கீற்றில் தேட...

அண்மைப் படைப்புகள்

வன்முறை நமக்குப் பழக்கப்பட்டதுதான். மக்களை ஆளும் அரசு, அரசை எதிர்க்கும் புரட்சியாளர்கள், புரட்சியை விரும்பாத மதவாதிகள், மதவாதிகளை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளைப் பின் தொடரும் ஊடகங்கள், ஊடகங்களை நம்பும் மக்கள்... என நாம் எல்லோருமே வன்முறையைப் பார்த்தும் பழகியும் எதிர்பார்த்தும் உருவாக்கியுமே காலத்தை நகர்த்துகிறோம். பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீதும், ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும், பெரியவர்கள் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம்-வன்முறையின் வடிவத்திலேயே அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது. இங்கு வன்முறைக்கு யாரும் விதிவிலக்கல்லர். வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிர்வினையாற்ற விழைகிறவர்களும் தங்களுக்கான ஆயுதமாக அவற்றையே கையிலெடுப்பதால்-காணச் சகிக்காத அவலங்களை நாள் தோறும் கண்டு கொண்டே இருக்கிறோம். இங்கு மனிதரை எவரும் சக மனிதராகக் கருதவில்லை. இந்த ஜாதி, இந்த மதம், இந்தப் பாலினம், இந்த நிறம், இந்த வயது, இந்தத் தெரு, இந்த ஊர், இந்த நாடு என்று ஒருவரையொருவர் பாகுபடுத்துவதில்தான் எத்தனை வரையறைகள்? வீடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த வரையறைகளின் மூர்க்கம், முழு வீச்சோடு செயலில் இருக்கிறது. இதற்கு மாணவர்கள் மட்டும் விதிவிலக்காகி விடுவார்களா என்ன?

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, நூறு வயதைக் கடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பல பல சட்ட மேதைகளை உருவாக்கிய இந்தக் கல்லூரியில் பயில்கிறவர்களில், மற்ற எந்தத் தொழில் படிப்பு கல்லூரிகளை விடவும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, கெல்லீசில் அமைந்துள்ள இச்சட்டக் கல்லூரியின் விடுதி பெரும்பாலும் தலித் மாணவர்களால்தான் நிறைந்திருக்கிறது. இதற்கு மிகக் குறிப்பான உளவியல் மற்றும் சமூகக் காரணங்கள் இருக்கின்றன:

lawcollege 1. டாக்டர் அம்பேத்கர் சட்டம் பயின்றவர் என்பது உளவியல் காரணம் 2. இன்னும் தனியார்மயமாகாத ஒரே தொழில் படிப்பு சட்டம் மட்டுமே! சட்டக் கல்லூரியும் தனியார் கைக்குப் போனால், தலித் மாணவர்களுக்கு அதுவும் எட்டாக் கனியாகிவிடும். பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இங்கு மிகவும் குறைவு என்றாலும், இது பொது விடுதிதான். அரசு உதவித் தொகையை நம்பி கல்வி கற்க வேண்டிய அவசியம் தலித் மாணவர்களுக்கே பெரும்பாலும் இருக்கிறது என்பதால்-உணவுக்கும் உறைவிடத்திற்கும், போக்குவரத்திற்கும் செலவழிக்க வழியற்ற தலித் மாணவர்களுக்கு இந்த சட்டக் கல்லூரி விடுதியே தஞ்சம். இந்த கல்வி ஆண்டில் விடுதியில் உள்ள தலித் மாணவர்களின் எண்ணிக்கை 149; பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 7.

12.11.2008 அன்று, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற வன்முறை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெறும் ஏழு பேர்தான் என்ற நிலையில் எப்படி சாத்தியமாயிற்று? எண்ணிக்கையில் இவ்வளவு குறைவாக இருக்கிறவர்கள் இந்த அளவுக்குத் துணிவார்களா என்று நாம் யோசிக்கலாம். தேவர்களுக்கும் தலித் மாணவர்களுக்குமான மோதல் மட்டுமல்ல; பள்ளர்-பறையர் தாக்குதல்கள், சீனியர் -ஜுனியர் அடிதடிகள், விடுதி மாணவர்களுக்கும் -விடுதியில் இல்லாத மாணவர்களுக்கும் இடையே சண்டைகள் என டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும், விடுதியும் பல தீவிரமான மோதல்களை தொடர்ச்சியாகக் கண்டு வந்திருக்கிறது. இங்கு நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்கும் பொருட்டு, இதுவரை நான்கு விசாரணை ஆணையங்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது.

1968இல் நீதியரசர் சோமசுந்தரம் ஆணையம், 1981இல் நீதியரசர் காதர் ஆணையம், 2001இல் நீதியரசர் பக்தவச்சலம் ஆணையம், தற்போது நீதியரசர் பி. சண்முகம் ஆணையம். ஆனாலும் சட்டக் கல்லூரியில் நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. அறிக்கைகளை வாங்கி அடுக்கி வைப்பதோடு கடமை முடிந்ததென அது இருந்து விடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் பாகுபாடு, பிரிவுணர்ச்சி மற்றும் பழியுணர்ச்சியின் வேர் எது என்று ஆராய்ந்தால், அது கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் நீதிமன்றத்தைச் சென்றடையும். வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகப் பிரிந்து செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

சட்டத்தைக் காக்க வேண்டிய இவர்கள் எந்த வன்முறைக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதைப் பல குற்றங்கள் நமக்கு நிரூபித்திருக்கின்றன. மேலும் அரசியலோடு தொடர்புடையவர்களாகவும் இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள், ஓர் அரசியல் கட்சியின் மாணவர் அணி செயலாளருக்கு இருக்கும் துடிப்போடும் மிதப்போடும் வலம் வருவதன் உளவியல் பின்னணி இதுதான். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எப்போதுமே ஒரு பதற்ற மான சூழலில் இருப்பதற்கு அடிநாதமாக இப்படியொரு பின்னணி இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே உற்று நோக்கும்படியாக மூன்று முக்கியமான வன்முறைகள் இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இதில் முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது, 2001இல் காவல் துறை மாணவர்கள் மீது நடத்திய கொலை வெறித்தாக்குதல். இதற்கும் வலுவான சாதியப் பின்னணி உள்ளது என்ற போதிலும்-அது சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், காவல் துறைக்குமான பொதுவான மோதலாகவே திசை திருப்பப்பட்டது. விடுதிக்கு அருகில் இருந்த கணேஷ் செட்டிநாடு ஓட்டல் ஊழியர்களுக்கும் விடுதி மாணவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சாதாரண கைகலப்பு, காவல் துறை தலையீட்டால் மிகப் பெரிய வன்முறையாக மாறியது. விடுதிக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். மோட்சம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த பொது மக்கள்தான் மாணவர்களோடு சண்டையில் ஈடுபட்டதாக காவல் துறை பதிலளித்தாலும் அதில் உண்மையில்லை.

காவல் துறையோடு சேர்ந்து மாணவர்களை அன்று தாக்கியது, காவலர்களே அழைத்து வந்த ‘ரவுடி'களே என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் நம்புகிறார்கள். காவல் துறைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது குறிப்பாக விடுதியில் இருக்கும் தலித் மாணவர்கள் மீதிருந்த வெறுப்புணர்ச்சியே இந்த மோதலின் கரு என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதி முழுவதும் சூறையாடப்பட்டு, 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களைத் தாக்கிய இந்தப் "பொது மக்களை' கைது செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்ய காவலர்கள் தவறியதாக நீதியரசர் பக்தவச்சலம் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதும், அந்தப் பொது மக்கள் யாராக இருக்கக்கூடும் என்ற முக்கியமான விஷயத்தை மட்டும் ஆணையம் விசாரிக்கவில்லை. இறுதியாக, காவல் துறை மீது எந்தத் தவறுமில்லை என்றே அறிக்கை குறிப்பிட்டது.

lawcollege இதற்கு அடுத்ததாக 2005–2006இல் தலித் மற்றும் தேவர் மாணவர்களுக்கிடையே மோதல் நடந்தது. அந்த கல்வியாண்டில் விடுதியில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 93; பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்படட மாணவர்களின் எண்ணிக்கை 67. முதன் முறையாக விடுதியில் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அப்போதுதான் இந்தளவு அதிகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக இருந்தவர், அப்போதைய விடுதிக் காப்பாளராக இருந்த பேராசிரியர் வின்சென்ட் காமராஜ். மாணவர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்ததாலும், மாணவர்களை வழி நடத்துவதிலும் சமாதானப்படுத்துவதிலும் நடுநிலையாக செயல்பட்டதாலும் இவர் விடுதிக் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்ற அந்த ஆண்டில் விடுதியில் குறிப்பிடும்படியாக வன்முறை நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. உணவு மேற்பார்வை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளியாட்கள் விடுதிக்கு வராமல் கண்காணிக்க ஒரு மேற்பார்வைக் குழு என குழுக்களை உருவாக்கி மாணவர்களை அதில் ஈடுபடுத்தினார்.

அந்த ஆண்டின் மே மாதத்தில் அவர் 15 நாட்கள் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் தேவர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தேவர் மாணவர்களுக்கு மட்டும் "கராத்தே' சொல்லிக் கொடுப்பதற்காக விடுதிக்குள் நுழைந்திருக்கிறார். மற்ற மாணவர்களும் கராத்தே கற்றுக் கொள்ள விரும்பிய போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறிய அளவில் சலசலப்பு ஏற்பட, விஷயம் வின்சென்ட் காமராஜிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் அதைக் கண்டித்திருக்கிறார். தேவர் மாணவர்கள் இதனால் அதிருப்தியடைந்தனர். இரவு குடித்துவிட்டு வந்து தலித் மாணவர்களிடம் தகராறு செய்ய, 11 மணிக்கு தொடங்கி 2 மணி வரை சண்டை நடந்திருக்கிறது. 25 பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 10 தலித் மாணவர்களும் காயமடைந்தார்கள். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.
மாணவர்கள் ஒத்துழைக்காததால் இன்று வரை அந்த விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த தகராறின் விளைவாக, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதற்கடுத்த ஆண்டு விடுதியில் சேர முன் வரவில்லை. தலித் மாணவர்களே அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தலித் மாணவர்கள் மீது வெறுப்பு கூடியது. "முக்குலத்தோர் மாணவர் பேரவை' உருவானதன் பின்னணி இதுதான். விடுதியில் தலித் மாணவர்கள் ஒன்றிணைந்து இருப்பதால், கல்லூரியில் தேவர் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணி நடந்தது. பிற பிற்படுத்தப்பட்டோரும் தேவர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். புதிதாக வரும் மாணவர்களிலும் தங்கள் சாதிக்காரர்களை அடையாளம் கண்டு ஒன்று சேர்க்கும் பணியை, முக்குலத்தோர் மாணவர் பேரவையினர் செய்தனர். கல்லூரிக்குள் எந்த ஒரு சாதி சங்கத்திற்கும் அனுமதியில்லை என்ற போதிலும், கல்லூரி நிர்வாகத்தால் இதை தட்டிக் கேட்க முடியவில்லை. காரணம், இந்தப் பேரவையின் வேர் கல்லூரிக்கு வெளியே மிகவும் பலம் பொருந்தியவர்கள் இருக்கும் இடத்தில் நிலை கொண்டிருந்தது. தேவர் குரு பூஜையைக் கொண்டாடும் போது, தலித் மாணவர்களை கோபப்படுத்தும் வகையில் கூச்சலிடுவதும் வம்பிழுப்பதும் தொடர்ந்தது.

சென்ற ஆண்டு பிப்ரவரி இறுதியில் தலித் மாணவர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த தேவர் மாணவர்களுக்கு தலைமையேற்ற பாரதி கண்ணன் (நவ.12 வன்முறை நிகழ்வில் கத்தியோடு ஓடி வந்தவர்), ஆயுதங்களோடு தலித் மாணவர்களை அடிக்க முற்பட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் காவல் துறை அவரிடமிருந்து சுமார் 10 ஆயுதங்களை கைப்பற்றியது. இதைக் கண்டித்து தலித் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதி கண்ணன் மீது பி.சி.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற போதிலும் அவர் முன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.

நவம்பர் 12 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுக்கு அடிபோட்டது, அக்டோபர் 30 தேவர் குருபூஜை. முக்குலத்தோர் மாணவர் பேரவை தொடங்கப்பட்டதிலிருந்து குரு பூஜையை தேவர் மாணவர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். போஸ்டர் ஒட்டுவது, துண்டறிக்கை வெளியிடுவது, கோஷம் போடுவது, முளைப்பாரி கொண்டு போவது என கல்லூரிக்குள்ளும் குருபூஜை சடங்குகளைப் பின்பற்றியிருக்கிறார்கள் மாணவர்கள். முத்துராமலிங்கத் தேவருக்கு இருக்கும் ‘தேசியத் தலைவர்' என்ற பிம்பம், கல்லூரி நிர்வாகத்தை இதை தடுக்க விடாமல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கல்லூரியின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மட்டுமே கொண்டாடப்படுவது வழக்கம். அதற்குக் காரணம் இந்தக் கல்லூரி அவர் பெயரில் இருப்பது மட்டுமல்ல; அவர்கள் பயிலும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் என்பது தான் ஆனால் இந்த அடிப்படை உண்மையைக் கூட ஏற்கவும் நம்பவும், அங்கீகரிக்கவும் தேவர் மாணவர்களால் முடியவில்லை. தேவர் குரு பூஜையை கொண்டாட, வெளியிலிருந்து சாதி சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஊக்குவித்தன.

குரு பூஜையன்று அடிக்கப்பட்ட சுவரொட்டியில், “எக்குலமும் வாழணும், தேவர்கள் மட்டும் ஆளணும்'' என்ற வாசகம் இருந்தது. அதோடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக, ‘சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லூரியின் பெயரையே மாற்றிக் குறிப்பிட்டதாலும், அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே நீக்கியதாலும் கோபமடைந்த தலித் மாணவர்கள், தேவர் மாணவர்களை தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு தேவர் மாணவர்கள் டாக்டர் அம்பேத்கரை ஒருமையில் குறிப்பிட்டு, “அவன் எங்களுக்கு என்னடா செஞ்சான், அவன் பேரை நாங்க எதுக்கு போடணும்'' என்று கூற, தலித் மாணவர்கள் “அப்படீன்னா எதுக்கு இங்க படிக்கிறீங்க, வேற நாட்டுக்குப் போங்க'' என்று கோபமாக பதிலளித்தனர்.

இதைத் தொடர்ந்த சண்டையில் தலித் மாணவர் ஒருவரின் தலையை தேவர் மாணவர்கள் உடைத்திருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால், நான்காம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முதல்வரான சிறீதேவை சந்தித்து சுவரொட்டியின் வாசகங்கள் பற்றி முறையிட்டிருக்கிறார்கள். அதற்கு முதல்வர், "இதெல்லாம் தப்பு; போஸ்டரை உடனே கிழிச்சிடுங்க' என்று சொல்ல, தலித் மாணவர்கள் போஸ்டர்களை கிழித்திருக்கிறார்கள்.

இதனால் தலித் மாணவர்களை அடித்தே தீருவது என பாரதி கண்ணன் தலைமையிலான சில தேவர் மாணவர்கள், ஆயுதங்களோடு சுற்றுவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. இதனால் நவம்பர் 5 அன்று நடந்த தேர்வை தலித் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தேவர் மாணவர்கள் மீண்டும் தங்களை தாக்குவதற்குள் நாம் அவர்களைத் தாக்கிவிட வேண்டும் என்று தலித் மாணவர்கள் விடுதியில் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். மூன்று நாட்களாக பாரதி கண்ணன் உள்ளிட்டோரை தலித் மாணவர்கள் தேடியிருக்கிறார்கள். அவர்கள் அகப்படவில்லை.

இந்நிலையில் நவம்பர் 12 அன்று தேர்வு எழுத வரும் தலித் மாணவர்களைத் தாக்குவதற்கு பாரதி கண்ணன் உள்ளிட்டோர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைக்க, தலித் மாணவர்கள் சுமார் 40-50 பேர் தேர்வு எழுதும் மாணவர்களைப் பாதுகாக்க உருட்டுக் கட்டைகளோடு கிளம்பி வந்து கல்லூரிக்குள் காத்திருந்தனர். கல்லூரிக்குள் மாணவர்கள் பதற்றமாகத் திரிவதாகத் தகவல் வரவே, காவல் துறையும் பத்திரிகை / தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு வந்து குவிந்தனர். இந்நிலையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞர் ரஜினிகாந்திற்கு தகவல் தெரிவிக்க, அவர் விஞ்ஞானி கோபால் என்பவருடன் விரைந்து வந்திருக்கிறார். அவர் தலித் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், பாரதி கண்ணனும் ஆறுமுகமும் பைக்கில் வந்து இறங்கிய வேகத்தில்-பாரதி கண்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி கத்தியோடு பாய்ந்து ஓடி வந்திருக்கிறார்.

தலித் மாணவர்கள் சுதாரித்து சிதறி ஓடுவதற்குள் சித்திரைச் செல்வன் என்ற நான்காம் ஆண்டு மாணவரின் காதிலும், தலையிலும் வெட்டு விழுந்தது. “ஒங்களக் கொல்லாம விடமாட்டேன்டா'' என்று பாரதி கண்ணன் மிக மூர்க்கமாக ஓடி வந்ததைப் பார்த்து தலித் மாணவர்கள் பின் வாங்கியதால், அது அவருக்கு இன்னும் கூடுதல் வெறியை ஊட்டியது. அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள். பிடிபட்டால் என்னாவோம் என்று யோசிக்க முடியாத அளவுக்கு வன்முறை வெறி அவர் மூளையை மழுங்கடித்திருந்தது.

திரைப்படங்களில் வரும் கதாநாயகனைப் போல தனியாளாக அத்தனை பேரையும் அடித்து நொறுக்கிவிடலாம் என்ற கணிப்பு, அடுத்த சில நிமிடங்களிலேயே பொய்த்தது. தலித் மாணவர்கள் கும்பலாகத் தாக்கியதில் பாரதி கண்ணனின் கத்தி கீழே விழுந்தது. கல்லூரியின் நுழைவாயிலருகே அவர் வந்துவிட்ட போதும், தப்பித்துச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்த நிலையிலும் அவர் ‘வாங்கடா வாங்கடா' என்று வெறியோடு கத்திக் கொண்டிருந்தார். பாரதி கண்ணனோடு வந்த ஆறுமுகத்தையும், தேர்வு எழுத வந்திருந்த அய்யாத்துரையையும் (ஏற்கனவே தலித் மாணவர்களைத் தாக்கியவர்) தலித் மாணவர்கள் அடித்துத் துவைத்தனர். பாரதி கண்ணனும் ஆறுமுகமும் செயலிழந்து கீழே கிடந்த நிலையிலும், அவர்களை தலித் மாணவர்கள் தொடர்ந்து தாக்கினர். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்த போது, அவர் கண்களிலும் உடலசைவிலும் இருந்த வெறி, அதன்பின் முற்றிலுமாக தலித் மாணவர்களிடம் இடம் மாறியது.

கல்லூரியின் வாசலில் நின்றிருந்த காவலர்கள், எந்த சலனமும் இல்லாமல் ஏதோ திரைப்படக் காட்சியைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்தது, மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் உள்ளே நுழைந்து மிகச் சிறிய அளவிலான தடியடி நடத்தியிருந்தால் கூட, இத்தகைய கொடுமையான காட்சிகளை சமூகம் பார்க்காமல் தப்பித்திருக்கும். 2001இல் காவல் துறை இதே சட்டக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தபோது அவ்வாறு நுழையலாமா என்று ஒரு வினா எழுப்பப்பட்டது. இதற்கான பதில் நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான, “சட்ட விரோத கும்பலை கலைப்பதற்காக காவல் துறையினர் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறபோது-அவர்கள் கல்லூரியின் முதல்வர் அல்லது பள்ளியின் தலைமையாசிரியர் போன்ற கல்வி நிறுவனங்களின் தலைமையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை'' (கேரள சட்ட அறிக்கை 1971; பக்கம்: 376) என்பதை மேற்கோள் காட்டியே காவல் துறையினர் மீது தவறு இல்லை என்று ஆணையம் அவர்களை விடுவித்தது. அதனால் கல்லூரி முதல்வரின் அனுமதிக்காகக் காத்திருந்தோம் என்ற காவல் துறையின் பதிலில் துளியும் நியாயமில்லை. அதோடு கல்லூரி முதல்வர் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்ததாகக் கூறுகிறபோது, காவல் துறை அதை மறுப்பதன் பின்னணி புரியவில்லை.

காவல் துறைக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வெறுப்புணர்ச்சி எப்போதுமே இருக்கிறது என்பதைப் பல மாணவர்களும் வழக்குரைஞர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். அதனால் மாணவர்களை தாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவார்களா என்பது அய்யமே! வன்முறையை முதலில் தொடங்கியவர்கள் யார் என்று ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததாலேயே தலித் மாணவர்கள் அவரை திருப்பித் தாக்கினார்கள் என்று ஒருசாரார் நியாயப்படுத்த முயல்கிறார்கள். கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணன் "இனச் சிங்க'மாக மற்றொரு சாரரால் சித்தரிக்கப்படுகிறார். மனிதரை மனிதர் தாக்கும் உரிமை மீறலை யார் யாருக்கு இழைத்தாலும் அது குற்றமே. இன்று இந்த வன்முறையை பார்த்துக் கொண்டிருக்கும் முதலாமாண்டு மாணவர்கள், சீனியர்களாகும் போது பதில் சொல்லக் காத்திருப்பார்கள். அதுவரை வன்மம் அவர்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும். வெறும் பதிலடி கொடுப்பதற்கு மட்டுமே வன்முறை உதவும். அது பிரச்சனைக்கான உண்மையான தீர்வை எப்போதுமே அளிப்பதில்லை.

வெறும் வன்முறையால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது விளைந்ததா என்று பார்த்தால், உலக அளவில் கூட நமக்கு எடுத்துக்காட்டுகள் இல்லை. இந்த சமூகமும் மக்களும் பிளவுபட்டிருப்பதைத் தான் அரசியல்வாதிகளும் ஆதிக்கவாதிகளும் விரும்புகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் மூலம் நாம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற வன்முறைகள் நிகழும் போதெல்லாம், எங்கே போகிறது மாணவர் சமுதாயம் என்று எல்லோருமே கேள்வி எழுப்புகிறார்கள். ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் எங்கே இழுத்துச் செல்கிறதோ, அங்கேதான் மாணவர்களும் சென்று சேர்கிறார்கள்.

இந்த பிரச்சனை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு மட்டும் உரித்ததல்ல. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள இரண்டு ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே இதை விட மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அடிக்கடி நடந்தேறுகின்றன. சென்னையில் சில ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே தேங்கிக்கிடக்கும் வன்மம் ஊரறிந்ததே! அவ்வளவு ஏன் சட்டக் கல்லூரி மோதலைத் தொடர்ந்து, கொடூர நோய் கிருமியை விடவும் வேகமாக வன்முறை பரவி, தமிழகத்தின் பல சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் சாதிய உணர்வும், கும்பல் மனப்பான்மையும் மேலோங்கி இருப்பதற்கு இந்த சாதிய சமூகமும், கும்பல் கலாச்சாரத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளுமே முக்கியக் காரணம்.

சாதிய மேலாதிக்கம் எங்குதான் இல்லை! மிக அண்மையில் உத்தப்புரத்தில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினராலும் காவல் துறையாலும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறும் எல்லோரும்-தாங்கள் சாதியற்றவர்கள் தானா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். தன் மகன் தாக்கப்பட்டதற்காக கதறி அழும் பெற்றோர், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்காக வருத்தப்படவும், அவமானப்படவும் வேண்டும். தேவர் மாணவர் தாக்கப்பட்டதை அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே கண்டிக்கின்றன; குறிப்பாக அ.தி.மு.க. பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பார்க்கப் போகும் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும்-பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும், அய்யாத் துரையையும் நலன் விசாரித்துவிட்டு சித்திரைச் செல்வனை புறக்கணிக்கிறார்கள். பாரதி கண்ணனுக்கு இப்போதே அ.தி.மு.க.வில் பதவி தயாராகி இருக்கும். எதிர்கால அரசியல்வாதிகளை இவர்களே வளர்த்தெடுக்கிறார்கள். பாரதி கண்ணன் தன் சமூக மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக எல்லோராலும் நிறுத்தப்படுகிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி நிறுவனங்கள் சாதியப் பாகுபாட்டின் மய்யங்களாகவே இருக்கின்றன. நம் கற்பனைக்கும் எட்டாத அனைத்து வசதிகளும் கொண்ட கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களும்; எந்த அடிப்படை வசதியுமற்ற பள்ளி / கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரும் நிறைந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 55 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் சும்மாவே இருக்கிறார்கள். வழி நடத்த வேண்டாம்; பாடம் நடத்தக் கூட ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் கட்டுப்பாடற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சாதி சங்கத்தினரும் அரசியல்வாதிகளும் ரவுடிகளும் மாணவர்களைத் தேடி வந்து ஆக்கிரமிக்கிறார்கள். விடுதியில் 24 மணி நேரமும் இருக்கிற மாதிரியான காப்பாளர் இல்லை. வகுப்பெடுக்கும் பேராசிரியர் தான் காப்பாளராக நியமிக்கப்படுகிறார். இது குறித்து பக்தவச்சலம் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே அரசுக்கு நேரமில்லை. அதற்குள் அடுத்த வன்முறை நடந்து ஆணையம் நியமிக்கப்பட்டுவிட்டது. விசாரணையும் அறிக்கையுமே பாக்கி.

நாமெல்லாரும் நிகழ்வுகளுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் எவருக்கும் இல்லை. டாக்டர் அம்பேத்கர் என்ற மாமனிதர் இந்த சமூகத்திற்கு ஆற்றியிருக்கும் பெருந்தொண்டைப் புரிந்து கொண்டவர்களும்-அதை எடுத்துச் சொல்கிறவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கிறார்கள். அவர் தலித் மக்களின் தலைவர் என்ற அளவில் சுருக்கப்பட்ட சூழ்ச்சியின் விளைவே குருபூஜையன்று தேவர் மாணவர்கள், ‘அம்பேத்கர் எங்களுக்கு என்ன செய்தார்' என்ற அந்தக் கேள்வி. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் என்ற விஷயம் கூட தெரியாதவர்கள் இங்கு அதிகம். (சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பான உண்மையறியும் குழு ஒன்றின் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் செய்தியாளர், அம்பேத்கர் என்பது ஜாதி பேர். அவர் பேரை எதுக்கு கல்லூரிக்கு வெச்சிருக்காங்க. பேரை மாத்திட்டா பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றார், துளியும் கூச்சமின்றி).

இன்று பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் சட்ட ரீதியான எல்லா உரிமைகளையும் உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல ஆளில்லை. அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள பிற்படுத்தப்பட்டோர் எப்படி தயாராக இல்லையோ, அதே போல அவரை எல்லோருக்குமானவராக விட்டுக் கொடுக்க தலித் மக்களும் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த சமூகத்தில் இருந்து சாதி வேரோடு அழிய வேண்டுமானால், அம்பேத்கரின் கருத்துக்களை முழு வீச்சில் பரப்பியாக வேண்டும். இந்த விஷயத்திலும் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆகாத போகாத ஆட்களையெல்லாம் அவர்கள் 'பெரிய தலைவர்'களாக, ‘தியாகி'களாக எல்லோருக்குமானவர்களாக எப்படித் தூக்கிப் பிடிக்கிறார்கள்!

சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையே எதிர்க்கும் இந்த சமூகம், எவ்வளவு கீழ்த்தரமான சாதிய மேலாதிக்கத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து-அரசும், சமூக ஆர்வலர்களும், அம்பேத்கரின் கருத்துக்களை இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ஒன்றிணைய வேண்டும். தலித் மாணவர்களுக்கு எதிராக ஊடகங்கள், செய்தியையும் காட்சிகளையும் திரித்தும் மறைத்தும் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றிய செய்திகளை அவை முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் திரித்து எழுதி வெளியிடுவது என்பதே ஊடகங்களின் கொள்கையாக எப்போதும் இருக்கிறது. ஆகவே இது புதிதல்ல. இன்று செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பெருமளவிலான வியாபார மய்யமாக மாறிவிட்டன. பரபரப்பான செய்திகள் மட்டுமே அவர்களுக்குத் தீனி. எதைக் காட்டுவது, எதை மறைப்பது, எதை எழுதுவது, எதைப் புறக்கணிப்பது என்ற அடிப்படையான அறிவும், பத்திரிகை அறமும் இதனால் மீறப்படுகிறது.

பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்ததை இரண்டாம் நாளில் இருந்து தொலைக்காட்சிகள் காட்டவில்லை. தலித் மாணவர்கள் பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும் தடிகளால் அடித்ததை மட்டுமே காட்டினார்கள். தேவர் மாணவரையோ, தலித்மாணவரையோ ஒரு யானை தூக்கிப் போட்டு மிதித்திருந்தாலும்-அதை அவர்கள் நாள் முழுவதும் காட்டிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள். 24 மணி நேரமும் திருப்பிய அத்தனை சேனல்களிலும் கொடுமையான இந்த வன்முறைக் காட்சிகளை எந்தத் தணிக்கையுமின்றி சேனல்கள் ஒளிபரப்பின. இது, குழந்தைகள் மனநிலையை பாதிக்காதா? மாணவர்களிடம் மேலும் வன்முறை உணர்வைத் தூண்டாதா என்று அக்கறைப்படவெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்? ஊடகங்களின் இந்த பொறுப்பற்றத்தனத்தை எதிர்க்காமல், பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததையும் காட்ட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்... நம் பலவீனம் அதுதான்... அதைத் தான் ஊடகங்கள் விற்றுப் பிழைக்கின்றன.

தன் சாதியை உயர்த்திப் பிடிக்கவும், கொண்டாடவும், வளர்த்தெடுக்கவுமே எல்லோரும் விழைகிறார்கள். உன் சாதிக்கு என் சாதி தாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கவே உழைக்கிறார்கள். மாறாக, சாதி என்ற ஒன்று பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரையுமே இழிவான நிலையில்தான் வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எல்லா சாதிகளையுமே ஆதிக்க சாதி ஆக்கிவிடும் முயற்சியும் போராட்டமுமே இங்கு நடந்து கொண்டிருக்கிறது. சாதியை அழிக்கவும் சாதியற்றவர்களாகவும் யாருக்கும் துணிவில்லை. சாதி தரும் கும்பல் மனப்பான்மையை ஒற்றுமையுணர்வு என்று நம்பி, இந்த சமூகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையுணர்வு என்பது மதம், இனம், மொழி, சாதி, பாலினம் கடந்த ஒன்றாகவே இருக்க முடியும். அது இல்லாமல் மதம் தேடி, சாதி தேடி கூட்டு வைத்துக் கொள்வதும், கும்பல் சேர்வதும் நிரந்தரப் பிரிவினையை உண்டாக்கி, மனிதரை மனிதர் உயிரெடுக்கும் அவலம் தொடர் வதற்கு வழி வகுக்கும்.

சட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி வன்முறைச் செயலைக் கண்டு கவலைப்பட்ட அரசுக்கும், அதிர்ச்சியுற்ற பொது மக்களுக்கும், கண்டித்த சமூக அமைப்புகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை. சாதிக்கும் வன்முறைக்கும் எதிராக ஒரு நிலையான, வலுவான போராட்டத்தை எங்காவது யாராவது நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அரசுக்கு ஏதாவது உறுதியான செயல் குறிப்பு இருக்கிறதா? பொது மக்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி உணர்வை ஊட்டுவதில்லையா? சமூக அமைப்புகள் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நடக்கும் போது மட்டுமல்லாமல் சாதியை அழித்தொழிக்கவும், மக்களை சமத்துவமிக்கவர்களாக மாற்றவும்-தங்கள் அன்றாட அட்டவணைகளில் ஏதாவது செயல் திட்டம் வைத்திருக்கிறார்களா? பிறகெப்படி இது மாதிரியான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும்!

எந்த சமூகப் புரட்சியும் வன்முறையால் மலர்ந்ததில்லை. தனி மனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும வன்முறை ஒரு போதும் மதிப்பதில்லை. வன்முறை என்ற ஆயுதத்தை கையில் எடுப்பவர் யாராக இருந்தாலும், அது அடக்கப்பட்டவர்களாகவே இருந்தாலும்-அவர்கள் மனித இனத்துக்கு மிகப் பெரிய துரோகத்தையும் சமூக விடுதலையின் முக்கியக் கூறான சமத்துவத்திற்கு தீராத பங்கத்தையும் உண்டாக்குகிறார்கள். மிக முக்கியமாக, இந்த சமூகத்தின் தற்போதைய தேவை சிந்தனை மாற்றம். அதை நிச்சயம் வன்முறையால் உருவாக்க முடியாது.


Pin It

ஈழத் தமிழர்களுக்கான ஆதரவுக் குரல்கள் வலுப்பெற்று வரும் சூழலில் இக்கவனத்தை திசை மாற்றியது, சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அதற்கு மறுநாள், தமிழக சட்டமன்றம் களை கட்டியது. அதற்கு முன்னரே, இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக, உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள காவல் நிலைய அனைத்து மட்ட காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மாநகரக் காவல் துறைக்குப் புதிய ஆணையரும் நியமிக்கப்பட்டார். சட்டக்கல்லூரி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக முதல்வர் பதவி விலக வேண்டுமென ஜெயலலிதாவும், வைகோவும் 356 ஆவது முறையாக, புளித்துப் போன பல்லவியையே மீண்டும் பாடினர்.

தரங்கெட்ட திரைப்படங்களின் வரன்முறையற்ற வன்முறைக் காட்சிகளையும் ஆபாச பிம்பங்களையும், ‘சேனல்'களின் கூத்தடிப்புகளையும் தொலைக்காட்சிகளில் அள்ளிப்பருகிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தை-ஒப்பனையோ, ஒத்திகையோ இல்லாமல், ஆனால் ஒட்டி வெட்டப்பட்ட சில நிமிட காட்சித் துண்டுகள்-துணுக்குறவோ, திடுக்கிடவோ செய்து விட்டன. ‘ஜெயா' மற்றும் ‘சன்' தொலைக்காட்சிகள் மட்டும் மார்கழி மாதத்து ‘பஜனை' போல, இக்காட்சிகளை தமிழ்ச் சமூகத்தின் ஆபாச நுகர்வுக் கலாச்சாரம் துய்க்கத் துய்க்க தீனியாக்கி வந்தன. “ஈவு இரக்கமற்ற கொலை வெறித் தாக்குதல் நடந்துள்ளது. மாணவர்கள் தேர்தலில் கூட, ஜாதி மற்றும் கட்சி வாரியாக மோதல்கள் நடக்கின்றன. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை இனி வேறு எங்குமே கல்வி பயில முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்'' என ஆவேசமாகப் பேசினார், பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன்.
law_student
வட மாவட்டங்களில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தலித் மக்கள் மீது வன்னியப் பெருமக்கள் ஈவு இரக்கமற்ற கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும்-நடத்தி வருவதும் ‘சில நிமிட' நேரம் அல்ல; பல்லாயிரக்கணக்கான மணி நேர ஆவணங்களாக, காட்சிகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உதிரத்துள் உறைந்துள்ளதை அவர் அறிவாரா? ஜாதி சங்கத்தையே அரசியல் கட்சியாக நடத்தி வரும் உங்கள் கிராமங்களிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குப் பயில வரும் மாணவர்கள் சிலேட்டு, புத்தகங்களுடன் சாதியத்தையும் சுமந்துதானே வருகிறார்கள்!

தலித்துகள் மீதான சாதி இந்துக்களின் வன்மத்தையாவது புரிந்து கொள்ளலாம். ஆனால் இதே அவையில், “இந்த மாணவர்கள் பயின்று வெளியில் வந்தால் நீதியின் நிலை என்னவாகும் என்ற கவலை நமக்கு ஏற்படுகிறது. இந்த மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில அரசு அனுமதிக்கக் கூடாது. இவர்களால் நாட்டுக்குக் கேடாகத்தான் அமையும்'' ("தினத்தந்தி', 14.11.2008) என, விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினரும், நாடறிந்த தலித் அறிவுஜீவியுமான ரவிக்குமார் எங்ஙனம் பேசத் தளைப்பட்டார் என்பதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. நீதியின் நிலை, நாட்டிற்கு விளையும் கேடு ஆகியன பற்றி அவருக்குத்தான் எவ்வளவு கவலை! காங்கிரஸ்காரர்கள் தோற்றார்கள் போங்கள்! மேலும் அவர் தனது உரையில், “சாதியத் தலைவர்களின் பிறந்த நாள் போன்ற விழாக்களை கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார். சாதித் தலைவர்களின் பிறந்த நாட்களைக் கல்லூரிகளில் கொண்டாடத் தடை விதிக்கச் சொல்லும் ரவிக்குமார், நெல்லை மண்ணுரிமை மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள்- ‘தேவர்' பிறந்த நாளை அரசு விடுமுறை நாளாக அறிவித்து- ‘அரிஜன ஆலயப் பிரவேச நாளாகவும் அனுஷ்டிக்கும்படி' அரசுக்குத் தீர்மானம் நிறைவேற்றி, முதல்வரிடம் நேரிலேயே நகல் வழங்கியதை மறந்து விட்டாரா?

அடுத்து, ஜெயக்குமார் (அ.தி.மு.க.) மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இ. கம்யூனிஸ்ட்), ராமக்கிருஷ்ணன் (ம.தி.மு.க), ஞானசேகரன் (காங்கிரஸ்) ஆகியோரும் சட்டமன்றத்தில் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பினர். அனைத்துக் கட்சிகளின் ‘சாதி இந்து ஒற்றுமை'யைக் குறிப்பிட மறந்து விடக் கூடாதல்லவா? அது மட்டுமா? தலித்துகள் நாள்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் போதும், பாமரர்கள் கை பிசைந்து நிற்கும் போதும்-சவத்தைப் போல உறங்கும் மாநில மனித உரிமை ஆணையம், பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில், தன்னிச்சையாக இந்நிகழ்வை வழக்காக எடுத்துக் கொண்டு, நீதிபதி ஏ.எஸ். வெங்கடாச்சலமூர்த்தி தலைமையிலான "முழு பெஞ்ச்' விசாரணையை மேற்கொண்டுள்ளது. இப்பிரச்சனையின் முழு விவரங்களையும் மாநில காவல் துறைத் தலைவர் இரண்டு வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி, ஆணையத்தின் முன் தனது அறிக்கையை அளிக்க வேண்டுமென அவருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

poster இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோர் சென்று நலம் விசாரித்தனர். காயமடைந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை இவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப் பற்றி சட்டமன்ற விவாதத்தின்போது அமைச்சர் துரைமுருகன், “புகார் தரவில்லை என்பதற்காக காவல் துறை வேடிக்கை பார்த்தது குற்றம்தான். ஆனால் யாரும் புகார் தராமலேயே கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இரு முறை சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து (தலித்) மாணவர்களைக் காட்டுமிராண்டித் தனமாகக் காவல் துறை தாக்கியது'' என நினைவுபடுத்தியபோது, ஜெ-சசிகலா கும்பலின் தேவர் சாதி சார்பு அ.தி.மு.க.வும், அதன் வாலாகிப் போன ம.தி.மு.க.வும் கூச்சலிட்டு "அவை' வெளிநடப்பு செய்தன.

“இக்கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். இது போன்ற வன்முறைக் காட்சிகள், மக்களின் மனநிலையை மேலும் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையம், ஒரு கண்துடைப்பு நாடகம். ஏற்கனவே இந்த அரசால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் எந்தக் கதியை அடைந்தனவோ, அதே கதியைத் தான் இதுவும் அடையப் போகிறது'' என அறிக்கை ("தினத்தந்தி' 14.11.08) விடுத்துள்ளார் ஜெயலலிதா. மக்களின் மனநிலை பாதிக்க வேண்டும்-சாதி வன்மம் தலை தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தனது தொலைக்காட்சியில் தொடர்ந்து இக்காட்சிகளை ஒளிபரப்பச் சொல்லி விட்டு, தனது அறிக்கையில் நீலிக் கண்ணீர் வடிக்கிறது இப்பாசிச பூதம்.

சட்டப்பூர்வ நியாயங்களுக்காக நாம் விசாரணை ஆணையங்களை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொண்டாலும், நீதி விசாரணை தொடங்கப்படும் முன்பாகவே, இந்தப் பிரச்சனைக்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சண்முகம் விசாரணை ஆணையத்தை ஜெயலலிதா நிராகரித்து விட்டதை, நாம் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த விசாரணை ஆணையம் அரசுத் தரப்பையோ, காவல் துறையையோ காப்பாற்ற முயலலாம். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் தலித் மாணவர்களுக்கு ஆதரவாக அது ஒருபோதும் அறிக்கை தரப்போவதில்லை. இருந்தும் இந்த ஆணையத்தை ஜெயலலிதா நிராகரிக்க வேண்டிய நோக்கம் என்ன?

இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாணவர்களை இயக்கி வரும் "தேவர்' சாதி பின்புலமும், அதற்கு ஊக்கமளித்து வரும் ஜெ–சசிகலா ஆதிக்க சாதி வெறிக் கும்பலின் அரசியலும் அம்பலத்திற்கு வந்து விடுமோ என்ற பதற்றமே. ஆனாலும், இது ஊரறிந்த ரகசியம் தானே? இந்த அரசின் விசாரணை ஆணையங்களின் மீது நம்பிக்கை இல்லாத அவர், மதுரை மாவட்டம் எழுமலையில் நடந்த மறியலின்போது இ. கோட்டைப்பட்டி தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையத்தை நிராகரிக்க மாட்டார். காரணம் வெளிப்படையானது. இப்பிரச்சனை காவல் துறை (அரசு)க்கும் தலித் மக்களுக்கும் இடையிலானது. விசாரணை அறிக்கை யாரைக் குற்றம் சாட்டினாலும் அரசியல் லாபம், வஞ்சக இன்பம் என ஜெயலலிதாவுக்குக் கிடைப்பதோ இரட்டைக் கனிகள்.

“தாழ்த்தப்பட்ட மக்களையும் பிற்படுத்தப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும், உள்நோக்கம் கொண்ட வகுப்பவாத பிற்போக்கு சக்திகளின் பின்னணி மற்றும் சதி முயற்சி பற்றியும் தமிழக அரசு விசாரித்து அறிவிக்க வேண்டும்'' என, கடந்த காலத்தில் "கை' சின்னத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகிய தா. பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) அறிக்கை விடுத்தார். மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் பிள்ளை சாதியினருக்குப் பின்னிருந்து வன்முறைகளை ஏவியும், சாதிக் கலவரத்தைத் தூண்டியும் வருகிற தா. பாண்டியனின் உறவுக்கார உசிலம்பட்டி கள்ளர்களின் பிற்போக்கு நடவடிக்கைகள், சதி முயற்சிகள் பற்றியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அவர் அறிக்கை தருவாரா? இவரது கட்சியைச் சேர்ந்த சிவ புண்ணியமும் சட்ட மன்றத்தில், “திட்டமிட்டு நடந்த சம்பவமோ என்ற அச்சம் ஏற்படுகிறது'' என பயம் கொள்கிறார். வர்ணாசிரம தத்துவமும், பார்ப்பனிய அரசியலும், ஆதிக்க சாதி மனநிலையும் அன்றி, இதில் பின்னணி-சதித்திட்டம் பற்றி ஆராய என்ன "எழவு' இருக்கிறது?

poster ‘ஓட்டுப் பொறுக்கி'களுக்குத் ‘தேவை'யிருக்கலாம். ஆனால் உலக ‘வியாக்யானம்' செய்கிற அறிவுஜீவிகளும் தங்களுக்கிடையிலான மாச்சரியங்களை விடுத்து கைகோத்து வருகின்றனர். ‘குமுதம்' ‘ஓ' பக்கங்கள் ஞாநியும், பா.ஜ.க.வின் எச். ராஜாவும் இன்னொரு அ.தி.மு.க. பிரமுகரும் உடனிருக்க, ஜெயா தொலைக்காட்சியில் "உலக அறிவாளி' ரபி பெர்னார்ட் உடன் இப்பிரச்சனைக்காக உரையாடி மகிழ்ந்தனர். காவல் துறையின் நம்பகத் தன்மை-மேலாண்மை-புனிதத்துவம் என இவர்கள் பேசப்பேச புல்லரித்துத்தான் போனது. “காவல் துறையை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக மாற்றி அமைக்க வேண்டும்'' என ஞானி, அரசுக்கு ஆலோசனை சொன்னார். பெரியாரிய முகமூடி இட்டுக் கொண்ட நாத்திகப் பார்ப்பனர் ஞாநியும், பெரியாரை ‘ராமசாமி நாயக்கர்' என்றே மேடைகளில் எப்பொழுதும் விளிக்கும் ஆத்திகப் பார்ப்பனர் எச். ராஜாவும்-ஒருவரையொருவர் கட்டித் தழுவாத குறையாக, இப்பிரச்சனை குறித்தான "ஜெயா' (16.11.08) விவாதத்தில் கூடிக் குலவினர்.

ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் ஏறத்தாழ காவல் துறை தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாகவே இயங்கும். அதையே சட்டப்பூர்வமாக்கச் சொல்கிறார் ஞாநி. காலனிய ஆதிக்கத்திற்குப் பிந்øதய காலங்களில் நிகழ்த்தப்பட்ட சரிபாதியளவு அரசு வன்கொடுமைகளுக்கு கருவியாகச் செயல்பட்டதும் இதே காவல் துறைதான். எம்.ஜி.ஆர். காலத்திய அரசியலும், அப்போது காவலர் தேர்வுத் துறையில் அய்.ஜி.யாகப் பணியாற்றி பின்னாளில் ‘தேவர் பேரவை'யை நிறுவியவருமான பொன். பரமகுரு, தன் பதவிக் காலத்தில் தன் சாதியினரைப் பெருமளவில் காவல் துறைக்குள் நுழைத்தார். அதன் பிறகே சாதி இந்துக்களின் வன்மத் துறையாக அது உருமாறி-தலித்துகளையும், முஸ்லிம்களையும் வேட்டையாடி வருகிறது. இத்தகைய காவல் துறையை, தன்னாட்சிப் பெற்ற அதிகார அமைப்பாக நிலை நிறுத்தினாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கேடும் இல்லை.

தலித் விரோதி என்றோ, சாதி இந்து ஆதரவாளர் என்றோ ஞாநியைக் குற்றம் சுமத்த இயலாது. ஆனால் அவரது ‘நடுநிலை' வழுவாமை கேள்விக்கிடமற்றது அல்ல. ‘ரத்தம் ஒரே நிறம்' என்ற தலைப்பில் ("குமுதம்' 26.11.2008) அவரால் நிரப்பப்பட்டுள்ள "ஓ' பக்கங்களிலிருந்து சில கேள்விகள். "பல தலைமுறைகளாக கிராமங்களில் தாய்ப் பாலோடு சேர்த்து ஊட்டப்பட்டு வரும் சாதி உணர்ச்சி' என்று அவர் எழுதுகிறார், அது கிராமங்களில் மட்டும் தானா? கும்பகோணம், மயிலாப்பூர், நங்கநல்லூர் போன்ற மாநகரங்களில் ஊட்டப்படுவதெல்லாம் ஆட்டுப்பாலா-"ஆ'வின் பாலா? ஏன் நியூஜெர்சியில் இருக்கும் அம்பிகள் பிறக்கும் போதே பெப்சி-கோக் தானா?

“ஜாதி அமைப்புகளில் இன்று ஒரு நல்லக்கண்ணு, ஒரு கே.ஆர்.நாராயணன் போன்ற மாமனிதர்களை உருவாக்கும் தலைமைகள் இல்லை'' என்கிறீர்கள். ஜாதி அமைப்புகள் எப்போதும் மாமனிதர்களை உருவாக்க முடியாது. ஆனால் சமூகங்கள் தான் மனிதர்களை உருவாக்குகின்றன. மனிதர்களாக மட்டுமே எடுத்துக் கொண்டால், நல்லக்கண்ணுவை உருவாக்கியது, அவரது சாதி அல்ல; கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனால் கே.ஆர். நாராயணனை உருவாக்கியது அவர் பிறந்த சமூகம். சாதி வெறியர்கள் மனிதர்களாக உருவாக்கப்படுவதற்கு அச்சாதிகளில் இடமில்லை.

தமிழகமே பதற்றத்தில் ஆழ்ந்திருந்த போதும், சென்னை எருக்கஞ்சேரி சிக்னல் அருகே அரசுப் பேருந்து ஒன்றை நவம்பர் 13 அன்று அதிகாலையில் தீ வைத்துக் கொளுத்தியதாக ‘அம்பேத்கர் மக்கள் புரட்சி இயக்கம்' என்ற அமைப்பின் மாநில செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பத்து தலித் தோழர்களை காவல் துறை கைது செய்தது. “எங்கள் இன மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீ வைத்தேன்'' என அவர்களில் ஒருவர் வாக்குமூலம் தந்திருப்பதாக ("தினத்தந்தி' 14.11.08) காவல் துறை வழக்குப் பதிந்தது. தாக்கப்பட்டவர்கள் சாதி இந்துக்கள்; தாக்கியவர்கள் தலித்துகள் என்ற அளவில் மட்டுமே இப்பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் கடந்த ஓராண்டிற்குள் (‘தேவர்' நூற்றாண்டு கொண்டாடப்பட்ட காலம்) மட்டும் இக்கலவரத்தில் படுகாயமுற்ற பாரதி கண்ணன் தலைமையிலான சாதி இந்து மாணவர்கள், தலித் மாணவர்களைத் தாக்க திட்டம் தீட்டி, முயன்று முடியாமல் கடைசி முயற்சியில்தான் இக்கலவரம் வெடித்துள்ளது.

poster எண்ணிக்கை அளவில் தலித் மாணவர்கள் அதிகமாயிருந்தும் கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதலுக்குத் தயாராக வந்த சாதி இந்து மாணவர்கள் அப்பாவிகள் அல்ல. திருப்பித் தாக்கியிராவிட்டால் ‘முக்குலத்தோர் மாணவர் பேரவை' என சட்டக் கல்லூரிக்குள் அமைப்பு நடத்தி வந்திருக்கும் பாரதி கண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் பத்து தலித் மாணவர்களையாவது தாக்கியிருக்க முடியும். அப்படி தாக்குதலுக்கு உள்ளானவர்தான் தலித் மாணவர் சித்திரைச் செல்வன். கல்லூரிக்குள் கத்தியோடு தேர்வு எழுத வந்ததையும், கலவரத்தில் அது பயன்படுத்தப்பட்டிருப்பதையும் சில ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.

இக்கலவரத்தின் மூல காரணமாக நிலை கொண்டிருப்பதைக் குறிப்பாகச் சொல்வதானால் - பசும்பொன் முத்துராமலிங்கத்தின் "குருபூஜை' கொண்டாட்டங்களே. சாதி வெறிக் கொண்டாட்டமாக, தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீது திட்டமிட்ட வன்கொடுமைகளைக் கட்டவிழ்ப்பதற்கென்றே ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இக்கொண்டாட்டத்தைத் தடை செய்ய அல்லது குறைந்த பட்சம் அரசு எந்திரம் இதில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாதென கடந்த ஆண்டு "ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, முத்துராமலிங்கம் நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக பரமக்குடி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து முதுகுளத்தூரில் தலித் ஆசிரியர் வின்சென்ட் கொல்லப்பட்டதும் நடந்தது.

தமது மக்களுக்கு சாதி வெறியூட்டவே, அரசியல் ரீதியாக தேவர் சாதித் தலைவர்கள் இவ்விழாவைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இதன் விளைவை "தேவர் திருமகனாரின்' வளர்ப்புப் புதல்வி செல்வி ஜெயலலிதாவே அனுபவிக்க நேர்ந்தது அவலம்தான். இத்தலைவர்களின் அரசியல்-பொருளியல் பயன்களுக்காகப் பலிகடா ஆக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியவர்கள் அம்மக்களே. தன்னைத் தாக்க வந்தவர்கள் தி.மு.க. வினர் என "புரட்சித் தலைவி' குற்றம் சுமத்தினாலும்-அவர்களும் தேவர் சாதியினரே என்பதை மூடிமறைக்க இயலுமா? என்ன செய்வது, வளர்த்த கடா மார்பிலே பாய்கிறது.

காலனிய ஆட்சியின் முடிவுக்குப் பிறகு, தேவர் சாதியினரின் திட்டமிட்ட வன்முறைகள் - பசும்பொன் முத்துராமலிங்கம் காலத்திலிருந்து, அரை நூற்றாண்டிற்கும் மேலாக, தென் மாவட்டங்களில் காவு வாங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பட்டியலிட்டு மாளா. ஆனாலும் தென் மாவட்ட தலித் மக்கள் மாவீரன் இம்மானுவேல் சேகரன் காலத்திலிருந்து ஒருங்கிணைந்து திருப்பித் தாக்கத் தொடங்கி, இன்று வரையான தேவர் சாதி வெறியர்களின் ‘விழுப்புண்'களை செய்தி ஊடகங்கள் சேகரித்து இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்டால் - தேவர் சமூகத்தின் "வீரம்' வீதிக்கு வரும். எல்லா சாதிகளிலும் தனிப்பட்ட குற்றவாளிகள், சமூக விரோதிகள் உருவாகலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி இந்துக்களின் குற்றங்கள், சமூகமயப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாறு நெடுக நிகழ்ந்து வரும் தங்களின் விடுதலைக்கானப் போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அறம் வழுவி நிற்பதில்லை. ‘நிகரற்ற' கொடுமையாகப் பதிவு செய்யப்பட்டு, தமிழ்ச் சமூகத்தின் பொதுப் புத்தியில் நீங்கா இடம் பெற்று விட்ட சட்டக் கல்லூரி சம்பவத்தில் கூட, எவரும் கொலை செய்யப்படவில்லை-அதற்கான வாய்ப்பிருந்த போதும். எதிர்வினை செய்யும் போதும் "ஒடுக்கப்பட்ட மனம்' கொலை வெறியுடன் செயல்படுவதில்லை. மனிதாபிமானிகளே! இந்தக் கோட்பாடு உங்கள் "மூளை'க்கு உறைக்கிறதா? உயிர்ப் பிறப்பின் இத்தார்மீக நெறியே, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பலமும் பலவீனமும் மட்டுமல்ல; இருப்பும் வீழ்ச்சியும் கூட.

இங்கு வன்முறையை ஒரு "காட்சி இன்பமாக' தமிழ்த் திரைப்படங்கள் கட்டமைத்து வெகுநாட்களாகிவிட்டன. அந்த இன்பத்தில் ஊறித் திளைத்திருக்கும் சாதியத் தமிழ்ச் சமூகத்திற்கு இப்பதற்றம் கூட, சில நாட்களில் அதே வகையான இன்பமாகவும் மாறக்கூடும்.இலங்கை இனப்படுகொலை, பூகம்ப சரிவுகள், சுனாமி பிணங்கள், நாள்தோறும் அரங்கேறும் குண்டு வெடிப்புகள் என வண்ணமயமான, வகைவகையான காட்சிப் படிமங்களில் ஊறித் திளைத்து நுகர்வு வெறி கொண்டலையும் சமூகமல்லவா இது. "ஜாதி' எனும் உணர்வே, பேரின்பமாக ஊறித் ததும்பும் இந்த சமூகத்திற்கு, இக்காட்சிகள் வெறியூட்டுவதற்கு மாறாக, குற்ற உணர்ச்சியையும், ஜாதி (தன்) வரலாற்றின் மீதான மறுபரிசீலனையையும் எழுப்புவதுதான் நியாயமாக இருக்க முடியும்.

சாதி இந்துக்கள் என்ற வகையினத்துள் வரும் அனைத்து சாதிகளும் "மனு' விதிகளின்படி தீண்டாமை விலக்குப் பெறுவதால் கிடைக்கும் சமூக பலத்தை அனுபவித்தே வருகின்றன. இந்த சமூக பலத்தினையும்-இருப்பையும் இழக்காதவரை, எந்தவொரு தனி மனித சாதி இந்துவுக்கும் கூட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் துயரமும் வலியும்-புரிதலுக்கும் உணர்தலுக்கும் அப்பாற்பட்டதே. ஏனெனில், அது முழுமையாகவும் இறுதியாகவும் அனுபவித்தே பெறப்படுவது. தான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சாதி இந்துவாகப் பிறக்க நேர்வதும், வாழ்வதும் ஒருவருக்கு இந்திய (இந்து) சமூகம் தரும் முதல் தர பாதுகாப்பு வளையம். அதிலும் பார்ப்பனராகப் பிறப்பதோ பெரும் பேறு! ஒடுக்கப்பட்ட மக்கள் பிறப்பிலேயே பாதுகாப்பற்றவர்களாக, சமூக பலம் இழந்தவர்களாக, தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக "வாழ' நிர்பந்திக்கப்படுகிறார்கள். சேரியில் அல்லது வாழப் பொருத்தமற்ற இடங்களில் உழல நேர்ந்தால் மட்டுமே இதை உணர முடியும்.

ambed இறுதியாக, இக்கட்டுரையின் முடிவுரையாகவோ அல்லது தலித் இளைஞர்களுக்கான பின் குறிப்பாகவோ இது இருக்கட்டும். தலித் வரலாற்று மாதங்களைக் காகிதங்களில் பதிவு செய்து, காயம் படாமல் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ரவிக்குமார்களின் அறிவுரைகளிலோ, எழுச்சித் தமிழர்களின் "தேசிய இன' அதிர்ச்சிகளிலோ கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமே. சொந்த மக்களிடமே நாணிக் கோணி, வம்பு வழக்குகளில் "சாதியவாதி'யாகி, விற்று விலை பேச சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கலாம். பிழைப்புவாதம் வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. ஆளும் வர்க்கம் அள்ளித்தரும்; ஆதிக்க சாதியினர் அரவணைத்துக் கொள்வர் என்ற மாய்மாலங்களில் வீழ்ந்து கிடக்கும் நம் மக்களை, விடுதலைப் பாதைக்கு அழைத்து வர வேண்டியது போராளிகளின் கடமை.

மய்ய நீரோட்ட அரசியலின் "கீழான' அனைத்து உபாயங்களையும் அவர்தம் அரசியல் அணிகள் கற்றுத் தேறுவது, சாதி ஒழிப்புப் போராட்டக் களத்தில் அண்ணல் அம்பேத்கரின் கனவுகளை உருத்தெரியாமல் அழிக்க வகை செய்கிறதே என்ற சமூகப் பதற்றமும் அறச் சினமும் தான் நமக்கிருக்கிறதேயன்றி வேறல்ல. நம் மக்களின் பசி வரலாற்றுப் பசி; நம் தார்மீகக் கோபம் வரலாற்றுக் கோபம்; நம் தலைமுறையின் தாகம்; வரலாற்றுத் தாகம். சமரசமற்ற விடுதலைப் போராட்டமே தலித் மக்களின் முன் நிபந்தனை. அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமைப் பாத்திரம் அரசியல் நிபந்தனை. நமக்குத் தேவை முற்று முழுதான விடுதலை. அதற்கு ஒரு முழு தலைமுறையும் தியாகம் செய்ய வேண்டுமென்றார் அம்பேத்கர். அடிமைகள், விடுதலையைப் பிச்சையாகப் பெற இயலாது என்றும் அறிவுறுத்தினார். நம் மூதாதையரைத் தாக்கி விட்டு, எதிரிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை வழியெங்கும் சேகரித்துக் கொண்டு-நமது விடுதலைக்கான களம் நோக்கிப் பயணிப்போம்.

Pin It

சிறுபான்மையினர் கல்லூரிகளும் தலித் மாணவர்களின் எண்ணிக்கையும்-3

 

படிப்பதற்கு உரிமை அற்றவர்களாக தலித்துகள் இருந்தபோது, ஆதிக்க சாதியினர் வேதங்களைப்படித்துக் கொண்டிருந்தனர். தலித் மக்கள் படிக்கத் தொடங்கிய போதோ, அவர்கள் கல்லூரிகளில் இருந்தனர். தலித் மக்கள் தொடக்கப் பள்ளியைத் தாண்டி உயர்நிலைப் பள்ளிகளுக்கு வந்த போதோ, அவர்கள் உயர் கல்வி ஆய்வில் ஆழ்ந்திருந்தனர். தலித் மக்கள் கல்லூரிகளிலே அடியெடுத்து வைத்தபோது, ஆதிக்க சாதியினர் தொழில் நுட்பப் படிப்புகளுக்குத் தாவினர். தலித் மக்கள் உயர் கல்விக்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் கணிப்பொறி படிப்புகளுக்குப் போய்விட்டிருந்தனர். தலித் மக்கள் கணிப்பொறி கல்விக்கு வரத் தொடங்கியபோது, ஆதிக்க சாதியினர் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொத்திக் கொண்டனர். தலித்துகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய முயன்று கொண்டிருக்கிற இன்றோ-ஆதிக்க சாதியினர் ‘நானோ' தொழில்நுட்பத்தில்...

தலித் மக்கள் ஆதிக்க சாதியினரை எட்டிப்பிடிக்க முடியாதபடி, தடுப்பு ஆட்டம் இங்கே ஆண்டாண்டு காலமாய் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஆதிக்க சாதியினரைத் தொடமுடியும் என்ற நம்பிக்கையோ, போட்டியில் பங்கேற்பதற்கான மூளை பலமோ தலித் மக்களிடம் இல்லாமலில்லை. தலித்துகளுக்கு எதிராக உருவாக்கப்படும் சாதிய, ஆதிக்க மனோபாவத் தடைகளே அவர்களைத் தோற்கடிப்பதற்கான தந்திரங்களாக இன்றைக்கும் இருக்கின்றன.

ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் கிடைகின்ற புள்ளிவிவரங்களைக் கொண்டு, அவரவர் நோக்கில் ஒப்பீடுகள் பலவும் செய்யப்படுகின்றன. தலித் நோக்கிலும் அப்படியான ஒப்பீடுகள் செய்யப்படுவதுண்டு. 1961ஆம் ஆண்டு கணக்குப்படி, அன்று 6.4 கோடியாக இருந்த தலித் மக்களில் 10 சதவிகிதம் பேர்தான் எழுதவும் படிக்கவும் அறிந்திருந்தனர். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 45 சதவிகித தலித் மக்கள் படித்திருப்பதாக சொல்லப்பட்டது. இது, 4.5 மடங்கு வளர்ச்சி. இந்த வளர்ச்சி 40 ஆண்டுகளில் வந்திருக்கிறது. 1961இல் 24.5 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் கல்வி நிலையோ 2001இல் 54 சதவிகிதமாக வளர்ந்திருக்கிறது.

வரலாற்றைப் புரட்டினால் அறிந்து கொள்ளலாம். தலித் மக்களுக்குப் "போனால் போகட்டும்' என்ற தரும சிந்தனையிலும், "புண்ணியம்' என்ற எண்ணத்திலும் தான் தொடக்கக் காலத்தில் கல்வி வழங்கப்பட்டது. வெள்ளையர்கள் கூட தலித் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் கல்வி நிலையங்களைப் பற்றி ஆராய்ந்த ஹண்டர் ஆணையம் (1882), “தீண்டத்தகாத மக்களுக்கு கல்வி அளிக்கலாம். ஆனால் அதனால் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுமானால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை'' என்று குறிப்பிட்டிருந்ததை தன் நூலொன்றில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

தலித் மக்களுக்கு வெறுமனே எழுதப் படிக்க சொல்லித்தரும் கல்வி மட்டும் போதாது; உயர் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும் அளிக்கப்பட வேண்டும்; வெளிநாடுகளுக்கு தலித் மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது, அம்பேத்கரின் தொடக்கக் கால கோரிக்கையாகவே இருந்தது. 1942ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று அம்பேத்கர் அவர்களால் கவர்னர் ஜெனரல் லின்லித்தோவுக்கு அளிக்கப்பட்ட மனுவில் இக்கோரிக்கையைப் பார்க்கலாம். 1942ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 150(2)இன் படி, வெள்ளை அரசிடமிருந்து சுமார் 16 கல்வி நிறுவனங்கள் அன்று நிதியுதவி (மானியம்) பெற்று வந்துள்ளதை அம்மனுவில் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார். ஆண்டொன்றுக்கு சுமார் 8,99,100 ரூபாய் இந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், ரபீந்திரநாத் (தாகூர்) அவர்களால் தொடங்கப்பட்ட விஸ்வபாரதி மற்றும் சாந்திநிகேதன் போன்றவையும் இதில் அடக்கம். இத்தனியார் கல்வி நிறுவனங்களில் அலிகார் மற்றும் காசி பல்கலைக்கழகங்கள் இரண்டு மட்டுமே ஆண்டொன்றுக்கு ஆறு லட்சம் ரூபாயை மானியமாகப் பெற்றிருக்கின்றன. அந்த ஆறு லட்சம் ரூபாயும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் போய் சேர்ந்திருக்கின்றன. அப்படியெனில், தலித் மக்கள் உயர் படிப்பு படிக்கவும் அரசு உதவித் தொகைகளை வழங்க வேண்டும் என்பது, அம்பேத்கரின் வாதமாக அன்று இருந்தது. அம்பேத்கர் சுட்டிக்காட்டும் அந்தக் கல்லூரிகளில் நிச்சயமாக தலித்துகள் யாரும் அன்று படித்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் பல்வேறு சமூகப் பிரிவினரிடையே கல்வியறிவு எப்படிப் பரவியுள்ளது என்பதை அறிய 1930இல் அமைக்கப்பட்ட ஹர்தோக் குழுவின் புள்ளிவிவரங்களும் கூட, இதையேதான் சொல்கின்றன. 1930இல் தலித் மக்களிடையே கல்லூரியில் படித்தவர்கள் வெகு சொற்பம். சென்னையில் 47 பேர், மும்பையில் 9 பேர், வங்காளத்தில் (தலித் மற்றும் தலித் அல்லாதவர் சேர்த்து) 1670 பேர், அய்க்கிய மாநிலங்களில் 10 பேர், பஞ்சாபிலும், பீகாரிலும், ஒரிசாவிலும் எவரும் இல்லை. மத்திய மாநிலங்களில் 10 பேர் என்றுதான் அப்போது உயர் கல்வி படித்த தலித்துகள் இருந்தனர். இந்த உயர்கல்வி கூட தொழில்நுட்ப, அறிவியல் படிப்புகளாக இருந்திருக்க முடியாது.

எனவேதான் அம்பேத்கர், “வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பை முடிப்பது, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக் கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் உயர்தரக் கல்வி கற்பதுதான். அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் கல்வி என்பது தாழ்த்தப்பட்ட சாதியினரின் சக்திக்கு அப்பாற்பட்டது. எனவேதான் பலர் தங்கள் குழந்தைகளை வெறும் பட்டப்படிப்புக்கோ, சட்டத்துறை படிப்புக்கோ அனுப்புகிறார்கள். அரசு உதவியில்லாமல், விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும் உயர் கல்வியின் கதவுகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒருபோதும் திறந்திருக்க மாட்டா.

இது விசயத்தில் மத்திய அரசு அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும்.''(டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு : 19; பக்.35) என்று சொல்லியிருக்கிறார். இந்த உயர் கல்விக்கு ஆண்டொன்றுக்கு தலித் மாணவர்களுக்கென 2 லட்சம் ரூபாயை அரசு வழங்க வேண்டும். அவர்கள் வெளிநாடு சென்று கற்க விரும்பினால், ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்துகிறார்.

சுமார் 3 ஆண்டுகள் கழித்து 1.2.1945 அன்று பம்பாயில் தலித் மாணவர்களின் நலனுக்கான ஒரு கல்லூரியை நிறுவுவதற்காக அம்பேத்கர், மய்ய அரசிடம் ரூபாய் 6 லட்சம் கடன் கேட்டு ஒரு கடிதத்தினை எழுதினார். அவர், அக்கடிதத்தில் தலித் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்குத் தடையாக இருக்கும் காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வறுமை, கல்லூரியில் இடம் பெற முடியாத சிக்கல், விடுதி கிடைக்காமை ஆகிய அம்மூன்று காரணங்களில் இரண்டாவதை அவர் தெளிவாக வரையறுக்கிறார்: “பொருளாதார உதவி மூலம் தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை உள்ளது. கல்லூரிகளில் இடம் பெறுகிற பிரச்சினைதான் அது. கல்லூரிகளில் இடம் பெறுவோரின் எண்ணிக்கையை பல்கலைக்கழகமோ, அரசோதான் நிர்ணயிக்கின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள்.

கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் தீண்டத்தகாத வகுப்பு மாணவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தைத் தருகிறது. இதுதான் ஒரு பேரிடராகத் தோன்றுகிறது. மற்ற வகுப்பாரை விட தீண்டத்தகாத வகுப்பு மாணவர்கள்தான் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். “இதற்கு முக்கியக் காரணம், பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இந்த அமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டிருப்பதுமே ஆகும். எனவே, இதன் காரணமாக கல்லூரியின் நோக்கமே வகுப்புவாதத் தன்மை கொண்டதாகிறது. இந்த வகுப்புவாதத் தன்மை மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகிறார்கள். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி இடம் மறுக்கப்படுகிறது.'' (டாக்டர் அம்பேத்கர் தமிழ் நூல் தொகுப்பு 36; பக்.549)

நாடு விடுதலையடைந்தும் அம்பேத்கரின் கனவு நிறைவேறவில்லை. உயர் கல்வி பெறும் தலித்துகளின் எண்ணிக்கை இன்றளவும் குறைவாகத்தான் இருக்கிறது. அட்டவணை 1இல் குறிப்பிடப்படும் சொற்ப சதவிகித தலித்துகள் கூட முக்கியத்துவம் இல்லாத, அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளைச் சாராத, உயர் படிப்புகளைப் படித்தவர்களாகவேதான் இருப்பார்கள் என்பது உறுதி. அரசு, ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் இதுவரை தலித்துகள் எந்தெந்த பாடப்பிரிவுகளில் உயர் கல்வி பெற்றுள்ளனர் என்பதை ஆய்வு செய்து ஓர் வெள்ளை அறிக்கை வெளியிடுமானால், இந்த உண்மை வெளியாகும். ஆனால் எந்த அரசும் இதைச் செய்யாது. எந்த தலித் அமைப்புகளும், கட்சிகளும் இதைக் கேட்கவுமில்லை.

அண்மையில் கல்லூரிப் பட்டமளிப்பு விழாவொன்றில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டிலுள்ள அரசுக்கல்லூரிகளின் "தரத்தை'ப் பற்றி தன் வாயாலேயே ஒப்புக் கொண்டார். உண்மைதான். நவீன வசதிகளும், தரமும் அற்றுதான் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்லூரிகளோ இங்கு வசதிகளுடனும், நவீன கட்டமைப்புகளுடனும் இருக்கின்றன. இக்கல்லூரிகளை நடத்தும் சிறுபான்மையினர், கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனை தலித் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் இடம் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களையும், பாடப்பிரிவுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் அதிர்ச்சி ஏற்படுகிறது; ஆத்திரம் பொங்குகிறது. வரலாறு திரும்புகிறது என்று சொல்வதுண்டு. தலித் மக்களைப் பொறுத்தவரை வரலாறு திரும்பவில்லை. தொடக்க நிலையில் இருப்பதைப் போலவே நகராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறு குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடை செய்யாதிருங்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது என்று ஏசுவின் கொள்கையைப் பிரசங்கித்து வரும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள், தலித் குழந்தைகளை (தலித் மாணவர்களை) மட்டும் தங்களின் கல்லூரிகளின் பக்கமே வராதபடி, உயர் கல்விப் பரலோக வாயிலில் நின்று தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட கடந்த பத்து ஆண்டுகளுக்கான விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால்-தலித் மாணவர்களும், பழங்குடியின மாணவர்களும் மிகக் கடுமையான முறையிலே ஏமாற்றப்பட்டும், விரட்டப்பட்டும் இருப்பதை அறிய முடிகிறது. 22 கல்லூரிகளிலிருந்து மட்டுமே இதுவரை தகவல் கிடைத்துள்ளன. இவற்றில் 13 கல்லூரிகள் கிறித்துவர்களாலும், 5 முஸ்லிம்களாலும் நடத்தப்பட்டு வருகின்றன. 1999 முதல் 2008 வரையிலான பத்தாண்டுகளில் இக்கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளிலே சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1,41,553. இவர்களிலே தலித் மாணவர்கள் 9,581. பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கையோ 692.

கடந்த பத்தாண்டுகளில் தலித் மாணவர்களை 13.8 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்களை 0.49 சதவிகிதமும் மட்டுமே சேர்த்துக் கொண்ட சிறுபான்மை மற்றும் தனியார் கல்லூரிகளை நாம் என்னவென்று அழைப்பது? இவர்களின் முதலாளிகள் பலருக்கும் மக்கள் மத்தியிலே "கல்வி வள்ளல்கள்' "கல்விக் கடவுள்கள்' என்றெல்லாம் பட்டப் பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் தலித்துகளுக்கு கல்வி கொடுக்கிற பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கொடுக்காமல் இருக்கிறவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்கள்-"துரோகிகள்', "ஏமாற்றுக்காரர்கள்' என்பன போன்ற பட்டங்களையன்றி வேறென்ன தரமுடியும்?

சென்னையிலுள்ள லயோலா கல்லூரி, மேல் விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சிறீவைகுண்டம், சிறீ கே.ஜி.எஸ். கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். எஸ். கல்லூரி ஆகியவற்றில் கடந்த பத்தாண்டுகளில் சேர்க்கப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை, சராசரியாக 22 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. மற்ற 16 கல்லூரிகளிலோ தலித் மாணவர்களின் சேர்க்கை சராசரி 9.5 சதவிதமாகத்தான் இருக்கிறது. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பழங்குடியின மாணவர்களின் பத்தாண்டு கால சேர்க்கை சதவிகிதம் 1.66. லயோலாவிலோ இது 2.11 சதவிகிதமாகும். பிற 20 கல்லூரிகளில் 0.24 சதவிகித பழங்குடியின மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களை இடஒதுக்கீட்டு வரைமுறைக்கும் அதிகமாக சேர்த்திருக்கிறோம் என்று விவரங்களை அளித்துள்ள கல்லூரிகள் பெருமிதம் கொள்ள எதுவும் இல்லை! ஏனெனில் அவை அனைத்திலும் ஒரே மாதிரியான சேர்க்கை முறையே பின்பற்றப்பட்டிருக்கிறது. தலித் மாணவர்கள் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மாறாக வரலாறு, தமிழ் இலக்கியம், பொருளாதாரம் போன்ற பாடங்களிலேயும், அறிவியலில் ஒரு கலைப் பாடம் எனக் கருதப்படும் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகியவற்றிலேயும் தான் அதிகமாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலை இளங்கலையிலும் முதுகலையிலும் ஒரே விதமாகவே இருக்கிறது. ஆய்வு நிலையான எம்.பில். வகுப்புகளில் தமிழ்ப் பாடத்தில் மட்டுமே தலித் மாணவர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். சில கல்லூரிகளிலே சமூகப் பணி மற்றும் சமூகவியலில் தலித்துகளுக்கு அதிக இடம் தரப்பட்டுள்ளது. இப்பாடப் பிரிவுகளில் மனித வள மேம்பாடு தொடர்பான சிறப்புப் பிரிவுகள் எம்.பி.ஏ.வுக்கு இணையானவையாகக் கருதப்படுபவையாகும். ஆனால் இச்சிறப்புப் பிரிவுகள் பெரும்பாலும் தலித் மாணவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிரிவுகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்களின் சேர்க்கை 10 சதவிகிதமாகவே உள்ளது. பழங்குடியினருடையதோ 0.1 சதவிகிதத்துக்கும் குறைவு. கார்ப்பரேட் செக்டார், உயிர் வேதியியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற பாடப்பிரிவுகளில் தலித்துகளோ, பழங்குடியினரோ சொல்லிக் கொள்ளும்படி இக்கல்லூரிகளில் சேர்க்கப்படவில்லை. திருப்பத்தூரில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியும், கோவை நிர்மலா கல்லூரியும், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியும் பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட பகுதியிலே இயங்கி வருபவையாகும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் முறையே 57,1,10 என்ற எண்ணிக்கையில்தான் பழங்குடி மாணவர்களை இக்கல்லூரிகள் சேர்த்துக் கொண்டுள்ளன.

அதிராம்பட்டிணம் காதர் முகைதீன் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, சிறீவைகுண்டம் கே.ஜி.எஸ். கல்லூரி, நாகர்கோயில் மகளிர் கிறித்துவக் கல்லூரி, திருப்பனந்தாள் கே.வி.எஸ். கல்லூரி ஆகியவற்றில் இந்தப் பத்தாண்டுகளில் ஒரே ஒரு பழங்குடியின மாணவர் கூட சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வியின் விழுமியங்களுக்கு மாறாக இக்கல்லூரிகள் நடக்கின்றன. அறிவியல் தொழில் நுட்பப் பாடப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை 50க்கும் குறைவாகவே இருக்கிறது.

இந்த வகுப்புகளில் சேர்க்கையின் போது கடைப்பிடிக்கப்படும் 1 முதல் 100 வரையிலான சுழற்சிப்புள்ளிகளில் 50ஆவது புள்ளியில் தான் பழங்குடியினருக்கான முறை வருகிறது. 2, 6, 12, 16, 22 என தலித்துகளுக்கான சுழற்சிப்புள்ளிகள் கணக்கிடப்படுவதால், அவர்களுக்குக் கூட இப்பாடப் பிரிவுகளில் இடம் கிடைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழங்குடியினருக்கோ அந்த வாய்ப்பும் இல்லை. இதைப் போன்ற நடைமுறை சாக்குப் போக்குகளை சொல்லி இந்தக் கல்லூரிகள் ஏமாற்றி விடலாம். ஆனால் மானுட அறத்தின்படி குற்றமிழைத்தவை. ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிக் கொண்ட துரோணனின் சாதி வெறியை, யுகங்கள் தாண்டியும் நடத்தி வருவதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டும்.

1986 ஆம் ஆண்டு அரசு ஒரு முடிவு எடுத்தது. அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் இருக்கும் கலைப்பாடங்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலோ, சமூக நிலையைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்வதிலோ எவ்வகையிலும் பயனளிக்கவில்லை. எனவே அவற்றை நீக்கிவிடலாம் என்றது. ஆசிரியர்கள் நடுவிலே அப்போது போராட்டங்கள் வெடித்தன. உடனே அரசு சுயநிதி முறையை அறிமுகப்படுத்தியது. சுயநிதிப் பாடங்களில் அறிவியல், தொழில் நுட்பப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு தலித்துகளுக்கு எட்டாத நிலையில் வைக்கப்பட்டன. கலைப்பாடங்களை வைத்துக் கொள்வது, சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்த இடங்களில் தலித் மாணவர்களை சேர்த்து கணக்கு காட்டி விடுவதற்கு அவை உதவுகின்றன.

கலைப்பாடங்கள் படிக்கிறவனை நெகிழ்வாக ஆக்கிவிடும். வரலாற்றைப் பிடிக்காமல் வரலாறு போன்றவற்றைப் படித்துக் கொண்டேயிருக்கலாம். இதுபோன்ற பாடங்களைப் படித்துவிட்டு எழுத்தர்களாகவும், நான்காம் நிலை பணியாளர்களாகவும், வேலையற்றவர்களாகவும் தலித்துகள் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் அதிகாரப் பொறுப்புகளில், தொழில் நிர்வாகங்களில், அறிவியல் ஆய்வகங்களில், ஊடகத் துறையில் அவர்கள் வந்துவிடக் கூடாது என்று சாதி இந்துக்கள் நினைக்கின்றனர். சிறுபான்மையினரும் தங்களை இதனோடு இணைத்துக் கொள்கின்றனர். இது ஒரு கல்விச் சதி. இச்சதியை குற்ற உணர்வும், அற உணர்வுமின்றி சிறுபான்மையினர் செய்து வருகின்றனர்.

அம்பேத்கரின் காலம் தொடங்கி இன்று வரையிலும் தலித்துகள் அறிவியல் தொழில்நுட்ப உயர் கல்விகளில் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர். சிறுபான்மையின-தனியார் கல்வி நிறுவனங்கள் அந்த துரோகத்தில் பங்கேற்றும் வருகின்றன. ஆனால் இவர்களின் மத பீடங்களோ ஏசு சமாரியர்களை நேசித்தார் என்றும், நபிகள் ஒரு கருப்பு அடிமையைத்தான் தொழுகைக்கு அழைக்க அமர்த்தினார் என்றும் பிரசங்கித்து வருகின்றன. எத்தனை முரண்பாடு!
- அடுத்த இதழிலும்

  

Pin It

ஒரு புகார்தாரரை, சட்டத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்யும் அமைப்பாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. காவல் துறையைப் பொறுத்தவரை, பொய் வழக்குப் போடுவது எவ்வளவு எளிதானதோ, அதைவிட எளிதானது, உண்மைப் புகாரை பொய்ப் புகார் எனத் தள்ளுபடி செய்வதுமாகும். அதன் ஒரு கொடூரமான வெளிப்பாடுதான், குற்ற நிகழ்வு குறித்து கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என காவல் துறையினர் தள்ளுபடி செய்வது. இது, சட்ட மொழியில் "பொருண்மைப் பிழை' (Mistake of Fact) என்று கூறப்படுகிறது.

ஒரு குற்ற நிகழ்வு குறித்த புகார் குற்ற நிகழ்விடத்தின் மீது ஆளுகை உள்ள காவல் நிலையத்தில் செய்யப்படு மானால், அப்புகாரின் மீது எந்தெந்த சட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அவ்வாறான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத சூழல்களில் எந்தெந்த வகைகளில் தீர்வு பெறலாம் என்பதை இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். அவற்றின் அடுத்த கட்டமாக, குற்ற நிகழ்வு தொடர்பான புகாரை "பொய்யானதென' காவல் துறையினர் தள்ளுபடி செய்வதையும், அப்புகார் உண்மைதான் எனில், அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்ட நடைமுறைகளையும் இப்போது பார்க்கலாம். இவை பொதுவான புகார்களுக்கும் பொருந்தும். எனினும், இத்தொடரின் கருப்பொருளான வன்கொடுமை வழக்குகளின் பின்னணியிலேயே இங்கு விளக்கப்படுகிறது. இந்த "பொருண்மைப் பிழை' என்பதை காவல் துறையினர் இரண்டு வகையில் பயன்படுத்தி, வன்கொடுமைப் புகார்களை / வழக்குகளை வீணடிக்கின்றனர்.

1. ஒரு வன்கொடுமைப் புகாரை முற்றாக பொய்ப் புகார் என்று கூறி மேல் நடவடிக்கையைக் கைவிடுவது. இது, பெரும்பாலும் வன்கொடுமை நிகழ்விற்கு மிகக் குறைந்த சாட்சியங்களே உள்ள புகார்களின்போது கையாளப்படும் சட்ட எதிர் அணுகுமுறையாகும். எடுத்துக்காட்டாக, ஒரு பட்டியல் சாதியினரோ, பழங்குடியினரோ மற்றவர்களால் சாதிய அடிப்படையில், பொதுப் பார்வையில் இவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் புரியும் குற்றமான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(X) இன் கீழான புகார், வன்கொடுமை குறித்த குற்றச்சாட்டை-வெறும் நடத்தை, நடவடிக்கை, அந்நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட அவதூறுச் சொற்கள் ஆகியவற்றைக் கொண்டு நிரூபிக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த பிறகு, தாம் புலன் விசாரணை செய்தபோது இப்புகாரில் உண்மையில்லை என்று புகாரைத் தள்ளுபடி செய்ய பெரும்பாலும் வாய்ப்புள்ளது.

2. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகள் தவிர மற்ற இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் கொண்ட வன்கொடுமைப் புகார், இத்தகைய புகார்களில் வழக்கமான குற்றங்களுக்கான சாட்சியங்கள் (கொலை, கொடுங்காயம், காயம், வன்புணர்ச்சி போன்றவை) மறைக்க முடியாத வகையில் அமைந்திருக்கும்போது, வழக்கமான சட்டப் பிரிவுகளுக்கு மட்டும் (இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளை கைவிடுவது என்ற தந்திரம் காவல் துறையால் கையாளப்படுகிறது.

vankodumai இச்சூழலில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபரின் வழக்கை மீண்டும் தடத்தில் செலுத்தி, வழக்கைத் தொய்வின்றி நடத்துதல் என்பது, மிகப்பெரும் சவாலாக ஒவ்வொரு சமூக செயல்பாட்டாளருக்கும் அமைகிறது. இது குறித்த
சட்ட விதிகள், நீதிமன்றத் தீர்ப்புகளில் வகுத்துரைக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் ஆகியவற்றை விரிவாகப் பார்ப்பதற்கு முன், ஒரு பெண் துணைக் காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்த வழக்கு ஒன்றை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

சங்கர்-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் உள்ள தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி. பட்டியல் சாதியைச் சார்ந்தவர். அவரது சொந்த ஊரில் 25 தலித் குடும்பங்கள் உள்ளன. அவ்வூரில் உள்ள நிலவுடைமையாளர்களான வன்னியர்கள், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். வன்னியர்களின் நிலங்களில் தலித்துகள் விவசாயக் கூலிகளாக உழைத்து வருகின்றனர். தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், பொருளாதார சமூகச் சூழ்நிலைகள் போன்ற காரணங்களின் அடிப்படையில் பெரும்பாலும் புகார் வடிவம் பெறுவதில்லை. அவ்வாறான புகார்களுக்கு பெரிய அளவில் பலனேதும் இருப்பதில்லை என்ற நடைமுறையும், வன்கொடுமைப் புகார்களுக்குத் தடையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 20.1.2003 அன்று மாலை 6 மணியளவில் சங்கர் தனது வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்க, தன்னுடைய தம்பி உளியனுடன் டி.வி.எஸ்.– 50 இரு சக்கர வாகனத்தில் காந்தபாளையம் என்ற இடத்தை நோக்கிச் சென்றிருக்கிறார். அவ்வாறு அவர்கள் போகும்போது, குறுகலான பாதை ஒன்றில் அமைந்துள்ள கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த கும்பலை கடந்து செல்லும்போது, சங்கருக்கு பின்புறம் அமர்ந்திருந்த அவர் தம்பி உளியனின் கால், அங்கு நின்று கொண்டிருந்த ஏழுமலை என்ற வன்னியர் மீது தவறுதலாகப் பட்டு விட்டிருக்கிறது. இயல்பாக மன்னிப்பு கேட்ட பின்பும் ஆத்திரமடைந்த ஏழுமலை, சங்கரின் வண்டியை மறித்து, “சக்கிலியப் பயல்களுக்கு திமிராப் போச்சு'' என்று சத்தம் போட்டு, அவர்கள் இருவரையும் தாக்க முயன்றிருக்கிறார். பிரச்சினையை அறிந்து வந்த இருதரப்பு ஆட்களும் விலக்கிவிட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

நகரத்துக்குச் சென்று மீண்டும் இரவு 8.30 மணியளவில் சங்கரும் அவர் தம்பியும் திரும்பும்போது, ஊர் எல்லையில் சங்கரின் தந்தை கண்ணனும், இன்னொரு தம்பியான சகாதேவனும் அவர்களுக்காக காத்திருக்கின்றனர்.விசாரித்தால், மாலையில் நடந்த பிரச்சினையை ஒட்டி ஏழுமலையுடன் மீண்டும் பிரச்சினை ஏற்படாமல் இவர்கள் இருவரையும் பாதுகாப்பாக வேறு பாதையில் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகவே அவர்கள் அங்கு வந்து காத்திருப்பதாகச் சொல்கின்றனர். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏழுமலையின் தலைமையில் 9 பேர் கொண்ட கும்பல் இவர்களை நோக்கி ஓடிவந்து வழிமறித்து, “சக்கிலிய தேவடியா பசங்களா, சாயங்காலம் எப்படி ஏழுமலையை அடித்தீர்கள்'' என்று சாதிப் பெயரைக் கூறி இழிவாகத் திட்டியதுடன் தம்மிடம் வைத்திருந்த கத்தி, இரும்புக் கம்பி, கம்பு போன்ற ஆயுதங்களால் நால்வரையும் கடுமையாகத் தாக்கினர். சிறிது நேரத்தில் ஊர் மக்கள் சிலர் வரவே, அக்கும்பல் ஓடி விடுகிறது.

இச்சம்பவத்தில் சங்கருக்கு வலது மேல்வரிசைப் பல் ஒன்று உடைந்துள்ளது. சகாதேவனுக்கு மூக்கிலும், உளியனுக்கு காலிலும், அவர்கள் தந்தை கண்ணனுக்கு உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் நேரடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்ல, நால்வரும் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். மறுநாள் (21.1.2003) நண்பகல் 2 மணியளவில் கடலாடி காவல் நிலையத்திலிருந்து ஒரு தலைமைக் காவலர் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய சங்கரிடம் வாக்குமூலம் பெறுகிறார். இருப்பினும், புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகல் அவருக்கு வழங்கப்படவில்லை. சம்பவம் நடந்த ஏழாம் நாள் (26.1.2003) இவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகின்றனர். அதற்கும் இரண்டு நாள் கழித்தே (28.1.2003) அவர்கள் போளூர் துணைக் கண்காணிப்பாளரால் முதன் முறையாக விசாரிக்கப்படுகின்றனர்.

sankar சங்கரின் வாக்குமூலப் புகார் மீது கடலாடி காவல் நிலையத்தில் ஏழுமலை மற்றும் 8 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 341, 323, 324 மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப்பிரிவு 3(1)(X) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை குற்ற எண்.36/2003 ஆகப்பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது. அதனினும் அதிர்ச்சி தரும் விதமாக ஏழுமலையை சம்பவம் நடந்த அன்று 6.30 மணியளவில் (ஏழுமலை மீது சங்கரின் தம்பி உளியனின் கால் தவறுதலாகப்பட்டது தொடர்பாக) சங்கரும் மற்றவர்களும் ஏழுமலையைத் தாக்கியதாகவும், ஏழுமலை பெருந்தன்மையாக அவர்களை விட்டு விட்டதாகவும் ஏழுமலையிடம் ஒரு பொய்ப்புகார் பெறப்பட்டு, கடலாடி காவல் நிலையத்தில் சங்கர் மற்றும் பிறர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 148, 323, 324 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரை இரண்டாவதாகவும் பொய்ப் புகாரை முதலாவதாகவும் பதிவு செய்து, காவல் துறை தனது சாதியத்தைப் பாதுகாக்கும் கடமையைச் செவ்வனே செய்துள்ளது. இப்பொய் வழக்கு விபரங்களை அறிந்த சங்கரும் மற்றவர்களும் திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றத்தை அணுகி முன் பிணை பெற்றுத் தப்பித்துள்ளனர். சங்கர் கொடுத்த புகார் வாக்குமூலத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், கட்டணமற்ற நகலும் சட்டப்படி அவருக்கு வழங்கப்படவில்லை. அதே சமயம், அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஏழுமலை மற்றும் 8 நபர்களையும் கடலாடி காவல் துறையினர் எவ்வித கைது நடவடிக்கைக்கும் உட்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏழுமலையும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் சங்கரையும் மற்றவர்களையும், “எங்களை ஒண்ணும் கிழிக்க முடியாது. நீங்க தான் கோர்ட்டுக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருக்கணும்'' என்று சாதிப்பெயரைச் சொல்லி மேலும் இழிவுபடுத்தியிருக்கின்றனர். இது தொடர்பாக சங்கர் 10.6.2003 அன்று காவல் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த புகாருக்கும் எவ்விதப் பலனுமில்லை.

2003 நவம்பர் மாதத்தில் தன் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தெரிந்து கொள்ள சங்கர் போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அவரது புகார் மீதான வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இது தொடர்புடைய ஆவணங்களின் நகலுக்கு விண்ணப்பித்து நகல்களைப் பெற்றவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

S.Tamilvanan சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, வெறும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழான குற்றங்களுக்காக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதிலும், சங்கரின் பல் ஒன்று தாக்குதல் காரணமாக உடைந்து போனதால், அக்குற்ற நிகழ்விற்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326 (பயங்கரமான ஆயுதத்தாலோ, வழியினாலோ கொடுங்காயம் விளைவித்தல்) கூட சேர்க்கப்படவில்லை. மேலும் 20.1.2003 நடைபெற்ற சம்பவத்திற்கு 24.1.2003 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்கு என்பதால், வழக்கின் புலன் விசாரணை போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளரால் மேற்கொள்ளபட்ட முதல் தகவல் அறிக்கையுடன் கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினமே போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சட்டப்பிரிவு மாற்ற அறிக்கை ஒன்றை, போலிஸ் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், சம்பவத்தில் காயமுற்ற சங்கரையும் மற்றவர்களையும் மருத்துவமனையிலும், மற்ற 5 சாட்சிகளை சம்பவ இடத்திலும் வைத்து தான் விசாரணை செய்ததாகவும், விசாரணையில் சங்கரைத் தவிர மற்ற சாட்சிகள் எவரும் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை "சக்கிலிய தேவடியா பசங்களே' என சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக வாக்குமூலத்தில் கூறவில்லை என்பது விசாரணையில் தெரிந்ததாகவும், எனவே சங்கர் எதிரிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மிகைப்படுத்தி, சாதிப்பெயரைச் சொல்லி திட்டி அடித்ததாக வாக்குமூலம் கொடுத்ததால், வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு 3(1)(X) பொருந்தாது எனவும், எனவே அப்பிரிவை மாற்றி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின்படி வழக்கை மாற்றம் செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், வழக்கின் புலன் விசாரணை காவல் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சங்கர் அறிந்து கொண்டார். சங்கர் தனக்குத் தெரிந்த வழக்குரைஞர் ஒருவர் மூலம் இக்கட்டுரையாளருடன் தொடர்பு கொண்டார். வன்கொடுமை வழக்குகளின் சமூக-சட்ட முக்கியத்துவம் கருதி அவற்றை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அளவிலான காவல் அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதியை முற்றிலும் புறக்கணிக்கும் விதமாகவும், நீர்த்துப்போகும் விதமாகவும் போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் செயல்பட்ட விதம், இவ்வழக்கில் ஆவணங்களுடன் தெளிவுபட அமைந்திருந்ததால், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சங்கர் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு குற்றவியல் அசல் மனு, மார்ச் 2004 இல் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மேற்சொன்ன சூழலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை, உண்மைக்குப் புறம்பாகவும் சட்டவிதிமுறைகளைப் புறக்கணித்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் வழக்கை கூடுதல் புலன் விசாரணை செய்து முறையான வகையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும், அப்புலன் விசாரணை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளில் கண்டுள்ளபடி துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த வன்கொடுமைக் குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி தீருதவித் தொகை வழங்கிட உத்தரவிட வேண்டுமென்றும்'' கோரப்பட்டது.

இம்மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, தவறான குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணையை போளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நடத்தக்கூடாது எனவும் தடை உத்தரவு கோரப்பட்டது. இம்னுவை 13.3.2004 அன்று முதலில் விசாரித்த நீதிபதி எஸ். அசோக்குமார், இறுதி விசாரணைக்கு மனுவை ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரர் கோரியபடி இடைக்காலத் தடையையும் வழங்கி உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களான ஏழுமலையும் மற்ற 8 நபர்களும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கும் உயர் நீதிமன்றம் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு கிடைக்கப் பெற்றது. தொடக்கக் கட்டத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர்கள், மனுவின் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படவிருந்த பிந்தைய காலகட்டத்தில் சற்று கலக்கமடைந்ததாகவே தெரிகிறது.

2008 சூன் மாதத்தில் ஒரு நாள் மனுதாரரான சங்கரை அழைத்துக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஏழுமலையும் ஒரு சிலரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலருடன் இக்கட்டுரையாளரை சந்தித்து, “சம்பவம் தெரியாமல் நடந்து விட்டதாகவும் ஆகையால் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்; சமாதானமாகப்போய்விடலாம்'' என்றும் கூறினார். "முதலில் நடைபெற்ற சம்பவத்தோடு பிரச்சினை முடிந்திருந்தால் இந்த அளவிற்கு வந்திருக்காது. இரண்டாவது சம்பவம் (சங்கர், அவர் தந்தை மற்றும் தம்பிகள் தாக்கப்பட்டது) என்பது எதிர்பாராதது அல்ல' என்றும், அது தவிர சாதிய வன்கொடுமை வழக்குகளை சமரசம் செய்யும் போக்கு, வன்கொடுமைக்குத் துணை போகும் கொடிய செயலாகும் என்றும் அவர்களிடம் விளக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தால் சங்கரின் மனு தள்ளுபடி செய்யப்படும் நிலை வந்தால் கூட, மனுவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்களிடம் கூறப்பட்டது. பாராட்டப்பட வேண்டிய விதமாக சங்கரும் இதே கருத்தில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் வந்திருந்த வழக்குரைஞர்கள் பல்வேறு வகையில் வலியுறுத்திய போதும், வன்கொடுமை வழக்கில் சமரசம் என்பது இயலாது, கூடாது என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. 10.11.2008 அன்று சங்கரின் மனு நீதிபதி எஸ். தமிழ்வாணன் அவர்களின் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சங்கர் அளித்த புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான போளூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட அன்றே, வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சாட்சியான சங்கர், தன்னை ஏழுமலையும் மற்றவர்களுக்கும் தாக்கிய போது, தன்னையும் தன் குடும்பத்தையும் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவாகத் திட்டியதாகக் கூறியிருந்தபோது, மற்ற சாட்சிகள் எவரும் அவ்வாறு கூறவில்லை என்ற காரணம் காட்டி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்தது தவறு என்றும்; ஒரு குற்றச்சாட்டு வாக்குமூலத்தில் உள்ளபோது, புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றமாகத் தன்னைக் கருதிக் கொண்டு செயல்பட்டது தவறு என்றும்; அவ்வாறு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை செல்லத்தக்கதல்லவென அறிவித்தும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்றும்; வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
-காயங்கள் தொடரும்

Pin It

அறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர் சாக்ரட்டீஸ். இவர் தத்துவ அறிஞர்களின் தந்தை (Father of Philosophers) என அழைக்கப்படுகிறார். நாகரிகத்திலும்,கலை இலக்கியத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய நாடான கிரேக்கம் தான் சாக்ரட்டீசின் தாய் நாடு. கிரேக்க நாட்டின், ஏதென்ஸ் நகரில் பேநாரட்டி-சாப்ரோநிஸ்கஸ் ஆகியோருக்கு கி.மு.470ஆம்ஆண்டு சாக்ரட்டீஸ் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சிற்பி. அதனால் சாக்ரட்டீஸ் இளம் வயதிலேயே சிலைகளை வடிக்கக் கற்றார். இந்தப் பயிற்சி தான் பிற்காலத்தில் அவருக்கு அறிவை செதுக்க உதவியது. கேள்வி எனும் உளியால் தேவையற்ற பகுதிகளான மூட கருத்துக்களை செதுக்கி நீக்கினால், பகுத்தறிவு எனும் உண்மை யின் சிலை உருவாகிவிடும் என்பதை சாக்ரட்டீஸ் நடைமுறை பயிற்சியிலே தெரிந்து கொண்டார்.

socrates சாக்ரட்டீசுக்கு கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம். ஏன்? எதற்கு? எப்படி? எப்போது? என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார். இந்த ஆர்வத்தில் அனாக்சா கோரஸ் என்ற ஆசிரியரிடம் ஒரு மாணவராக முதலில் போய் சேர்ந்தார். மைர்டோன், சான்தீப்பி என்ற இரு பெண்களை திருமணம் செய்து கொண்டார். அக்கால வழக்கப்படி அவர் தன் தாய் நாட்டுக்கு சேவை செய்ய போருக்கு செல்ல வேண்டியிருந்தது. ராணுவத்தில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தார். ஒரு சூழ்நிலையில் அவர் ராணுவப் பணியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.

சாக்ரட்டீஸ் மிகவும் எளிமையானவர். ஒரே ஒரு ஆடையுடன், கால்களில் செருப்பின்றி பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்து அறிவை பரப்பினார். மக்கள் கூடும் இடங்களிலும், இளைஞர்கள் கூடும் இடங்களிலும் அவர் பேசினார். சாக்ரட்டீஸ் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவரின் கருத்துக்கள் நூலாக அவரால் எழுதப்படவில்லை. சாக்ரட்டீசின் மாணவர்களான பிளாட்டோவும், செலோபோனும் அவரின் கருத்துக்களை தங்களின் நூல்களிலே எழுதி வைத்தார்கள்.

சாக்ரட்டீஸ் பகுத்தறிவினை பயன்படுத்தச் சொன்னார். அறிவுக்கு முதன்மையான இடத்தை அளித்தார். மூட நம்பிக்கையை நீக்கச் சொன்னார். எதையும் ஏன், எதற்கு என கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராயாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றõர் சாக்ரட்டீஸ்.இவரிடம் கேள்வி கேட்கும் மக்களிடம், பல கிளை கேள்விகளைக் கேட்டு சிக்கலின் அடிப்படையை புரிந்து கொள்ளும்படி சாக்ரட்டீஸ் உதவி செய்வார்.

சாக்ரட்டீசின் பேச்சு வன்மையால் இளைஞர்களும், மக்களும் கவரப்பட்டனர். அதனால் அன்று இருந்த முடியாட்சியினர் அஞ்சினர். சாக்ரட்டீஸ் இளைஞர்களை தவறான கருத்துகளின் மூலம் கெடுக்கிறார்; ஜனநாயக கருத்துக்களை சொல்கிறார்; விழிப்புணர்வு ஊட்டுகிறார்; கடவுளர்களை பழிக்கிறார்; அவர் ஒரு நாத்திகர் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டு களை சுமத்தினர். நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது.

கி.மு.3999ஆம் ஆண்டு அவரின் 71 ஆம் வயதில் ஹெம்லாக் என்ற பெயருடைய நஞ்சை, ஒரு குவளையில் ஊற்றி குடித்து சிறையிலேயே மரணமடைந்தார் சாக்ரட்டீஸ். விசாரணையின்போது அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அவரை நீதிபதிகள் விடுவித்து விட்டிருப்பார்கள். அவரோ உண்மையே பேசினார். அவரின் நண்பரான கிரிப்டோ சிறையிலிருந்து தப்பிச் செல்ல உதவுவதாக சொன்னார். ஆனால் அதையும் கூட அவர் மறுத்துவிட்டார்.

“நாம் எதை இழந்தாலும் தன்மானத்தை இழக்க இடம் தரக் கூடாது'' என்று பேசியவர் சாக்ரட்டீஸ். அதனால் அவர் போதித்த கருத்துக்கு உண்மையாக இருந்தார். எதை சொல்கிறோமோ அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கும், இறுதிவரை உண்மையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும் சாக்ரட்டீஸ் சான்றாகத் திகழ்ந்தார். அவர் உண்மைக்காக உறுதியுடன் நின்ற ஒரு கருத்துப் போராளி.

Pin It