சிறுபான்மையோர் துணைக் குழு தனது அறிக்கையை மாநாட்டுக்கு அளித்தது. அறிக்கையின் கடைசி பத்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “தங்களுடைய கோரிக்கைகள் நியாயமான முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டாலொழிய, இந்தியாவின் எந்த சுயாட்சி அரசியல் சாசனத்திற்கும் தாங்கள் ஒப்புதல் அளிக்க முடியாதென்று சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களும் திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.”

ஜோஷி, ஜாதவ் மற்றும் பால் ஆகியோரைப் போன்றே டாக்டர் அம்பேத்கரும் வாக்குரிமை துணைக் குழுவின் அறிவிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், அந்த அறிவிக்கைகள் போதுமானவையல்ல என்று அவர்கள் கருதினர். வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் வாதாடினர். கால அவகாசம் இல்லாததால், டாக்டர் அம்பேத்கர் எழுத்து வடிவிலான தனது உரையில், வாக்குரிமையை வரம்புக்குட்படுத்துவதன் மூலம் தொழிற்கட்சி அரசு, தங்களை, தங்களது நல்வாழ்வில் அக்கறையில்லாதவர்களின் தயவுக்கு விடுகிறார்களென்றும், அது தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு துரோகம் செய்வதாகும் என்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினை தொடர்பாகவும், தமது மக்களின் நல்வாழ்வுக்கும் டாக்டர் அம்பேத்கர் மிகவும் உளப்பூர்வமாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பாடுபட்டார். அதனால் அவர் இரவு பகலாக வேலை செய்தார். பலரைப் பேட்டி கண்டார். தானும் பேட்டியளித்தார். தகவல்களை வழங்கினார்; தீண்டத்தகாதவர்களின் பிரச்சினையை மற்றவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும்படி செய்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் சில உறுப்பினர்களின் கூட்டத்திலும் கூட உரை நிகழ்த்தினார். வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அனுப்புவதற்கும், வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள் விடுவதற்கும் லண்டனில் கூட்டங்களில் பேசுவதற்கும் அவர் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்.

இதில் அவருடைய ஒரே நோக்கம், இந்தியாவில் காலங்காலமாகத் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் எத்தகைய சகிக்கவொண்ணாத அவமானங்களுக்கு உள்ளாகி வந்துள்ளனர்; நம்பற்கரிய துன்ப துயரங்களில் உழன்று வந்திருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துவதேயாகும். பத்திரிகைகளுக்கு மேலும் மேலும் அவர் விடுத்த வேண்டுகோள்களில், இந்தியாவில் தீண்டத்தகாதவர்களின் லட்சியத்திற்கு அறிவொளி உலகத்தின் ஆதரவு தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். எனவே, மனிதநேயத்தின் அடிப்படையில், தங்களது பிரச்சினையின் தீர்வுக்கு உதவவேண்டியது - உலக மக்களின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.

இதன் பயனாக, இந்தியாவில் தீண்டத்தகாதவர்களின் கதி, அமெரிக்காவில் நீக்ரோக்களின் கதியைவிட மோசமாக இருக்கிறது என்பதை முதன் முறையாக உலகம் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்பேத்கரின் வேண்டுகோள் சில பிரிட்டிஷ் தலைவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. அதன் விளைவாக, மிஸ் இலியனார், மிஸ்.எல்லென், நார்மன் ஆங்கிள் போன்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேறு சிலரும் அடங்கிய ஒரு தூதுக்குழு லார்டு சாங்கியை சந்தித்து, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டுமென்றும் வாதாடினர். லார்டு சாங்கி, தாங்கள் உத்தேசித்துள்ள அரசியல் கட்டமைப்பில், அவர்கள் இந்தியாவின் பிற வர்க்கங்களுடனும் பொது மக்களுடனும் ஒன்றாக வைக்கப்படுவார்கள் என்று வாக்குறுதியளித்தார்.

இருப்பினும் சில பிரிட்டிஷ் பத்திரிகைகள் டாக்டர் அம்பேத்கருக்கு விரோதமாக இருந்தன. ஏனெனில், “டொமினியன் அந்தஸ்துக்கான முயற்சியை நான் எதிர்க்கவில்லை” என்று அவர் கூறினார். தனது லட்சியத்தின் பால் அவர்கள் அசட்டையாக இருப்பதைப் பற்றியோ, அல்லது அதை எதிர்ப்பது பற்றியோ தானும் கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த ஞானமும், மிகுந்த விடா முயற்சியும், பிறரை வசியப்படுத்தும் அறிவாற்றலும், பிரதிநிதிகள் மீதும், பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் மீதும் ஒரு மகத்தான பதிவை ஏற்படுத்தியது. அவர் வெவ்வேறு வட்டாரங்களில் மதிப்பையும்,அதுபோன்றே வெறுப்பையும் தோற்றுவித்தார். ‘இந்தியன் டெய்லி மெயில்' செய்தியாளர் இவ்வாறு எழுதினார் : “ஏக காலத்தில், ஒரு மெய்யான பிரதிநிதித்துவ அரசும் உடன் இணைந்து ஏற்படாவிட்டால், எந்த பொறுப்பாட்சியும் நிறுவப்படாமல் பார்த்துக் கொள்ளும்படியான ஆணை தனக்கிருக்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். உத்தேச வடிவத்திலான அரசு வர்க்கங்களால் மக்களுக்காக ஏற்படுத்தும் அரசாக இருக்கும் என்ற ஓர் அச்சத்தை அவர் வெளிப்படுத்தினார். அவருடைய எதிர்ப்பு, கிரேட் பிரிட்டனில் தொழிற் கட்சி மற்றும் லிபரல் கட்சியில் அதிக அளவு பரிவை எதிரொலித்தது.”

வெவ்வேறு துணைக் குழுக்களின் அறிக்கைகளைப் பதிவு செய்த பிறகு, வட்டமேசை மாநாடு 1931, சனவரி 19க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘காமன்ஸ் சபை'யில் இந்தியா தொடர்பான ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின்போது, ஒரு குரல் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் குறைகளை எதிரொலித்தது. அது அய்சக் புட்டின் குரலாகும். அவர் பெருமளவு பரிவு கொண்டிருந்தார். தீண்டத்தகாதவர்களின் இயலாமைகள் குறித்து அவர் இவ்வாறு கூறினார்:

“அவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அரண்களை நாம் ஏற்படுத்தாவிட்டால், அவர்களது ரத்தம் நமக்கு எதிராகக் கூக்குரலிடக்கூடும். வருங்கால ஆளுநர்களுக்கு நான் ஏதாவது ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கிறதெனில், அது ‘இந்த மக்களுக்காகவே உங்களுடைய பிரதான அக்கறையை செலுத்த வேண்டும்' என்பதுதான். அவர்கள் இப்பொழுது தற்காப்பற்றவர்களாக இருக்கக்கூடும். ஆனால் ஒருநாள் அவர்கள் வலிமை பெற்றவர்களாக ஆவார்கள். உலகில் நீதி இருப்பதினால், இந்த மக்களின் பெருகியுள்ள துன்ப துயரங்களை என்றென்றைக்குமாக நிறுத்தி வைத்துக் கொள்வதற்கான அரண் எதுவும் கிடையாது. இருபதாண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான மெய்யான சோதனை, ‘இந்த மக்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?' என்பதுதான். இந்த உரை, லண்டனில் அம்பேத்கரின் இடைவிடாத பணிக்கு ஒரு ஆற்றல் மிக்கப் பாராட்டாகும்.

லண்டனை விட்டுப் புறப்படுவதற்கு முன்னால், டாக்டர் அம்பேத்கர், வட்டமேசை மாநாட்டின் பணி குறித்த தனது கருத்தைத் தனது செயலாளர் சிவதர்க்கருக்கு எழுதிய கடிதத்தில், மாநாட்டின் பயன் குறித்துத் தான் நிச்சயமில்லாதிருந்த போதிலும், அது இந்தியாவின் சுயாட்சிக்கு அடித்தளத்தை இட்டுள்ளது என்று நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது, மாநாடு ஒரு வெற்றிதான். ஆயினும் மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, அடித்தளத்தில் காரையைக் காட்டிலும் மணல்தான் அதிகமாயிருக்கிறது என்று அவர் கூறினார். எனவே அடித்தளம் போதிய அளவு வலுவானதாக இருக்கவில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உரிமைகளைப் பொருத்தமட்டிலும், அது ஒரு மகத்தான வெற்றியாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்திய அரசியல் சிந்தனைக்கு வட்டமேசை மாநாட்டின் இந்தக் கூட்டத் தொடரின் குறிப்பிடத்தக்க சாதனை, ஓர் அய்க்கிய இந்தியா என்ற கருத்தமைப்பு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளதாகும். மற்றொரு கணிசமான பயன், இந்தியாவின் அரசியல் வரைபடத்தில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் திட்டவட்டமாக எழுச்சி பெற்றுள்ளதாகும். இன்னும் கூடுதல் முக்கியமானதென்னவெனில், உலகக் கருத்து எனும் நீதிமன்றத்தின் முன்னே, அந்த மக்களின் சொல்லொணாத் துன்ப துயர நிலைமைகளை உன்னதமான முறையிலும் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் விளங்கிக் கூறியதாகும்.

இடங்கள் பிரச்சினையிலான கருத்து வேறுபாட்டின் விளைவாக - (வெவ்வேறு சமூகங்கள், உத்தேச சட்டப் பேரவைகளில் பெறுவதற்கு முயன்ற இடங்கள் தொடர்பாக உடன்பாடின்மையின் விளைவாக, மற்றும், தனித் தொகுதி அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளுடனான தேர்தல் முறை தொடர்பாக உடன்பாடின்மையின் விளைவாகவும் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. தவிரவும், அந்த நேரத்தில் எந்த வாழ்வாதார முடிவையும் மேற்கொள்வது பிற தரப்பினர் இல்லாமல் கணக்கிடுவதாகவும் சிந்திக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சியான காங்கிரஸ், வட்டமேசை மாநாட்டின் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. 1931, பிப்ரவரி 31இல் மார்சேய்ல்ஸில் கப்பலேறி, டாக்டர் அம்பேத்கர் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

1931, பிப்ரவரி 27 வெள்ளிக்கிழமை காலையில் டாக்டர் அம்பேத்கர் பம்பாய் வந்து சேர்ந்தார். அங்கு பால்லார்டு கப்பல் துறையில் அம்பேத்கர் சேவாதளத் தொண்டர் படையினால் அவருக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா' இதழின் ஒரு நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் பின்வருமாறு கூறினார் : “வட்டமேசை மாநாடு அரசியல் தந்திரத்தின் ஒரு வெற்றி என்று நான் கருதுகிறேன். மாநாட்டில் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் சாசனத்தில் குறைபாடுகள் இல்லையென்று கூறுவது போலித்தனமாகும். ஆனால், அவை வாழ்வியல் தன்மையுடையவை அல்ல என்று நான் கருதுகிறேன். இதற்கு மாறானது உண்மையென்றே அனுமானித்துக் கொண்டாலும் இந்தியப் பிரச்சினைக்கு அமைதிப் பூர்வமான தீர்வு காண்பதில் நம்பிக்கையுள்ள அனைவரும் முன்வந்து, கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இன்னும் அவகாசமும் வாய்ப்பும் இருக்கிறது.

மாநாட்டினால் விரித்துரைக்கப்பட்ட அரசியல் சாசனம் மிகவும் ஜனநாயக விரோதமானதாகும். ஏனெனில், அது மிகவும் குறுகிய வாக்குரிமையை அடிப்படையாகக் கொண்டது என்ற உண்மையிலிருந்துதான் என்னுடைய மிகப்பெரிய ஏமாற்றம் எழுகிறது. திரு. காந்தி, மாநாட்டின் முடிவுகளைப் பற்றிக் கூறியவை தொடர்பான செய்திகளை மதிப்பிடும்போது, அரசியல் சாசனத்தின் இந்த அம்சத்தை அவர் முழுமையாகக் காணத் தவறிவிட்டார் என்று தோன்றுகிறது. மேலும் மிகவும் அற்பமான மற்றும் மிகவும் நிலையற்றவை என்று நான் கருதும் கூறுகளை அவர் வலியுறுத்துவது மிகவும் பரிதாபகரமானதாகும்.

“தாழ்த்தப்பட்ட வர்க்கங்களையும் தொழிலாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம் பிற கட்சிகள் அனைத்தும், நேரு அறிக்கையில் கையெழுத்திட்டிருந்த வகையில் தங்கள் நிலைக்கு உண்மையாக நடந்து கொள்ளாததால் நாம் தோற்றுப்போன போதிலும், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பதற்காகப் போராடினோம். திரு. காந்தி, பிரச்சினையின் தீர்வுக்குத் தன் நிபந்தனைகளை முன்வைக்கும்போது, அவரும் ஒரு தரப்பாக இருக்கப் போகும் அரசியல் சாசனம் முற்றிலும் ஜனநாயகப் பூர்வமானதாக இருக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

இந்தியாவில் உள்ள சாதாரண ஆணுக்கும் பெண்ணுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கான நமது முயற்சிகளுக்கு திரு. காந்தி ஆதரவளிக்கத் தவறினால், அவருடைய செய்கையை அவர்மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மிகப் பெரிய துரோகம் செய்து விட்டார் என்று அவர் மீது குறை கூறுவதற்கு நான் தயங்கமாட்டேன். மேலும் அவருடைய சட்ட மறுப்பு இயக்கம், வர்க்கங்களின் சேவைக்காக வெகுமக்களை மிகவும் மோசமாக சுரண்டுவதாகும். திரு. காந்தியின் அரசியல் தத்துவ ஞானம் பலருக்கும் தெரியாததால், தங்களைப் பின்பற்றுவோரிடையிலும், சீடர்களிடையிலும் செல்வாக்குள்ள மக்கள் தலைவர்கள், காந்தியின் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு மேற்கொண்டு எந்த ஆதரவும் கொடுப்பதற்கு முன்னால், வயது வந்தோருக்கு வாக்குரிமை அளிக்கும் பிரச்சினை தொடர்பாக அவருடைய கருத்துகளைத் தெரிவிக்கும்படி அவரிடம் கோர வேண்டியது விரும்பத்தக்கதாகும்.”

Pin It