2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில், அஸ்ஸாம் படையணியைச் சேர்ந்த ராணுவத்தினர், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்.

அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முந்தைய நாள், அஸ்ஸாம் படையினர் மீது சில "தீவிரவாதிகள்' தாக்குதல் நடத்தினர். அதில் எந்தப் படையினரும் காயமடையவில்லை. இருப்பினும், இதற்குப் பழிவாங்கும் வகையில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

sharmila_370ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்துபவர்களிடம் இந்திய ஆளும் – அதிகார வர்க்கம் அகிம்சையை வலியுறுத்துகிறது. ஆனால், அதே அகிம்சையை முன்னிறுத்திப் போராடும் இரோம் சர்மிளாவின் கோரிக்கையை 10 ஆண்டுகளாக அலட்சியப்படுத்தியே வருகிறது. "அகிம்சை' அரசின் வன்முறையை இரோம் சர்மிளா, தன் போராட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தி வருகிறார்.

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 10 ஆண்டுகளை (நவம்பர் 4, 2010) கடந்து விட்டன. இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் வீட்டுக் காவலில் இருக்கும் சர்மிளாவிடம் "தெகல்கா' இதழ் எழுத்து மூலம் அளித்த கேள்விக்கு, மூன்று வாரங்கள் கழித்து அவர் அளித்துள்ள பதில்.

கடந்த பத்தாண்டுகளாக, ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சாப்பிட மறுக்கும் போராட்டத்தை நடத்தி வருவதில் வெற்றி பெறுவீர்களா?

நீதிக்காக நடத்தப்படும் என்னுடைய உண்மையான போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.

நீங்கள் அமைதியானதொரு எதிர்ப்பைத் தெரிவிப்பதால்தான், அரசு உங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்று கருதுகிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. அதிகார வெறிபிடித்த (அதிகார) வர்க்கம், என்னைப் போன்ற குடிமக்களின் ஜனநாயகமான, நியாயமான கோரிக்கைகளை மதிப்பதில்லை. பிணங்களைப் பார்க்கும்போதுதான் அவர்களுக்கு உள்ளூர அச்சம் ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத போராட்டங்களை, தங்களுடைய மிக மூர்க்கத்தனமான செயல்பாடுகளால் ஒடுக்கவே அவர்கள் முயல்கின்றனர்.

நீங்கள் சாவைப் பார்த்து அஞ்சவில்லையா?

இப்புவியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் என்றோ ஒரு நாள் மடியத்தான் வேண்டும். எனவே, என் சாவைப் பற்றிய தேவையற்ற அச்சம் எனக்கில்லை.

உங்கள் போராட்டத்தைத் தொடர எது உந்து சக்தியாக இருக்கிறது?

இன்றைய என் சமூகத்தின் நிலையே என் உந்து சக்தியாக இருக்கிறது.

உங்களுடைய ஒவ்வொரு நாளையும் எப்படி கழிக்கிறீர்கள்?

நான் வழக்கமாக நடப்பது, படிப்பது, எழுதுவது என்று நாட்களை கழிக்கிறேன்.

உங்களுடைய போராட்டத்தைப் பார்த்து வளர்ந்து வரும் இளைய தலைமுறையினருக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

நம்முடைய உயிர்கள் மூர்க்கத்தனமான கொலைகாரர்களின் பிடியில் இருக்கும்போது, அவர்கள் வெறும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. வாழ்விற்கான உரிமை முக்கியமானது. அப்பொழுதுதான் நாம் நாகரிக உலகில் வளமாகவும், ஆரோக்கியமாகவும், வெற்றிகரமான – மகிழ்ச்சியான குடிமக்களாக மாற முடியும்.

உங்களுடைய பட்டினிப் போராட்டத்தை எப்பொழுது நிறுத்துவீர்கள்?

என்னுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்போதுதான் நான் பட்டினிப் போராட்டத்தை நிறுத்துவேன்.

Pin It