நான் சிரித்துப் பார்த்ததில்லையென‌
புன்னகைத்துச் சொல்லிச் சென்ற
தோழியொருத்தி நினைவூட்டிச்
செல்கிறாள்
புன்னகை திருடிச் சென்ற
தேவதை உன்னை

o

நீ வெளியேற நினைத்து
அடித்துச் சாத்தி
உடைத்தெறிந்த மனக்கதவு
இன்னும் திறந்த படி இருக்கிறது
நீ வருவாயென!

o

எதிர்பாராத நொடிகளில்
உனை சந்திக்கும் நிமிடத்திற்கென‌
உன் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்
நம் நினைவின் நிமிடங்களைச் சுமந்த படி!

o

உன்னை வெறுப்பதாய்
என்னை ஏமாற்றிக் கொள்கிறேன்
ஏமாற்றியபடி
எனை வெறுத்துக் கொல்கிறாய்

o

உனைப் பிரியப் பயந்து
இறக்கத் துணிகிறேன்
எனைப் பிரியப் பயந்து
பார்வைகள் அனுப்பிக்
கொல்கிறாய்

- லதாமகன்

 

Pin It