நவம்பர் 11 அன்று சென்னை மியூசிக் அகா தெமியில் பா.ச.க. ராஜ்ய சபா உறுப்பினர் தருண் விஜய்க்கு கவிஞர் வைர முத்து தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இதற்கு முன்பே, ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் பா.ம.க. தலைவர் இராமதாசு போன்றோர் போட்டி போட்டுக்கொண்டு அவரது தமிழுணர்வைப் பாராட்டி இருந்தனர். திருவள்ளுவரது பிறந்தநாளை இந்திய மொழிகளுக்கான நாளாக அறிவிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் தமிழ்மொழியைப் பயிற்றுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிற இவரது பின்ணணி என்ன?

· ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி ஏடான ‘பஞ்சஜன்யம்’ இதழின் ஆசிரியராக இருபது வருடங்கள் இருந்தவர்

· தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஷீலா மசூதின் கொலை வழக்கில் தொடர்புடையவரென கருதப்பட்டவர்.

· பா.ச.க.வின் மரு சியாம்பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக தற்சமயம் செயலாற்றுபவர்

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழில் இவர் எழுதியவை

‘‘சமஸ்கிருதம் தான் நாம். சமஸ்கிருதம் தான் இந்தியா. சமஸ்கிருதம் தான் தெற்கில் இருந்து வடக்கிற்கு, மேற்கில் இருந்து கிழக்கிற்கு இந்தி யாவை ஒன்றாய் இணைக்கும் அபாரமான சக்தி. ‘உயர்பதவிகளுக்கும் உயர்ந்த சமூக அந்தஸ்து பெறுவதற்கும் ஒரு வழி முறையாக சமஸ்கிருத அறிவு இருக்க வேண்டும்”

“ராம்ஜன்மபூமி இயக்கத்தில் நான் பங்குபெற்ற போது, தேசத்தின் இலட்சிய உதாரணமான சிறீ ராமரை மீட்டெடுக்கும் பரந்துபட்ட உயரிய நோக்கத்தில், பிராந்திய, சாதிய மொழி அடை யாளங்கள் கரைந்து போனதைக் கண்டேன்”

 அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும், வரலாறுகளையும் இந்துத்துவப்படுத்தி அயோத்தி இராமனின் அடையாளத்தில் பல்வேறுபட்ட தேசிய இனங்களையும் கரைப்பது தான் கலாசாரம் பற்றிய இவரின் பார்வை. வட இந்தியாவைச் சாராத தனித்த மக்களையும், அவர்தம் வரலாற்றையும் அபகரிப்பதே இதன் நோக்கமாகும். தமிழ் மொழியைக் காக்க வந்த இவ்வடநாட்டு வித்தகர் இத்தனைக் காலம் எங்கிருந்தார்? ஏன் இந்த திடீர் தமிழ் பற்று என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.. வெளுத்ததெல்லாம் பாலல்ல என்பதைப் புரிந்து கொண்டால் சரி!  

நன்றி: விசை

Pin It