எனக்குப் பதினான்கு வயதாக இருந்த போது நான் கம்மங்கொல்லைக் காவலாளியாக என் பெற்றோரால் நியமிக்கப்பட்டேன். ஒரு தகர டப்பாவைக் குச்சியால் அடித்து முழங்கிக்கொண்டே வரப்பின் மேல் ஓடவேண்டும். குருவிகள் சிதறிப் பறந்து, காந்தத்தால் இழுக்கப் பட்டதுபோல அருகில் உள்ள மரங்க ளில் போய் அமரும். பிடிவாதம் மிக்க சில குருவிகள் தோட்டத்தின் வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கதிர்களைக் கொறிக்கத் தொடங்கும். சில குருவிகள் ஆலமரக்கிளைகளால் aa_00மூடப்பட்ட கிணற்றுக்குள் சென்று தஞ்சமடையும். அங்கே மனிதர்கள் எளிதாக தொட முடியாத தூரத்தில் ஏராளமான கூடுகள் தொங்கிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளில்.

பறவைகளுக்கும் எனக்கும் நட்பும் பகையும் கலந்த ஒரு வினோத உறவு நிலவி வந்தது அக்காலத்தில். சொரட் டால் கூடுகளை இழுத்து ஆராய்வது எனக்கு உப தொழில். அதெல்லாம் வேறு கதை.

அந்த தகர டப்பா சத்தமும், வேலையும் விரைவிலேயே எனக்கு அலுப்பூட்டத் தொடங்கிவிட்டன. அதனால்தான் நான் தானியங்கி மேளங்களை வடிவமைத் தேன். இரும்புத் தகடுகளால் ஆன ஒரு காற்றாடி செய்து அதன் இயக்கத்தை மேளங்களோடு இணைத்து உருவாக்கப் பட்டவை அவை. அவற்றைக் கொல்லையின் இரண்டு திசைகளிலும் வைத்தேன். காற்று வீசும்போதெல்லாம் அவை "டம டம' என்று அடிக்கத் தொடங்கும். ஆரம்பத்தில் அந்தச் சத்தத் துக்குப் பயந்த பறவைகள் பிறகு பயம் நீங்கி சாவகாசமாக அமர்ந்து கதிரைக் கொறிக்கத் தொடங்கின.

அதனால் எனக்கு ஒரு துப்பாக்கி வேண்டுமென்று என் அப்பாவிடம் முறையிட்டேன். பொம்மை துப்பாக்கி அல்ல; நிஜ துப்பாக்கி. அவரோ தென்னை மட்டையைச் செதுக்கி துப் பாக்கிபோல ஒன்றைச் செய்துகொடுத்து "இதை கையில் எடுத்துக்கொண்டு வரப் பில் நட, இந்த பக்கமே அவை தலை காட்டாது' என யோசனை வழங்கினார். அதை கையில் வைத்திருப்பதே எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் அந்த மட்டைத் துப்பாக்கியைக் கண்டு அவை பயப்படவேயில்லை. நிஜத் துப்பாக்கி தான் வேண்டுமென்று என் அப்பா விடம் அடம்பிடித்தேன். என் பிடிவா தத்தைக் கண்டு அம்மாவின் எதிர்ப்பை யும் பொருட்படுத்தாமல் அவர் எங்கள் ஊர் வேட்டைக்கார கவுண்டனிடமி ருந்து ஒரு துப்பாக்கியை வாங்கி வந்து கொடுத்தார். அது சாதாரணத் துப்பாக்கி யைவிடக் கொஞ்சம் சிறிதாக இருந்தது; எனக்காகவே செய்ததுபோல. துப்பாக்கி யில் மருந்து திணிப்பற்கும், குறிபார்த்து சுடுவதற்கும் அப்பாதான் கற்றுக்கொடுத் தார். அதை ரகசியமாக உபயோகிக்க வேண்டுமென்ற உத்தரவையும் பிறப் பித்திருந்தார். தெரிந்தால் போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விடுமாம். வேட்டைக்காரக்கவுண்டனின் அப்பா வுக்கு சுப்பிரமணி ஆச்சாரி செய்து கொடுத்த துப்பாக்கிதான் அது. அதில் தான் வேட்டைக்காரக் கவுண்டன் அவ னுடைய சிறு வயதில் வேட்டை கற்றுக் கொண்டானாம். அந்தப் பிரதேசத்துக்கே துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது சுப்பிரமணி ஆச்சாரிதான் என்று அப்பா சொன்னார். வேட்டை கற்றுக்கொண்ட காலத்தில், கூடவே அவனைப் பற்றிய கதைகளையும் கேட்டேன். பலரும் பல விதமாகச் சொன்னார்கள். அவை சுப்பிர மணி ஆச்சாரியின் கதை மட்டுமல்ல, கள்ளத்துப்பாக்கிகளின் கதையும் கூடத் தான்.

அப்போது விஞ்ஞான வாசனை அறி யாத ஒரு கிராமமாக இருந்தது தர்மா புரம். ஜவ்வாது மலை அடிவாரத்தில் இருந்த அந்த ஊருக்குச் செல்லும் பாதை, இரு பக்கமும் புதர் மூடியதாக வும், ஆறுகளும், ஓடைகளும், பாறை களும், குறுக்கிடுவதாகவும் இருந்தது. வெளி யூர்ப் பயணம் என்பதே அந்த ஊர் குடி யானவர்களுக்கு ஒரு சாகசப் பயணம் போலத்தான். மூன்று பக்கமும் மலை களால் சூழப்பட்டு, காட்டின் நடுவே புதைந்து காணப்படும் தர்மா புரம், அந்த ஒரே பாதை மூலமாகத்தான் வெளி உல கத்தோடு தொடர்புகொண் டிருந்தது. மலையிலிருந்து இறங்கி வரும் மலை கவுண்டர்களுக்கு அந்த ஊர்தான் பிரதான வியாபாரஸ்தலம். வெள்ளிக் கிழமைதோறும் நடக்கும் சந்தைக்கு காய் கனிகளைக் கொண்டு வந்து விற்று விட்டு மண்ணெண்ணெய், உப்பு, துணி முதலானவற்றை வாங்கிச் செல்வார்கள்.

தர்மாபுரத்தில் வாழ்ந்த குடியானவர் களை நம்பி ஒரு ஆச்சாரிக் குடும்பம் வசித்தது. அந்த குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகள். அதில் மூத்தவன் ஏர் கலப்பை, மாட்டுவண்டி, கட்டில் முதலான மர வேலைகள் செய்து பிழைப்பு நடத்திவந்தான். அதற்கு அடுத்தவன் இரும்பு வேலை செய்தான். மண்வெட்டி, கடப்பாரை, கொடுவாள், தறி, அரிவாள் முதலானவற்றைத் தனது உலைக்கூடத்தில் வடித்தெடுத்தான். அதற்கு அடுத்தவன் நகை வேலை செய் தான். பழைய தங்க, வெள்ளி நகைகளை அழித்து புது நகைகள் செய்வது, திரு மணத்துக்கான தாலி செய்வது, அறுந்த கால் கொலுசுகளைப் பற்ற வைப்பது, மெருகு போடுவது போன்ற காரியங் களைச் செய்தான். இவர்களுக்கு இளை யவன் பெயர் சுப்பிரமணி. அவன் இரண்டாம்தாரத்துப் பையன். இருந்தா லும் அவன் அண்ணன்மார் அவனை ஒதுக்கி வைக்கவில்லை. அவனுக்கு வேலை கற்றுக்கொடுக்க முன் வந்தார் கள். அவனோ அண்ணன்மார் மூன்று பேரிடமும் மாறி மாறி வேலை செய்தா லும் எந்தத் தொழிலையும் முழுதாகக் கற்றுத்தேறாமல் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தான். வாலிபம் கண்ட பிறகுகூட அவர்களிடம் அடி வாங்கி னான். அவனுக்குப் பெண் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை. பார்ப்பதற்குத் திடமான தோற்றம் கொண்டவன்தான் என்றாலும் அவனைப்பற்றி ஒரு எளக் காரத் தொனி எல்லோரிடமும் வெளிப் பட்டது. அதனாலோ என்னவோ இளம் பெண்கள் அவனை நெருங்கி வர வில்லை.

காலம் இப்படியாகக் கழிய, ஒருநாள் தனது இரண்டாவது அண்ணனின் பட் டறையில் சம்மட்டி போட்டுக்கொண் டிருந்தான் சுப்பிரமணி. காய்ந்த இரும்புப் பட்டைகளைத் தட்டிக் கலப்பைக்குக் கொழு வடித்துக்கொண்டிருந்தான் அவன் அண்ணன். சுப்பிரமணியின் மனம் வேலை யில் லயிக்காமல், உலைக்கூடத்தில் மலர்ந்த சிவந்த தீக் கங்குகளையே கவனித்துக்கொண்டிருந்தது. அது ஒரு பெண்ணின் அந்தரங்கத்தை ஞாபக மூட் டிக்கொண்டே இருந்தது. சூடு வீணாகி வேலை இழுத்துக்கொண்டு போனது. கொதிக்கும் அந்த இரும்புத் துண்டை எடுத்து சுப்பிரமணியின் காலில் இழுத் தான் அவன் அண்ணன். அலறித் துடித்த படி அங்கிருந்து ஓடினான் சுப்பிரமணி.

அப்போது ஓடியவன்தான் பல காலம் அவன் ஊர் திரும்பவேயில்லை. அவனு டைய அண்ணன்களும் அவனைத் தேட வில்லை. ஒழிந்தது சனியன் என்று விட்டு விட்டார்கள். அவன் போனது யாருக்கும் இழப்பாகத் தோன்றவில்லை. அந்த கிரா மமே அவனை மறந்து போயிருந்தது.

யாரும் எதிர்பாராத ஒரு நாளில், நடு வயதை எட்டியவனாக சுப்பிரமணி திரும்பி வந்தான். அவனுடன் பெரு வயதுக்காரியான ஒரு பெண்ணும், அவளுடைய மகளும் உடன் வந்திருந்தனர். அவன் வேலை கற்றுக்கொண்ட ஆச்சாரி யிடமிருந்து கள்ளத்தனமாகக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான் அவர்களை. அந்த இரண்டு பெண்களில் யார் அவனது இணை என்று ஊரில் உள்ளோர் யூகம் செய்தபடி இருந்தனர்.

சுப்பிரமணி வரும்போது கூடவே அபூர்வமான இரண்டு மருந்துகளைக் கொண்டுவந்திருந்தான். ஒன்று கருப்பா கவும் மற்றது ஆரஞ்சுப் பழ நிறத்திலும் இருந்தன. ஏதோ வைராக்கியம் கொண் டவன் போல, தன் அண்ணன்களுடன் தங்காமல் அந்த ஊரின் வசதிமிக்க ஒரு பண்ணைக்காரனின் மாட்டுக்கொட் டகையில் குடும்பத்தை வைத்தான்.

அவன் என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை. வந்து சில நாட்கள் கழிந்து, அவன் செய்து முடித்த சாதனத்தில் மருந்தைக் கிட்டித்து முதல் வேட்டை கிளப்பியபோது, தோட்டாக் கள் சுவர் பரப்பிலும், சத்தம் மலையி லும் பாய்ந்தன. காகங்கள் முதலான பறவைகள் எல்லாம் மிரண்டு பறந்தன. காட்டு விலங்குகள் முதல் அதிர்வை ஈரல் குலையில் உணர்ந்தன. துப்பாக்கி என்று அழைக்கப்பட்ட அந்தச் சாத னத்தை பண்ணைக்காரனுக்கு அன்பளிப் பாக கொடுத்தான் சுப்பிரமணி.

ஒரு நாள் முன்னிரவு நேரத்தில் தீப்பந்தம் ஒன்று தனியாகக் காட்டில் அலைந்து கொண்டிருந்ததை அந்தக் கிராமத்தினர் வியப்புடன் பார்த்தனர். பின்னர் இரண்டு மூன்று முறை காட்டுப் பக்கமிருந்து வேட்டுச் சத்தம் கேட்டதால் அவர்கள் பீதியில் ஆழ்ந்தனர். பின் வந்த நாட்களில் அந்தச் சத்தம் அவர்களுக்குப் பழகிப் போய்விட்டது. இரவு நேரத்தில் நான்கைந்து ஒளிப் புள்ளிகளைக் கூட அவர்கள் கண்டார்கள். மான்கள், முயல்கள், கடம்பை மான்கள், காட்டுப்பன்றிகள் என வேட்டையாடப்பட்டு, பங்கு போடப்பட்ட மாமிசம் ஆமணக்கு இலைகளில் மடித்து ஊருக்குள் பரிமாறப்பட்டன.

சுப்பிரமணியின் பட்டறையில் உருவான துப்பாக்கிகளால் வேட்டைக்காரர்கள் பெருகினார்கள். பக்கத்து ஊர்க்காரர்களும் அவன் பட்டறையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருந்தனர். இப்படியாக இரவு நேரத்தில் அந்தக் காடு வேட்டுச் சத்தங்களால் துளைக்கப்பட்டு, அதன் எதிரொலிகளால் இரைச்சலிட்டன. துப்பாக்கி மட்டுமில்லாமல் வேர்க்கடலை உருண்டை வெடிகளையும் செய்து, காட்டோரம் உள்ள விவசாயிகளுக்குக் கொடுத்தான். இரவு நேரத்தில் காட்டிலிருந்து இறங்கிவந்து பயிர்களை நாசம் செய்த பன்றிகள் அந்த உருண்டைகளைக் கடித்து வாய்கிழிந்து செத்தன. அவன் செய்து கொடுத்த வெடிக் குழாய்களின் வேட்டுச் சத்தம் கேட்ட பிறகுதான் உற்சவர் கிளம்பி வீதி உலா வரத்தொடங்கினார். அந்தப் பிரதே சத்தை வெடிமருந்தின் வாசம் நிறைக்கத் தொடங்கியது. குடியானவர்களுக்கு அது புது உற்சாகத்தை அளித்தது.

அவன் செய்து கொடுத்தத் துப்பாக்கிக்கு முதல் மனித பலி விழுந்தபோதுதான், அந்தச் சாதனம் மிருகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொல்லும் என்று அக் கிராமத்தினர் தெரிந்து கொண்டனர். துப்பாக்கி என்ற வார்த்தை அவர்களுக்குள் அச்ச உணர்வைத் தோற்றுவிக்கத் தொடங்கியது. மிருகங்களின் நடமாட்டம் அதிகம் உள்ள காட்டு வழியில், துப்பாக்கி விசையுடன் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றை கடந்துசென்ற ஒருவனின் மேல் ரவைகள் பாய்ந்து அவன் அதே aadhi-ads-1இடத்தில் இறந்தான். அந்தக் கொலை பஞ்சாயத்துக் காரர்களின் துணையுடன் மூடி மறைக்கப்பட்டது. இரண்டாவது பலி ஊர் கவுண்டரின் மகனாக இருந்தது. அவனுடயை கள்ளக் காதலியின் கணவனால் அவன் சுடப்பட்டான். அதனால் அவனையும், துப்பாக்கி செய்துகொடுத்த சுப்பிரமணி ஆச்சாரியையும் தேடி போலீஸ் வந்தது. ஆச்சாரி தப்பி தலைமறைவானான். பல நாள்கள் அவன் ஊர் திரும்பவில்லை. இரவில் ரகசியமாக வந்து துப்பாக்கி சாமான்கள் செய்வதாக ஊரில் வதந்தி பரவியதால் போலீஸ்காரர்கள் இரவிலும் வந்து அவனைத் தேடிவிட்டுப் போனார்கள்.

இந்தச் சமயத்தில்தான் அவன் கூட்டிக் கொண்டு வந்திருந்த இளம்பெண், இளைஞன் ஒருவனுடன் ஓடிப்போனதும், அவள் அம்மா பண்ணைக்காரனின் வப்பாட்டியானதும். சோளக்கொல்லை ஒன்றில் ஒரு நாள் மர்மமாக அவள் இறந்துகிடந்தபோது, எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது அக் கொலையைச் செய்தது சுப்பிரமணி ஆச்சாரிதான் என்று. அவன் எங்கிருக்கிருக்கிறான் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. பின் வந்த நாட்களில் எங்கெல்லாம் காடுகள் அதிர்கிறதோ அங்கெல்லாம் அவனைத் தேடி போலீஸ் படை எடுக்கத் தொடங்கியது. அவர்களின் யூகங்கள் எதுவுமே பலிக்கவில்லை. அவன் அகப்படவே இல்லை. நாட்களின் நடுவில் அவன் நழுவிப் போய்க் கொண்டிருந்தான். பல நிலப்பிரதேசங்களில் அவனது காலடித் தடங்கள் கிடைத்ததாக பலரும் பேசிக்கொண்டார்கள். வருஷங்கள் பல கடந்தன.

இதற்கிடையில் சுப்பிரமணியின் அண்ணன் மகன் கள்ளத்துப்பாக்கி செய்வதாக ஊரில் வதந்தி பரவியது. அவனுக்கு சுப்பிரமணி ஆச்சாரிதான் ரகசியமாக வந்து தொழில் கற்றுக்கொடுத்தானாம். அது உண்மைதான் என்பதை, அவன் தனது இரண்டு கைகளையும் வெடி விபத்தில் இழந்து நிரூபித்துவிட்டான். துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் ஆரஞ்சுப்பழ நிற மருந்து வைத்திருந்த டப்பாவின் மூடியைத் திருகியபோது அது வெடித்து அவனது இரண்டு கை களும் கூலமாகிவிட்டது. காயம் ஆறிய பிறகு, விரல்களற்ற அந்த கைகளை வைத்துக்கொண்டே மரத்தில் பல சாகசங்களைச் செய்தான் என்பது வேறுகதை.

சுப்பிரமணி ஆச்சாரி ஒரு மலை கிராமத்தில் ஒலிந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. ஒரு வனக்காவலன் அங்கு சென்று பார்த்தபோது, கண் பார்வையை இழந்து வீட்டு திண்ணை ஒன்றில் அவன் படுத்துக் கிடந்தான். அவனுக்கருகே கைத்தடி தான் கிடந்தது. இந்த நிலையில் அவனைக் கண்ட வனக்காவலன் மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளானான். கண்களை இடுக்கிக்கொண்டே ஆச்சாரி சொன்னான், “பாரஸ்ட் அய்யா, நான் ஏனம் (துப்பாக்கி) செய்ஞ்சது நிஜந் தான். நான் காட்டுல இருக்கிற மிருகங்கள சுட்றதுக்காகத் தான் செய்ஞ்சேன். அவுங்கதான் அதை வாங்கிட்டு போயி மனுசங்களச் சுட்டாங்க. அந்த பொம்பளையைக்கூட நான் கொல்லலை. என்னத் தேடிவந்த ஒரு போலீஸ்காரன் தான் அவளைச் சித்ரவதை செய்து கொன்னிருக்கான். அந்தக் கொலைப் பழியும் என்மேலேயே விழுந்திடுச்சி. அய்யா நான் ரொம்ப அலைஞ்சிட்டேன், பல காலம் ஓடி ஒளிஞ்சி வாழ்ந்துட் டேன். இனிமே அப்படி முடியாது. என்னை எங்க வேணா கூட்டிகிட்டு போங்க, என்ன வேணா செய்துக்குங்க...'' அவன் கைகள் குவிந்தன. அதன் துருத்திய நரம்புகளிலிருந்து இயலாமையின் கண்ணீர் கசிந்துகொண்டிருந்தது.

அவனை குற்றவாளியாகவும், தன்னை சட்டத்தின் காவலனாகவும் காண்பது பெரும் சங்கடத்தைத் தோற்றுவித்தது. வெறும் கையுடனேயே அவன் ஊர் திரும்பினானன். அந்த மலை கிராமத்தில் சுப்பிரமணி ஆச்சாரி இல்லை என்றும், யாரோ தவறான தகவல் கொடுத்திருப்பாதவும் அவன் துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்தான். அவன் ஏங்கோ இறந்துவிட்டதாகக் கருதி அவன் கேஸுக்கு முழுக்கு போட்டது போலீஸ். அரசாங்க ஆவணத்தை உண்மையாக்கும் விதத்தில் ஆச்சாரி சீக்கிரமே போய்ச் சேர்ந்தான். அவன் ஆவி அந்த காடுகளின் அமைதிக்குள் உரைந்தது. ஆனால் கள்ளத் துப்பாக்கிகளோ அவன் பெயரை உச்சரித்தபடி இன்னும் காடுகளுக்குள் இரைச்ச லிட்டுக் கொண்டே இருக்கின்றன.

-ஜீ.முருகன்

.

Pin It