கடந்த இதழில் (நவம்பர் 2012) வெளிவந்த திரைப்பட இயக்குநர் கோபியின் நேர்காணல் இந்த இதழுடன் நிறைவடைகிறது

gopi 370

இன்று பல திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் அம்பேத்கரின் படத்தைக் காட்டுவதும் ‘கானா' பாடல்களை சேர்ப்பதும் சில தலித் பாத்திரங்களை வலுவாக சேர்ப்பதும் நடக்கிறதே?

தலித் கலைஞர்கள் இவ்விஷயத்தை மிகவும் நுட்பமாக கவனிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தலித் அல்லாத கலைஞர்கள் வணிகத்தை முன்னிறுத்தி செய்கின்ற மிகப்பெரிய தவறுகளை தலித் கலைஞர்களும் – தலித் அரசியலின் கவனமற்று செய்துவிடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடந்த பிரச்சினை ஒரு தமிழ்த் திரைப்படத்தில் முக்கியக் காட்சியாக இடம் பெற்றிருந்தது. அப்படத்தில் வன்முறையைத் தூண்டிவிடும் மாணவனாக ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும். அப்பாத்திரத்திற்கு தலித் முகச் சாயல் கொண்ட ஒரு நடிகரைத் தேர்வு செய்திருப்பார்கள். உண்மையிலே அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஒரு தலித் கலைஞரும் கூட. நான் அவரைச் சந்தித்துக் கேட்டேன். அவர் மிகவும் பரிதாபமாக, ‘எனக்கு இப்படி ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரியாது' என்றார். அந்தக்காட்சி சட்டக்கல்லூரியின் வன்முறைக்கு தலித்துகளே பொறுப்பு என்பதாக மிகவும் நுட்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் திரைப்படங்களில் வரும் கொள்ளைக்கூட்டத் தலைவர்களின் பெயர்கள் எல்லாம் கிறித்துவப் பெயர்களாகவோ, இஸ்லாமிய பெயர்களாகவோ இருக்கும். குற்றச்செயல் புரியும் பாத்திரங்களுக்கு இப்போது வடசென்னையில் இருக்கும் இளைஞர்களை நேரடியாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். நம் சகோதரனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற இக்காட்சியின் பகுதியைக் காணுகின்ற பொழுது நம் தலையில் மலத்தைக் கரைத்து ஊற்றியது போல் உடலெல்லாம் எரிகிறது. இன்றைக்கு கானா பாடல்கள் இல்லாத படங்களே இல்லை என்னுமளவு கானா பாடல்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கதைப்படி நாயகன் ஒரு கார்ப்பரேட் செக்டாரில் பணிபுரிபவனாக இருந்தாலும் அவன் பாடுகின்ற பல்வேறு வணிகப் பாடல்களுக்கு நடுவில் ஒரு கானா பாடலையும் குடித்துவிட்டு பாடிவிடுகிறான். கானா பாடல்களின் வழியாக பெண்களை இழிவுபடுத்திப் பாடுகிறான் அல்லது அந்தப் பாடலை உருவாக்குகின்ற அச்சமூகம் அழுக்கு நிறைந்த சமூகமாக இருப்பதாகப் பாடுகிறான். பெரும்பாலான கானா பாடல்கள் எங்கு பாடப்படுகின்றன

என்றால் மதுக்கடைகளில்தான் பாடப்படுகின்றன. எங்கே ஒழுக்கம் கெட்டிருக்கிறதோ, அசிங்கம் நிறைந்து இருக்கிறதோ அங்குதான் தலித் கலை இருப்பதாக வணிகப்படங்கள் மறைமுகமாகப் பதிவு செய்கின்றன. நம்முடைய மன உளைச்சல் என்னவென்றால் தலித் கலைஞர்களும் அதைச் செய்கிறார்களே என்பதுதான். ஆனால் நான் இங்கு பாட முடியாது என்று சொல்கிற துணிவை தலித் அரசியலின் வழியாக நாம் பெற முடியும் என்பதே உண்மை.

உண்மையில் கானா பாடல்கள் எங்கு பாடப்பட வேண்டும்?

குற்றங்களின் பால் வசப்பட்டு, குற்றவாளியான துயரக்கதையை பாடலின் வழியாக விடிய விடிய சிறைகளில் பாடியிருக்கிறான். தாயைப் போற்றிப் பாடுவான். முறைப்பெண்களைப் பற்றிப் பாடுவான்.குறிப்பாக அதிகமாக மரணத்தைக் குறித்தும் பேராசை குறித்தும் பாடியிருக்கிறான்.பேராசிரியர் ராமகிருஷ்ணன் எழுதிய கானா பாடல்கள் குறித்த ஆய்வில் இதனைக் கண்டறிய முடியும்.தன் உழைப்பின் சுரண்டலைப் பற்றியும் தன் வாழ்வில் ஏமாந்த பல்வேறு சூழல்கள் பற்றியும் பல்வேறு பாடல்கள் அவர்களின் தன்னியல்பில் பெருகி வந்திருப்பதைக் காண முடியும். பொருளற்ற கிண்டலும் கேலியுமான கானா பாடல்கள் மிகவும் பிற்காலத்தில் வந்தவை. அவற்றை நாம் இந்த ஊற்றோடு பொருத்திப் பார்க்க முடியாது. மரணம் குறித்து இயல்பாக தலித்துகள் பெற்ற பேரறிவு உலகில் வேறு எவருக்கும் வாய்த்திருக்குமா என்று தெரியவில்லை.

மரணத்தின் போது அரிச்சந்திரன் கோயில் வாசலில் பாடைக்கு முன்னால் பிணத்தை சாட்சியாக வைத்துவிட்டு மக்களின் முன்னால் பொதுநீதியைப் பாடுகின்ற அரிச்சந்திரன் பாடலாக வரும் பெரு வரிகளில் உள்ள நீதியை தன் இயல்பில் பாடும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் தலித் மக்கள். ஆனால் அவர்கள் வெட்டியான்கள் என்று இகழப்பட்டது வரலாற்றுத் துயரம். இல்லாத கடவுளை அர்ச்சனை செய்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மந்திரங்கள் கோரும் கருவறையில் இருக்கும் பார்ப்பனர்களை விட, கண் முன்னே நழுவிக்கொண்டிருக்கும் உயிருக்கும் பிணத்தின் வரிசையில் இருக்கும் மனிதர்களுக்கும் மனித இனத்திற்கான செய்தியோடு சாவுப்பூவை கையில் வைத்து வெயில், பனி, மழை என்று பாராது சுடுகாட்டில் பாடுகின்ற வெட்டியானே சிறந்த நீதிமான். அவன் பாடுகின்ற பாடல்களே பொதுநீதிக்கான செய்தியாக என்றைக்கு இவ்வுலகம் செவி சாய்க்குமோ என்று தெரியவில்லை. அன்றுதான் அவன் உலகம் முழுவதும் மக்கள் நீதிக்கான கலைஞனாக கொண்டாடப்படுவான். ஒரு சமூகத்திலிருந்து ஒரு பாடலை எடுக்கும் பொழுது அச்சமூகத்தின் ரத்தக்கவிச்சியோடும் வேரோடும் மண்ணோடும் பொருத்தும்போதுதான் அப்பாடல்களுக்கான நியாயத்தை நாம் செய்தவர்களாவோம். ஆனால் வணிக நோக்கத்திற்காக ரத்த சாயத்தோடு வேரற்று வெளிப்படும்போது அது அப்பாடலின் குரல்வளை மீது வைக்கின்ற கத்தியாகவே நான் பார்க்கிறேன்.

நான் என்ன கேட்கிறேன் என்றால், ஒரு கணபதி தோத்திரத்தையோ, காயத்ரி மந்திரத்தையோ உன்னால் ஒரு மதுக்கடையில் பாட முடியுமா? அதை ஒரு குத்துப் பாட்டுக்கு பயன்படுத்த முடியுமா? முடியாதபோது கானா பாடல்களை மட்டும் அங்கு பாடுவதற்கான மனநிலை எங்கிருந்து வருகிறது? தலித் வாழ்வில் எந்த கானா பாடகனும் தன் பாடல்களை மதுக்கடைகளில் பாடியதாக இதுவரை நான் கண்டதில்லை. ஆனால் அவர்கள் திரையில் பாடவைக்கப் படுகிறார்கள். இதை நான் எப்படி கவனிக்கிறேன் என்றால் தன்னை எப்படியாவது நிரூபித்துக் கொள்ள காத்திருக்கின்ற தலித் கலைஞர்கள் மீது நிகழ்த்தப்படும் சுரண்டலாகவே பார்க்கிறேன். தன் ஆட்டத்திற்கும் பாடலுக்கும் மேடை மறுக்கப்பட்ட தலித் கலைஞன் தெருவையே மேடையாக்கி ஆடுகிறான் பாடுகிறான்; அதைப் பார்த்து ரசித்துக் கொண்டாடுகின்ற தன் சொந்த சமூகத்தையே தனக்கான அங்கீகாரமாக அவன் கருதுகிறான். ஆனால் ஒரு கட்டத்தில் பொது மேடைக்கான வாய்ப்பாக வரும்போது அந்த மேடையை பரிசளிப்பதற்கான அவகாசமோ, அறிவோ அவனிடம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அவனைப் பயன்படுத்துகின்ற பொறுப்பாளர்கள்தான் மிகவும் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். இந்தப் பொறுப்பை ‘அட்டக்கத்தி' திரைப்படத்தில் கவனிக்க முடிந்தது. இப்படத்தில் மிகச் சரியாக கானா பாடல்களைப் பொருத்தியிருந்தார்கள்.

மக்கள் சினிமாவும் தலித் சினிமாவும் ஒன்றா?

இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் தலித்துகளையும் மக்களாக ஏற்றுக்கொள்ளும்போது தலித் சினிமாதான் மக்கள் சினிமா. மேலும் தலித் சினிமாவிற்கான தேவையும் அப்போது ஏற்படாது. ஆனால் இங்கு மக்கள் சினிமா என்னவாக புரிய வைக்கப்படுகிறது என்றால் தண்ணீர், காடு, சுற்றுச்சூழல், பெண்கள், குழந்தைகள், அரசியல், ஊழல், மதம் பற்றிப் பேசுபவையெல்லாம் மக்கள் சினிமாவாகவும், சாதி ஒழிப்பு மற்றும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசுவது எல்லாம் தலித் சினிமாவாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட எல்லா வகைப்பாட்டிற்குள்ளும் தலித்துகளுக்கான அவலம் இருக்கவே செய்கிறது.இந்தியாவில் கிராமம் என்றால் ஊரும் சேரியும் இல்லாமல் இருக்க முடியாது. இந்திய சினிமாவில் கிராமத்தை இப்படியாகப் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறதா? அவர்கள் ஒரு கிராமத்தைக் காட்டுகிறார்கள் என்றால் அதில் சேரிப்பகுதி முற்றிலும் மறைக்கப்படுவது மட்டுமல்ல அது அவசியமற்றது என்றும் எண்ணுகிறார்கள். அதேநேரம் இந்த வணிக முதலாளிகளுக்கான மிகப்பெரிய பார்வையாளர்கள் கூட்டமாக தலித்துகள் இருக்கிறார்கள். இது அரசியலிலும் நடக்கிறது.தலித்துகள் நினைத்தால் இந்திய அரசியலையும் சினிமாவையும் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

நீங்கள் இந்த பூமியில் உங்கள் கைகளால் ஓங்கி எங்கு அறைந்தாலும் எதன் மீது அறைந்தாலும் சத்தம் வருகிறதல்லவா? ஆனால் தலித் மீது அறையுங்கள். சத்தம் வர மறுக்கிறது! ஒன்று அறைபட்டவன் மரணித்திருக்க வேண்டும் அல்லது மரணத்திற்கு ஒப்பாக அவன் ஒரு பிணமாக வாழ மிரட்டப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அங்கு சத்தம் வரவில்லை. இப்போது சத்தம் வரத் தொடங்கியிருக்கிறது. அது அழுகையாக இருக்கலாம்.எதிர்க்குரலாக இருக்கலாம்.எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.எதுவானபோதும் அதைப் பதிவு செய்ய வேண்டியது கலையின் வரலாற்றுக் கடமை. அந்தப் பதிவைத்தான் நாம் தலித் சினிமா என்கிறோம்.

இதுவரை இந்தியாவில் நாம் பார்த்த சினிமா இந்துப் புராணங்களின் சாயலைக் கொண்டதாகவே இருக்கிறது. ஒரு நாயகன் ஒரு வில்லனை கதையின் இறுதியில் கொல்லுவது, ஒரு வெற்றிக்கதைக்கான சூத்திரமாக நம்ப வைக்கப்பட்டு இருக்கிறது. இது ராமாயணத்தின் இன்னொரு பிரதி. ராமனும், ராவணனும் பிரதான பாத்திரங்கள் அல்லது ஒரு குழு இன்னொரு குழுவைத் தாக்கி வெற்றி பெறுவது என்பது மகாபாரதத்தின் இன்னொரு பிரதி. இந்தப் பிரதிகளின் முழுப்பிரதியாகவோ இப்பிரதிகளுக்குள் இருக்கின்ற துணைக்கதைகளின் பிரதியாகவோதான் இந்தியாவின் மொத்த சினிமாவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவை எல்லாம் இந்து சினிமாதான். இத்தகைய சூத்திரத்தை மிகவும் குறைவானவர்களே மீறியிருக்கிறார்கள். இதனால்தான் இந்தியாவில் மாற்று சினிமா என்றால் தலித் சினிமாதான் என்று உறுதியாகக் கூறுகிறோம். எப்படி தலித்துகள் இந்துக்கள் இல்லை என்ற போதும் (இந்தியாவில் யாருமே இந்துக்கள் இல்லை) அரசுக் குறிப்பேடுகளில் தலித்துகள் இந்துக்களாக இடம் பெற்றார்களோ அப்படிதான் இந்திய சினிமாவும் இந்து சினிமாவாக நம் மூளைகளில் திணிக்கப்பட்டிருக்கிறது.

தலித் சினிமா என்பது தலித்துகளுக்கு மட்டுமல்ல; அது மொத்த மக்களோடு தன் நியாயத்தைப் பகிர்வதும் அதன்பால் பெறப்படுகின்ற நீதியை சமூகத்தின் கவனத்தில் இன்றியமையாததாக இடம்பெறச் செய்யப்படுவதுமேயாகும். தலித் சினிமா என்பது மிகவும் சரியாக சொல்வதென்றால் அது தலித் அல்லாதவர்களுக்கானதேயாகும். அதனால் சினிமாவினுள் தலித் சினிமாவை ஒரு கோடாக வரையத் தேவையில்லை. அதை புது வெள்ளமாக கவனியுங்கள். அது எல்லா அழுக்குகளையும் நீக்கி புத்தொளி பரவச் செய்யும்.

தமிழகத்தில் ஒரு தலித் படைப்பாளி தலித் கருத்தியலோடு படம் எடுத்ததாகப் பதிவு இருக்கிறதா?

தமிழ்ச்சூழலில் அப்படியொரு படம் இதுவரை வரவில்லை; அதுவொரு கடினமான முயற்சியும் கூட. செறிவான தலித் அரசியலை உள்வாங்கி, தம்மையே பயிற்சிக்கு உட்படுத்தி அப்பயிற்சி முழுவதையும் கலையாக்கும் அறிவியலின் வழியாக நிகழும் படைப்பே தலித் படைப்பு. இதற்கான முயற்சியில் ஈடுபடும் போதுதான் நான் அபகரிக்கப்படுகிறேன். தலித் சினிமா எனப்படுவது சினிமா என்ற உலகைத் தாண்டி வெளியே இருக்கிறது. மலமள்ளும் மனிதர்கள் குறித்து ஆவணப்படம் எடுக்கும் முயற்சியில் மக்கள் வாழும் பகுதிக்கு நண்பர் ஒருவரை அழைத்துச் சென்றிருந்தேன். நான் சந்திக்க வேண்டிய அந்தத்தோழர் அவர்கள் வாழும் பகுதியை ஒட்டியுள்ள பெரிய விளையாட்டு அரங்கத்தின் ஒரு மூலையில் அவருடைய நண்பருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அரங்கம் முழுவதும் மலம் காய்ந்தும் காயாமலும் பரவிக் கிடந்தது. தொலைவில் ஓரிருவர் மலம் கழித்துக் கொண்டிருந்தனர். தோழரின் அருகில் செல்ல நாங்கள் மலத்தின் இடுக்குகளில் கால் வைத்துத் தாவி, எட்டிக் குதித்து மூக்கைப் பிடித்து நடக்க இயலாமல் என்னோடு வந்த நண்பர் நிலைகுலைந்து போனார்.

நாங்கள் அத்தோழரை நெருங்கும்போது அவர்கள் பிளாஸ்டிக் தட்டில் மாட்டுக்கறி வறுவல் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருந்தனர். நான் அத்தோழரிடம் ஆவணப்படம் குறித்து பேசிவிட்டு திரும்பி வரும் வழியில் நண்பர் கேட்டார், ‘இவ்வளவு நாத்தத்துக்கும் நடுவில் எப்படி சாப்பிட முடியுது? விளையாட முடியுது? எனக்கு குடல் பிரட்டிக்கிச்சு' என்று எச்சிலை துப்பியவாறு என்னிடம் கூறினார். நான் அவரிடம் சொன்னேன்: ‘நீங்கள் உங்க பீ உங்க கால்ல பட்டாலே எப்படி அருவருப்பா நினைக்கறீங்க? அதுவும் வேற ஒருத்தருடைய பீய மிதிச்சிட்டா கால்ல இருக்கற மேல் தோல் பிச்சிக்கிற அளவுக்கு தேய்ச்சு தேய்ச்சு கழுவறீங்க? அவர்கள் ஊர்ல இருக்கற ஒவ்வொருத்தருடைய பீயையும் தலமுற தலமுறயா வாருகிறார்கள். தூங்கி எழுந்தா அது முகத்துலதான் முழிக்கிறார்கள். எத்தன தலைமுறையா நம்ம எல்லாருடைய பீயையும் சுமந்து சுமந்து பிறந்து வளர்ந்து வராங்க. அவங்க மூக்கு மரத்துப் போயிருக்காதா? அதுக்காக நாமதான் வெட்கப்படணும்.சக மனிதன் ஒருவன் கொடூரமான நாற்றத்தின் பாதிப்பை அறியாது பீ மைதானத்தில் உட்கார்ந்து சாப்பிடுகின்ற – அந்த அருவருப்பான வாழ்க்கையை அவன் மீது சுமத்தியதற்காக – நாம்தான் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றேன்.

அண்மையில் ஒரு திரைப்படத்தில் தலித்துகள் கல்வி கற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்குமுன் இன்னொரு திரைப்படத்தில் தேவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆதிக்க சாதிக்கு முன் மெக்காலே கல்வியையும் சமூகக் கல்வியையும் படித்தவர்கள் தலித்துகள். இதற்கு அவ்வையிலிருந்து அயோத்திதாசர் வரை முன்னுதாரணங்கள் உண்டு. சமூக அரசியல் மற்றும் கல்வியை ஒருங்கே பெற்றவர்கள் தலித் மக்கள். இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கிய சம காலத்தில் சமூக விடுதலையை இந்திய விடுதலைக்கு முன் நிபந்தனையாக வைத்த தலித் தலைவர்கள் இங்கு ஏராளம். அதன் பிறகு ஒரு தேக்கம் நிகழ்ந்திருக்கிறது. அவ்வுண்மை மீதுதான் நம் கவனம் குவிய வேண்டுமே ஒழிய தலித்துகள் கல்வி கற்காததால்தான் வன்முறையாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்படுகிறார்கள் என எதிரிகளின் விமர்சனத்தையே நாம் நமக்கான அரசியல் குறைபாடாக ஒப்புக்கொள்ள முடியாது.

நம் கண் முன்னால் நடக்கும் எதார்த்தத்தை நான் படம் எடுத்தேன் என்பதற்கு கலைஞர்கள் தேவையில்லை. அதை சராசரி பார்வையாளர்களாலேயே செய்து விட முடியும். ஆனால் படைப்பு என்பது அப்படிப்பட்டதல்ல. அது காட்சியின் இதயத்தில் தொடக்கத்தில் தன் காதுகளை வைத்து உற்று கவனிக்கிறது. கதையென்பதும் இசையென்பதும் ஒரு பண்பாட்டினுடைய மிகப்பெரிய அடையாளம். அதை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம்.அதாவது ஒரு தட்டில் சோறு உண்கிறேன்.பல தலைமுறைகளாக உண்கிறேன்.கண்ணிமைக்கிற நொடிப் பொழுதில் சோற்றை எடுத்துவிட்டு மலத்தை வைத்துவிட்டான். அடுத்த தலைமுறை அந்த மலத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.

இசையென்னும் வடிவம் மட்டும்தான் பதிவாகியிருக்கிறது. இசையென்பது வெறும் ஒலியாக மாறியிருக்கிறது.மாறாக, அதன் சுவை குறித்தோ சத்து குறித்தோ கவலைப்படவேயில்லை.எல்லார் கையிலும் ஒரு மலத்தட்டு இருக்கிறது.கையில் கிடைத்ததை உண்ண வேண்டும். உண்டதை செரிக்க வேண்டும் என்ற வடிவம் மட்டும் பதிவாகியிருக்கிறது.ஒரு பண்பாட்டினுடைய அனைத்து கூறுகளையும் நாம் மறந்திருக்கலாம்.ஆனால் ஒரு வரலாற்றை அடுத்தடுத்து கொண்டு செல்வது கலைவடிவம்தான்.

கலைவடிவங்களில் முதன்மையானது இசை. அந்த இசையெனும் கலையை தமிழர்கள் இழந்திருக்கிறார்கள்.அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை.தலித் சினிமாவில் அந்த பண்பாட்டு இசைவடிவம் இருக்கும். என்னுடைய படத்திற்கு ஒரு பழங்குடி இசைக்கலைஞரைப் பேசி வைத்திருக்கிறேன். தயங்கிய அவரை நீங்கள் அமைப்பதுதான் இசை என்று அவரது தயக்கத்தைப் போக்கியிருக்கிறேன்.

மிகப்பெரிய வாத்தியக்குழு வந்து இசையமைக்கும் காட்சியில் சாவுக்காட்சி வருகிறதா, அங்கு பறமோளம் அடிப்பவர் ஒலிப்பதிவுக்கூடத்தில் வந்து வாசிப்பார். இவையெல்லாவற்றையும் கோர்ப்பவர் ஓர் இயக்குநராக இருப்பார். இசைத்துறையில் ஒரு இளையராஜா, சலித் சவுத்ரி போல மேதைகளாகியிருக்க வேண்டும். ஆனால் முதலாளிகளாக மட்டுமே ஆகியிருக்கிறார்கள்.

தலித் இலக்கியத்தை தலித்துகள்தான் எழுத வேண்டும் என்ற கருத்தின் மீது தங்கள் பார்வை என்ன?

நான் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். என் அம்மா ஓர் ஆண்டை வீட்டுக்கு காலையில் வேலைக்குப் போயிருந்தார். வீட்டில் யாரும் இல்லாத சூழலில் என் அம்மாவை ஆண்டை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். அந்நேரத்தில் நான் பம்பரம் வாங்குவதற்காக அம்மாவிடம் எட்டணா வாங்கச் செல்கிறேன். ஆனால் ஆண்டை இரண்டு ரூபாய் கொடுத்து என்னை போகச் சொல்கிறான். இரண்டு ரூபாயை கண்டதும் நான் அங்கிருந்து பறந்து விடுகிறேன்.

என்னுடைய நினைவில் இது என்னவாக இருக்கிறது என்றால் ஆண்டையின் நற்குணங்களாகப் பதிவாக்கப்படுகிறது. ஆனால் என் அம்மாவின் நினைவுகளில் இரண்டு ரூபாய்க்காக நான் அம்மாவை என்னை அறியாமலேயே அனாதரவாக விட்டுச் சென்றிருக்கிறேன். இது ஒரு மறைக்கப்பட்ட வரலாறாக கதைக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இந்தக் கதையை என்னைத் தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. இந்தக் கதையை நான் எப்பொழுது கண்டறிந்தேன் என்றால் நான் பெரியவனாக வளர்ந்து என் மனைவி ஓர் ஆண்டை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அதேபோல் அந்த ஆண்டை, ‘இந்தாடா போய் சாராயம் குடித்து

விட்டு வா' என்று பத்து ரூபாய் கொடுத்தனுப்பும் பொழுது என் மனைவி அந்த கொட்டகையில் படுத்திருப்பதைப் பார்க்கும் பொழுதுதான் என் அம்மாவின் நினைவு எனக்கு வருகிறது.

இது போன்ற மறைக்கப்பட்ட வரலாறு என் மனைவியின் வழியாகவோ, எனக்கடுத்த தலைமுறை பெண்கள் வழியாகவோ வரும்பொழுது அது மிகப் பெரிய துயரத்திற்கான வரலாறாக மாறியிருப்பது தெரியவருகிறது. இந்த துயரத்திற்கான வரலாற்றை இது போன்ற வாழ்க்கையில் இல்லாதவர்கள் எப்படி கண்டறிய முடியும்?ஒரு வாழ்க்கையை நேரடியாக அனுபவித்தும் வாய்

வழியாக கதைகளைக் கண்டறிவதும் தான் இங்கு மிகப் பெரிய துயரமாக இருக்கிறது. நேரடியாக அனுபவித்த அனுபவங்களை என்னால் படைப்பாக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கிற எல்லா படைப்புகளுக்கும் நான் சாட்சியாக இருக்கிறேன்.

சந்திப்பு, படங்கள்: ஜெய் சாம்யாக்

Pin It