சுதந்திரத்திற்குப் பிறகான சமூகம் அனைத்து தடைகளிலுமிருந்து விடுபட்டு, வாழ்க்கையை புதிதாக கட்டமைக்க வேண்டியிருந்தது. அதையடுத்து வந்த தலைமுறை – தான் பெற்ற ஏழ்மை, பஞ்சம், பசி பட்டினியை எதிர்கால தலைமுறையினர் பெறக் கூடாது என கல்வி கொடுத்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தது. அந்தக் கனவும் நனவானது. ஆனால், கலை, பண்பாடு, இலக்கியம், இயற்கையோடு இயைந்த வாழ்வு என முன்ன வர்கள் தந்த அரிய கொடைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும், நற்சிந்தனைகளையும் சிதறாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்தியிருக்க வேண்டிய மாபெரும் பணியை செய்யத் தவறிவிட்டது, இன்றைய தலைமுறை. வாழ்வியல் அறங்கள் அனைத் தையும் உதறிவிட்டு, எந்திரத்தைப் போல பணம் சேர்ப்பது ஒன்றே அதன் மய்ய நோக்கமாக மாறிவிட்டது.

En-Peyar-Palaru_450நதிக்கரைகளில் நாகரிக வாழ்வைத் தொடங்கிய நாம், இன்று வளர்ச்சியின் உச்சப் படிக்கட்டுகளில் நின்று கொண்டு, சூல் கொண்ட இடத்தையே காவு கொள்ளத் துணிந்து விட்டோம். நதிகள் அதன் அழகையும், தன்மையையும் இழந்து கொண்டேயிருக்கின்றன. இயற்கை வளங்களை அபகரிக்க – பன்னாட்டு முதலீடுகள், நிதியுதவி என வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு மூன்றாம் உலக நாடுகளை முதல் உலக நாடுகள் கொள்ளையடிக்கின்றன, அவற்றையே குறுகலாக்கி சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், வேலைவாய்ப்புகள் என மூன்றாம் உலக அரசுகள், தன் சொந்த நாட்டு மக்களையே சுரண்டு கின்றன. விளைவு, இயற்கை வளங்கள் அனைத்தும் தின்று தீர்ந்துவிட்ட எச்சில் இலைகளைப் போல மிச்சமிருக்கின்றன.

எதிர்கால தலைமுறையினருக்கு வேண்டும் என சாலைதோறும் மரங்களையும், கிராமங்கள்தோறும் குளம், குட்டைகளையும் தோற்றுவித்த முன்னோர்களின் தொலைநோக்குச் சிந்தனை, நவ நாகரிகத்தில் ஊறித் திளைக்கும் நம்மிடம் இல்லாமல் போனது ஏன்? புதிதாக எதையும் உருவாக்க வேண்டாம், இருப்பதையும் பாதுகாக்கும் திறனற்றுப் போனது ஏன்? அடுத்த தலைமுறையினர் காறி உமிழும் வரை நுனிக்கிளையில் அமர்ந்து கொண்டு, அடிக்கிளையை வெட்டிக் கொண்டிருக்கப் போகிறோமா? தீவிரவாதம், அணு அரசியல், வல்லரசு நாடுகளின் அதிகாரச் சண்டைகளுக்கு அடுத்தபடியாக – கண்டங்கள்தோறும், நாடுகள்தோறும், மாநிலங்கள்தோறும் மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருப்பது, நீர் பற்றாக்குறைதான் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? இத்தகைய கேள்விகளை நமக்குள் விதைக்கிறது – "என் பெயர் பாலாறு' ஆவணப்படம்.

85 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தை ஆர்.ஆர். சீனிவாசன் இயக்கி யுள்ளார். "நதியின் மரணம்' படத்தின் மூலம் நன்கு அறிமுகமானவர் இவர். பாலாறு தன் வரலாற்றையும், இன்றைய அவல நிலையை யும் கூறும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது இந்த ஆவணப்படம்.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை என வரலாறு போற்றிய தமிழகத்தை வளம் கொழிக்க வைத்த நதிகளின் கதியை இன்று காண்பவர்களுக்கு இரக்கம் சுரக்காமல் போவதில்லை. மாநில அரசியலாலும், தொலைநோக்கற்ற அரசுகளின் முடிவாலும், கொள்ளை மனம் கொண்ட முதலாளிகளாலும் குற்றுயிராகக் கிடக்கிறது இன்றைய பாலாறு. கர்நாடக – ஆந்திர அரசின் அரசியல் சூழ்ச்சி, தமிழக அரசின் மணல் குவாரி திட்டம், தோல் மற்றும் சர்க்கரை ஆலைகளின் கழிவுகள், கூடவே மக்களின் அலட்சியம் போன்றவற்றால் மெல்ல சாகும் பாலாற்றின் நிலையை மனதில் பதிய வைக்கிறது ஆவணப்படம்.

கர்நாடக மாநிலத்திலுள்ள நந்தி துர்க்க மலையில் தோன்றி, ஆந்திர மாநில எல்லைக் குள் நுழைந்து, பின்னர் தமிழகத்திற்குள் ஓடும் பாலாறுடன் பயணிக்கிறது ஆவணப்படம். அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த நந்தி துர்க்கமலை, இன்று யூக்கலிப்டஸ் மரங்களின் மலையாக மாறிவிட்டது. மன்னராட்சி காலத்தில் பாலாறு, காவிரியுடன் கலந்ததாகத் தெரிவிக்கிறது படம். எல்லைகளற்று ஓடிய நதி, இன்று மாநில அரசியலால் துண்டாடப்பட்டுவிட்டது.

1892 – 1924 ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு மாநிலங்களும் ஒன்றுக்கொன்று அனுமதி பெறாமல் தடுப்பணைகளோ, ஏரிகளோ கட்டக்கூடாது என்று முடிவாகிறது. ஆனால், இந்த ஒப்பந்தம் வெறும் காகிதத்தோடு முடிந்துவிட்டது. மைசூர் அரசு எண்ணற்ற ஏரிகளையும், தடுப்பணைகளையும் கட்டி ஒப்பந்தத்தை கல்லறைக்கு அனுப்பியது. ஆந்திர மாநிலத்திலும் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 32 தடுப்பணைகளால் பாலாற்றின் நீர்வரத்து முற்றிலுமாகக் குறைந்துவிட்டது. இவையனைத்தும் நிரம்பிய பிறகு வழியும் தண்ணீர்தான் பாலாற்றில் விடப்படுகிறது. இது போதாதென்று கணேசபுரம் என்ற இடத்தில் புதிதாக ஒரு தடுப்பணை கட்டப் போவதாக கிளம்பியிருக்கிறது ஆந்திர அரசு. அணையை கட்டவிட மாட்டோம் என்று எதிர்க்கிறது தமிழக அரசு. இதனால் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கும் மேலாக பாலாற்றின் துயரம் தீர்ந்தபாடில்லை.

மாநில அரசுகளின் சண்டையை விடுத்துப் பார்த்தால், பாலாற்றை பெரிதளவில் வஞ்சிப்பது, தமிழக அரசின் மணல் குவாரி திட்டம். எவ்வித முன்யோசனையும், தொலைநோக்குப் பார்வையுமற்றுப் போடப்பட்ட இத்திட்டத்தால், பாலாறு குற்றுயிராக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ஆவணப்படம்.

இறந்து கொண்டிருக்கும் விலங்கை போட்டிப் போட்டுக் கொண்டு இரையாக்கும் பிணம் தின்னி கழுகுகளைப் போல, மெல்ல அழிந்து கொண்டிருக்கும் பாலாற்றை பொக்லைன்களும், மணல் லாரிகளும் கூறு போடுகின்றன. ஆற்றில் 3 அடி வரைதான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதியை மீறி, 2 ஆள் உயரத்திற்கு மணல் தோண்டப்படுகிறது. கும்பல் கும்பலாக லாரிகளும், பொக்லைன் எந்திரங்களும் வரிசை கட்டி நிற்கும் பாலாற்று மணல்வெளியை காணும்போது மனம் கனக்கிறது. பாலாற்றிற்கு நேர்ந்த அவலத்தைப் பார்க்கும்போது, துணிமூட்டைகளை அள்ளிக் கொண்டு கிலோ மீட்டர் கணக்கில் ஆற்றுநடை செல்வதும், சுழித்து சுழித்து விளையாட்டு காட்டும் ஆற்றுநீரில் எதிர் நீச்சல் போடுவதும், ஆற்றங்கரைகளில் சோறு உண்பதுமான நதிசார் வாழ்வின் நினைவுகள் அச்சங்களாக எழும்புகின்றன. ஒருநாள் என்னுடைய ஆற்றிற்கும் இக்கதிதானோ என்ற தவிப்பை இப்படம் தோற்றுவிப்பது உண்மை.

பாலாற்றின் மூலம் பயன்பெற்ற வேலூர், குடியாத்தம், ஆம்பூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகள் இன்று நிற்கதியாக நிற்கின்றன. முப்போகம் விவசாயம் பார்த்து வந்த பல பேர் இன்று மணல் அள்ளுவதற்கு வந்துவிட்டனர். பாலாற்றுக் கரையோர கிராமங்களில் மணல் அள்ளும் வேலைக்கு படையெடுக்கின்றனர் மக்கள். மாணவர்கள், பள்ளிக்கூடங்களைத் தவிர்த்து மணல் அள்ளுவோர்க்கு பீடி, சிகரெட் விற்பனை செய்யக் கிளம்புவதாகத் தெரிவிக்கிறது "என் பெயர் பாலாறு' படம். ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்கள் ஆற்றில் மணல் எடுப்பதைத் தடை செய்திருக்கும் வேளையில், தமிழ் நாட்டில் வருமானத்தைப் பெருக்க அரசே மணல் குவாரியை ஏற்று நடத்துவதையும், மணல் கொள்ளையை தட்டிக் கேட்கும் அதிகாரிகளும், தன்னார்வலர்களும் கண்மூடித்தனமாகத் தாக்கப்படுவதையும் கண்டிக்கிறது இப்படம்.

ஆண்டுக்கணக்கில் கல்லையும், பாறைகளையும் கரைத்து, நதிகள் சேமித்து வைத்திருக்கும் மணல்வெளிகள் மீண்டும் உருவாக, நூறு ஆண்டுகளுக்கும் மேலாகும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆக்கத் திராணியற்றோரின் அழிவு வெறியைத் தடுக்க வழியின்றி, இயற்கை வளங் கள் கொள்ளை போவது வளர்ச்சிப் பணிகளுக்காகத்தானே என்று சமரசமாகப் பழகிவிட்டோம்.

மாநில அரசியல், மணல் கொள்ளை தவிர ஆம்பூர், ராணிப்பேட்டை பகுதிகளை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் சர்க்கரை ஆலைக் கழிவுகள் பாலாற்றின் மணல் பரப்பையும், நிலத்தடி நீரையும் பெருமளவில் மாசுபடுத்தி வருகின்றன. சிறுதொழில்களாக தொடங்கப்பட்ட தோல் பதனிடும் தொழில், இன்று பெரும் தொழிற்சாலைகளாகி விட்டன. இத்தொழிற்சாலைகளில் சுமார் பத்தாயிரம் பேர் வரை வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித் தருபவையாக தோல் தொழிற்சாலைகள் விளங்குவதால், தோல் தொழிலை விரிவு படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் ஆவணப்படக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், தொழிற்சாலைகள் கழிவு நீரை நேரடியாக பாலாற்றில் விடக்கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் தடையிருந்தும், பாலாற்றில் வெள் ளம் போல கழிவுநீர் கலப்பதை காண முடிகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தோல் பதனிட்டு வந்த தோல் தொழிற்சாலைக் கழிவுகளை, விவசாயிகள் விலைக்கு வாங்கிச் சென்று விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுத்தினர் என தெரிவிக்கிறது ஆவணப்படம். அதன் பிறகு உற்பத்தியைப் பெருக்க வேண்டி ரசாயன முறைக்கு மாறியதால் சுற்றுப்புறம், ஆற்றின் சூழல் அனைத்தும் பாழ்படுவதாகப் பொறுமுகின்றனர் மக்கள். தோல்தொழிற்சாலைகள் மட்டுமின்றி சாராய ஆலை, சர்க்கரை ஆலை, குளிர்பான நிறுவனத்திலிருந்து வெளியாகும் ரசாயனக் கழிவு நீர் குளம் போல தேங்குகிறது பாலாற்றில்.

தோல் கழிவுகளால் ஆம்பூர், வாணியம் பாடி போன்ற பகுதிகளில் மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கல், பற்களில் காரை படிதல் என அவதிக்குள்ளாவதாக கூறும் மக்கள், பெயர் தெரியாத நோய்களும் வருவதாக புகார் கூறுகின்றனர். அதோடு விவசாய நிலங்கள் முற்றிலும் பாழ்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகளின் புலம்பல் பெருங்குரலாகப் பெருக்கெடுக்கின்றன. அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தொழிற்சாலைகளும், மாநில அரசும் போக்கு காட்டுவதும் கண்கூடாகத் தெரிகிறது.

சிற்றோடையாக சுருங்கிவிட்ட பாலாறு கடலில் கடக்கும் இடம்தான் வயலூர். இது, வசவசமுத்திரம் என்ற துறைமுகமாக செயல்பட்டு வந்த இடம். தஞ்சைக்கு ஒப்பான விவசாயம் இங்கு நடைபெற்றது. ஆழ்துளை குழாய்கள் மூலம் கல்பாக்கத்திற்கு கொண்டு செல்லும் திட்டம், ரயில்வே குடிநீர் திட்டம் போன்றவற்றால், எஞ்சியிருக்கும் பாலாற்று நிலத்தடி நீருக்கும் பஞ்சம் வந்துவிட்டதாக எச்சரிக்கிறது ஆவணப்படம்.

நந்தி துர்க்க மலையிலிருந்து வயலூர் வரைக்கும் பாலாறு படும் துயரத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறது ஆவணப்படம். பார்வையாளர்கள் எளிதில் கடந்து போக முடியாதபடி அடர்த்தியான பேட்டிகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன. கவிதையாக தன் துயரக்கதையை சொல்லத் தொடங்கும் "என் பெயர் பாலாறு' ஆவணப்படம், எண்ணற்ற பேட்டிகளால் துண்டு துண்டாக நீள்கிறது. ஒளிப்பதிவும், காட்சிகளும் அதைக் கடந்து செல்ல உதவுகின்றன. சரியான நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள "என் பெயர் பாலாறு' ஆவணப்படம் – ஆழ் மனதைத் தீண்டத் தவறி விட்டாலும், அவசியம் காண வேண்டிய பட்டியலில் கண்டிப்பாக இடம் பெறும். 

என் பெயர் பாலாறு

இயக்குநர்: ஆர்.ஆர்.சீனிவாசன்

நேரம்: 85 நிமிடம்

தொடர்புக்கு: 94440 65336

வெளியீடு: சமூக செயல்பாட்டு இயக்கம்

Pin It