1999

சனவரி

தனிக்குவளைத் தமிழன்!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழ் வளரவில்லை. மாறாக, ஜாதி சங்கங்கள்தான் வளர்ந்து வருகின்றன. தந்தை பெரியார் பண்படுத்திய தமிழ் மண்ணில் இன்றைக்கு ‘தனிக்குவளைத் தமிழன்' உருவாக்கப்பட்டிருக்கிறான். தமிழ், கடவுள் வழிபாட்டுக்கு உகந்த மொழி அல்ல எனக்கூறும் பகைவன் மீது தமிழனுக்குக் கோபம் வரவில்லை; தமிழர்கள் கருவறைக்குள் செல்லும் உரிமையை மறுக்கும் ஆதிக்கத்தினர் மீது இவனுக்கு மேலும் மரியாதை கூடுகிறது. ஆனால், தன்னுடன் தேர்வடம் பிடிக்க வரும் சேரித் தமிழனை எதிரியாக எண்ணுகிறான். தனக்கு தண்ணீர் விட மறுக்கும் கருநாடகக்காரனைக் கண்டு இவனுக்கு கோபம் வரவில்லை. ஆனால், தன் வயல்களில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட தமிழனுக்குத் தண்ணீர் தர மறுக்கிறான். என்ன தமிழன் இவன்?

 – தலையங்கம்

புலியூரில் சாதிவெறி

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 14.12.1998 அன்று சாதி இந்துக்கள் தலித் மக்களை கொடுமையாகத் தாக்கியும் அவர்களுடைய சொத்துகளை சேதப்படுத்தியும் நடத்திய சாதிவெறியாட்டத்தை புலியூரிலிருந்து ஆதவன் பதிவு செய்திருக்கிறார்.

பிப்ரவரி

தகுதி, திறமை, வெங்காயம்!

குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர். நாராயணன் எழுதிய குறிப்பு, சமூக நீதித் தத்துவத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இதில் தகுதி திறமை பற்றிப் பேசும் எவனுக்கும் எங்கள் பதில் இதுதான்: இம்மண்ணுக்குச் சொந்தக்காரர்களான நாங்கள் இந்த நாட்டை ஆள விரும்புகிறோம்; உங்கள் தகுதி திறமையைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடுங்கள்!

– தலையங்கம்

இந்து வெறியின் இலக்கு

தற்போது கிறித்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பவர்கள் ஒரு கருத்தை வலியுறுத்துகின்றனர். ‘சகிப்புத்தன்மைக்குப் பெயர் போன இந்தியாவிலா, இப்படியான அநாகரிகச் செயல்கள் நடப்பது?' என அவர்கள் வேதனைப்படுகின்றனர். இந்தியா உண்மையிலேயே சகிப்புத் தன்மைக்குப் பெயர்போன நாடுதானா? தனது மக்கள் தொகையில் 25 சதவிகிதம் பேர்களைத் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி, அவர்களை சேரிச் சிறைகளில் முடக்கிப் போட்டுள்ள ஒரு நாடு – சகிப்புத்தன்மைக்குப் பெயர் போனதா? இசுலாமியரை, சீக்கியரை, பவுத்தர்களை, சமணர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த நாடு – மத சகிப்புத்தன்மைக்குப் பெயர் போனதா? ஒருபோதும் அது உண்மையாக இருக்க முடியாது. – ரவிக்குமார்

ஜாதி காப்பாற்றும் சட்டங்கள் இனியன் இளங்கோ எது கருத்துரிமை? க. ராசேந்திரன் தமிழ்ச்சமூகம் ஒன்றுபட வேண்டுமா? பா. கல்யாணி மனிதநேய மறுப்புகளே மதமாற்றத்திற்கான காரணிகள் கி.வீரமணி காந்தி விருதுக்குச் சொந்தக்காரர்கள்! ராஜமுருகு பாண்டியன் இந்து மத எதிர்ப்பே முதன்மையானது உஞ்சை ராசன்

தமிழ்த் தேசியம் மலர்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது. அம்பேத்கர், பெரியார் கருத்துகள் மூலம்தான் பார்ப்பனியத்தை ஒழிக்க முடியும். இவர்களை நேர்மையாகப் பின்பற்றி ஒரு புரட்சிகர சமூக இயக்கத்தைக் கட்டியமைப்பதன் மூலமே சாதியை ஒழிக்க முடியும். – டாக்டர் பிரேம்பதி: ‘பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும்'

 ****

சாதி ஏற்றத் தாழ்வுகள் உள்ள ஒரு நாட்டில் இருக்கக்கூடிய அரசாங்கம் என்பது ஆதிக்க சாதியின், ஆதிக்க வர்க்கங்களின் அரசாகத்தான் இருக்க முடியும். தலித் மக்கள் தனியாக நின்று அதை எப்படி கைப்பற்ற முடியும்? அரசாங்கத்தின் சட்டங்கள் சாதியைக் காப்பாற்றுகின்றன. மறுக்கவில்லை. ஆனால், மக்கள் மத்தியில் அது ஆழமாக இருக்கின்றதே. இழிவு நீக்கும் போராட்டங்களை மக்களிடையே பெரியாரும் அம்பேத்கரும் நடத்தியதற்கு அதுதானே காரணம். சட்டத்தால் மட்டும் சாதியைப் போக்க முடியாது. சமத்துவ உணர்ச்சிக்கான போராட்டங்களை நடத்த வேண்டும்.

– எஸ்.வி. ராஜதுரை: ‘தமிழால் ஒன்றுபடுவோம் என்பது போலியானது'

மார்ச்

எங்கே போனார்கள் ஜனநாயகவாதிகள்?

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் பினாமி அரசாங்கம் மீண்டும் உயிர் பெறலாம். ஆனால், ஷங்கர்பிகா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 22 தலித் மக்கள் மீண்டும் உயிர்பெற வாய்ப்பில்லை. நாராயண்பூர் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 11 தலித் மக்கள் பிழைத்துவரப் போவதில்லை. ராப்ரி தேவிக்கு ‘நியாயம்' கிடைத்துவிடும். ஆனால், தனது கணவனோடு ஒரு நாள்கூட வாழவழியின்றி, விதவையாகிப் போன ஷங்கர்பிகா கிராமத்தின் தலித் பெண் குந்திதேவிக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. – ரவிக்குமார்

எதிர் கோடுகளல்ல; இணை கோடுகள்

பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இன்று உருவாகி வலுப்பெற்று வரும் தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் இயக்கங்கள், பெண் விடுதலை இயக்கங்கள் – இவை அனைத்தும் இணை கோடுகளே அல்லாமல், எதிர் கோடுகள் அல்ல. இந்த உண்மை புறக்கணிக்கப்பட்டு, இந்த இயக்கங்களே ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருப்பது – காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். போன்ற எதிர் இயக்கங்களுக்கே பேருதவியாக அமையும்.

– சுப. வீரபாண்டியன்

சமூக()நீதித் துறை அமைச்சர் மேனகா காந்தி

மேனகா காந்தி அமைச்சர் பொறுப்பேற்று அறைக்குள் நுழைந்ததும் அங்கு மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி ‘யார் இந்த ஆள்? அவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை' என்றாராம். அவர் சுட்டிக்காட்டிய அந்தப் படத்தில் இருந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். சமூக நீதித்துறையில் மலமள்ளும் இழி தொழிலை ஒழிப்பதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 33 கோடியை விலங்குகளின் நலனுக்காக செலவிடச் சொல்லியுள்ளார் மேனகா. – ஆதவன்

ஏப்ரல்

இந்துத்துவாவின் விளைச்சல் நிலமாய் பல்கலைக் கழகங்கள்

இந்தியாவில் 8120 கல்லூரிகள் உள்ளன; 239 பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. ஏறத்தாழ மூன்று லட்சம் ஆசிரியர்கள் அவற்றில் பணிபுரிகின்றனர். அரசியல் சட்டம் கூறியுள்ளபடி 22.5 சதவிகித இடஒதுக்கீடு எஸ்.சி. / எஸ்.டி. மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் சுமார் 67,500 தலித் மக்கள் இவற்றில் இருந்திருப்பார்கள். ஆனால், இவற்றில் வெறும் 17 ஆயிரம் இடங்கள் மட்டுமே தலித் மக்களால் நிரப்பப்பட்டுள்ளன. மீதம் 50,000 பணியிடங்கள் தலித் மக்களின் இடங்களிலிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

ஒரு பல்கலைக்கழகம் இடஒதுக்கீட்டை சரிவர நிறைவேற்றாவிட்டால் அதற்கு பல்கலைக் கழக மானியக்குழு (UGC) வழங்கும் நிதியை நிறுத்தி வைக்க வேண்டுமென சட்டம் கூறுகிறது. ஆனால், இதை நடைமுறைப்படுத்தத்தான் யாருமில்லை. – ஆதவன்

பத்திரிகைகள் அல்ல; வதந்திகள்

கலவர நேரங்களில் முதலில் பலியாவது உண்மைதான். கலவரத்தின் போது ஓர் இந்து கொல்லப்பட்டால் எல்லோருக்கும் புரியும்படி ‘இந்து' கொல்லப்பட்டான் என்று செய்தி வெளியிடுகின்ற பத்திரிகைகள், ஒரு முஸ்லிம் கொல்லப்பட்டால் மட்டும் ஒரு மதத்தவர் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிடுகின்றன. அமெரிக்க தகவல் தொடர்பு சாதனங்கள் யூதர்கள் கையில் இருப்பதால் அவர்கள் வெளியிடும் செய்தி அரேபியர்களுக்கு எதிராகவும் குறிப்பாக பாலஸ்தீனர்களுக்கு எதிராகவும் உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கும் இது பொருந்தும்.

இவை கருப்பர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டுள்ளன. அதைப்போலவே, இந்தியாவில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவும், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் உள்ளன. – நெடுஞ்செழியன்

குப்பத்து மக்கள் இழிவானவர்களா? இனியன் இளங்கோ மரண ஓலத்தோடு மகளிர் தினம் பொன்னருவி படுகொலை

கல்வியில் காவி நஞ்சு புனிதன் இந்துத்துவாவின் விளைச்சல் நிலமாய் பல்கலைக் கழகங்கள் ஆதவன் இந்தியாவின் நாற்காலி ஜனநாயகம் பி. சாய்நாத் பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய தேசிய இனப்பிரச்சனை விடுதலை க. ராசேந்திரன்

பண்பாட்டுக்கான, இன விடுதலைக்கான போராட்டத்தை மொழி என்று சொல்லி திசை திருப்புகின்றன தமிழ் அமைப்புகள். மொழியால் ஒன்றுபடுபவர்கள் சமூகத்தால் ஒன்றுபட முடியுமா? மொழியை புகுத்துவது பார்ப்பனியத்திற்குதான் துணைபோகும். ஆகவேதான் பெரியார் மொழியை முன்னிலைப்படுத்தாமல் இனத்தை முன்னிலைப் படுத்தினார். – விடுதலை க. ராசேந்திரன் : ‘சாதி ஒழிப்புக்கு பார்ப்பன எதிர்ப்பு மட்டும் போதாது'

மே

திராவிட இயக்கம்?

திராவிட இயக்கம் எந்த நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டதோ, அதற்கு நேர் எதிர்திசையில் அது தற்பொழுது சென்று கொண்டிருக்கிறது. சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பார்ப்பன மதவாத எதிர்ப்பு போன்ற அடிப்படை கொள்கைகளை இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கிய திராவிட இயக்கம், இன்று இவை அனைத்திலும் சமரசமாகி ஆட்சியில் இருந்தால் போதும் என்ற அளவில் சுருங்கிவிட்டது. திராவிட இயக்கம் எந்த உயரிய கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டதோ, அதற்கான தேவை இங்கு இன்னும் இருக்கிறது. அதை எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால், அந்த கொள்கைகளை திராவிடக் கட்சிகள் செயல்படுத்த அருகதையில்லை. அதற்கான தார்மீக உரிமையை அவை இழந்துவிட்டன. திராவிட இயக்கத்தின் அடிநாதமாக விளங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமை மட்டுமே இனி இக்கொள்கைகளை சரியாக நடைமுறைபடுத்த முடியும். நாம் தலித் தலைமை என்று குறிப்பிடுவது தனி மனிதரை அல்ல; தத்துவத்தை.

– தலையங்கம்

பெரியாரிஸ்டுகளின்

தலித் எதிர்ப்பு

‘ஜாதி என்ற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே நீங்கள் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளை உருவாக்க முடியாது” என்று பாபாசாகேப் கூறியது முன் எப்போதைக் காட்டிலும் இப்போது தெளிவாகப் புலப்படுகிறது. சாதியை ஒழிப்பது அப்படி ஒன்றும் எளிதான காரியமல்ல என்பதை அண்ணல் உணராமல் இல்லை. ‘செங்குத்தான மலை உச்சிக்கு தலைகீழாக ஏறி நடந்து செல்வது போன்றதுதான்' சாதி ஒழிப்பதுமாகும் என்றார் பெரியார். ஆனால், இருவருமே கலப்பு மணத்தை சாதி ஒழிப்பதற்கான முதற் படிகளில் ஒன்றாகக் கருதினர்.

– எஸ்.வி. ராஜதுரை 

சூன்

சோனியா வெளிநாட்டுக்காரரா?

பாதுகாப்புத் துறை முதற்கொண்டு உணவு உற்பத்தி வரை அன்னிய நாடுகளின் வேட்டைக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்கள், அன்னியர்களென்றும் இந்தியர்களென்றும் பேசத் தகுதியுடையவர்களா? பார்ப்பனர்களின் ஆளுகைக்குக் கீழிருக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள். ஆரியர்களின் பூர்வீகம் பற்றி வரலாற்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடையளிப்பார்களா?

– ரவிக்குமார்

தலித்துகளுக்கு துணை நிற்போம்

தலித் மக்களின் உரிமைகளுக்காக அம்மக்கள் மட்டுமே போராட வேண்டுமா? இவர்கள் மீதான கொடுமைகளை தட்டிக்கேட்க நாதியில்லையா? என்று புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இதுபோன்ற கொடுமைகளைத் தட்டிக்கேட்க நாங்கள் தோளோடு தோள் நிற்கிறோம் என்று பெரியார் திராவிடர் கழகம் வெளிப்படையாக முன்வந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் ‘தாழ்த்தப்பட்டோர் உரிமைகள் பாதுகாப்பு' கருத்தரங்கை மே 13 அன்று சென்னையில் சிறப்பாக நடத்தியது.

தந்தை பெரியார் ஓர் இந்துவா?

வாழ்நாள் முழுவதும் தமிழர்களின் உரிமைகளுக்காகவே போராடிய பெரியார், தமிழர்களை கடுமையாக விமர்சித்தும், கண்டித்தும் ஏராளமாகப் பேசியிருக்கிறார். அந்தப் பகுதிகளை எடுத்துக்காட்டி பெரியார் தமிழர்களுக்கு எதிரானவர் என்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இருக்க முடியாது. எனவே, பெரியாரை ‘படித்தல்' என்பதைவிட ‘புரிதல்' என்பது மிகவும் முக்கியமாகிறது. – மு. பாலகுரு

மரணத்திலும் பாகுபாடு

அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கருப்பர்கள் தான் அதிகமாக உள்ளனர். மரண தண்டனை விதிக்கப்படுவதில் கூட இனவெறி பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவது மிகவும் தவறு. எனவே, மரண தண்டனை சட்டத்தையே நீக்க வேண்டும்.

 – அம்னஸ்டி இன்டர்நேஷனல்

அம்பேத்கர் பவுத்தத்தை ஒரு தீர்வாகச் சொன்னார்; பெரியார் நாத்திகத்தை ஒரு தீர்வாகச் சொன்னார். ஆனால், இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் நாத்திகர்களும், இந்துக்களாக இந்தியச்சட்டத்தில் கருதப்படுகின்றனர்; புத்த மதத்தினரும் இந்துக்களாக இந்தியச் சட்டத்தில் கருதப்படுகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

– கெய்ல் ஓம்வெத்: ‘ஊடகங்களை தலித் மக்கள் கைப்பற்ற வேண்டும்'

சூலை

பாலூர் பக்கிரி மரணம்

மேலப்பாலையூர் வசந்தா, கோ. ஆதனூர் பொன்னருவி இருவரும் மிகக் குரூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, உறுப்புகள் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், இந்த வழக்குகளில் போலிஸ் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டது. காட்டுக்கூடலூர், புலியூர் காட்டுசாகை, சுத்துக்குளம் ஆகிய இடங்களில் சாதி வெறியர்களால் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். குறைந்தபட்ச நடவடிக்கைகூட இல்லை.ஆனால், வாழ்வுரிமைக்காகவும் தங்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளை எதிர்த்தும் குரல் எழுப்பும் தலித் மக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது; தேசியப் பாதுகாப்புச் சட்டம் மிரட்டுகின்றது. – ஆதவன்

தண்டனைக்குப்பின் விசாரணையா?

தமிழர்கள் நான்குபேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர் என்பதால் மட்டும் நாம் அதை எதிர்க்கவில்லை. மரண தண்டனை என்பது இயற்கை நீதிக்கு முரணானது. அது நீதியின் பெயரால் செய்யப்படும்

படுகொலையாகும். ஒருவரது மரண தண்டனையை நிறைவேற்றிய பின் ஒருவேளை அவர் நிரபராதி எனத் தெரியவந்தால் அவரது உயிரை மீட்டுவர முடியுமா? – ரவிக்குமார்

சுடுகாட்டிலும் சமத்துவம் இல்லை

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 14 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பஞ்சாயத்துகளில் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்குச் செல்ல போதிய சாலை வசதியில்லை. பலநேரங்களில் இதுபோன்ற தடைகளே சாதி மோதலுக்கு வழிவகுக்கின்றன? – ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்', 26.6.99

நல்லதல்ல

மீண்டும் மீண்டும் தேர்தல்கள் வந்துகொண்டுதான் இருக்கும்; ஆட்சிகள் மாறிக்கொண்டுதான் இருக்கும். அவர்களின் செயல்திட்டத்திற்கு ஏற்ப நம் கொள்கைகளை வகுத்தால் அது உண்மையான வளர்ச்சிக்கு, உரிமையைப் பேணுவதற்கு ஒருபோதும் உதவாது. தேர்தலில் பங்கேற்காத விடுதலை இயக்கங்கள், ஜாதி ஒழிப்பு என்ற இலக்கை நோக்கி செயல்திட்டங்கள் வகுத்து எவ்வித சமரசமுமின்றி செயல்படவேண்டும்.

– தலையங்கம்

காஷ்மீரும் – கச்சத்தீவும் தா. அருள் எழிலன் தலித்துகளை ஒடுக்கிக்கொண்டு தமிழ் அடையாளத்தை உருவாக்க முடியாதுவ.அய்.ச. ஜெயபாலன் பார்ப்பனர்கள் தாக்குவதில்லையா? இனியன் இளங்கோ கோடாங்கிப்பட்டியில் ஜாதி வெறியாட்டம் பாவெல் முத்துதேவை மக்கள்அங்கீகாரம் தலித் சுப்பையா

ஆகஸ்ட்

நெல்லைப் படுகொலை

திருநெல்வேலி படுகொலைகளோடு தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகியிருக்கிறது. 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாக மீன்பிடிப்பது போல இறந்த உடல்களைப் பிடித்துக் கரையேற்றியிருக்கிறார்கள். கொலையுண்டவர்களில் 11 பேர் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்ததலித் மக்கள்; எஞ்சிய 7 பேர்களில் முஸ்லிம்கள்; மற்ற சாதிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கொடியன் குளத்தில் நடந்த அநீதிக்குப்பிறகு மதுரைக்கு அப்புறம் வாக்கு கேட்கப் போக முடியாமல் திரும்பி ஓடிவரும் நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது. திருநெல்வேலி படுகொலைக்கான பாடத்தை கருணாநிதிக்கு புகட்ட வேண்டும். தன்மானம் உள்ள தலித் மக்கள் இதைத்தான் செய்வார்கள்.

– ரவிக்குமார்

பவுத்தத்தின் பெயரால் இனப்படுகொலை

பவுத்தம் இந்தியாவில் அழிந்துள்ளது. பிற நாடுகளில் போலி பவுத்தம் பரவியுள்ளது. போலி பவுத்தர்கள் இந்தியாவில் பவுத்தம் அழிந்துவிட்டதால், இந்தியாவில் பவுத்தம் பரப்ப வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில், இந்தியா முழுவதிலும் ‘மகாபோதி சொசைடி'களை ஏற்படுத்தி வருகின்றனர். இச் ‘சொசைடி'களில், முழுமையான ஆதிக்கம் செய்வது, அதாவது நூறு சதவிகித அலுவலர்களும் இலங்கை மக்களே. அங்கு ஓர் பவுத்த விகாரைக்கு பதில், இலங்கை முகாம் ஒன்று இயங்குவது போல்தான் உள்ளது. இலங்கைவாழ் மக்க¬ள் இந்தியாவிற்கு வரும்போது, பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தங்கும் விடுதியாகவே அது பயன்படுகிறது. தலித் மக்கள் அங்கு செல்லவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பல தடைகள் உள்ளன.

– சங்கமித்திரை

தாய்மொழிக் கல்வியை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இங்கு அருகிலுள்ள மசூதிக்கு சென்றீர்கள் என்றால் அங்கு தமிழில்தான் தொழுகை நடத்துகிறார்கள். ஆனால், திருவல்லிக்கேணி பகுதியில் உருதில்தான் தொழுகை நடத்துகின்றனர். ஏனெனில், அவர்கள் உருதை தாய்மொழியாகக் கொண்டவர்கள்.

– எம்.எச். ஜவாகிருல்லா : ‘மதவாத பா.ஜ.க. – தி.மு.க. கூட்டணிக்கு ஓரிடம் கூட கிடைக்கக்கூடாது'

மதவெறி அரசமைப்பதற்கான போர் இனியன் இளங்கோ கொத்தடிமைகளாய் பழங்குடி மக்கள் பழ.நெடுமாறன் பவுத்தம் என்றாலே சாதி ஒழிப்புதான் சங்கமித்திரை

மதத்தின் காரணமாக இடஒதுக்கீடு மறுக்கப்படும் ஒவ்வொரு கிறித்துவரும் இப்பிரச்சனையை அய்.நா.வின் மதச்சகிப்பின்மைக்கு எதிரான குழுவிடம் புகார் செய்ய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும். தலித் மக்களின் மதத்தைப் பார்த்து இடஒதுக்கீடு வழங்குவது இந்துத்துவத்தை அவர்கள் மீது திணிக்கும் செயலே.

– ரவி நாயர்: ‘தலித் பிரச்சினைகளை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்'

தீண்டப்படாதவரா? தீண்டத்தகாதவரா?

டாக்டர் அம்பேத்கர் Untouchability என்ற சொல்லுக்கு பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார் : Untouchability is not merely not touch me ism. It is defined as those who are unfit for human association. எனவேதான் தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகுதியற்ற (Unfit) என்ற பொருள் வெளிப்பட தீண்டத்தகாதவர் எனப் பொருள் தரவேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இதைப்போலவே, Unseeables என்ற சொல்லை பார்க்கப்படாதவர்கள் எனவும் Unapproachables என்ற சொல்லை அணுகப்பெறாதவர்கள் என்றும் குறிப்பிட்டால் அது வேடிக்கையாக இருக்குமல்லவா? தீண்டப்படாதவன் சாதி இந்துவாகக்கூட இருக்கலாம். அனைத்து சாதி இந்துக்களும் பார்ப்பனர்களைப் பொருத்தவரை தீண்டப்படாதவர்கள்தான்; கண்டிப்பாக தீண்டத்தகாதவர்கள் அல்லர். – சோபகன்

அக்டோபர்

சிதம்பரம் எரிகின்றது

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் வன்முறை, தி.மு.க. ஆட்சி யாருக்கானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. தலித் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்களிக்க முடியாமல் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்.அங்கு, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட திருமாவளவனின் சார்பாக போடப்பட்டிருந்த ‘பூத் ஏஜென்டுகளும்' அடித்து விரட்டப்பட்டனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான தலித் வாக்குகளைப் பதிவு செய்ய முடியாத நிலை உண்டாக்கப்பட்டது. அந்த வாக்குகளை – பாட்டாளி மக்கள் கட்சியினரும், தி.மு.க.வினரும் கள்ள ஓட்டுகளாகப் போட்டுக் கொண்டனர்.

இதைத்தடுத்து நிறுத்த முற்பட்ட தலித் மக்களை வெட்டிச் சாய்த்தது சாதி வெறிக் கும்பல். தலித் மக்களின் வீடுகள் கொளுத்தி சாம்பலாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களோடு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள தகவலின்படி, இதுவரை 504 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஒண்டிக் கொள்ள நிழல் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிதம்பரத்துக்குள் நுழைய முற்பட்ட நந்தன் எரிக்கப்பட்டான். தன்மான அடையாளத்தோடு ஒருவர் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முற்பட்டதற்காக, இன்று சேரிகள் கொளுத்தப்படுகின்றன. நந்தனை எரித்ததும் இன்று சேரிகளை எரிப்பதும் – ஒரே ஜாதிவெறி நெருப்புதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் நந்தனுக்கு மூட்டப்பட்ட நெருப்பு இன்னும் எரிகிறது. தலித் மக்களின் எழுச்சி அந்த சாதி வெறி நெருப்பை முழுவதுமாக அணைக்கும். 21 ஆம் நூற்றாண்டு அதைப் பதிவு செய்தே தொடங்கும். – ஆதவன்

நவம்பர்

ஒரு நதியின் மரணம்

நெல்லை தாமிரபரணியில் சூலை 23, 1999 அன்று உரிமைப் பேரணி நடத்திய ஒடுக்கப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடியடி நடத்தியும் 17 பேர் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர். இதை இரண்டாவது ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை' என்று வர்ணிப்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல என்பது ‘ஒரு நதியின் மரணம்' என்ற ஒரு மணிநேர செய்திப் படத்தைப் பார்த்தால் விளங்கும். இதை இச்செய்தித் திரைப்படம் மிகத் தெளிவாக விவரிக்கிறது. – அருள் எழிலன்

தலித் எழுச்சி

புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும், உறுதியாகப் பற்றி நிற்கும் தலித் அமைப்புகள் சீரழிந்து போக முடியாது. வேறு எந்த ஒரு சமூகத்திற்கும் கிடைக்காத வாய்ப்பாக, ஒரு மிகப் பெரும் சிந்தனையாளர் தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்த கருத்துக் கருவூலங்களும், ஓய்வு ஒழிவற்ற தன் நடைமுறையால் உருவாக்கிக் காட்டிய முன்னுதாரணங்களும் தலித் மக்களின் எதிரில் உள்ளன. அவற்றை சரியாக உள்வாங்கி, தமது அரசியல் வழியைத் தீர்மானித்தால் – தலித் இயக்கங்களின் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. – ஆதவன்

மக்களை அழிக்கும் அணைகள் நெடுஞ்செழியன் புத்தர் ‘துறவரம்' பூண்டது ஏன்? சங்கமித்திரை நவீன பார்ப்பனர்கள் விடுதலை க. ராசேந்திரன் தலித் மக்களுக்கு தனி வாக்குச் சாவடி அழகிய பெரியவன் மதமாற்றத்தால் மரியாதை புலேந்திரன் தமிழக அரசியலில் தலித் எழுச்சி ஆதவன்  இட ஒதுக்கீடு : அளவுகோல் என்ன? சூசன் ஆபிரகாம் பயன்படாத ‘தாட்கோ' திட்டம் மு. சிறீராமன்  உலகின் பெரிய மதமாற்றம் சங்கமித்திரை

டிசம்பர்

தலித் அமைப்புகளின் சிந்தனைக்கு...

தலித் அமைப்புகள் ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள் நம்மை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். இதில் விதி விலக்குகள் இல்லை. தலித் மக்களைப் பொருத்தவரை, தமது முதன்மையான எதிரிகளான கருணாநிதியும் ஜெயலலிதாவும் எக்காரணம் கொண்டும் இனி வெற்றிபெறும்படி விட்டுவிடக்கூடாது. நம்மை நாம் திடப்படுத்திக் கொள்வதுதான் இப்போது நமது முதல் பணியாகும். தலித் இயக்கங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப, கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொடியங்குளம், மேலவளவும், திருநெல்வேலியும், சிதம்பரமும் நமக்கு அரசியல் பிழைப்புக்கான அடையாளங்கள் அல்ல. அங்கே சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும், அங்கே பறிபோன ஒவ்வொரு உயிருக்கும் நாம் பதில் தேடியாக வேண்டும். நமது ஒற்றுமையும், போராட்டமும் மட்டும்தான் அந்தப் பதிலை நமக்குத் தேடித்தரும். – ஆதவன்

அன்பு + அறிவு + உண்மை = பவுத்தம்

இந்தியாவில்தான் முதல் பவுத்தத்துறவி புத்தர் தோன்றினார்.இன்று, உலகமெங்கும் 60.34 லட்சம் பவுத்தத் துறவிகள் உள்ளதாக ‘திபெத் மகாபோதி சங்க'த்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. புத்தர் தோன்றிய மண்ணில் ஒரு பவுத்தத் துறவிகூட ‘இந்தியர்' இல்லாத நிலை வருந்தத்தக்க – சிந்திக்கக்கூடிய ஒரு செய்தியாகும்...

இன்று, பவுத்தம் இந்தியாவில் ஓரளவிற்காவது இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு அடுத்த படியாக மேற்சொன்ன வரலாற்று ஆசிரியர்கள் பங்கு வகிக்கின்றனர். இந்தியரல்லாத அனைத்து வரலாற்றாசிரியர்களும், இந்தியாவை பவுத்தர்கள் நிறைந்த நாடாகவும், இந்த பகுத்தறிவுள்ள பவுத்தத்தை பார்ப்பனர்கள் ஊடுருவி சீர்குலைத்ததைப் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவைத் தவிர வேறெந்த நாடுகளிலும் சாதி இல்லை; இந்துத்துவம் இல்லை; பார்ப்பனியம் இல்லை. அதனால்தான் பவுத்தம் அங்கு உயர்வாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் சாதியும் ‘இந்துத்துவா'வும் உள்ளது. இது இருக்கும் வரை பவுத்தம் வளராது. பவுத்தம் தழைக்கும்போது ‘இந்துத்துவம்' அழிந்துவிடும்.

– சங்கமித்திரை

‘சாதி ஒரு குமுகமாக அடையாளம் காணப்படும் ஒரு சமூகம் இலங்கையில் உண்டென்றால் அது அருந்ததியர் சமூகமாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் இன்றைக்கும் குடியிருப்புகளாக இருப்பவர்கள் இவர்கள்தான். இந்நிலையில் சிங்களர், முஸ்லிம் உட்பட எல்லாருமே எங்களை தீண்டத்தகாதவர்களாகவேதான் பார்த்தார்கள்.”

– அருந்ததியன் : ‘தமிழகத்தின் தலித் எழுச்சி இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது'

Pin It