சட்ட மறுப்பு இயக்கத்தை நான் ஆதரிக்காததற்கு மற்றொரு காரணமும் உண்டு. நமது நலன்களின் பாதுகாப்புக்கும் உறுதிப்பாட்டுக்கும் அது ஏற்புடைய வழி என்று நான் கருதவில்லை. சட்ட மறுப்பு இயக்கம் மாபெரும் மக்கள் திரளைக் கொண்டது. இவ்வியக்கத்தின் அடிப்படை பலவந்தமே. மேலும் அது ஓர் அதிரடிச் செயல்பாடு. பெருமளவில் நடத்தப்பட்டால் அது புரட்சியாகவே வெடிக்கக் கூடியது. புரட்சி என்றால், ரத்தப் புரட்சியாயினும் ரத்தம் சிந்தாப் புரட்சியாயினும் பலனில் பெருத்த வேறுபாடு இருக்காது. இது, எதை அடைவோம் என்ற உறுதியில்லாத குழப்பங்களையும் பேரழிவையும் விளைவிக்கும் ஆபத்து நிறைந்த முறையாகும். பிரெஞ்சுப் புரட்சியின் எடுத்துக்காட்டு நமக்குப் பாடமாயிருக்கிறது.

மக்களாட்சியை நிறுவுவதற்காகத் தொடங்கப்பட்ட அப்புரட்சி இறுதியில் குழு வல்லாட்சியைத்தான் நிறுவியது. பல நேரங்களில் புரட்சிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் புரட்சியையும், உண்மையான சமூக மாற்றத்தையும் ஒப்பிட, இரண்டுக்குமிடையே பெருத்த வேறுபாடுகள் பல இருப்பதை நாம் மறந்து விடலாகாது. போரின் வெற்றிகள் எவ்வாறு ஒரு நாட்டிடமிருந்து மற்றொரு நாட்டுக்கோ, ஓர் இனத்திடமிருந்து மற்றோர் இனத்துக்கோ அதிகார மாற்றத்தை விளைவிக்கின்றனவோ, அவ்வாறே புரட்சிகளும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினருக்கு அதிகார மாற்றத்தை விளைவிக்கின்றன. இப்படிப்பட்ட வெற்று மாற்றங்களால் நாம் மன நிறைவு அடைந்துவிட இயலாது.

சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பல்வேறு வித சக்திகளிடையே உண்மையான சமூக மாற்றத்தை விளைவிக்கும் வகையில், அதிகாரப் பகிர்வுடன் கூடிய அதிகார மாற்றமே நாம் கேட்கத்தக்கது. இந்த நிகழ்வு பல விட்டுக் கொடுத்தல்களின் அடிப்படையில் நடைபெற வேண்டிய ஒன்று. இத்தகைய விட்டுக் கொடுத்தல்களின் தேவையை உணர்ந்து செயல்படுத்துவதன் வாயிலாகவே ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் வளமான எதிர்காலத்திற்கு வழிபிறக்கும். இந்தியாவின் இன்றைய தேவை ஓர் அரசு அமைப்பது அன்று. விடுதலை கிடைக்கப் பெறுவதும் அன்று; விடுதலை பெற்ற ஓர் அரசை அமைப்பதுதான் இன்றைய தேவை.

பர்க்கின் சொற்களில் கூறுவதெனில், “ஓர் அரசை அமைப்பதற்குப் பெருத்த மதிநுட்பம் தேவையில்லை. அதிகார மய்யம் எதுவென நிர்ணயித்து, ஏனையோரை அதற்குக் கீழ்ப்படியக் கற்பித்தாலே போதும்; பணி முடிந்து விடும். விடுதலை அளிப்பது என்பதோ அதனினும் எளிது. அதற்கு நாம் வழிகாட்ட வேண்டுமென்பதில்லை; கடிவாளங்களிலிருந்து நமது கையை விலக்கிக் கொண்டாலே போதும். ஆனால் சுதந்திரமான அரசு அமைப்பதற்கு, அதாவது, சுதந்திரம், கட்டுப்பாடு என்னும் எதிரெதிரான கூறுகளை இணக்கமான அளவில் ஒன்றிணைத்துப் பதப்படுத்திடும் இப்பணிக்கு மிகுந்த சிந்தனையும் ஆழ்ந்த மதிநுட்பமும் தேவைப்படும்.” அதாவது, இனிய இணக்கமான விட்டுக் கொடுத்தல்களின் வாயிலாக அடையக்கூடிய இலக்கை நாம் சட்ட மறுப்பு இயக்கம் போன்ற அதிரடி முறையின் வாயிலாக அடைதல் இயலாது.

31. எனவே, பெரியோர்களே! சட்ட மறுப்பு இயக்கத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் கலந்து கொள்ளலாகாது என்று கருதுவதற்கான காரணங்களை நான் உங்கள் முன் வைத்துள்ளேன். வட்ட மேசை மாநாடு வழங்கும் அமைதியான பேச்சுவார்த்தைகள் வாயிலாகவே அவர்கள் இலக்கை நோக்கி முன்னேறலாம். தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்குப் போதுமான அளவில் பிரதிநிதித்துவம் எனும் கோரிக்கையை, வட்டமேசை மாநாட்டில் தகுதியும் நாணயமும் வாய்ந்த நம்புதற்குரிய பிரதிநிதிகள் மூலம் வலியுறுத்திப் பெறுதலே அவர்கள் முன்பு உள்ள உகந்த வழியாகும்.

தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் நிறுவன அமைப்பு

32. தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் பிரிட்டிஷ் அரசின் பக்கமோ, இந்திய தேசிய காங்கிரசின் பக்கமோ அணி சேர வேண்டுமேயன்றி, இரண்டுங்கெட்ட நடுநிலைப் போக்கைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால், பெருத்த இழப்புக்கு உள்ளாக நேரிடும் என்று எனது நண்பர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர். இந்தச் சிக்கல் குறித்துப் பலமுறை மீண்டும் மீண்டும் சிந்தித்து, இவ்விரு சாரரிடமும் இருந்து விலகி சுதந்திரமாக செயல்படுவதுதான் தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பாதுகாப்புக்கு உற்ற வழி எனும் உறுதியான முடிவுக்கு நான் வந்துள்ளேன். ஆனால் காங்கிரசுடன் சேருவதால் நாம் எவ்வாறு நமது தீர்வை நெருங்க முடியும் என்பது நமக்குப் புரியவில்லை. காங்கிரஸ் தீண்டாமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், அது ஒன்றுதான் மக்கள் வலிமை மிக்க இயக்கம் என்றும் கூறப்படுகிறது. காந்தியடிகளின் ஆதரவுடன், தீண்டாமைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அத்தீர்மானத்திற்கு செயல்வடிவம் தர காங்கிரஸ் என்ன செய்துள்ளது?

தனது திட்டங்களைச் செயலாக்கும் நோக்கில் கட்சி உறுப்பினர்கள் கதரணிய வேண்டுமென விதி வகுத்துள்ளது காங்கிரஸ். ஆனால், கட்சி உறுப்பினர்கள் தீண்டாமையைக் கைவிட வேண்டுமென்று காங்கிரஸ் ஏன் விதி வகுக்கவில்லை? அப்படியொரு விதி வகுத்தால் அதைச் செயல்படுத்துவது எளிதுதானே! அத்தகைய விதியை நிறைவேற்ற தீண்டத்தகும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது வீட்டில் பணியாளராகவோ, மாணவராகவோ தீண்டத் தகாதவர் ஒருவருக்கு இடமளிப்பதன் மூலம் இவ்விதியை எளிதில் செயல்படுத்தலாமே.

தீண்டாமையை அகற்றுவதற்கு காந்தியடிகள் மேற்கொண்ட முயற்சிதான் என்ன? அவருக்கிருக்கும் அளவு கடந்த ஆதரவையும் தனிப்பட்ட செல்வாக்கையும் செல்வ வலிமையையும் எண்ணிப்பார்க்கும்போது, அவர் சிறிதளவு முயற்சி எடுத்தால் கூட மிகுந்த பலன் கிடைக்குமல்லவா? அவர் தமது ராட்டை நூற்பவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் பயணம் மேற்கொள்கிறார். ஆனால் தீண்டாமைக்கு எதிராகப் போராடுவதற்காக என்றாவது அவர் தன் பயணத்தைத் தொடங்கியிருக்கிறாரா? ராட்டைக்காக அவர் செய்யும் செலவில் நூறில் ஒரு பங்குகூட இந்நோக்கத்திற்காக அவர் செலவு செய்ததில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்காக காந்தியடிகள் மூன்று வாரம் பட்டினி கிடந்ததை நாமறிவோம். தீண்டத்தகுவோர்க்கும் தீண்டத்தகாதோர்க்குமிடையே சற்றுப் பரிவான உணர்வுகள் நிலவுவதற்காக அவர் ஒரேயொரு நாளாவது பட்டினி இருந்ததுண்டா?

இவையெல்லாம் நடைபெற்றிருந்தால், காங்கிரசின் இலக்கை நாமும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் தீண்டாமை எனும் இழிவை அகற்றுவதற்கு, காங்கிரசார் உண்மையான முயற்சிகள் எடுத்தார்கள் என்பதற்கான சான்று எதுவும் இல்லை. அது மட்டுமன்றி, தீண்டாமைக்கெதிராக இருப்பதாக காங்கிரசார் விளம்பரம் தேடிக் கொள்கிறார்களேயன்றி, இது குறித்து செயல்பாட்டில் இறங்க அவர்களுக்கு விருப்பமேதும் இல்லை என்று மனம் வெறுத்த நிலையில், சித்தானந்த அடிகளார் காங்கிரசை விட்டே விலக நேர்ந்தது என்பதையும் கண்கூடாய் பார்த்தோம். காங்கிரசாரின் உண்மையான திறனை அதன் தீர்மானங்கள் வாயிலாகக் காண விரும்புவோர், அது பொது மக்கள் நலன் நாடும் கட்சி என்பதைத் தயக்கத்துடன்தான் ஏற்பர். அதன் பொருளாதாரத் தீர்மானங்கள் மேம்பட்ட, நடுத்தர மக்களின் நலன்களைத்தான் எதிரொலிக்கின்றன. அதன் வணிகம் குறித்த தீர்மானங்கள் – உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன்களில்தான் அக்கறை செலுத்துகின்றனவேயன்றி, உழைப்பாளி மக்கள்பால் கவனம் செலுத்துவது இல்லை.

ஒரு ஷில்லிங் 6 பென்னி கூலியை ஒரு ஷில்லிங் 4 பென்னி கூலியாய்க் குறைப்பதற்கு ஆதரவு தரும் இயக்கம் ஒன்று, பொது மக்கள் நல இயக்கம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் தகுதியை இழந்துவிடும். சட்ட மறுப்பு இயக்கத்தில் உப்பு வரி எதிர்ப்பைச் சேர்த்துக் கொள்வதால், அதற்குப் புதிய முகம் கிடைத்துவிடாது. உப்பு வரிக்கு எதிராகக் குரல் கொடுப்பது, அரசியல் போராட்டத்திற்கு கைகொடுக்கும் செயலே. ஆனால் தின்றால்தான் தெரியும் உணவின் தரம் என்பதற்கேற்ப, உப்பு வரி எதிர்ப்பின் உண்மையான நோக்கம் ஏழை மக்கள் நலன் என்பதை மெய்ப்பிக்க, அந்த வரிக்கு மாற்றாகப் பொதுமக்களைப் பாதிக்காத செல்வந்தர்கள் மீது மட்டும் சுமத்தப்படும் வேறொரு வரியை ஏற்றுக் கொள்ள, அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்களுடைய நோக்கத்தின் உண்மையைக் காலம்தான் நமக்குக் காட்ட வேண்டும்.

ஆனால் உண்மையான சோதனையை எதிர்கொள்ள நேரிட்டால், காங்கிரசார் தமது வகுப்பின் பக்கம் நிற்பார்களேயன்றி, பொதுமக்களுக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை. காங்கிரசார் சந்தர்ப்பவாதிகளாய், பொது மக்களுக்கு எதிராகவே நிற்பார்கள் என்பது வெளிப்படை. ஏனெனில், அதுவொரு தேசிய இயக்கமேயன்றி அரசியல் கட்சியல்ல. அதன் கொள்கைகளும் திட்டங்களும் அவியலாகத்தான் காட்சியளிக்கின்றன. பல்வேறு தரப்பட்டோரின் நலன்களுக்கும் ஆதரவாயிருப்பதாக ஓர் இயக்கம் அறிவிக்குமெனில், அதில் சில தரப்பாரின் நலன்களுக்குப் பெயரளவில்தான் ஆதரவு இருக்குமென்பதும், இரு தரப்பாரிடையே சிக்கல் வரும்போது வலிமை குன்றிய தரப்பினர் கைவிடப்படுவர் என்பதும் தெள்ளத் தெளிவானதே. நமது நலன்களுக்கு எதிரான வகுப்புகளின் ஆதரவோடு செயல்பட்டு வரும் காங்கிரஸ், தமது ஆதரவாளர்களுக்கு கோபமூட்டும் வகையில் நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் துணை நிற்கும் என்று நாம் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?

33. நமது மக்களில் காங்கிரசுக்கு ஆதரவாகத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டும் சில தரப்பினர், தன்னாட்சி எனும் இலக்கில் வெற்றி கண்ட பிறகு, தமது தொண்டுகளுக்குப் பரிசாக காங்கிரஸ் தீண்டாமையை ஒழித்துவிடும் என்று நம்புகின்றனர். இப்போது நாம் காங்கிரசுக்குச் செல்லவில்லையெனில், வெற்றிக்குப் பிறகு கடுமையாக ஒடுக்கப்படுவோம் என்று இவர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறு நன்றியை எதிர்நோக்கிச் செய்யப்படும் தொண்டுகளுக்குப் பரிசேதும் தரப்படுவதில்லை என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஆனால் இப்போது நான் உங்களுக்கு மிக ஈடுபாட்டோடு கூற விரும்புவது என்னவெனில், காங்கிரசுக்காக நாம் இப்போது எவ்வளவுதான் பாடுபட்டுத் தொண்டாற்றினாலும், தன்னாட்சியின் வெற்றிக்குப் பின்னர், காங்கிரஸ் எங்கேயென்று தேடித் தேடி சோர்வடையத்தான் நேரிடும். பிறகு நாம் நமது சொந்த வளங்களை நம்பித்தான் நிற்க வேண்டியிருக்கும்.

தன்னாட்சி எனும் தனது குறிக்கோள் நிறைவேறிய பின்னர் காங்கிரஸ் கற்பூரமாய்க் காற்றில் கரைந்து மறைந்து விடும். பின்னர் நாம் எதிர்கொள்ளப் போவது பல்வேறு வகை விருப்பு வெறுப்புகளும், போட்டி பொறாமைகளும் நிறைந்த மக்கள் திரள் எனும் பெருவிலங்கினையே (ஹாமில்டனின் உவமை). எந்த காந்தியடிகளின் பொறுப்பில் நமது இன்னல்களை நீக்கும் பணியை ஒப்படைத்துவிட அறிவுறுத்தப்படுகிறோமோ, அந்த காந்தியடிகளே, இந்திய சராசரி மக்களைவிட மிகுந்த வாழ்நாட்பேறு பெற்று நம்மிடையே வாழ்ந்து வந்தாலும், நம்மையெல்லாம் பாதுகாக்கும் திறனற்றவராகவே அப்போதும் இருப்பார்.

34. நான் எடுத்துரைத்த எனது கண்ணோட்டம் சரியாக இருக்குமெனில், நமது பாதையை நமக்காக நாமேதான் தேர்ந்தெடுத்துச் செயல் வடிவம் அளிக்க வேண்டும் என்பது புலப்படும். இத்தகைய தனிப் பாதையில் நடைபோடத் தயக்கம் காட்டுபவர்களின் அச்ச உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடியும். காங்கிரசாரிடமிருந்தும் அரசினரிடமிருந்தும் தனித்து விலகியிருப்பதில் மிகுந்த ஆபத்திருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இது, நமது வலுவின்மையை ஒப்புக் கொள்வதாகும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அதிகார வலிமையின் துணை ஏதுமின்றி, சுயேச்சையாக செயல்படுவது மகிழ்ச்சி கொள்ளத்தக்க நிலை அல்ல. ஆனால் அரசாங்கத்தையோ, காங்கிரசையோ சார்ந்து நிற்பதால் நாம் பெறப்போகும் பலன்கள் என்ன என்றுதான் நான் கேட்க விரும்புகிறேன்.

வலிமை வாய்ந்த தரப்பினர் நம்மைப் பற்றி அக்கறை காட்டுகிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் உவக்கும் படியாக நடந்து கொள்வோம் என்பது, தன்மானமற்ற பிச்சைக்காரர்களின் நெறி என்பதுடன், தன்மானமுள்ள மக்கள் எவரும் ஏற்க விரும்பாத கேவலமான சரணாகதியுமாகும். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சனை, தாங்கள் எவ்வாறு வலிமையான ஆற்றலாகத் திரண்டெழுந்து, எல்லா நிலைகளிலும் நமது நலன்களையும் கருத்துகளையும் அனைவருக்கும் எட்டச் செய்வது என்பதே.

தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் இயக்கம் இரண்டு கடும் பின்னடைவுகளினால் தத்தளிப்பதாகத் தோன்றுகிறது. முதலாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் ஒன்றுபட்ட பொதுக்கருத்து என்பதாக ஏதும் இல்லை. இரண்டாவதாக, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் முழுமையாக அணிதிரண்டு ஒன்றுபட்ட செயல்பாட்டில் இறங்குவதற்கான வழிவகை எதுவும் இல்லாதது. நமது குறைபாடுகளெல்லாம் நெடுங்காலமாகக் களையப்படாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம், நமது துன்பங்களை வெளிப்படுத்த வேண்டுமெனும் உணர்வுகூட இல்லாமல் – நெடுங்காலமாக நாம் ஊமைகளாகவே இருந்து பழகிவிட்டதுதான். நமது நிலைமைக்காக நாம் அரசாங்கத்தையோ, சீர்திருத்தவாதிகளையோ, நியாயமாகக் குற்றம் சாட்ட முடியாது.

இவ்வாறு குரல் எழுப்பாத நிலையில் நம்மை நாமே இருத்திக் கொண்டமை காரணமாக, நமது தேவைகள் குறித்த தெளிவான வழிநெறியோ, வலுவான ஆதரவோ கிடைக்காத நிலைக்குக் காரணமாக இருந்துள்ளோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நமது கூட் டங்களில் நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களோ, அரசாங்கத்திற்கு நாம் நிறைவேற்றுகின்ற தீர்மானங்களோ, அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் வேண்டுகோள்களோ, நமது சார் பில் நாம் எழுப்பும் கோரிக்கைகளோ இவை எதுவுமே – பிற சமூகங்களின் கோரிக்கைகள் அதிகாரத்தில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்ப்பது போன்று ஈர்க்கவில்லை என்பதற்கான காரணங்களை உன்னிப்புடன் சிந்தித்திருக்கிறேன். நாம் இன்னும் மாகாண அளவிலேயே செயல்பட்டுக் கொண்டிருப்பதால்தான் நாம் வலிவற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.

எந்தவொரு மாகாணத்திலேனும் நாம் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு, அது மத்திய நிறுவனம் ஒன்றால் வைக்கப்பட்டிருந்தால் கிடைக்கக்கூடிய அளவுக்கு, பிற மாகாணங்களிலிருந்து ஆதரவு கிடைப்பதில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு அவர்களது கருத்துகளுக்கு குரலாகவும், ஒன்றுபட்ட செயல்பாட்டுக்கு உற்ற கருவியாகவும் செயல்படக்கூடிய அனைத்திந்திய அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இதுவே ஏற்ற தருணம் என்று தோன்றுகிறது. ‘அனைத் திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் சங்கம்' என்ற அமைப்பு, கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஆனால் இந்தச் சங்கத்திற்கு அலு வலர்கள் உண்டே தவிர உறுப்பினர்கள் கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. சங்கத்தின் மாகாணக் கிளைகளின் நிலைமையும் இதுதான். இத்தகைய போலி, மாயத்தோற்ற சங்கத்தினால் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு சேவை எதுவும் செய்திட

இயலாது. உங்களுக்கென்று உயிர்ப்புள்ள ஓர் அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் தழுவிய அளவில், உண்மையான சமூகத் தொண்டர்கள் அனைவரையும் பல்வேறு கிளை அமைப்புகளின் வாயிலாக ஒன்றுதிரட்டி இணைப்பதாகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் உண்மையான உணர்வு களை எடுத்துரைப்பதாகவும் இருக்க வேண்டும்.

நான் விளக்கியவாறு அமையக்கூடிய நிறுவனம் ஒன்றுக்கான அமைப்புச் சட்ட விதிகளை உருவாக்க இக்கூட்டத்தில் சிறிய குழு ஒன்றை நியமிப்பீர்கள் எனில், அது பெரும் தொண்டாக அமையும். இது ஒரு பெரும் தீர்மானமாகும்! தாமதமின்றி அது நிறைவேற்றப்பட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் மேம்பாடு

35. பெரியோர்களே! நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்பதன் அவசியம் குறித்து தேவைக்கு அதிகமாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்புகளிடமிருந்து தீய பழக்கங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். தீய வழிகளில் வாழ்வதிலிருந்து மேம்பாடு தேவை. நட்புக்கும் மதிப்புக்கும் தகுந்தவர்களாக நாம் ஆகும் வகையில் வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை. கல்வி பெறுதல் கட்டாயமான தேவை. எழுத, படிக்க, பேசத் தெரிந்து கொள்ளுவது மட்டும் போதாது. நம்மில் பலர் கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி, பொது மதிப்பிலும் உயர்வு பெற பாடுபட வேண்டும். தங்கள் அவல நிலையிலேயே மன நிறைவு கொண்டு வாழும் போக்கை வலிந்து மாற்றி, மன நிறைவு காணா போக்குதான் நமது மேம்பாட்டுக்கு ஊற்றுக்கண் என்பது உயர்த்தப்பட வேண்டும்.

கடைசியாக, ஆனால் முக்கியத்துவத்தில் குறையாத தேவை, தாழ்த்தப்பட்ட வகுப்புகள் அச்சங்களை அறவே உதறி, மற்றெல்லாரையும் போன்று சமமான மனித உரிமைகளைக் கோரிப் பெற்று வாழத்தக்க வகை யில் ஊக்கமும் ஆற்றலும் அளிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதால் மட்டுமே நாம் இதைப் பெற்றுவிட முடியாது. நமது குறிக்கோளுக்கான வழிதான் அரசியல் அதிகாரம் என உணர வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் சிலர் சட்டமன்ற உறுப்பினர்களாவதால் மட்டுமே அவ்வகுப்புகளுக்கு விடுதலை கிட்டி விடுமென்னும் மூட நம்பிக்கை அகல வேண்டுமென்பதற்காகவே இதை நான் வலியுறுத்துகிறேன். இவை அனைத்தும்தான் சமூக மேம்பாடாகும். இவை அனைத்தும் திரு. கோகலே அமைத்த ‘இந்திய சமுதாயத் தொண்டர் சங்கம்' போன்றோ, காலஞ்சென்ற லாலா லஜபதிராய் அமைத்த ‘மக்கள் தொண்டர்களின் சங்கம்' போன்றோ அமைக்கப்படும் தொண்டு நிறுவனங்களின் வழியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

முடிவுரை

36. பெரியோர்களே! நல்ல குறிக்கோள்தான் எனினும், அரசியலில் அதிகம் பழக்கமில்லாத மக்கள் முதன் முதலாக ஒன்றுதிரண்டு, தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவுகளைச் செய்ய வேண்டிய கட்டத்தில், சிக்கலின் பரிமாணங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்துவதன் தேவை கருதியே உரை நீண்டு விட்டது. என்னால் முடிந்த அளவுக்கு வழி காட்ட வேண்டும் எனும் ஆவலே நீண்ட உரைக்கு என்னை உந்தியது. இது நமது இறுதிக் கூட்டமாக அமையாமல், மாபெரும் இயக்கம் ஒன்றின் தொடக்கமாக அமைந்து, நமது மக்களின் உயர்வுக்கு வழியமைப்பதாகவும், நமது நாட்டில் மனிதர்கள் அனைவரும் எல்லா வகையிலும் அரசியல், சமூகம், பொருளாதார என அனைத்திலும் – அனைவருக்கும் ஒரே வகையான மதிப்பு எனும் நிலையில் அமையும் சமூகத்தை நிறுவவும் இது ஒரு தொடக்கமாக அமையும் என நம்புகிறேன்.

(நாக்பூரில் 8.8.1930 அன்று நடைபெற்ற அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் மாநாட்டில் பாபா சாகேப் அம்பேத்கர் ஆற்றிய தலைமை உரை. டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3) பக்கம்: 24 – 59)

Pin It