‘‘சேமிப்போ பெருங்கடல்

பேசிவிடுமோ

ஓர் அலை''

திண்டுக்கல் தமிழ்ப் பித்தனின் குறுங்கவிதை இது. இக்கவிதை ஏற்படுத்தும் அனுபவம் யாருமற்று தனி மனிதனாக கடற்கரையில் அமர்ந்து, கடலோடு உரையாடும் ஓர் இலக்கியப் பிரதியாக புலப்படுகிறது. ஆனாலும், அதன் மறு பக்கம் பல சாளரங்களைத் திறக்கிறது. அவருடைய பிற குறும்பாக்களை வாசிக்கும்போது, அவருடைய சிந்தனைகள் கடல். அவருடைய பேனா ஒற்றை அலை. எவ்வளவு பேச முடியும் அதனால்? தனக்குக் கிடைத்த சொற்ப பக்கங்களில் அவருடைய பேனா - சாதியம், பெண்ணியம், சூழலியல், மானுட விடுதலை என அனைத்தையும் பேசுகிறது.

திண்டுக்கல் ஞானப்பிரகாசியார்புரத்தைச் சேர்ந்த தமிழ்ப்பித்தனின் இயற்பெயர் பூண்டி ஜெயராஜ். அவருடைய பெற்றோர் தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அதனால் அவர்களுடைய வாழ்க்கை, தீண்டாமையின் அனுபவச்சூழல் பொதிந்ததாகவே இருந்திருக்கிறது. பெரும்பாலான தோல் நிறுவனங்களை முஸ்லிம்கள் வைத்திருந்தாலும், அவர்களும் பார்ப்பனிய மனநிலையோடுதான் தலித்துகளை நடத்துகிறார்கள் என்பது, தமிழ்ப்பித்தனின் வாக்குமூலம்.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது, சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு கொட்டாங்கச்சியில் தண்ணீர் கொடுத்ததை, தமிழ்ப்பித்தன் கோபத்தோடு நினைவு கூர்கிறார். இப்படி தான் பட்ட வலியினை எழுத்தாக்க வேண்டும் என்னும் அவருடைய முனைப்பே அவர் எழுத காரணமாகி இருக்கிறது. பாமா, ரவிக்குமார், ராஜ்கவுதமன் ஆகியோரின் எழுத்துகள் தனக்கு ஈர்ப்பாக இருந்தது என்று கூறும் தமிழ்ப்பித்தன், அவர்களைப் போலவே தன்னுடைய இருப்பு சார்ந்த மொழியையும் பதிவாக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அவருடைய ‘கொஞ்சோண்டு' என்னும் தலைப்பிலான முதல் குறுங்கவிதைகளின் தொகுப்பு, தயாகவிச்சிற்பி என்ற இன்னொரு கவிஞரின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது. கவிதைகளைப் போலவே மிகச் சிறிய அளவில் வந்திருக்கும் அத்தொகுப்பில் உள்ள தமிழ்ப்பித்தனின் கவிதைத் தெறிப்புகள், சமூகத்தின் எதார்த்த தளத்தை வேரோடு காட்டக்கூடியன.

உறக்கம் பிடிக்கவில்லை / கனவிலும் / கையில் பீ துடப்பம் - என்ற வரிகள், இந்து சமூகம் விளிம்பு நிலை மக்களை நிம்மதியாக தூங்குவதற்குக்கூட விடுவதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இழுக்கு இழுப்பதினாலே இழுக்காதே / தேர் உடை என்னும் இன்னொரு தெறிப்பு, தேர்வடம் பிடித்து இழுக்கக் கோருவது, தலித்துகளின் உரிமையாகச் சொல்லப்பட்டாலும், அதற்காகத் தன்

ஆற்றலை இழப்பதில் அர்த்தமில்லை என்று அவர் மிக எளிமையாகக் கூறும்போது, கொம்பை விட்டு / கூரை தாவும் கொடி / மீறலே வளர்ச்சி - விதிக்கப்பட்டவை விளிம்புகளாக இருந்தாலும், அவற்றைத் தகர்த்து மய்யங்களை நோக்கி நகர்வதுதான் விடுதலை வாழ்க்கை என்பதையும் தெளிவுறுத்துகிறார்.

அழும் குழந்தை / அழாத சிலை / தீர்த்தமென விரயமாகும் பால் என பகுத்தறிவுச் சிந்தனைகள் பளிச்சிடுகின்றன, தமிழ்ப்பித்தனின் ஆக்கங்களில்!

தலித் இலக்கியம் ஆகத்தீவிரமாகச் செயல்பட வேண்டிய ஒன்று. ‘தலித்' என்பது சாதியத்தைக் குறிப்பது அல்ல. அது பண்பாட்டு மாற்றத்திற்கான குறியீடு. உள் முரண்களைக் களைந்து அம்பேத்கரிய சிந்தனையுடன் - விடுதலையை நோக்கி அணியமாக்குகிற வலிமை அச்சொல்லுக்கு உண்டு. தலித் மக்களின் விடுதலை என்பது, அத்துடன் நின்று விடக்கூடியது அல்ல. அது, அதன் அடுத்தகட்ட நகர்வான ஒட்டுமொத்த மானுட விடுதலையை நோக்கமாகக் கொண்டது.

தலித் பிரச்சினையை ஒரு தேசியப் பிரச்சினையாக அல்லது சர்வதேசப் பிரச்சினையாக மாற்ற வேண்டும் என்பதே, தலித் எழுத்தாளர்களுக்கு அவர் விடுக்கின்ற அறைகூவல். தமிழ்ப்பித்தனின் நோக்கம் விசாலமாகப் பார்க்கப்பட வேண்டியது. அதைச் சார்ந்தே அவருடைய ஆக்கங்களும் இருக்கின்றன.

இறக்குமதி விதை / இறக்குமதி உரம் / தாய்மண் கொலை என்று அவர் சுட்டும் கவிதைக் கூற்று அதை மெய்ப்பிக்கும்.

தலித்திய ஆக்கங்களைப் போலவே இவருக்கு பெண்ணிய ஆக்கங்களும் வெகு இயல்பாகக் கைவருகின்றன. தீட்டென்பவனை / நாப்கின் சுழற்றி அவன் வாயில் அடி / நினைவுக்கு வரட்டும் அவன் பிறப்பு - என பெண்ணுக்கான ஆயுதங்களை தயாரிக்கும் அவருடைய கவிதைகள் எளிமையானவை. அதே நேரத்தில் யாரைப் போய் தாக்க வேண்டுமோ, அவர்களை மிகச்சரியாகத் தாக்கி, புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டவை. எல்லா இந்திய அடிமைத்தனங்களுக்கும் வேராக இருக்கின்ற இந்து கருத்தியலை, வெறும் மூன்றே வரிகளில் அவரால் மூழ்கடித்துவிட முடிகிறது -

நீ இந்து / நானுமா இந்து? / வா கும்பிடுவோம் முனியப்பனை

தமிழ்ப்பித்தனின் இன்னொரு முக்கியமான ஆக்கம், அவருடைய ‘ஆச்சிமுத்து' என்னும் கதை. இலக்கணக் கோட்பாட்டு முறைமைகளுக்கு சற்றும் உட்படாமல், சொல்ல வந்த சங்கதியை அதன் ஆழம் வரை வாசகனின் மனதில் பதிய வைக்கும் அவருடைய திறன் போற்றுதலுக்குரியது. இக்கதை, தலித் கதைப் பரப்பில் அதிமுக்கியத்துவம் பெறவேண்டிய ஒன்றாகும். அதன் கதைக்களம், எவராலும் தொட முடியாத ஓர் உண்மை நிகழ்வு.

தலித் சேரியில் வாழும் பெற்றோருக்குப் பிறந்த ஓர் ஆண் குழந்தை, கருகருவென்று பன்றிக்குட்டியாட்டம் வளர்கிறது. அது குழந்தையாக இருக்கும்போது, எல்லோராலும் கொஞ்சப்பட்டு வளர்க்கப்படுகிறது. அது வளரும்போது பெண்மைத்தனம் அதிகமாக இருக்க, ஆச்சிமுத்துவை அனைவரும் வெறுக்கின்றனர். ஆச்சிமுத்து ஒரு திருநங்கையாக மாறுகிறார். இது, இயற்கையின் நியதி. இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் ஆச்சிமுத்துவை கேலி செய்கிறார்கள். அவர்கள் ஆச்சிமுத்துவை அவமானப்படுத்துவார்கள். சொந்த அப்பா, அண்ணன் கூட அவரை வெறுப்பார்கள். அம்மா மட்டுமே ஆதரவாக இருப்பார்.

இந்நிலையில் ஆச்சிமுத்து கடுமையாக உழைப்பார். மூன்று பேர் செய்யும் வேலையை ஒருவனே செய்து முடிப்பார். அப்படிப்பட்ட உழைப்பாளியை சாதி இந்து கூட்டம் தவறு செய்ய வற்புறுத்த, ஒருவனின் குறியைக் கடித்து துப்பிவிடுவார் ஆச்சிமுத்து. இதனால் சாதிக்கலவரம் வெடிக்கிறது. ஆச்சிமுத்துவை தலித் ஆண்கள் சாதி இந்துக்களிடம் பிடித்துக் கொடுக்க நினைக்கும்போது, அவர்களை எதிர்த்து ஆச்சிமுத்துவை தலித் பெண்கள் காப்பாற்றும் முடிவு கண்ணீரை வரவழைக்கிறது.

ஆணாதிக்க அடிமைச் சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றால், பெண்கள் போரிட முன்வரவேண்டும் என்றும், அதற்காக மீண்டும் தாய்வழிச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் கூறும் தமிழ்ப்பித்தன், ஆச்சிமுத்து கதையில் அதையே ஆக்கமாக்கி இருக்கிறார்.

திருநங்கைகள் சமூக வாழ்வில் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு சமூகத்தில் சமத்துவமான இடத்தைத் தரவேண்டும் என்பது, அடிப்படையான சமூக நீதிக் கருத்தாகும். அவர்கள் மீதான பாலியல் சுரண்டலுக்கும் ஆணாதிக்க சமூகமே காரணமாக இருக்கிறது. அதற்கு மாறாக, சமூகம் அவர்களுக்கு சமநிலையினை அளிக்கும் எனில், அவர்களும் மனிதர்களாக மதிக்கப்படுவார்கள் என்பது ஆச்சிமுத்து கதையின் மய்யக்கரு.

அது மட்டுமல்ல, ஆச்சிமுத்து என்னும் திருநங்கையின் மீதான சாதிய ஒடுக்குமுறை போராட்டத்திற்கான தீர்வை சங்கத்தின் மூலமும், பெண்களின் எழுச்சியின் மூலமும் அடைந்த பிறகு - ஒட்டுமொத்த மானுட விடுதலைக்கு பெண்கள், தலித்துகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை மக்கள் அனைவரும் இணைந்தெழுந்து போராட வேண்டும் என்பதே கதையின் முக்கிய அம்சமாகும். இத்தகைய ஆக்கம்தான் பொதுநிலை அறிவுத்தளத்தில் இயங்கக்கூடிய ஆண்களையும் பெண்களையும் கொண்டுவந்து, சமநிலைக்கானப் போராட்டத்தை நடத்த வைக்கும். இது, தமிழப்பித்தனின் தலையாய ஆக்கம் என்று உறுதியாக சொல்லலாம்.

தமிழ்ப்பித்தன் வாழும் தலித் பகுதியில், சுமார் 1500 பேர் வாழ்கின்றனர். அதில் இரண்டு பேர் மட்டுமே அரசு ஊழியர்கள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவர்கள், தமிழ்ப்பித்தன் உட்பட பத்து பேர்தான் இருப்பார்கள். இத்தகைய இடத்திலிருந்துதான் காத்திரமான தலித் ஆக்கங்கள் உருவாகின்றன. ஓவிய ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தனியார் பள்ளியொன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஆக்கங்கள் நேரடியானவை. கூரிய அம்பைப் போல் இலக்குகளை குறி தவறாமல் அடையக்கூடியன. இவருடைய கவிதைகள் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ‘ஆச்சிமுத்து' போன்ற கதைகளையும் எழுதக் கூடிய தமிழ்ப்பித்தன், அவர் பகுதி மக்களுக்கு கல்விப் பணியாற்றும் களப்பணியாளராகவும் செயல்படுகிறார்.

அவருடைய களப் பணிகளே அவரை சிறந்த எழுத்தாளராகவும் மாற்றி வைத்திருக்கிறது. 

- யாழன் ஆதி

தமிழ்ப்பித்தனை தொடர்பு கொள்ள : 98436 64232

Pin It