கொடி ஏற்றத்துக்கே
ஆடிப் போயிருக்கிறார்கள்!
நவாலி
நாகர் கோவில்
செஞ்சோலை என்று
நீங்கள் போட்ட இரத்தக் கோலங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது
தமிழனின் விமானம்.

தமிழன் விமானம்
மேலே பறக்கும் போதெல்லாம்
கீழே பறக்கிறதாம் சிங்களவரின்
மானம்

தமிழர் வான்படை மீது
சிலருக்கு சந்தேகமாம்
கப்பல்
ஓட்டிய தமிழனின் பேரன்
விமானம் ஓட்ட மாட்டானா
என்ன?

இலங்கை
ஒரு சொர்க்க நாடென
விமானம் ஏறும் பயணிகளே கவனிக்க
சிலவேளை அங்கே
மோட்சமும் கிட்டலாம் என்பதையும்
கவனத்திலே வைக்க!

இலக்குகள்
தவறுகின்ற போது மட்டுமே
எங்கள்
உயிர் பிழைக்கிறது
ஏன் எனில்
அரச படைகளின் இலக்குகள்
மக்கள் தானே!

கொடி ஏற்றத்துக்கே
ஆடிப் போன அரசு
கடைசித் திருவிழாவுக்கு
என்ன செய்யுமோ?

****** 


வயிற்றிலே வளர்ந்த கொடிக்கு
கத்தி வைப்பதோ …!
அர்த்தத்தை மறந்து போனது
அசோகச் சக்கரம்
இல்லாவிடில்
கொலைகார அரசுக்கே
ஆயுதம்
கொடுக்குமா …?

அதன் வெளியுறவுக் கொள்கை
தொங்குவதோ
பார்ப்பனியத்தின் நூலிலே
அல்லாது விடில்
பகையை நட்பாகவும்
நண்பரைப் பகைவராசுவும்
தவறாகச் சிந்திக்குமா இந்தியா …

இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும்
ஆயுத விடயத்தில் மட்டுமே
பாகிஸ்தான் எலியும்
பாரதப் புனையும்
பங்காளிகள்

பந்தடியினையே
போர்போல பார்க்கும்
பாரதம்
போர் நடக்கும் ஈழ புமியை
ஏனோ
விளையாட்டாகப் பார்க்கிறது.

பாரதம்
எமை இப்போ
பாராது போகலாம்
தமிழ்நாடோ
நீயுமா கத்தி வைக்கிறாய் …
உனது வயிற்றிலே
வளர்ந்த கொடிகளுக்கு

மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It