periyar-2காற்றும் தண்ணீரும் இல்லாமல் பிராணிகள் உயிர்வாழ முடியாது என்பதும் ஓர் இயற்கை விதி. இவ்வாறே உலகில் உள்ள எல்லா பொருள்களின் எல்லா தன்மைகளும் எல்லா சக்திகளும், அவை இயங்கும் எல்லா விதிகளும் சேர்ந்தது இயற்கைஎன்று விரிந்த பொருள் கொண்டு பார்க்கும்போது எப்பொருளையும், எச்செய்கையையும் செயற்கை என்று சொல்ல முடியாது.

செயற்கை அனைத்தும் இயற்கையேயாகும். ஏனெனில், இயற்கைக்குப் புறம்பான சக்தி செயற்கைக்கு ஏது? இயற்கை சக்திகளை ஏவி, இயற்கை விதிகளின்படி இயங்கச் செய்யத்தான் மனிதனால் முடியுமே தவிர, இயற்கையில் இல்லாத புதுசக்தியைப் பொருள்களுக்கு ஊட்டவோ, இயற்கை விதிகளுக்கு மாறாக அச்சக்திகளை இயங்கச் செய்யவோ, மனிதனால் முடியாது.

இயற்கைப் பொருள்களையும் இயற்கை சக்திகளையும் கொண்டு ஒரு குறிப்பிட்ட நோக்கத்தையடைய மனிதன் செய்யும் முயற்சியும், அம்முயற்சியின் பயனும் செயற்கையெனப்படுகிறது.

ஆனால், காவேரிக் கரையிலிருந்த மரம் வெள்ளத்தில் மிதந்து வருவதற்கும், கடல்களைக் கடக்கக் கட்டப்பட்ட கப்பல்கள் தண்ணீரில் மிதந்து செல்வதற்கும் ஆதாரமான இயற்கை விதி ஒன்றே.

உலை மூடியை எழுப்பும் நீராவி சக்திக்கும், ரயில் என்ஜினை இயங்குவிக்கும் நீராவி சக்திக்கும் அளவிலும் அமைப்பிலும் அன்றி தன்மையில் என்ன வித்தியாசம்?

காட்டில், தானே உதிர்ந்து மண்ணில் புதைந்த மாங்கொட்டையும் தோட்டத்தில் குடியானவன் கொண்டுபோய் ஊன்றிய மாங்கொட்டையும் முளைத்தெழுவது ஒரே விதமான இயற்கை சக்தியைக் கொண்டல்லவா?ஆகையால் செயற்கையெனப்படும் எல்லாவற்றிலும் மனிதன் செய்யும் முயற்சிகள் இயற்கைக்கு மாறுபட்டனவாகா.

இன்ன பொருளை இன்ன நிலையில் வைப்பது, இன்ன வகையில் சேர்ப்பது அல்லது இன்ன அளவில் பிரிப்பது ஆகிய காரியங்களினால், இன்ன சக்திகள், இன்ன வகையில் தோன்றி இன்ன விதிகளின்படி, அப்பொருளை, அத்தன்மையில் நிறுத்தவோ, சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யும் முயற்சிகளை இயற்கைக்குப் புறம்பானவை என்று எப்படிச் சொல்லக்கூடும்?

இவ்வாறு முயற்சிக்கும் மனிதனுடைய எண்ணங்களும், மனோ முயற்சியும், இதற்காக இவன் எடுத்துக் கொள்ளும் தேக முயற்சியும்கூட, இயற்கை சக்திகளுக்கும், இயற்கை விதிகளுக்கும் கட்டுப்பட்டே நிகழ்தல் கூடும் என்றால், எது இயற்கை? எது செயற்கை?

எனவே, இயற்கை என்பதன் விரிந்த பொருளில் எதுவும் செயற்கையாதல் இல்லையாதலால், ரயில் எஞ்ஜினும், காந்திக் குல்லாயும் இயற்கையேயாதலால், விவசாயமும், கைத்தொழிலும் இயற்கையேயாதலால், "இயற்கையைப் பின்பற்று; இயற்கை வழியைப் பின்பற்று'' என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. இயற்கைக்குப் புறம்பாகவோ இயற்கைக்கு மாறாகவோ, ஒரு நிமிஷங்கூட நடக்க முடியாத ஒருவனை, "இயற்கையைப் பின்பற்று'' என்று சொல்வது, ""உயிர் வாழ வேண்டின் சதா சுவாசித்துக் கொண்டிரு'' என்று சொல்வது போலிருக்கிறது!

இரண்டாவது அர்த்தம்: ""இயற்கை வழிக்குத் திரும்பு'' என்று சொல்லும்போது தாங்கள் கொண்ட அர்த்தம், மேலே கூறிய விரிந்த எண்ணத்தில் அல்ல.

வேறு அர்த்தத்தில் என்று தேச பக்தர்கள் சொல்லக்கூடும். மனிதனுடைய தூண்டுதல், ஏவுதல், முயற்சி முதலிய எவ்வித சம்பந்தமும் இல்லாமல், பொருள்கள் தாமாக இயங்குகின்ற தன்மைதான் நாங்கள் சொல்லும் இயற்கை. இந்தக் குறுகிய அர்தத்தின் படிதான் இயற்கை, நம் நடத்தைக்கும் வாழ்க்கைக்கும் வழி காட்டுகிறது.

அதை அனுசரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சொல்லுவதாகக் காந்தியார் சொல்லலாம்.

மனித சம்பந்தம் எதுவும் இல்லாமல், இயற்கையாக உள்ள நிலைமையும், மனித முயற்சியின்றித் தானாக நிகழும் நிகழ்ச்சிகளும், நியாயமும், காருண்யமும், தெய்வத்தன்மையும் வாய்ந்தவை யென்றும் பொருள்கள் தானாக இயங்கும் நெறி, உயர் நெறி, உண்மை நெறி, நீதி நெறி என்றும், மனிதனுடைய அறிவு கற்பிக்கும் நெறியும் ஒழுக்கமும், நீதியற்றவை, நேர்மையற்றவை என்றும், ஆகையால் நாகரிக வாழ்க்கையும், விஞ்ஞான நெறியும், தள்ளத் தக்கவை என்றும் சொல்லப்படும் வாதங்களை இனி ஆராய்வோம்.     

– தொடரும்

"பகுத்தறிவு' மாத இதழ், மே 1936

Pin It