஞர் பட்டம் கொடுக்கிற தவறைச் செய்து, அவர் நூல்களை நாட்டுடமையும் ஆக்குகிற மாதிரியான தவறு, இந்த சினிமா சட்டத்தின் மூலம் நடக்க வாய்ப்பு உண்டு.
தமிழை வளர்க்க தமிழ் படித்தோருக்கு, தமிழில் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைகளும், எல்லா துறைகளிலும் எளிய தமிழில் நூல் எழுதுவோருக்குப் பெரும் தொகைப் பரிசுகளும் பயன்படுமேயன்றி, அரிவாள்களையும் மார்பகங்களையும் கண் முன்னால் வீசுவதைத் தமிழ்ப் பண்பாடாகப் பரப்பி வரும் திரைப்படங்களுக்கும் சேர்த்து வரி விலக்கு தருவதால் தமிழும் தழைக்காது. சினிமாவும் தழைக்காது.
சினிமாவில் தமிழ் தழைக்க வேண்டுமானால், முதலில் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட படங்கள் மட்டுமே அரசின் விருதுகள் உள்ளிட்ட எந்தவொரு திட்டப் பரிசீலனைக்கும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்க வேண்டும். பள்ளி இறுதியிலும் 12&ம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை அறிவிக்கும்போது, தமிழை மொழிப் பாடமாக எடுக்காதவர் மொத்தத்தில் அதிக மதிப்பெண் எடுத்தாலும், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லை! அதுபோலவே, திரைத் துறைக்கும் விதிக்க வேண்டும்.
நல்ல சினிமா வரவேண்டுமானால், குறைந்த முதலீட்டுப் படங்களை ஊக்குவிக்க வேண்டும். குறைவான பிரதிகள், தீங்கற்ற கருத்து & காட்சி, அனைவருக்குமான ‘யு’ சான்றிதழ் போன்ற விதிகள் வரி விலக்கிற்கும் தேவை. கேளிக்கை வரியில் பல கோடி ரூபாய்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் அரசு, தரமான திரைக்கதைகளை கோரிப் பெற்று படம் தயாரிக்க நிதி உதவி அளிக்கும் மாநில திரைப்பட நிதி உதவிக் கழகத்தை அமைக்கலாம்.
சிவாஜி கணேசன் சிலை விஷயத்தில் எந்த இடத்தில் வைப்பது, எந்தத் தேதிக்குள் வைப்பது என்பதிலெல்லாம் கவனம் காட்டிய அரசு, சிலையை எப்படி அமைப்பது என்பதில் கோட்டை விட்டுவிட்டது. சிவாஜிக்குரிய தோற்றப் பொலிவும் இல்லாமல், நடிகராக மக்கள் மனதில் நிறைந்திருக்கும் அவரது பிம்பத்தையும் நினைவூட்டாமல், சீரான விகிதாசாரமற்ற உடல் அமைப்போடு இருக்கிறது சிலை.
நல்ல நோக்கங்கள் மட்டும் போதாது. அவை எப்படி நிறைவேற்றப்படுகின்றன என்பது நோக்கத்தைவிட முக்கியமானதல்லவா!
எனவே, நல்ல நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு மறுபரிசீலனைக்கு உடபடுத்தியாக வேண்டும். இல்லையேல், நோக்கமும்கூட சந்தேகத்துக்குரியதாகிவிடும். தமிழையும் சினிமாவையும்விட, சில தயாரிப்பாளர்களையும் சில சினிமாக்கார & அரசியல்வாதிகளையும் தொலைக்காட்சி நிறுவனங்களையும் சந்தோஷப்படுத்தவே இந்த வரி விலக்குத் திட்டம் வந்திருக்கிறது என்று உலவும் வதந்திகள் உண்மைதானோ என்ற கேள்விகள் எழுந்துவிடும்! அவசர அவசரமாக படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்படுவதும், சில பெயர்கள் மாற்றப்படுவதும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன. எனவே அரசு விரைவாக திட்டத்தை சீராக்கிச் செம்மைப்படுத்தும் அறிவிப்பைச் செய்யுமா?
ஆனந்தவிகடன் – 6/8/2006
|