நாகர்கோவிலில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் செல்லும் பாதையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்

சிதறால்

கன்னியாகுமரியில் இருந்து 45 கி.மீட்டர் தூரத்தில் சிதறால் மலைக்கோயில் அமைந்துள்ளது. சமணத்துறவிகள் இங்கு வாழ்ந்ததற்கான அடையாளமாக இந்த சமணக்கோவில் அமைந்துள்ளது. சமணத் தீர்த்தங்கரர்களின் நினைவாக இந்தியாவில் உள்ள சமணக்கோவில்களில் முக்கியமானது இது. மலைமேல் 3 கி.மீ.நடந்து சென்றால் வேலைப்பாடுகள் மிகுந்த சமணச்சிற்பங்களை காணலாம்.

மலைமேல் இருந்து சுற்றிலும் இயற்கைக் காட்சிகளை கண்டுகளிக்கலாம். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக பேருந்து மூலமோ, கார் மூலமோ சிதறாலை அடையலாம். நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது.

கேரளபுரம்

நாகர்கோவிலில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் தக்கலை அருகே அமைந்துள்ளது கேரளபுரம் அதிசய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. வருடத்திற்கு ஆறு மாதங்கள் கறுப்பு நிறத்திலும், ஆறு மாதங்கள் வெள்ளை நிறத்திலும் விநாயகர் இருப்பது இக்கோயிலின் சிறப்பு. கோவிலின் கிணறும் அதே நிறங்களை பிரதிபலிப்பது கூடுதல் சிறப்பு.

மாத்தூர் தொட்டில்பாலம்

மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது இந்தப் பாலம். இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இப்படி மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

1971 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலமாகும். இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

புனித தோமையர்

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் அப்போஸ்தலர் என்னும் புனித தோமா. இயேசுவின் காலத்திற்கு பிறகு கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தோமா இந்தியா வந்ததாக கூறப்படுகிறது. 52-23 ம் நூற்றாண்டுகளில் பஞ்சாப் வழியாக கேரளா வந்த அவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் மாதா ஆலயத்தை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயம் தான் தமிழ்நாட்டின் முதல் கிறிஸ்தவ தேவாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலயம் எழுப்பப்படும் காலங்களில் அவர் திருவிதாங்கோடு செல்லும் வழியில் உள்ள கஞ்சிக்குழி என்னும் இடத்தில் மலைக்குகையில் தங்கியிருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக மாதாமலை என்று அழைக்கப்படும் இந்த மலையின் அடிவாரத்தில் பெரிய குகை ஒன்று இன்றும் காணப்படுகிறது. இந்த மலையின் மேலே பாறையில் காணப்படும் காலடித்தடம் தோமாவுடையது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

நாகர்கோவில் இருந்து கருங்கல் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது ஆட்டோ மூலம் தோமையர் மலையை அடையலாம்.


மகாதேவர் கோவில்

குமரி மாவட்டத்தின் தென்கோடியில் வைக்கல்லூர் எனும் ஊரில் காணப்பட்ட மணல் மேடுகளின் உட்பகுதியில் புதையுண்டு கிடந்து எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாண்டிய மன்னர்களால் இவ்வாலயம் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடற்கரை அருகில் இருப்பதால் கடல் கொந்தளிப்பால் மணலால் மூடப்பட்டு பின்னர் 1922-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கருங்கற்களினால் கட்டப்பட்ட இக்கோவிலின் உட்பகுதியில் அழகிய கலைவேலைப்பாடுகள் நிறைந்த நந்தி ஒன்று காணப்படுகிறது. சுற்றியுள்ள பலப் பகுதிகளில் இருந்து ஏராளமான பல பக்தர்கள் தற்போது இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இக்கோயிலை அடையலாம்.

பேச்சிப்பாறை அணை

குமரி மாவட்ட விவசாயம் இந்த அணையை நம்பித்தான் உள்ளது. நாகர்கோவிலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த அணை அமைந்துள்ளது. எந்தப் பருவ நிலையிலும் வற்றாதது இந்த அணை. குழந்தைகளோடு சென்றுவர மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இது விளங்குகிறது. சமீபத்தில் இங்கு படகுப்போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவி

கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும் நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. எல்லாக் காலநிலையிலும் இந்த அருவியில் தண்ணீர் இருப்பது இதன் சிறப்பு. இந்தப் பகுதி முழுவதும் பச்சைப்பசேலென்று கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் திற்பரப்பு செல்லலாம். நாகர்கோவிலில் இருந்து திருவட்டார் அல்லது குலசேகரம் சென்று அங்கிருந்து பேருந்து மூலமும் திற்பரப்பு அருவியை அடையலாம்.

திருவட்டார்

கன்னியாகுமரியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் ஆயிரம் தூண்களும் ஏராளமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 63 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றது இந்தக் கோயில். கோயிலின் உட்புறத்தில் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பச்சிலையை கொண்டு வரையப்பட்டவை. பல நூறு வருடங்களைக் கடந்தும் இந்த ஓவியங்கள் புதிதாக காட்சியளிப்பது இன்னும் சிறப்பு.

வெள்ளிமலை

நாகர்கோவிலில் இருந்து தக்கலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளிமலை முருகன் கோவில். குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்தக் கோவிலுக்கு செல்ல மலைமீது 300 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள குகையில் தான் வள்ளியை முருகன் மணம் செய்து கொண்டதாக வரலாறு கூறுகிறது. நாகர்கோவிலில் இருந்து தொடர்ச்சியாக தக்கலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Pin It