சித்திரை மாதத்தில் ஒரு நாள் உச்சிப்பொழுதில் அவை காட்டைவிட்டு ஊருக்குள் பிரவேசித்தன. அப்பொழுது எங்கள் கிராமத்தில் பெரும்பாலானவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இரவு முழுக்க கண்விழித்து கூத்துப் பார்த்த தூக்கமயக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. மஞ்சள் நிற வேட்டியுடுத்தி, கைகளில் காப்புக்கட்டி, பூநூல் மாட்டியிருந்த கூத்தாடிகளில் பாதிப்பேர் நாடகக் கொட்டகையில் இடமில்லாமல் பண்ணை நிலங்களிலிருந்த மாட்டுக்கொட்டகைகளிலும், பம்பு செட்டுகளிலும், மரத்தடிகளிலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

monkey_280அவ்வூர் சிறுவர்கள் உறங்கவில்லை. தண்டாயுதம், சூலாயுதம், ஆங்காங்கே ஜிகினா காகிதம் ஒட்டப்பட்ட வில் அம்பு முதலிய ஆயுதங்களுடன் மறைவான  இடங்களை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். இரவு முன்வரிசையில் இடம்பிடித்துப் பார்த்த கூத்தினை பகல் நேரத்தில் அவர்கள் ஆடிப்பார்க்கப்போகிறார்கள். ஆட்ட களம் வெறிச்சோடி தூங்கி வழியும் நாடகக்கொட்டகையின் அருகில் சில சிறுவர்கள் வண்ணக்காகிதங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களோ மதிய உணவுக்குப்பின் தங்களுடைய வாழைத் தோட்டங்களிலும் வயல்களிலும் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார்கள். எதிர்பாராத இந்தச் சந்தர்ப்பத்தில் அவை காட்டிலிருந்து இறங்கி வந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல ஐம்பதுக்கும் மேற்பட்ட குரங்குகள்.

குரங்குகளை முதலில் பார்த்தது பாஞ்சாலையம்மாதான். வாழைத் தோட்டத்தில் நிம்மதியுடன் வெளிக்குப் போய்கொண்டிருந்தவள், பின்னால் ஏதோ சலசலப்பு கேட்கிறதே என திரும்பிப் பார்த்தவள், குரங்குகளைக் கண்டவுடன் வெலவெலத்துப் போய், தோட்டத்தைவிட்டு வெளியே ஓடிவந்தாள். இதற்குமுன் அவள் குரங்குளைப் பார்க்காதவள் அல்ல. காடுகளிலும் கோயில்களிலும் பார்த்திருக்கிறாள். இப்படி திடுதிப்பென்று வாழைத் தோட்டத்துக்குள் பார்ப்போமென்று நினைத்திருப்பாளா அவள்?

மத்தியானமே கண் விழித்துவிட்ட முருகேசக் கவுண்டன் அன்று உடைக்கப்போகும் சுரைக்காய் தண்டாயுதங்களுக்கு   கலர் காகிதம் ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் இன்னும் மத்தியானச் சாப்பாட்டை முடிக்கவில்லை. அவனுடைய மகன் கொண்டுவந்து வைத்துவிட்டுப்போனது பக்கத்திலேயே இருந்தது. வாதாபி தர்பாரில் பஃபூனாக வரும் மாதவக் கவுண்டனை இந்தச் சுரைக்காய் தண்டாயுதங்களால்தான் துரத்தித் துரத்தி அடிக்கவேண்டும். அடித்து உடைக்க வேண்டும். அப்போதுதான் பார்வையாளர்கள் மகிழ்ந்து சிரிப்பார்கள். ஒன்பது நாள் வன்னியன் கூத்தில் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிந்திருந்தது.

பிள்ளையார் கோயிலுக்கு முன்னால்தான் ஆட்டப் பந்தல். கோயிலை அணைத்த மாதிரி வடக்குப் பக்கத்தில் தென்னங்கீற்றாலான ஒரு கொட்டகை. இதில் தான் வேஷம் தரிப்பது, கலைப்பது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாம். பின்பக்கம் அழிஞ்சன் கிளைகளால் ஆன வேலி வேயப்பட்டிருந்தது. முருகேசக்கவுண்டன் கீற்றுக் கொட்டகையில் உட்கார்ந்து கலர் காகிதம் ஒட்டிக் கொண்டிருந்த அத்தருணத்தில்தான் வேலி வழியாக திடீரென்று உள்ளே புகுந்துவிட்ட குரங்குகள் கோபுரத்தின் மேலும், ஆட்டப்பந்தல் மேலும் தாவிக் குதித்தன. அப்போது ஆட்டப்பந்தல் மேல் கேட்ட சத்தம் அவனை திடுக்கிடச் செய்தது. அவனது தலைக்கு மேலும் அதே சத்தம் தொடர்ந்த போது அவன் அவசரத்துடன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். குரங்குகளைக் கண்டு துணுக்குற்றான். சுரைக்காய் ஒன்றைக் கையிலெடுத்து அவைகளை விரட்ட ஆரம்பித்தான். ஆட்டக் களத்தை எங்கே துவம்சம் செய்துவிடுமோ என்று அஞ்சினான் அவன். இந்த ரகளையால் மிரண்டு எழுந்த சிலரும் அவனுடன் சேர்ந்து கொண்டார்கள்.

அதன் பின் வந்த நாட்களில் வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும், மாந்தோப்புகளும் அவைகளுக்கு விளையாட்டுக் களமாயின. வீடுகளுக்குள் புகுந்து சட்டி பானைகளை உருட்டுவது, கட்டுத்தறியில் இருக்கும் மாடுகளை அச்சுறுத்துவது, நாய்களைச் சீண்டுவது என அதன் விளையாட்டுகள் பெருகின.

செங்கல்வாடியான் வீட்டு மாங்காய்த் தோப்பில்தான் அவைகள் கூடாரமிட்டிருந்தன. அது டவுனில் இருக்கும் ஒரு முசல்மானுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வருஷம் நல்ல காய்ப்பு. காவலுக்கு உட்கார்ந்திருந்த கிழவன், அவைகளின் தொல்லை தாங்காமல் நகரத்துக்குப் போய் மொதலாளியிடம் குரங்குகளுடன் மாரடிக்க தம்மால் ஆகாதென்று சொல்லிவிட்டான். வாழைத்தோட்டங்களில் புகுந்து வாழைத்தார்களைச் சாய்த்து அவைகள் செய்யும் நாசத்தைத் தாங்காத விவசாயிகள், முற்றிய தார்களை உடனே வெட்டிக்கொண்டு போகும்படி வியாபாரிகளை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

கூத்துக் காலத்துச் சந்தோஷங்கள் ஒரு புறமிருக்க குரங்குகளின் விளையாட்டுக்களை காணவொண்ணா காட்சியாகக் கண்டு பரவசமுற்றார்கள் சிறுவர்கள். தோட்டம் தோட்டமாக அவைகளைத் தேடிப்போனார்கள். குறும்புத்தனமாகக் கற்களை வீசி விரட்டினர். அவைகள் சீறிக்கொண்டு எதிர்க்கையில் பயந்து ஓடிவந்தார்கள். கேபிள் டிவி ஒயர்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு தலைகீழாக அவை நடக்கையில் அதியத்துடன் பார்த்தார்கள். பயன்பாடின்றிப் போன ஐந்தாறு டிவி ஆண்டனாக்களை தாட்சண்யமில்லாமல் உடைத்துப் போட்டன குரங்குகள்.

ஊருக்குள் வந்துவிட்டால் எந்தத் தெருவில் அவைகள் நுழைகிறதோ அங்கே உள்ளே ஓடி எல்லா கதவுகளையும் சார்த்திவிட்டு கிலேசத்துடன் சிரித்துக் கொண்டனர் பெண்கள்.

திரும்பவும் வந்த வழியே அவைகள் காட்டுக்குள் போய்விடும் என்ற அவர்களுடைய எதிர்பார்ப்பு பலிக்கவில்லை. கிழக்குக் காட்டிலிருந்து இறங்கிவந்த அவைகள் மேற்கு திசைத் காட்டுக்குப் போகத்தான் இங்கே வந்துள்ளனவே தவிர நிரந்தரமாகத் தங்காது என்று சொன்ன சில அனுதாபிகளின் கூற்றுகள் உண்மையல்ல என்று ஆகியது.

குரங்குகளை எப்படித் திரும்புவம் காட்டுக்குள் ஓட்டுவது என்ற கேள்வி எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. எங்கும் எப்போதும் அவைகள் வரலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டார்கள் அக்கிராமத்தினர். வாதாபி சூரனின் படைகளுடன் வன்னிய மகாராசனின் படைகள் மோதும் வேளையில் இடையே வாலியின் படைகள் எங்கே புகுந்துவிடப்போகிறதோ என்று அச்சத்துடன் இருந்தார்கள் ஆட்டக்காரர்கள். அப்படி ஒன்றும் நடக்காதது அவர்களை நிம்மதியடையச் செய்தது.

கூத்து முடியும் வரை காத்திருந்த ஜனங்கள் அடுத்த நாளே மும்முரமாக யோசிக்கத் தலைப்பட்டார்கள். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். ஊரில் இருந்த எல்லா வேட்டைக் காரர்களும் ஒன்று சேர்ந்து துப்பாக்கியால் அவைகளை வேட்டையாடிவிடலாம் என்றார்கள். ஒரு சாராரோ, அது பாவம் என்றும் தெய்வக் குற்றம் என்றும் சொல்லித் தடுத்தனர். அதனால் அம்முயற்சி கைவிடப்பட்டது. சிலரது யோசனைப் படி பட்டாசுகள் வாங்கிவந்து  வெடித்தார்கள், பறை அடித்தார்கள்,  அனுமனுக்குப் பொங்கல் வைத்தார்கள்; ஒன்றுக்கும் அவை பயப்படுவதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ஒருவன், தண்ணீர்ப் பாம்புகளைப் பிடித்துவந்து பொட்டலமாகக் கட்டி அவைகளிடம் போட்டால் பாம்புகளைக் கையில் பிடித்தபடி கத்தியே அவை செத்துப்போகும் என்றான். இந்த யோசனை பலரையும் அச்சமடையச் செய்தது. அப்படி ஒரு கொடுமையைச் செய்வதைவிட சுட்டுக் கொன்றுவிடுவதே உத்தமம் என்று அது தவிர்க்கப்பட்டது. இன்னொருவன் இறுதியாக சொன்ன யோசனை எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதைச் சொன்னவன் ஆற்றுத்தெரு வடிவேல் உடையான். மொடாக் குடியனாக இருந்தாலும்கூட அவனது யோசனையைச் செயல்படுத்தவே எல்லோரும் ஆர்வம் கொண்டார்கள்.

இத்திட்டம் உருக்கொண்ட அன்று சாயும்காலமே யாரும் எதிர்பார்க்காத அந்த விபத்து நடந்தது. பஃபூன் மாதவன்  பம்புசெட் பள்ளத்தில் விழுந்து, தலை மோட்டாரில் அடித்து நசுங்கிச் செத்துப் போனான். மாதவனின் இறப்பு குறித்து நிறைய வதந்திகள் ஊருக்குள் உலாவந்தன. காப்புக் கட்டிக் கொண்டு கூத்தில் சேர்ந்த பிறகும்கூட சாராயம் குடித்ததால் நேர்ந்த தெய்வகுற்றம் தான் என்றார்கள், தூங்கும் போது தவறி விழுந்துவிட்டான் என்றார்கள்,பங்காளிகள்தான் அடித்துப்போட்டு விட்டார்கள் என்றார்கள், பம்புசெட்டில் தூங்கிக் கொண்டிருந்த பஃபூனை குரங்குகள்தான் பள்ளத்தில் உருட்டிவிட்டன என்றுகூடச் சொன்னார்கள்.

குரங்குகள் ஊருக்குள் வந்தது, நெருப்பில் இறங்கிய வன்னியனின் பாதத்தில் தீக்கொப்புளங்கள் போட்டது, பஃபூன் மாதவன் செத்துப்போனது இவை எல்லாவற்றையும் பார்த்த ஊர்க்காரர்கள் இதெல்லாம் ஏதோ பெரும் தீங்கின் முன் அறிகுறி என்றே கருதினர்.

வடிவேல் உடையான் சொன்ன திட்டத்தின் முதல்படி அந்த மந்தையிலிருந்து ஒரு குரங்கு பிடிக்கவேண்டும் என்பது. அதனால் ஒரு குழு குரங்குகள் முகாமிட்டிருந்த மாங்காய்த் தோப்பை நோக்கிப் புறப்பட்டது. இன்னும் சில குழுக்கள்  குரங்குகள் அதிகமாக புழங்கும் இடங்களைக் குறி வைத்து வேட்டையைத் துவக்கின. குரங்கைப் பிடிக்கப்போகிறோம் என்பதே எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் காலியாக இருந்தன. தோட்ட வேலைகள் தடைப்பட்டன.

சுருக்குக் கயிறுகளுடனும் தடிகளுடனும் தோட்டம் தோட்டமாக அலைந்தார்கள், கண்ணிகள் வைத்தார்கள்; எதிலும் அவைகள் பிடிபட மறுத்தன, லகுவாக நழுவிச்சென்றன. ஊரின் பலமுனைகளிலிருந்தும் வியூகம் அமைக்கப்பட்டு குரங்கு வேட்டை நடந்தது.

கடும் முயற்சிக்குப் பின்னால் ஒரு குரங்கு அகப்பட்டது. அதைச் சாதித்தது காளி கோயிலுக்கு அருகிலிருந்த பூங்காவனம்தான். மிரண்டு ஓடிக்கொண்டிருந்த குரங்குக்கூட்டத்திலிருந்து பிரிந்த குரங்கொன்று பூங்காவனத்தின் வீட்டுக்குள் நுழைந்த போது அவள் கதவைச் சார்த்திவெளியே தாளிட்டாள். ஆட்களைக் கூட்டிவர ஓடினாள். வீட்டுக்குள் பெரும் ரகளை நடந்து கொண்டிருந்தது. அதனுடன் வந்த சில குரங்குகள் வீட்டுக் கூரை மேல் பரபரப்புடன் இங்கும் அங்கும் ஓடி அதைக் காப்பாற்ற முயற்சித்தன. ஒரு பெரிய கொசுவலை கொண்டுவரப்பட்டு கதவைத் திறந்ததும் வெளிப்பட்ட குரங்கை வலையில் பிடித்தனர். ஒரு பெண்ணின் சாதாரண தந்திரத்திலேயே அகப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்தால் ஊர்ப்பக்கம் வந்திருக்குமோ என்னமோ அது.

இன்னும் பிரிக்காமல் இருந்த கூத்துக் கொட்டகைக்கு எதிரே பிடிப்பட்ட குரங்கைக் கொண்டுவந்து, பாய்ச்சல் காளையைக் கட்டுவது போல ஒரு நீண்ட கயிற்றின் நடுவில் பிணைத்தார்கள். கயிற்றின் இரண்டு முனைகளையும் இரண்டு குழுக்கள் பற்றிக்கொண்டிருந்தன. ஊரே அங்கே கூடிநின்றிருந்தது. சிறு கற்களை வீசியும் நீண்ட கழிகளால் சீண்டியும் அதை வேடிக்கை பார்த்தது கூட்டம். மிரண்டுபோன குரங்கு கண்களை உருட்டி உருட்டி கிறீச்சிட்டபடி முன்னும் பின்னுமாகக் கயிற்றில் இழுபட்டது. ஆக்ரோஷத்துடன் சீறிக்கொண்டு முன்னால் பாய முயற்சித்து தலைகுப்புற விழுந்தது. இரண்டு மூன்று பேர் குரங்கை அசையாமல் பிடித்துக்கொண்டு கருநீலச் சாயத்தை முகத்தில் பூசினர். ஒரு பையனின் பழைய டவுசர் சட்டையை கொண்டு வந்து மாட்டினர். புது அவதாரம் பூண்டது குரங்கு. இத்தனை நாள் குரங்குகள் செய்த சேட்டைகளுக்கெல்லாம் பழி வாங்கிவிட்டதான திருப்தி பெரும்பாலானவரின் முகத்தில் தெரிந்தது.

இறுதியாகக் கயிற்றிலிருந்து விடுவிக்கப்பட்ட குரங்கை நீண்ட கழிகளுடன் கிழக்குப் பார்த்து விரட்டினர். சிறிது தூரம் ஓடிய குரங்கு நின்று திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்ப ஓடியது. ஊர் எல்லையைத்தாண்டும் வரை விரட்டிக்கொண்டு போயினர். அக்காட்சி ஒரு குரங்கை விரட்டுவது போல இல்லாமல் சிறு பையனை விரட்டுவது போலத் தோன்றியதால் சிலர் மனவருத்தம் கொண்டனர்.

மனிதர்களால் அவலட்சணப்படுத்தப்பட்ட அக்குரங்கு தனித்து தோப்பை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. இத்தந்திரம் புரியாத தோப்பிலிருந்த குரங்குகளோ, இதை ஏதோ இதுவரை காணாத புதுவகை மிருகம் என நினைத்து மிரண்டு தோப்பிலிருந்து இறங்கி காட்டை நோக்கி ஓடின. எப்படியாவது மந்தையில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பின்னாலேயே இதுவும் ஓட எல்லா குரங்குகளுமே காட்டுக்குள் சென்றுவிட்டன. மனிதனின் தந்திரத்தில் மீண்டும் ஒருமுறை தோல்வியைச் சந்தித்தன குரங்குகள்.

குரங்குகளை விரட்டி விட்ட சந்தோஷத்தில் இருந்த ஊர்ஜனங்களோ சிறிது சிறிதாக வெறுமையை உணர ஆரம்பித்தனர். ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த கூத்தும் முடிந்து விட்டது. வேடிக்கை பார்க்கக் கிடைத்த குரங்குகளும் காட்டுக்குத் திரும்பிபோய் விட்டன. சிறுவர்கள்தான் அதிகம் ஏமாந்து போனார்கள்.

இச்சம்பவம் நடந்து பல மாதங்கள் கழித்து, சம்பவத்தை எல்லோரும் மறந்து கொண்டிருந்த தருவாயில், ஒரு குழந்தை வாலுடன் பிறந்ததுதான் அந்தக் கிராமத்தினரை அதிர்ச்சிடையச் செய்தது.

- ஜீ.முருகன்
- ஜீ.முருகன்

 

Pin It