நான் ஒரு தலித் என்கிற முறையில் சொல்கிறேன். ஒரு தலித்திடம் உள்ள சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன் வைக்க வேண்டும். அடுத்து, வர்ணாசிரம வாசகர்களிடம் தலித் உணர்வைத் தூண்ட வேண்டும். இந்த இரண்டு குறிக்கோள்களுக்கும் ஏற்ற கருப்பொருளை தலித் எழுத்தாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் வழியாக தலித் உரிமைகள், தலித் இயக்கங்கள், இவற்றைப் பற்றிய வரலாறு, கதைகள், நாவல், கவிதைகள் மட்டும்தான் தலித் இலக்கியத்தின் அங்கமாக இருக்கும். துப்பறியும் கதைகள், மர்ம நாவல், கற்பனைக் கவிதைகள் தலித் எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருந்தால் கூட, அவை தலித் இலக்கியமாகாது. தலித் மக்களைப் பற்றி, தலித் இயக்கங்களால் தூண்டப்பட்டு, தலித் எழுத்தாளர்களால் பாபாசாகேப் அம்பேத்கர், புலே ஆகியோரின் சிந்தனையின் கீழ் எழுதப்படுவதுதான் தலித் இலக்கியமாகும்.

ஓர் எழுத்தின் கருப்பொருள், அதில் அடங்கியுள்ள உள்ளுணர்வு ஆகியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. தலித் கருப்பொருளைப் பற்றி கீழ்த்தரமாகவும், தரமற்றதாகவும் ஒரு தலித் எழுத்தாளர் எழுதினால்கூட, அதை தலித் இலக்கியம் எனக் கூற முடியாது. அதில் அம்பேத்கரின் சிந்தனைகள் இழையோடியிருக்க வேண்டும். அது சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும். அதன் மொழி, உரிமை பேசும் மொழியாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு தலித் இலக்கியம் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. தலித் அல்லாத விமர்சகர்களும், வெளியீட்டாளர்களும், வாசகர்களும் தற்போது தலித் அடையாளத்தை ஏற்பதில் முன்னணி வகித்து வருகிறார்கள். தலித் இலக்கியத்தைக் கொண்டு வருவதிலும் தன்முனைப்புக் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் பாரம்பரியத்தில் வர்ணாசிரம இலக்கியம் உண்மையற்றதாகவும், கற்பனையானதாகவுமே இருந்தது. புராண காலத்திலிருந்து இன்று வரை அவர்களுக்குப் படிக்கக் கிடைத்ததெல்லாம் வெறும் கற்பனைகளும், புதிர்களும்தான். ஒரு பாமர மனிதனின் உண்மையான முகம் இலக்கியத்தில் வெளிப்பட்டதில்லை. தலித் இலக்கிய எழுச்சிக்குப் பிறகு தலித்துகளின் துயரம், போராட்டம், உரிமைகளைக் கொண்ட ஒரு புது மனிதரை வாசகர்கள் சந்திக்கிறார்கள். எனவேதான் எல்லோரும் இதை ஆதரித்து ஏற்றார்கள்.

கிராமங்களும் அதைச் சுற்றியிருக்கின்ற சேரிகளும், காலனி வீடுகளும் இன்றளவும் அப்படியேதான் இருக்கின்றன. தலித்துகள் ஒரு சொட்டு தண்ணீருக்காக இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டங்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் போராட்டம் தீண்டத்தகாதவன் என்பதை மய்யமாகக் கொண்டிருந்தது. ஆனால், இன்று அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. இன்று இரண்டு எதிரிகள் மோதுகின்றனர். முன்பு ஒரு கிராமம் ஒரு தனி மனிதரைத் தாக்கியது. ஆனால் இன்று ஒரு தனி மனிதன் அழிக்கப்படுவதில்லை. சேரிகளே எரிக்கப்படுகின்றன. ஒரு சமூகமே படுகொலை செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், புரட்சிக்கனல் ஒரு தனிமனிதன் உள்ளத்தில் இருந்து பீறிட்டெழுந்தது. ஆனால், இன்று ஒரு சமூகமே பற்றி எரிகிறது. வர்ணாசிரமத்தாருக்கும், தலித்துகளுக்கும் இடையே நடக்கும் மாபெரும் போர் இது.

தலித் என்பவன் தீண்டத்தகாதவன். இதுதான் சரியான விளக்கம். என் எழுத்து தீண்டத்தகாதவர்களுக்காகத் தான் எழுதப்படுகிறது. தீண்டத்தகாதவர்கள் தங்கள் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். என் எழுத்துகள் அவர்களின் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்பு நிலையைக் கொடுக்கின்றன. இதுதான் எங்கள் இயக்கப் போராட்டங்களுக்கான எல்லை, சூழ்நிலை. ஆனால், இந்த நோக்கம் குறுகிய எல்லைக்குள் மட்டும் இருந்தால் அது இலக்கியத்திற்குப் பயன் அளிக்காது. தாழ்த்தப்பட்ட அனைத்து மக்களையும் இதில் சேர்க்க வேண்டும். இந்த அகண்ட சமூகத்தின் போராட்டங்களில் அனைவரும் பங்கேற்கின்ற ஒரு முழக்கத்தை நாம் பயன்படுத்த வேண்டும். அவர்கள் இயக்கக் கட்டமைப்பின் பங்காளர்களாக மாற வேண்டும். நமது எழுத்துக்கு வாசகர்கள் அவர்கள்தான். இவர்களுடைய விழிப்பு நிலையைத்தான் நாம் ஊட்டி வருகிறோம். பங்காளருக்கான ஒரு தனி முழக்கத்தைக் கண்டுபிடிக்காவிட்டால் நாம் தனிமைப் படுத்தப்படுவோம்.

நமது போராட்டங்கள் சிறு, சிறு குழுக்களாக உடையும். பிரித்தாளும் வகையில் ஒவ்வொருவரும் தனித்தனியாகக் களையெடுக்கப்பட்டுத் தோற்கடிக்கப்படுவார்கள். எனவே, உரிமை மறுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்கள் எங்கு இருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும், எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மொழி நடையில் எழுத வேண்டும். அவர்கள் வர்ணாசிரமத்தாராக, வெள்ளையராக, வெள்ளையர் அல்லாதவராக இருந்தாலும் ஒடுக்கப்படும்போதும், சுரண்டப்படும்போதும் அவர்களும் நம்மில் ஒருவர்தான். இந்தக் கருத்துகளை முன்வைக்க வேண்டியது, தலித் வரையறைக்கு அவசியமானதாகும். அப்போதுதான் தலித் தோழமை உறுதிப்படும்.

– சரண்குமார் லிம்பாலே

Pin It