நமது கலைகள் முழுவதும் ஆரியக் கலப்பாகி விட்டதுடன், இலக்கியங்கள், இலக்கணங்கள்கூட ஆரியக் கலப்பாகவே ஆகிவிட்டன. தொல்காப்பியம், குறள் முதலியவைகளில்கூட ஆரியச் செல்வாக்கும் கலப்பும் ஏற்பட்டுவிட்டது என்பது சில ஆராய்ச்சி நிபுணர்களின் கூற்றாக ஆகிவிட்டது. சில நடவடிக்கைகளுக்கு தமிழில் பெயர் சொல்ல வார்த்தைகளே கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. சிலவற்றைத் தமிழில் சொன்னால் கெட்டவார்த்தைகள் – உச்சரிக்கக் கூடாதவைகள் ஆகிவிடுகின்றன. அவற்றையே வடமொழியில் சொன்னால் மதிக்கப்பட்ட வார்த்தைகளாக ஆகிவிடுகின்றன. இப்படியாக, தமிழர்களுக்கு இன்று எதுவும் சொந்தம் இல்லாமல் – ஆதாரம் இல்லாமல் ஆரியத்தையே கொண்டு வாழும்படியான நிலைமை ஏற்படுத்தப்பட்டு அதிலிருந்து வேறுபடுவது என்றால், மிக்க வேதனைப்படும்படி ஆகிவிட்டது.

ராமாயணம், பாரதம், பாகவதம், கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் இவைகள் தமிழில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதல்லாமல் – இவற்றுள் ஒழுக்கமோ, தமிழர் உணர்ச்சியோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா? நமது சமயம், பண்டிகை, உற்சவம், கடவுள், வாழ்வு, நாள், கோள் எல்லாம் இவைகளில் அடங்கியவை அல்லாமல் வேறு ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறோமா? ஒரு நண்பர் சொன்னார் : இந்த நவராத்திரிப் பண்டிகையும் ஆடிப்பெருக்குப் பண்டிகையும் நம் பழைய இலக்கண இலக்கியங்களையும் கலைகளையும் ஒழிப்பதற்குப் பயன்பட்டு வந்திருக்கின்றன என்று. நம் வீட்டில் உள்ள பழைய ஆதாரங்கள் எல்லாம் ஆடிப்பெருக்கில் வெள்ளத்தில் கிணற்றில் கொண்டு போய்ப் போடு வதையும், நவராத்திரியில் வீடு சுத்தம் செய்வது என்னும் பேரால் பழையவைகளைக் குப்பையில் எறிந்துவிடுவதையும் ஒரு காரியமாகக் கையாண்டு வந்திருக்கிறோம்.

புத்தகங்கள் அச்சுகள் இல்லாத பழங்காலத்தில் நம் கலைகளுக்கு இலக்கியங்களுக்கு ஏதோ சிலரிடம்தான் ஏட்டு ஓலை ரூபமாகச் சில ஆதாரங்கள் இருந்திருக்கும். அவை அவர்கள் பிள்ளைகளுக்கு முக்கியமானவைகளாக இருந்திருக்காது. இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் அல்லது கேட்கும் வேறு ஒருவனுக்கு சுலபமாய் எடுத்துக் கொடுத்துவிடுவான் அல்லது கரையான், பூச்சி, புழு அரித்துவிடும். கடைசியாக, ஆடிப்பெருக்கத்தின்போது வெள்ளத்திற்கும், நவராத்திரியின்போது குப்பைமேட்டுக்கும் போய்ச்சேர்ந்துவிடும். இப்படியேதான் நம் இலக்கியங்கள் ஒழிந்துபோய்விட்டன. இன்று நாம் காண நம் கண்ணெதிரிலேயே ஒன்று நடந்து இருக்கிறது. தமிழ் நாட்டில் ஏட்டுப் பிரதியில் உள்ள தமிழ் இலக்கியங்கள் அவ்வளவும் அச்சுப் போடுவதாக தோழர் உ.வே. சாமிநாதய்யர் அரித்து எடுத்துக் கொண்டு வந்துவிட்டார். அச்சாகி வெளிவந்தவைகள் அவ்வளவும் அய்யர் இஷ்டப்படியாயும், அய்யர் இஷ்டப்பட்டதும் ஆகத்தான் வெளியாயிருக்குமே ஒழிய – இயற்கை ரூபத்தில் வெளியாயிருக்க முடிந்திருக்குமா என்று பாருங்கள்.

இதுபோலவே நம் பழைய சமய, ஒழுக்க, வழக்க ஆதாரங்கள் ஒழிந்தே போய்விட்டன.

பண்டிதர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் எழுதியுள்ள ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தில், ஆரியர்கள் வந்தவுடன் திராவிடர்களை வெற்றி பெற்று அடக்கி, திராவிட ஆதாரங்களையெல்லாம் கைப்பற்றி தங்களுக்கு ஏற்றபடி ஆரியத்தில் மொழிபெயர்த்துத் தங்களுடையதுபோல் வெளியிட்டார்கள். தங்கள் சமயங்களையும் கடவுள்களையும் பழக்க வழக்கங்களையும் தங்கள் உயர்வுக்கு ஏற்றபடி கற்பித்துக் கொண்ட கற்பனைகளையும் புகுத்தினார்கள். இவற்றை அறிஞர்கள் சிலர் மறுத்தாரென்றாலும் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்டு விட்டன என்று பொருள்படத் துணிவுடன் எழுதி இருக்கிறார்.

நாம் ஆரிய வர்க்கம் அல்ல என்றும், ஆரிய சமயம் ஆரிய வருணாசிரமக் கொள்கை, ஆரியப் பழக்க வழக்கம் முதலியவைகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்றும், நாம் திராவிடர்கள், தமிழர்கள் என்றும்; நமக்கும் ஆரியர்களுக்கும் சமுதாயத் துறையில் ஓர் ஆட்சியின் கீழ் இருக்கும் குடிகள் என்பதைத் தவிர வேறு சம்மந்தம் ஒன்றும் இல்லையென்றும், நமது லட்சியம் வேறு – அவர்களது லட்சியம் வேறு என்றும் கருதி முடிவு பெற்றதால்தான், நமக்கு இந்த நாட்டில் சமுதாயத் தொண்டுக்கும் – அரசியல் தொண்டுக்கும் தனிப்பட்ட வேலை இருக்கின்றதே ஒழிய, மற்றபடி நாம் ஆரியத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால் நமக்கு எவ்விதப் பொறுப்பும் வேலையும் முயற்சி யும் இல்லை என்பதுதான் எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இதில் நமது நிலை மிகத் தெளிவாய் இருக்க வேண்டும். வழவழ கொழகொழ, வெண்டைக்காய்த் தன்மை கண்டிப்பாய் உதவவே உதவாது; ஒரு தெளிவான முடிவுக்கு திராவிடர்கள் வராததாலேயே இந்த இருபதாவது நூற்றாண்டில், அய்ரோப்பியர் ஆட்சியில்கூட, திராவிடன் ஆரியருக்கு "இழி பிறப்பாக' இருக்கிறான்.

– தொடரும்

13.10.1940 அன்று சென்னையில் ஆற்றிய தலைமை உரை, "குடியரசு' – 27.10.1940

Pin It