தொடர் : காட்டுயிர்களின் காலடித் தடங்களைத் தேடி...

கடந்த ஆண்டு (2012-சனவரி) பின் பனிக்கால பொழுதொன்றில் திருப்பூர் சென்று சேர்ந்திருந்தேன். திருப்பூர் புத்தகக் கண்காட்சியில், இடம் பெற்றிருந்த காட்டுயிர் ஒளிப்படக் கண்காட்சி, பெரிய பாளையம் நஞ்சராயன் குளத்தை காண்பதற்கென இரண்டு நாட்கள் பயணமாக வந்திருந்தேன். சூழலியலாளர் முகமது அலி மற்றும் திருப்பூர் நண்பர்களின் அன்பான வரவேற்பும், உபசரிப்பும் மனதிற்குள் மகிழ்வை ஏற்படுத்தியிருந்தது.

முதல் நாள் இரவை காட்டுயிர் ஒளிப்படக் கண்காட்சி, புத்தகம் சூழ் உலக நண்பர்களுடன் என செலவிட்டிருந்தேன். முதல் நாளின் பகல் பொழுது, அடுத்த நாள் முழுமை என இரு நாட்களின் பெரும்பகுதியை பெரியபாளையம் குளத்தில் நண்பர்கள் அம்சராஜன், சிவமணியுடன், பறவைகளுக்கு மத்தியில் இருந்தது, பறவைகளைப் போல வண்ண நினைவுகளுடன் மனதில் தங்கியிருந்தது.

திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊத்துக்குளி சாலையில் 8 கி.மீ., தொலைவில் கிழக்கு நோக்கிய பயணத்தில், கூலிப்பாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பிற்கு அருகில், தன் அழகின் எல்லைகளை விரித்து பெரிய பாளையம் நஞ்சராயன் குளம் அமைந்திருக்கிறது. 440 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்களுக்கும், பலவித பூச்சிகளுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் வாழிடமாக நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது.

குளத்திலிருந்த இரண்டு நாட்களும் தோழர்கள் அம்சராஜனும், சிவமணியும் தங்கள் நேரத்தை குளக்கரையில் செலவிட்டதுடன், ஒளிப்படக்கலை, பறவைகள் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பல அரிய ஒளிப்படப் பதிவுகளை செய்திருப்பினும், கடைசி நாளன்று நடந்த இரண்டு நிகழ்வுகள் குறித்துப் பேச வேண்டிய தேவை உள்ளது. தமிழர்களால் வியந்து பார்க்கப்படும் வெளிநாட்டு தொலைக்காட்சிகளான சஹற்ண்ர்ய்ஹப் எங்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீ, அய்ண்ம்ஹப் டப்ஹய்ய்ங்ற் போன்ற வற்றில் காட்டப்படும் காட்சிகளை, விழிகள் விரிய, ஆச்சரியத்தோடு பார்ப்பதோடு இல்லாமல், அதே ஆச்சர்யத்தோடு நண்பர்களிடமும் விவாதிக்கிறார்கள். மகிழ்ச்சிதான்.

மூக்கை சிந்தும் அழுகாச்சி தொடர், நீண்ட நெடும் தொடர், பெண்களைக் கொண்டே பெண்களை தாழ்வாக சித்தரிக்கும் தொடர் என சமூக நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் துண்டித்து, தொடர்களில் மூழ்கும் தமிழ்நாட்டு மக்களில் சிலபேராவது காட்டுயிர்கள் தொடர்பான தொலைக்காட்சிகளை பார்ப்பது சிறிதளவு மகிழ்ச்சியே. வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்சிகளில் மனதை பறிகொடுப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் ஊர்களிலுள்ள குளக்கரைகளிலும், ஏரிக்கரைகளிலும் பொறுமையாக காத்திருந்து பறவைகளையும், வண்டினங் களையும், பூச்சியினங்களையும், அதன் வாழ்வியலையும் கண்டு இரசித்திருக் கிறார்கள் என்று சொல்லட்டும். வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்சிகளை மிஞ்சும் வண்ணம், பவழக்கால் உள்ளான்கள் மற்றும் உள்ளான்களின் வாழ் வெல்லைக்கான போட்டிகளை திருப்பூர் பெரியபாளையம் குளத்தில் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கண்டு மகிழ்ந்த சமயத்தில், நீங்களும் உடனிருந்தால் நீர்நிலைகளை நாடிச் சென்றிருப்பீர்கள். உயிரினங்களின் நண்பர்களாக மாறியிருப்பீர்கள்.

பெரியபாளையம் நஞ்சராயன் குளத்தில் இருந்த முதல் நாள், வேட்டையாடி பறவையான புஞ்சை பருந்திடம் அகப்படாமல் தப்ப, வாத்துகளும், உள்ளான்களும் அங்கு மிங்கும் பறந்தபடி இருந்தன. எங்களின் காத்திருப்பின் எல்லை வரை, இரை கிடைக்காமல் புஞ்சைப் பருந்து வட்ட மிட்டபடி இருந்தது. எங்களது பறவை நடையை  குளத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, பறவைகளை கண்டு இரசித்தும், பதிவு செய்தபடியும் சென்று கொண்டிருந்தோம். மதிய உணவிற்குக் கொண்டு சென்றிருந்த சிற்றுண்டிகளை சாப்பிட்டுவிட்டு, குளத்தின் ஒரு பகுதியை முழுமையாகப் பார்த்து முடித்திருந்தோம். முதல் நாளின் இறுதியில், இரவின் மடியில் தஞ்சம் கொள்ளும் கதிரவனின் கடைசி ஒளிச் சிதறலில், வேகமாகப் பறக்கும் திறன் படைத்த தகைவிலானை , பறக்கும் நிலையிலேயே அழகிய பதிவு செய்தது அன்றைய தினத்தின் முக்கிய பதிவாகவும், நிகழ்வாகவும் அமைந்தது.

இரண்டாம் நாள் காலையில், மாற்றுப் பாதையில் குளத்தின் உள்புறம் செல்லலாம் என்ற நண்பர் அம்சராஜனின் யோசனைப்படி, சிவமணியுடன் நடக்க ஆரம்பித்திருந்தோம். மெல்லிய, அழகிய செந்நிற கால்களையுடைய பவழக்கால் உள்ளான்கள் எங்களை வரவேற்க காத்திருந்தன. உள்ளே சென்ற சிறிது நேரத்தில் புஞ்சை பருந்தின் வேட்டை முதல் நாளைப் போன்றே தொடர்ந்தது. குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை  வரும் பருந்திடம் இருந்து வாத்தினங்களும், உள்ளான்களும் தப்பிக்க இடது, வலது என மாறி, மாறி பறந்து கொண்டு இருந்தன. நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு வெகு அருகாமை வரை வந்து சென்றன. சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் இயற்கையின் எழிலார்ந்த காட்சியை நடத்திக் காட்டிவிட்டு புஞ்சை பருந்து அகன்றது. புஞ்சை பருந்தின் இடத்திலிருந்து மற்றொரு வேட்டையாடி பறவையான செம்பருந்து நீர்ப்பரப்பிற்கு மேல் பறந்தபடி மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது.

பெரியபாளையம் நஞ்சராயன் குளக்கரையில், காட்டுயிர்களின் வாழ்வியலை இரசித்தபடி மூவரும், எடுத்துச்சென்றிருந்த சிற்றுண்டிகளை சாப்பிட்டு, தண்ணீர் பருகி, மரநிழலில் சிறிது இளைப்பாறினோம். அப்போது தொடங்கிய பவழக்கால் உள்ளான்களின் வாழ்வெல்லைக்கான போட்டிகள், கதிரவன் இருளிடம் தஞ்சமடையும் நேரம் வரை, சிறுசிறு குழுக்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

பத்திலிருந்து இருபது வரை இருந்த பவழக்கால் உள்ளான்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதுவதும், அணியணியாகச் சென்று, மற்ற பவழக்கால் உள்ளான்களை தாக்குவதும் தொடர்ந்து கொண்டிருந்தன. சில வேளைகளில், பவழக்கால் உள்ளானை தண்ணீருக்குள் அமிழ்த்தும் அளவிற்கும் மோதல் கடுமையாக இருந்தது. நீர்ப் பரப்பில் இருந்து நான்கைந்து அடிகள் மேலே பறந்து ஒன்றுடன் ஒன்று தாக்குவதும் நடந்தது. இத்தகைய காட்சிகளை நானும் நண்பர்களும் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதால், விழிகள் விரிய, ஆச்சர்யம் கலந்த பார்வையுடன் இரசித்ததுடன், ஒளிப்படக் கருவியில் ) தொடர்ந்து பதிவுகளையும் செய் திருந்தோம்.

பவழக்கால் உள்ளான் என்ற பெயருக்கேற்ப, புறா அளவை ஒத்த, பார்க்கும் போதே கொள்ளை கொள்ளும் அழகு, பார்ப்பவர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்கத் தூண்டும் அழகிய தோற்றத்தைப் பெற்றுள்ளன.

நீண்டு மெலிந்த சிவந்த கால்களையும், வெண்மையான உடலின் இறகுகளில் கறுப்பு நிறத்துடன் இனிய அழகிய தோற்றத்தை பவழக்கால் உள்ளான்கள்  பெற்றிருக்கின்றன. தமிழகத்தின் பெரும்பான்மையான நீர் நிலைகளிலும், பறவைகளின் வாழ்விடங்களிலும்  இவற்றைக் கண்டு இரசிக்கலாம். என்னுடைய பல பயணங்களில் பவழக்கால் உள்ளான்களை கண்டு இரசித்திருக்கிறேன். குறிப்பாக, 2007-ஆம் ஆண்டு கோடியக்கரை பயணத்தில் பவழக்கால் உள்ளான்களின் அழகிய பறப்பை நண்பர்களுடன் கண்டு இரசித்திருக்கிறேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட பவழக்கால் உள்ளான்கள் குழுவாக எங்களுக்கு நேரெதிரில் "வலது, இடது' என நீண்ட நேரத்திற்கு பறக்கும் போது, உடலின் கறுப்பு, வெள்ளை நிறங்களும், கால்களின் சிவப்பும் மாறி மாறி ஒளிவெள்ளத்தில் காட்சியளித்தது எங்களுக்குள் பிரமிப்பையும், ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. மனதிற்குள் அழகிய ஓவியத்தையும் தீட்டிச் சென்றிருந்தது.

அந்த வகையில், பவழக்கால் உள்ளானின் எல்லைச் சண்டையை, முதன் முறையாக பெரியபாளையம் நஞ்சராயன் குளத்தில்தான் பார்த்து இருக்கிறோம். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அரிய நிகழ்வுகளை நண்பர்கள் மூவருமாக இணைந்து இரசித்துக் கொண்டிருந்தோம்.
இதற்கு இடைப்பட்ட தருணத்தில் உள்ளான்களின்  எல்லைச் சண்டையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. உள்ளான்கள் ஒன்றை ஒன்று தாக்கி துரத்தி யடிப்பதும், பிறகு வருவதும், சிறிது நேர இடைவெளியில் மோதல் தொடர்வதுமாக நீண்ட நேரத்திற்கு நீடித்தது. இது போன்ற எல்லைச் சண்டைகளும், உணவுக்கான சண்டைகளும் அனைத்து உயிரினங்களிடையும் வழக்கத்தில் இருக்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புறநகர்ப் பகுதியான அன்னை சிவகாமி நகரில் உள்ள குளத்தில், நீலத்தாழைக் கோழி  தன் வாழ்வெல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தாழைக் கோழியையும் , மற்றொரு நீலத் தாழைக் கோழியையும் விரட்டியடித்த நிகழ்வை பார்த்து இரசித்திருக்கிறேன். கிளிகளின் வாழ்விடத்திற்கான சண்டையை அம்பாசமுத்திரத்திலும் (2011), தட்டான் களின் போட்டி நிறைந்த சண்டையை, மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள சிறுமுகை காட்டுப்பகுதியிலும் (2012) பார்த்த அனுபவம் உள்ளது. காட்டுயிர் களில் பேருயிரான யானை, புலி முதல் சிறு பூச்சி வரை அனைத்து உயிரினங்களும் தங்களுக்கான வாழ்வெல்லையை நிர்ணயித்துக் கொண்டு, அதற்குள்ளாகவே உணவு தேடல், இனப்பெருக்கம், கூடுகட்டல் என அனைத்தையும் நிகழ்த்து கின்றன. அதன் பாதையிலிருந்து வெளியில் செல்லும் உயிரினம் மிகுந்த சிக்கலுக் குள்ளாகிறது.

பெரியபாளையம் நஞ்சராயன் குளத்தின் இரண்டு நாள் பறவை பார்த்தலில், சிறிய உப்புக்கொத்தி , பச்சைக்காலி  என்ற அழகிய இரு சிறு பறவைகள் என்னுடைய பறவை பட்டியலில் முதன் முதலாக இணைந்தன. இவை தவிர, சோளக்குருவி , செந்நாரை , பட்டாணி உப்புக்கொத்தி , உள்ளான் , சாம்பல் வாலாட்டி , பவழக்கால் உள்ளான் அல்லது நெடுங்கால் உள்ளான் , தகைவிலான் , புஞ்சைப்பருந்து , நாமக் கோழி , முக்குளிப்பான் , புள்ளி மூக்கு வாத்து , ஆண்டி வாத்து , ஊசிவால் வாத்து , மஞ்சள் மூக்கு ஆள்காட்டி , சிவப்பு மூக்கு ஆள்காட்டி  என பலவித பறவைகளுடன், கூழைக்கடா , சங்கு வளை நாரை அல்லது வர்ணநாரை (அ) மஞ்சள் மூக்கு நாரை , நத்தை குத்தி நாரை , வெள்ளை அரிவாள் மூக்கன்  போன்ற பொதுவான பறவைகளையும் கண்டு இரசித்திருக்கிறேன்.

இயற்கையின் அற்புதங்கள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. கிராமம் அல்லது சிறு நகரமாக இருந்தால், அருகில் உள்ள நீர்நிலைகளைச் சீர்படுத்தி, நன்னீர் நிலைகளாக மாற்றினாலே போதுமானது. பலவகை பறவைகளாலும், அவற்றின் இனிய குரலொலிகளாலும் அவ்விடமே மகிழ்ச்சியான இடமாக மாறிவிடும். சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் செய்யும். குடிநீருக்கும், விளை நிலத்திற்கும் தேவையான நீருக்கும் அலைமோத வேண்டிய தேவையிருக்காது. நீர்நிலை களையும், மண்ணையும், இயற்கை வளங்களையும் தங்களது வாழ்வாதாரங் களாக நினைத்துப் பாதுகாக்கும் போது மட்டுமே, அனைத்துவித வணிக நோக்கத்தையும் முறியடிக்க முடியும்.

அந்த வகையில், மேல்நாட்டு தொலைக்காட்சிகளை வியந்து பார்க்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு, நாம் வசிக்கும் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளை காத்து, அதிலுள்ள பறவைகளையும், சிற்றுயிர்களையும், இயற்கை காட்சி களையும் இரசிக்கக் கற்றுக்கொள்வோம். எனக்குள் படிந்து கிடந்த தாழ்வு மனப்பான்மையை, காட்டுயிர் ஒளிப்படக் கலைஞனாக பரிணமித்த போதே விட்டொழித்து விட்டேன். நீங்கள்...?

 

Pin It