கடல்சங்கில் நீரெடுத்து

சங்குக்குள் சமுத்திரத்தை

அடைத்து வைப்போம்

அம்புலியிலொரு துண்டு

வாங்கி வந்துன் மூக்குத்தியில்

ஒட்டி வைத்தழகு பார்ப்போம்

வீட்டுக் கூரையிலமர்ந்து

கதைத்து மழை வந்தால்

கூரைக்கே குடையென

நாம் ஆகுவோம்

விழுதோடிப் படர்ந்த

பழஞ்சுவர்களில் நம் குறித்த

காதல் சித்திரங்கள்

வரைந்து வைப்போம்

**

வேப்பமரக் காற்றை

குளிர்வித்து நம்

அறைமுழுதும் நிரப்பிடுவோம்

காலைப் பனிக்குக் கட்டளையிட்டு

நம் வெளியெங்கும்

சந்தனமணத்தைத் தூவச் செய்வோம்

உன் ஊடல்கள் தீர்க்கவென

நான் இன்னும் என்னவெல்லாம்

சொல்லவேண்டும்

சொல்

- எம்.ரிஷான் ஷெரீப்

 

 

Pin It