தலையங்கம்

“இன்றைய பத்திரிகைகள் செய்திகளுக்குப் பதில் பரபரப்பூட்டுதல், அறிவார்ந்த கருத்துரைகளின் இடத்தில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவாறு உணர்வுகளைத் தூண்டி விடுதல், கண்ணியமானவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதில், பொறுப்பற்ற வாசகர்களிடம் மனக்கிளர்ச்சியூட்டுதல் இவற்றையே செய்கின்றன... பெருமைப்படத்தக்க சில விதிவிலக்குகள் இருப்பினும், அவை போன்ற பத்திரிகைகள் சிறிதளவே உள்ளன. மேலும், அவற்றின் குரல் எடுபடுவதில்லை.'' -டாக்டர் அம்பேத்கர்

பல ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிகைகள் குறித்து அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை, இன்றளவும் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது. அது மட்டுமல்ல, அவை கேவலத்திலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகப் பொறுப்புணர்வுடனும், இதழியல் அறத்துடனும் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி சமூக மாற்றத்திற்கு வித்திடும் பத்திரிகைகளின் குரல் எடுபடாதது மட்டுமல்ல; அவை விரைவில் காணாமலும் போகின்றன. சற்றேறக்குறைய இதே நிலையை அண்மைக்காலங்களாக "தலித் முரசு'ம் சந்தித்து வருகிறது என்பதே உண்மை!

சென்ற இதழில் "தலித் முரசு' எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி பற்றி குறிப்பிட்டிருந்தோம். இருப்பினும், இவ்விதழ் (103 ஆவது இதழ்) அச்சேறும் வரை வாசகர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து எவ்வகையான உதவிகளும் வரவில்லை (விதிவிலக்குகள் உண்டு). தொல் தமிழர்களின் இதழியல் பாரம்பரியம் பற்றி சிலாகிப்போர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆனால், இப்பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் "தலித் முரசின்' நெருக்கடி நிலை குறித்துப் பேச எவருமில்லை. தலித் அரசியலை முன்வைத்து வெளிவந்த வேறு எந்த இதழும் தொடர்ச்சியாக வெளிவந்து, ஒன்பது ஆண்டுகளைக் கடந்ததில்லை.

இந்திய அரசின் "பத்திரிகை தகவல் மய்யம்' (Press Information Bureau) வெளியிட்டுள்ள பட்டியலின்படி, இந்தியா முழுவதும் "சான்றளிக்கப்பட்ட பத்திரிகையாளர்'கள் (Accredited Journalists) 686 பேர் உள்ளனர். இருபது கோடி தலித்துகள் வாழும் இந்நாட்டில், சான்றளிக்கப்பட்ட ஒரு தலித் பத்திரிகையாளர்கூட இல்லை. இது, 1996 ஆம் ஆண்டு புள்ளிவிவரம் எனினும், இந்த எட்டு ஆண்டுகளில் எந்தத் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. தற்பொழுதுள்ள மய்ய நீரோட்ட இதழ்களிலும், பத்திரிகை ஆசிரியராக எந்த தலித்தும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். இவ்வணிக ஏடுகளில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தலித் பத்திரிகையாளர்கள் பணிபுரிகிறார்கள்.

அண்டவெளிக்கு அப்பாலுள்ள செய்திகளையும், உலகின் மூலைடுக்கில் நடக்கும் ரகசியங்களையும் அம்பலப்படுத்தும் ஏடுகள் பத்திரிகைத் துறையில் தலித் பிரதிநிதித்துவம் முற்றாக மறுக்கப்பட்டிருப்பது குறித்து, ஒருவரிச் செய்திகூட வெளியிடுவதில்லை. "தனியார் துறையில் இடஒதுக்கீடு வேண்டும்' என்ற கோரிக்கையை மட்டும் செய்தியாக்கும் ஏடுகள், தங்கள் இதழ்களில் மருந்துக்குக்கூட இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாத சமூக அநீதி குறித்து முழு அமைதி காக்கின்றன. இதைத்தான் அம்பேத்கர், "உண்மைகளை மறைப்பதற்கு, திட்டமிட்டுச் செய்யப்படும் கூட்டுச் சதி' - A conspiracy of Silence என்று குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இன்றளவும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால்தான் குரலற்றவர்களின் குரலாக "தலித் முரசு' ஒலிக்கத் தொடங்கியது. அத்துடன் அது நின்றுவிடவில்லை. முப்பதுக்கும் மேற்பட்ட தலித் பத்திரிகையாளர்களையும் அது உருவாக்கி இருக்கிறது. கட்சி, அமைப்பு, இயக்கங்களைக் கடந்து ஒரு சிந்தனைத் தளத்தை "தலித் முரசு' உருவாக்கி இருக்கிறது. ஒரு மாற்று இதழுக்கான வெளியை, நம்பிக்கையை அது தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தி இருப்பதை எளிதில் மறுத்துவிட முடியாது.

ஆனால், நடந்தது என்ன? முதல் ஆண்டு சந்தாதாரராக இருந்தவர், அதற்கடுத்த ஆண்டுகளில் சந்தாதாரராக இல்லை. ஒரு வாசகர் மற்றொருவரை சந்தாதாரராக மாற்றினாலே தலித் முரசின் எண்ணிக்கை இருமடங்கு உயரும் என்று வலியுறுத்தினோம். இதற்குப் பலரும் செவிசாய்க்கவில்லை. ஆதலால், ஓராண்டு சந்தா செலுத்தியவர் அடுத்துவரும் ஆண்டுகளிலும் கண்டிப்பாக சந்தா செலுத்துங்கள் என்று நமது வேண்டுகோளையே மாற்ற வேண்டியிருக்கிறது. முகவர்கள், விற்பனைத் தொகையை நிலுவையின்றி செலுத்தினாலே மூன்று மாத காலத்திற்கு இதழைக் கொண்டுவர முடியும்.

"தலித் முரசு' தொடர்ச்சியாக வெளிவர வேண்டும் எனில், வாசகர்களும் / ஆர்வலர்களும் தங்களின் பங்களிப்பை விரைந்து செலுத்திட வேண்டும். முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் (பத்துபேர் கொண்ட குழு) நூறு வாழ்நாள் உறுப்பினர்களைச் சேர்க்க முன்வாருங்கள். இதற்குரிய சந்தா புத்தகங்களை "தலித் முரசு' அளிக்கும். அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் தலித் முரசுக்கு "முதல் உதவி' செய்யுங்கள். இதழ் தொடர்ந்து வெளிவருவது, உங்களுடைய ஆதரவைப் பொறுத்துதான் இருக்கிறது.

தலித்முரசு

ஆசிரியர் - புனித பாண்டியன்

ஆசிரியர் குழு - 

இளங்கோவன்

அழகிய பெரியவன்

யாக்கன்

காவ்யா

விழி.பா. இதயவேந்தன்

ஆண்டுக் கட்டணம்: ரூ.100

நூலகக் கட்டணம்: ரூ.200

வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

தொடர்பு முகவரி

203, ஜெயம் பிரிவு - சித்ரா அடுக்ககம்

9, சூளைமேடு நெடுஞ்சாலை

சென்னை-600 094

தொலைப்பேசி: 044-2374 5473

Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It