நீங்கள் சேர விரும்பிய
இடம் போய் சேர்ந்துவிட்டீர்கள்
இனி
திரும்பிப் பார்க்க நேரமில்லை

பெரும் கூட்டம்  உங்களைப்
பின் தொடர்ந்தது
ரத்தத் தோடும்
ரணத் தோடும்
வெற்றிக் கனவோடும்
பெரும் கூட்டம்
உங்களைப் பின் தொடர்ந்தது

பாதையை
பிளந்தபடியே
ஒருவன் ஓடினான்
தளபதி என
தன்னைத் தானே
அழைத்துக் கொண்டான்
தலைவன் என
உன்னையும் ஏற்றுக் கொண்டான்

கடும் பாறைகளையும்
முட்புதர்களையும்
இரண்டு கரங்களால் மட்டுமல்ல
இரு முலைகளாலும்
வாரிப்புரட்டினர்
பெண்கள்

தலைவன்
சிரமம் இல்லாமல்
பின் தொடர்ந்தான்

மக்கள் படை
பலமாய் கரவொலித்தபடி
எதிரியை கலங்கடித்தபடி
பாடிக் கொண்டே ஓடினர்

நமக்கொரு
நாடு இருக்கிறது
அங்கே படிக்க
நமக்கொரு பள்ளி இருக்கிறது

மொத்த நிலமும்
அரசானது  அதனால்
உழுவதற்கு நிலமிருக்கிறது
அதைப் பங்கிட
பொது சமூகமிருக்கிறது

எதிரி நம்மை
திருடாதவாறு  நமக்கொரு
அரசு இருக்கிறது
அவனுக்கும்
பொது மன்னிப்பு இருக்கிறது

மக்கள் பாடிக்கொண்டே ஓடினர்
பாறைகளை உடைத்து, உடைத்து
பழகிய
ஆணுக்கும், பெண்ணுக்கும்
எதிரிக் கோட்டை
பெரிய பாறையென
ஆயின அவ்வளவே

தளபதிகளின்
மார்புகள் கவசமாய்
மின்ன
தலைவன்
கோட்டையின்
முதல் படியில்
நின்ற போது

முன் சென்ற
தளபதிகளின் பெயர்கள்
பின்வந்த படைக்குழுக்களுக்கு
நினைவுப்பெயர்களாக மாறின.
மீதமிருந்தவனுக்கு
வீரப்பெயரால் தாங்கின

பின்வந்த திரளின்
பெரும் பகுதி
நடுக்கல்லாய் வழிநெடுக
நிற்க  அதன்
உயிர்கல்லாய்
பேரன்களும் பேத்திகளும்
சிவந்த ஈட்டியாய்
உலையில் கூர்மையாய்
திரண்டு கொண்டிருக்க

தலைவன் கோட்டையின்
இரண்டாவது படியை
மிதித்த போது...,

மக்கள்
தம் கொடியை
உயர்த்திக் காட்டினர்
கொடி எதிரிகளின் பீரங்கிகள்
உமிழும் நெருப்பைவிட
ஒளி மிகுந்ததாக இருந்தது

எங்கள் நிலம்
எங்கள் நாடு
எங்கள் மொழி
எங்கள் அறிவு
எங்கள் மூதாதையர்
எங்கள் தலைமை
எங்கள் கரம்
எங்கள் கலப்பை
எங்கள் பெண்
எங்கள் அறிவியல்
எங்கள் பிள்ளைகள்
எங்கள் ஆயுதங்கள்

படை உக்கிரம்
பீரங்கி சத்தத்தை
நடுங்கச் செய்தன.

எதிரி
என்ன செய்வான்
எதிரி பணிந்தான்
தலைவனிடம்
தலைவன்
மகிழ்ந்தான்
எதிரியிடம்

குடிகள் இல்லாத காடும்
படைகள் இல்லாத தலைவனும்
ஆண்டைக்கு லாபம்

மக்கள் போரில்
எதிரியிடம் கற்றுத்தேர்ந்த
ரகசிய வரைபடத்தை
எதிரியிடம்
ஒப்படைப்பதே புரட்சியா?
மக்கள் படை
கேள்வி எழுப்பியது

கோட்டைக் கதவுகள்
மூடின
இணைப்பு அதிகாரத்தின்
இசைகள் முழங்கின
கோப்பைக் கண்ணாடியாய்
எதிரியிடம் பளிச்சிட்டான்
தலைவன்.
உதட்டில் ஊறியது
மது
தேசியத்தின் பாடலில்
எச்சில் தெறித்தது
உப்பு நீரில்
மூழ்கின விதைகள்
கண்களுக்கே தெரியாமல்
அழுதன கனவுகள்
போதையில்
விழித்துக் கொண்டன
அதிகாரம்
சூழ்ந்து கொண்டன
எதிரிப்படை

நாங்கள்
கத்துகிறோம், கதறுகிறோம்
நாலாப்புறமும் சிதறி ஓடுகிறோம்

மொத்த வேங்கைகளையும்
ஆடுகளாக்கிய
நரியிடம் ஏமாந்த கதை
இன்னொருபாடலாய் சேர
முடிந்தது
எங்கள் வரலாறு  ஆனால்
அந்த கடைசிப் பாடலை
பாடியபடி
உலையில் சிவந்து
கொண்டிருக்கிறார்கள்
எங்கள்
பேரன்களும் பேத்திகளும்

அப்போதும்  நீ
அந்தக் கோட்டையின்
வாசல் படிகளில் தான்
நின்றிருப்பாய்

எங்கள்
ரத்தத்தைப் பிசைந்து
எதிரிக்கு நீ ஊட்டிய
சோற்றில்
உன் தாயின் ரத்தமும்
இருக்கிறது
உன் தந்தையின் விந்தும்
இருக்கிறது
அங்கு
சிதறியதைப் பொறுக்கி
விருந்தென  நீ
உண்பாய்
சொந்த ரத்தத்தை
ருசிபார்த்து விட்டாய்
அதிகாரப்பசி
சொந்த ரத்தத்தை தான்
பிசைந்துண்ணும்

எங்கள் காலுக்கு
கீழிருக்கும் நிலங்கள்
நழுவுகின்றன
மரங்களின் நிழல்கள்
சுடுகின்றன
பறவைகள் கூவாத
அதிகாலை நள்ளிரவாய்
அச்சுறுத்துகின்றன
மீன்கள் விஷமாகிவிட்டன
மீனவன் பட்டினியாய்
திரும்பி வருகிறான்

பூமியை நீள் சதுரமாய்
சவப்பெட்டி வடிவத்திற்கு
இழைத்து இழைத்து
செதுக்குகிறார்கள்
கழுமரம் நட்டவனும்
சிலுவை செதுக்கியவனும்

நல்லதங்காளின் கொடுமையாய்
அரிச்சந்திரனின் துயரமாய்
சுடுகாட்டில் காத்திருக்கிறோம்
மரணமே எங்களுக்கொரு
உயிரைக் கொண்டு வா....

ஏமாறாமல் தோற்காமல்
ஒரு போரை செய்ய
மரணமே!
எங்களுக்கொரு
உயிரைக் கொண்டுவா...

Pin It