“காவாங்கர குடிசையில, சாக்கடை நாத்தத்துல கெடந்தவங்களுக்கு கவர்மென்ட்டு இலவசமா வீடு கொடுக்குது. அங்க இருக்குறதுக்கு இன்னா நோவுது இதுங்களுக்கு... அதையும் வித்துட்டு பழையபடி பிளாட்பாரத்துக்கே வந்துடுதுங்க. இதுங்கெல்லாம் இப்படித்தான் சார்! திருந்தாத ஜென்மங்க...’
சென்னை நகரின் சாலை ஓரங்களிலும், நடைபாதைகளிலும், கூவம் கரையோரங்களிலும் கள்ளம் கபடமற்று வாழ்ந்து கொண்டிருந்த, இன்னும் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் சேரி மக்கள் மீதுதான் மேற்கூறியவாறு நெருப்பை அள்ளி வீசுகிறது, நகர்ப்புற இந்து சமூகம். மண்ணின் மைந்தர்கள், பூர்வகுடிகள், ஆதிதிராவிடர்கள், ஆதித்தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் சேரிமக்களுக்கு, சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையே ஏன்? ஏனெனில், அவர்கள் தீண்டத்தகாதவர்கள்!
நேற்று ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட இவர்கள், இன்று சென்னையை விட்டு விரட்டப்படுகிறார்கள். “வூடு கீற எடத்துல வேல இல்ல, வேல கீற எடத்துல வூடு இல்ல’ - இன்றைய நகர்ப்புற சேரிமக்களின் அடிப்படை வாழ்வியல் சிக்கல் இதுதான். வீடு என்பது நிலம் சார்ந்தது; வேலை என்பது கல்வி சார்ந்தது. பாட்டாளிகளும், பொதுவுடைமையாளர்களுமான சேரி மக்களுக்கு - நிலமும், கல்வியும் மறுக்கப்பட்டது ஏன்? இக்கேள்விக்கு விடை தேடுவது விடுதலைக்கு வழிவகுக்கும்.
அதனால்தான், "உங்க குடிசைய இடிச்சதுக்கு, மாற்று வீடோ, நிலமோ கொடுக்குறேன்; வாங்கிக்குனு ஓடிப்போ...! அதவிட்டுட்டு, சென்னையிலேயே மாற்று இடம், மறுகுடியமர்த்தப்பட்ட இடங்கள்ல குடிக்க தண்ணி கொடு, கரண்ட் கொடு, கல்வி கொடு, ரோடு போடு, பஸ்சு விடு, ஆஸ்பிட்டல் கட்டுன்னு எதையும் கேட்காதே' என்று மிரட்டுகின்றன - இந்திய/தமிழக அரசுகள். இதை வெளிப்படையாகவே அச்சிட்டு அறிவிக்கிறது, தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்!
கரங்களிலிருந்து வெளியேற்றப் படும் சேரி மக்களுக்கு இழப்பீடாக, வாரியம் வழங்கும் ஒதுக்கீடு ஆணை மற்றும் அடையாள அட்டையில் (படிவம் - VI - A), ஒதுக்கீடு விதிகள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியுலகிற்கு தெரியாத வெளியேற்றப்பட்ட சேரி மக்களின் அவலங்களைப் போலவே, வெள்ளைத்தாளில் வாரியம் அரங்கேற்றும் அநியாயங்கள் வெளியில் தெரியாதவை. துரைப்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் உள்ள குடிசை மாற்று வாரிய "கான்கிரீட் கொட்டகைக்கு' - மாத வாடகையாக 250 ரூபாயும், பராமரிப்பு (அப்படி எதுவும் செய்யப்படாமல்) கட்டணமாக 100 ரூபாயும் சேர்த்து, மொத்தம் 350 ரூபாயை, ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் 20 ஆண்டுகளுக்கு வசூலிக்கிறது குடிசை மாற்று வாரியம்!
“இந்த தவணைத் தொகையை (வாடகை) ஒவ்öவாரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதமாக செலுத்தப்படும் தொகைக்கு, வாரியம் நிர்ணயம் செய்யும் வட்டியை ஒதுக்கீடுதாரர் செலுத்த வேண்டும். மூன்று மாதங்கள் தொடர்ந்து வாடகை செலுத்தத் தவறினால், வீடு ஒதுக்கீடு ஆணையை முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்து, குடியிருப்பு வாரிய வசமாக்கப்படும். அதுவரை செலுத்திய தவணைத் தொகை (வாடகை) முழுவதுமாகப் பறிமுதல் செய்யப்படும். தவணைத் தொகை முன்வைப்பினை செலுத்திய பிறகு குடியிருப்பு தேவை இல்லை என்றால், செலுத்திய முன் வைப்புத் தொகை வாரியத்தால் (பிக்பாக்கெட் திருடனைப்போல) பறிமுதல் செய்யப்படும்’ என தொடங்குகிறது, தமிழக அரசின் குடிசை அகற்றும் வாரியத்தின் சுரண்டல் சட்டங்கள்.
வீட்டுவேலை, மூட்டைத் தூக்குவது, ரிக்ஷா இழுப்பது, ஆட்டோ ஓட்டுவது நடைபாதை வியாபாரங்கள் என நகரத்தை நம்பி வாழ்ந்து வந்த மக்களை நகரத்திற்கு வெளியே வீசியெறிந்த அரசு, மாற்று இடங்களில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து தர வக்கற்ற ஆட்சி யாளர்கள் - குடிசை மக்களின் நலனுக்கு வாரியம் அமைத்தார்களாம்! வெறும் வாடகை வசூல் செய்யும் வாரியமாகவே அது இயங்கி வருகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. கண்ணகி நகர், செம்மஞ்சேரி என்றால் கழுவிப் பெருக்கி தள்ளுகிற வேலைகளைக்கூட கொடுக்க மறுக்கின்றனர், சுற்றியுள்ள சாதி இந்துக்கள். இத்தனை இடர்ப்பாடுகளையும் கடந்து சென்னைக்குள் போய் வயித்துப் பாட்டுக்கு உழைத்து, களைத்து வீடு திரும்பும் கண்ணகி நகர், செம்மஞ்சேரி மக்கள் - சம்பாதித்த பணத்தில் ஷேர் ஆட்டோ வுக்கும், பஸ்சுக்கும் பாதி போக, மீதிப் பணத்தில் குடும்பம் நடத்துவது ரொம்ப கஷ்டம், அதுவும் இப்ப விற்கிற விலைவாசியில்!
“10 ஆம் தேதிக்குள் வீட்டு வாடகையை கட்டனும்னா நாங்க என்ன பண்றது?’ என்கின்றனர், புதுப்பேட்டை பூங்காவுக்காக விரட்டியடிக்கப்பட்ட லாங்ஸ்கார்டன் பகுதி மக்கள். “இதுல அலாட்மன்ட் ஆன தேதியில இருந்து (வட்டி போட்டு) வாடகை கட்டாதவங்கள, புள்ளைக்குட்டியெல்லாம் வெளியே தள்ளி வீட்டுக்கு சீல் வைக்கிறாங்க குடிசை மாற்று வாரிய அதிகாரிகள்’ என்கிறார், ரிசர்வ் பேங்க் பகுதியிலிருந்து வந்துள்ள மஞ்சுளா. பராமரிப்பு மற்றும் இதர பொதுப்பணிகளை கவனித்துக் கொள்ளும் பொருட்டு, இத்திட்டப் பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் குடியிருப்புகளுக்காக "குடியிருப்போர் நலச் சங்கம்' என்ற பெயரில் ஒரு சங்கம் ஏற்படுத்தி (வாரியத்தால் அங்கீகாரம்) பதிவு செய்யப்பட்டதும், ஒதுக்கீடுதாரர் அந்தச் சங்கத்தில் உறுப்பினராகி அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட்டும் நடக்க வேண்டும்.
சங்கத்தின் உறுப்பினர் நுழைவுக் கட்டணம் 100 ரூபாயை எஸ்டேட் ஆபிசரிடம் செலுத்த வேண்டும். இது தவிர, சங்கம் பதிவு செய்யும் வரை மாத சந்தாவாக 150 ரூபாய் எஸ்டேட் அலுவலரிடம் செலுத்த வேண்டும். பிறகு இத்தொகை சங்கத்திற்கு மாறுதல் செய்யப்படும். பராமரிப்பு, இதர பொதுப்பணிகள் மற்றும் உங்களுக்கு (கண்ணகி நகர், செம்மஞ்சேரி) தேவையான அடிப்படை வசதிகளை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அரசாங்கத்தை எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்வதுடன், அதற்காக ஒரு சங்கம் ஏற்படுத்துங்கள் என்றும், அதை குடிசை மாற்று வாரியத்தில் பதிவு செய்து, கண்ணகி நகர், செம்மஞ்சேரியில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து சேரிமக்களும் அதில் உறுப்பினராகி, அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்கிறது.
அதாவது, உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; கடவுள் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்; மந்திரம் பிராமணனுக்கு கட்டுப்பட்டது என்று சொல்லும் மநுஸ்மிருதியைப் போல, சேரிமக்கள் சங்கத்திற்கு கட்டுப்பட்டவர்கள்; சங்கம் வாரியத்திற்கு கட்டுப்பட்டது; வாரியம் அரசுக்கு கட்டுப்பட்டது; அரசு ஆளும் வர்க்கங்களுக்கு கட்டுப்பட்டது. அதனால் அரசுக்கு எதிரான வாழ்வுரிமைப் போராட்டங்களை சேரி மக்கள் நடத்தக் கூடாது என்றும் மனு கொடுத்து கொடுத்தே மாண்டு போக வேண்டும் என்றும் திட்டமிடுகிறது, குடியுரிமைக்கு எதிரான குடிசை அகற்றும் வாரியம்.
“ஒதுக்கீடுதாரர் குடியிருப்பை வேறு நபருக்கு விற்கவோ, வசிக்க அனுமதிக்கவோ, வாடகைக்கு அனுமதிக்கவோ கூடாது. மீறினால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒதுக்கீடு (அலாட்மன்ட்) ரத்து செய்யப்படும். தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம் 1971. சட்டப் பிரிவு 62(பி)இன்படி, 3ஆண்டு காவல் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.’
வாழ வழியில்லாத ஊரிலும், வசிக்க தகுதியில்லாத வீட்டிலும் அடைக்கப்பட்ட சென்னை நகர சேரிமக்கள், இன்று கண்ணகி நகரில் இல்லை. ஒதுக்கப்பட்ட வீடுகளை வந்த விலைக்கு விற்று விட்டு, இன்று பழைய இடத்தில் சென்னையில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். கூவாங்கர குடிசைகூட சொந்தமாக வாய்க்கப் பெறாத நாதியற்ற சேரிமக்கள்தான் கண்ணகி நகரில் காறி மூஞ்சிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் சொந்தமாக கல் வீடு கிடைத்ததே போதுமென்று புதைந்து போயுள்ளனர். சோத்துக்கு வழியற்ற வீடு நமக்கெதுக்கு என்று 5,000 ரூபாய், 10,000 ரூபாய்க்கும் விற்று விட்டு ஓடியவர்கள், அய்யகோ! இன்று சென்னை நகரின் நெடுஞ்சாலை ஓரங்களிலும், நடைபாதையிலும் கிடக்கிறார்கள்.
5,000த்திற்கும், 10,000த்திற்கும் விற்கப்பட்ட வீடுகள் இன்று இரண்டு லட்சம் வரை விலை போகின்றன. வீடு வாங்கிய சாதி இந்துக்கள் அழகாக வீட்டை வடிவமைத்து அமர்க்களமாய் வாழ்கின்றனர். இதுபோல் ஏராளமான விதிமீறல்கள் இன்றும் தொடர்கின்றன. கண்ணகி நகர், செம்மஞ்சேரிகளில் இதுவரை எத்தனை ஒதுக்கீடுகளை ரத்து செய்துள்ளது என்பதை, குடிசை மாற்று வாரியம் அறிவிக்குமா? முடியாது. ஏனென்றால், எல்லாம் தெரிந்தே நடக்கிறது.
ஒதுக்கீடு விதிகள் 7இல் எட்டு உள் நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அதில் “ஒதுக்கீடு செய்த குடியிருப்பு தவிர, சொந்தமாக வேறு வீடு அல்லது மனை சென்னையில் (அல்லது) வேறு இடத்தில் வைத்திருத்தல், ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்பை சரியாகப் பராமரிக்காமல் பழுதடைந்த நிலையில் வைத்திருத்தல், சுற்றுச்சூழலையும் பேணாது, சுகாதாரக்கேடு விளைவிக்கும் நிலையில் வைத்திருத்தல் என இவ்விதிகளை மீறியவர்களின் ஒதுக்கீட்டாணை ரத்து செய்யப்படுவதுடன், குடியிருப்பிலிருந்து வெளியேற்றி, விதிகளை மீறியவர்கள் மீது கிரிமினல் மற்றும் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்கிறது குடிசை மாற்று வாரியம்.
"தீண்டத்தகாத மக்கள் சொத்து எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது' என்று தடை விதிக்கிறது இந்து மதம். இதையேதான் வாரியமும் சொல்கிறது : வீடோ, வீட்டுமனையோ வெளியில் வாங்கக் கூடாது (அல்லது) வைத்துக் கொள்ளக் கூடாது! மேலும், "பழுதடைந்த நிலையில் குடியிருப்பை வைத்திருத்தல், சுற்றுச் சூழலைப் பேணாது இருத்தல், சுகாதாரக்கேடு விளைவிக்கும் நிலையில் வைத்திருத்தல்' என்பதெல்லாம் - என்னதான் வசதி செய்த கொடுத்தாலும் சேரிக்காரனுக்கு சுத்தமாக வைத்துக் கொள்ளத் தெரியாது என்று சொல்லுகிற இந்து சாதி உளவியலைத்தான் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது வாரியம்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று கேட்பவர்களுக்கு, நம் பதில் : ஒரே ஒரு நாள் கண்ணகி நகரிலும், செம்மஞ்சேரியிலும் இருந்து பாருங்கள் அல்லது ஒரே ஒரு முறை கண்ணகி நகர் மக்களோடு பேருந்தில் பயணம் செய்யுங்கள் அல்லது ஒரே ஒரு முறை கண்ணகி நகர், செம்மஞ்சேரியை சுற்றி வாருங்கள் - வலிகள் தெரியும். மக்களின் வாழ்க்கை புரியும்.