ஓராண்டு கடந்துவிட்டது... வன்னியில் எழுதப்பட்ட நம் வீரவரலாறு ரத்தம் தோய்ந்த ஈழமண் கூப்பிடும் தூரத்தில்தான் கேட்டது மரண ஓலம். உயிரை ஆயுதமாக்கிய முத்துக்குமரன்களின் இறுதியாத்திரை இந்திய அரசியலில் ஒரு துரும்பையும் அசைக்கமுடியவில்லை. வாசனைத் தைலமிட்டு சீவிச்சிங்காரித்து மலர்ச்சூடி மனிதனின் தலையில் இருப்பதால் அதுக்கு கூட மதிப்புண்டு கேட்டுபாருங்கள் கோவிலுண்டியலில் பணமாக மாறும் அதன் வித்தையை! சே என்னடா இது தமிழன் அதுவாகக் கூட இல்லையே என்று எவனுக்கும் வருத்தமில்லை.

இந்தியத்தமிழன்

ஈழத்தமிழர்கள் குறித்து போட்டிப்போட்டுக்கொண்டு அறிக்கை யுத்தங்கள் நடத்திய நம் அரசியல் தலைவர்கள், அவர்களுக்குஎந்த வகையிலும் குறையாமல் உலகத் தமிழர்கள் அனுப்பிய விசாவில் உலகமெல்லாம் சுற்றிவரும் நம் தமிழினத் தலைவர்கள்,.. அடிக்கடி எங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது நாங்களும் தமிழர்கள்தான் என்று தமிழ் ரசிகர்களுக்கு நினைவுப்படுத்த கூடிக் கலைந்து மீண்டும் கூடிக் கலைந்து... நேரடியாக வீரவசனங்களை உதிர்த்து கலைகின்ற நம் திரைப்பட வெள்ளித்திரை சின்னத்திரை நாயக நாயகியர் கவிஞர்கள் குழாம் இயக்குநர் சிகரங்கள் வரிசை, ஒப்பாரிக்கவிதைகள் பாடி அரித்துக்கொண்டிருக்கும் மன உணர்வுகளைச் சொரிந்துக் கொண்டு யாருக்குச் சொரிந்துவிட்டால் யாருக்கு லாபம் ? என்ற கணக்கில் குழுச்சண்டைகளைத் தொடரும் மேன்மைமிகு இலக்கிய அறிவுஜீவிகள் இப்படியாக ஈழப்போராட்டத்தில் இன்று வெளிப்படையாகத் தெரியும் எவராலும் ஈழமக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பது மிகவும் வெளிப்படையான உண்மை.

இலவசங்களில் தமிழன் சோரம்போகி ஆண்டுகள் பலவாகிவிட்டது. ஈழப்பிரச்சனைத் தமிழ் நாட்டின் அடித்தட்டு மனிதனை எவ்வகையிலும் பாதித்துவிடாமல் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியும் சரி எதிர்க்கட்சியும் சரி ஊடகங்களின் வலிமையால் ஒரு மாய உலகத்தை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கட்டிக்காத்து வருகின்றன. அரசியலும் ஊடகமும் கைகோத்து தமிழக மண்ணில் சிங்கள ரத்தவெறி அரசியலுக்கு எந்தவகையிலும் குறையாத இன உணர்வு அழிப்பை செய்து முடித்திருக்கின்றன. இதில் எல்லோருக்கும் பங்குண்டு. விகிதாச்சாரம் வேண்டுமானால் கொஞ்சம் வேறுபடலாம். என்னவோ ஈழத்திற்கு உதவி செய்துவிட்டால் அது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வைக்கும் ஆப்பு என்று இந்திய அரசியல் நினைப்பதாக இன்றும் சில ஆங்கில இதழ்கள் எழுதுவதை நம்பி .. "இருக்கலாம் "

தமிழர்கள் திராவிட நாடு கேட்டவர்கள், தமிழர்கள் மாநில சுயாட்சி கேட்டவர்கள், தமிழர்கள் இந்தி ஒழிக என்று மொழிப்போராட்டம் கண்டவர்கள், தமிழர்கள் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அரசியல் நடத்தியவர்கள், தமிழர்கள் ஈழம் கிடைத்தால் தமிழ்த்தேசியம் கேட்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சொல்வதில் உண்மை இருப்பது போல ஒரு தோற்றம் ஏற்படும். இரண்டும் இரண்டும் நான்காக மட்டுமே இருக்கமுடியும் என்ற கணக்கு நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் பதவி, அரசியல், வாரிசு அரசியல், ஊடக வலிமை இத்தியாதி பல சிறப்புகள் பெருக பெருக தமிழக அரசியலில் எண்களுக்கு முன்னால் சில கணக்குவிதிகளின் அடையாளக்குறிகள் எழுதப்பட்டுவிட்டன. இப்போது 2+ 2 = 4 என்ற கணக்கு அடையாளக்குறிகளின் அடையாளத்துடன் -2 + 2 = 0 என்று எழுதப்பட்டுவிட்டது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியத் தமிழகமும் தமிழக அரசியலும் நம்பிக்கைக்கு உரியதல்ல.

வல்லரசாக மாறும் இந்தியமுகம்

இந்தியாவின் வல்லரசு கனவுக்குப் பலியானவர்கள் ஈழத்தமிழர்கள். ஆசிய பேட்டையில் புதிதாக ஒரு ரவுடி தன்னைக்கண்டு எல்லோரும் பயப்பட வேண்டும் என்பதற்கு என்னவெல்லாம் செய்வானோ அத்தனையும் இந்தியாவும் செய்தது இலங்கையில். இந்தப் பேட்டை ரவுடி வேஷத்தில் இந்தியாவுக்கு வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். உண்ணாநிலை, உயிர்விட்ட நிலை என்று எல்லா நிலைகளையும்  தமிழகத்தில் புஸ்வானமாக்கி மிக எளிதாக தன் ரவுடித்தனத்தை நிலைநிறுத்திக்கொண்டது.

இலங்கையில் நடந்து முடிந்த அரசியல் நிகழ்வுகளை மட்டுமல்ல நடந்துகொண்டிருக்கும் கள்ள மவுனத்தையும் புரிந்து கொள்ள உலக அரசியல் பொருளாதர பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

சில கேள்விகள் :

> பன்னாட்டு சிக்கல் தீர்வுக்குழு (International crisis group )வெளியிட்டுள்ள 54 பக்க அறிக்கையை வாசித்தப்பின்னும் ஜ. நா. எதுவும் செய்யமுடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?

>இலங்கை அரசு ஐரோப்பிய அரசியல் தலைவர்களையும் மேற்கு நாடுகளின் தொண்டு நிறுவனங்களையும் தன் மண்ணில் கால்வைக்க அனுமதி மறுக்கும் துணிவின் பின்புலம் என்ன?

>இலங்கையில் ஹாம்பர்தோட்டா என்ற இடத்தில் சீன அரசு கட்டி முடித்திருக்கும் துறைமுகம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்க அரசு சுட்டிக்காட்டிய பிறகும் இந்தியா எவ்விதமான இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் கள்ளமவுனம் சாதிப்பது ஏன்?

>ஆசியநாடுகளில் வல்லரசாக அபரிதமான வளர்ச்சியுடன் உற்பத்தியிலும் நுகர்ப்பொருள் சந்தையிலும் முகம் காட்டும் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கான முரண்களைக் களைந்து இருவருக்குமான பொது எதிரியான மேற்கத்திய நாடுகள், அமெரிக்க வல்லரசு ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற சோதனையை நடத்திய தளம் இலங்கை.

> உலக நாடுகளின் மிகப்பெரிய சந்தைகளான சீனா- இந்தியாவை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது என்பது சரிந்துவரும் அவர்களின் பொருளாதர தளத்தில் மேலும் பின்னடைவுகளையே ஏற்படுத்தும் என்பதால் இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் இனப்படுகொலைக்கு எதிராக காத்திரமான எதையும் செய்ய முடியாத நிலையே நிலவுகிறது.

இந்தியாவின் இனக்குழு வரலாறு

இந்திய அரசு தெற்கில் எழுந்த இன எழுச்சியை இருந்த இடம் தெரியாமல் அடக்கிவிட்டது என்று சொல்வதை விட தெற்கில் வீரவசனங்கள் பேசிக்கொண்டிருந்த அட்டைக்கத்தி கதாநாயகர்கள் இந்திய இறையாண்மையின் தவப்புதல்வர்களாக நாற்காலி ஆசையில் சோரம் போனது ஒரு சாபக்கேடு. இதில் யாரும் விதிவிலக்கில்லை என்பது கண்கூடு. இந்தியா இறையாண்மைக்கு தெற்கிலிருந்து இனி எந்தச் சாவாலும் வரப்போவதில்லை. ஆனால் இந்திய இன வரலாற்றில் இன்னும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத இனக்குழு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. இரவும் பகலும் இந்திய இராணுவம் காவல் காத்து தன் துப்பாக்கி முனையில் மக்கள் ஆட்சியின் மகத்துவமான தேர்தலை நடத்திக்கொண்டிருக்கும் காட்சிகள் தொடர்கிறது. நிலைமை கட்டுக்குள் அடங்காதபோது இந்திய அரசு சம்பந்தப்பட்ட குழுக்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் செய்தி எப்போதாவது பத்திரிகைகளின் இரண்டுவரி செய்திகளாக வெளிவந்துக் கொண்டுதானிருக்கின்றன.

மாவோயிஸ்டுகளின் வளர்ச்சி, தாக்குதல்.. அண்மையில் தொடரும் சில மாவோயிஸ்டு செயல்கள் இந்திய அரசைக் கதிகலங்கச் செய்திருப்பது உண்மைதான். ஓர் இன அழிப்பைச் செய்த இந்திய அரசு தன் இந்திய மண்ணில் அவ்வளவு எளிதாக அதைச் செய்துவிட முடியாது என்பதையும் அறிந்தே இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை மேற்கத்திய நாடுகளும் சரி இந்திய வல்லரசுக்குப் போட்டியாக தளத்தில் நிற்கும் நாடுகளும் சரி... அவரவருக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

எதிர்காலத்தில் இந்திய - சீன உறவு

இந்தியா சீனா பாயிபாயி... இந்தியர்களும் சீனர்களும் அண்ணன் தம்பிகள் என்று பஞ்சசீலக் கொள்கைப் பேசி ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட மையின் ஈரம் மாறுவதற்குள் இந்திய எல்லையில் மூண்ட சீன-இந்திய போரை- கடந்த காலம் இந்தியாவுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் பாடத்தை அவ்வளவு எளிதில் இந்திய அரசு மறந்திருக்க முடியாது. அம்மாதிரியான ஒரு சூழல் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது இந்தியாவுக்கு இலங்கையின் ரஜபக்ஷே அரசோ சிங்கள ஆதிக்க அரசுகளோ எவ்விதத்திலும் உதவப்போவதில்லை. சிங்கள அரசின் சீனாவுடனான உறவு மிகவும் வெளிப்படையாக பல்வேறு ஒப்பந்தங்களில் தெரியவருகிறது. இந்தியாவுக்கு அப்போது தேவைப்படும் ஈழத்தின் உதவியும் நம்பிக்கையும். அந்த உதவியை ஈழத்தின் தமிழ் தேசிய அமைப்புகள் மூலமே இந்தியா பெறமுடியும். அச்சூழலை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் எப்படி அணுகப்போகின்றன என்பதும் தமிழ் ஈழத்தை நிர்ணயிக்கும் பலம் வாய்ந்த சக்தியாக அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

தமிழ் ஈழம்

ஈழத்தில் என்ன நடக்கிறது ? நடந்து முடிந்த இராணுவத்தோல்விக்கான காரணங்களைப் பேசியும் எழுதியும் ஒரு கூட்டம் .. விடுதலைப்புலிகளின் கடந்த காலத்தை எழுதி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம், தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்திலேயே வன்னியில் வதைப்பட்டுக்கொண்டிருக்கும் 3 இலட்சம் தமிழர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் தவிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்.. இன அழிப்பின் இறுதிச்சாட்சியாக தப்பிப்பிழைத்த ஒரு மரக்கிளையிலிருந்து காக்கையின் எச்சத்துடன் ஒரு விதை விழுந்து முளைக்கும். இராணுவ பலத்தையும் உலக அரசியலையும் போராளிகளின் வாழ்க்கையையும் துரோகிகளின் அடையாளத்தையும் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் கண்டு உணர்ந்து உறக்கம் மறந்து தவிக்கும்.. அந்த தவிப்பிலிருந்து ஒருதுளி சில துளிகள் பலதுளிகளாக ஒரு புதிய நதி புறப்படும்.

எங்கெல்லாம் மனிதம் பாதிக்கபடுகிறதோ அங்கெல்லாம் இன மொழி நாடு அடையாளங்களைத் தாண்டி ஓடும் அந்த நதி. இதுதான் போராளிகளின் தொடர்கதை என்பது மட்டுமல்ல ரத்தச் சுவடுகளால் எழுதப்பட்ட மனித இனத்தின் மறுபக்கம். மனித உரிமைகளுக்கான போராட்டங்கள் முடிவதில்லை. தற்காலிகமான தடைகளை அவ்வப்போது சந்திக்கும். அதிலிருந்து மீண்டு எழும் சக்தியையும் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தையும் ஈழமும் கண்டடையும்.

- புதிய மாதவி, மும்பை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It