நம் வீட்டுக்குள்

சமையலறையே வேண்டாம்

புகையில் கூட நீ

கண் கசக்கக் கூடாது

உனக்குப் பசிக்கும்தான்

கரும்புக் காட்டுக்குள்ளிருக்கும்

காற்று இனிப்பதில்லையென்ற

கூற்றைப் பொய்யாக்குவது போல

பாச வார்த்தைகளை

காதல் பார்வைகளை

நேசச் சுவைகளை

அன்பின் மனதில் போட்டுப் பிசைந்துருட்டி

ஊட்டி விடுகிறேன்

நீ பசியாறு

அது பார்த்தென் பசியுமாறும்

**

வரைபடங்களில்லா

காலத்தின் பயணங்களில்

பற்கள் கூசக் கடித்திடும்

பிஞ்சு மாங்காயினைப் போல

என் வாழ்வின்

சுவாரஸ்யமான உன்னை விட்டு

நிழற்படங்களின் அசையா உருவங்கள் போல

நீயும் காதலுமின்றி

நானெப்படி வாழமுடியும்

- எம்.ரிஷான் ஷெரீப்

Pin It