வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்குகளில் மிகவும் கொடூரமானதும் துணிகரமானதுமான வன்கொடுமை, மேலவளவு பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். 30.6.1997 அன்று நடைபெற்ற சம்பவம் தொடங்கி இன்றுவரை அவ்வழக்கு சந்தித்துள்ள / சந்தித்து வரும் திருப்பங்கள் திடுக்கிடச் செய்பவை. அவை குறித்து தனிப் புத்தகம் எழுதுமளவிற்கு தகவல் களஞ்சியம் கொண்டது அது. இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்ந்துள்ள ஆதிக்க சாதியினர், காவல் துறையின் பல்வேறு தகுதி நிலையிலான அதிகாரிகள், நீதித்துறையில் உள்ள பல்வேறு நீதிபதிகள், தலித் இயக்கங்கள் ஆகியோரின் பங்கேற்பு வன்கொடுமை வழக்குகளுக்கு என்னென்ன விதமான இடையூறுகள் வரக்கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ளது மேலவளவு ஊராட்சி மன்றம். 1996ஆம் ஆண்டிற்கு முன் இதன் தலைவர் பதவியை அங்குள்ள பெரும்பான்மை ஆதிக்க சமூகத்தினரான கள்ளரில் ஒரு பிரிவினரான அம்பலக்காரர்கள் வகித்து வந்துள்ளனர். இவ்வகையில் கடைசியாக மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் அழகர்சாமி. 1992ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட 73ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, அரசு நிர்வாகம் அடித்தட்டு மக்களைச் சென்றடைய பஞ்சாயத்துகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டுமெனக் கூறியது. அதனடிப்படையில் தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டத்தை இயற்றியது. அப்போது பொதுத் தொகுதியாக இருந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவி, 1996ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிப் பதவியாக மாற்றம் செய்யப்பட்டது.

இதுநாள் வரை தங்களுக்கு கீழே இருந்த தலித்துகள் தங்களுக்கு மேலே வந்துவிடுவார்களோ என்று, ஒரு தலித்தை தலைவராக ஏற்றுக் கொள்ளாத மனநிலையிலிருந்த ஆதிக்க சாதியினர், இது குறித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டினர். இருப்பினும், தங்களுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி கிடைத்த புதிய உரிமையை கைக்கொள்ள தலித் மக்கள் ஆர்வம் காட்டினர். தி.மு.க.வைச் சேர்ந்த முருகேசனும் மற்றும் சிலரும் 10.9.1996 அன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், ஆதிக்க சாதியினர் அவர்களை மிரட்டவே, அவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

மேலூர் வட்டாட்சியர் நடத்திய சமாதானக் கூட்டத்தில், ஆதிக்க சாதியினர் அரசு ஆணைக்குக் கட்டுப்படுவதாக உறுதி அளித்தனர். அச்சத்தால் தலித் மக்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, 9.10.1996 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தேர்தல் நடத்தப்படவில்லை. மீண்டும் 28.12.96 அன்று நடைபெற்ற தேர்தலில் முருகேசன் உட்பட சிலர் போட்டியிட்டனர். தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஆதிக்க சாதியினர் வாக்குச்சாவடிக்குள் புகுந்து, மக்களைத் தாக்கிவிட்டு வாக்குப்பெட்டிகளை தூக்கிச் சென்று தேர்தலை தடுத்துவிட்டனர். காவல் துறையின் பலத்த காவலுடன் மீண்டும் 31.12.1996 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. ஆதிக்க சாதியினர் இத்தேர்தலைப் புறக்கணிக்க, தலித் மக்கள் மட்டுமே வாக்களித்து, இறுதியில் முருகேசன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு ஆதிக்க சமூகத்தினர் முருகேசனுடன் தந்திரமாகப் பழகி, ஊராட்சி மன்றத்தின் ஒப்பந்தப் பணிகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் ஊராட்சி மன்றத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிய முடியாத அளவிற்கு முருகேசன் தடுக்கப்பட்டார். முதன்முறையாக 10.9.1996 அன்று முருகேசனும் மற்ற தலித் மக்களும் வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தங்கள் எதிர்ப்பையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தலித் மக்களின் மூன்று குடிசைகளுக்கு தீ வைத்தனர் ஆதிக்க சாதியினர். முருகேசன் ஊராட்சி மன்றத் தலைவராக வந்தபிறகு தீ வைக்கப்பட்ட குடிசைகளின் உரிமையாளர்களுக்காக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.

இது குறித்து நிவாரணம் கோரி 30.6.1997அன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரை சந்திக்க, முருகேசன் பாதிக்கப்பட்டவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அன்று மாவட்ட ஆட்சியர் இல்லாததால் அவரது உதவியாளரைப் பார்த்தனர். அங்கு வந்திருந்த மேலவளவு மனோகரன் (செட்டியார் சமூகம்), இவர்கள் எந்தப் பேருந்தில் ஊர் திரும்புவார்கள் எனக் கேட்டு, கே.என்.ஆர். பேருந்தில் முருகேசன் உட்பட மற்றவர்களும் ஊர் திரும்ப உள்ளதைத் தெரிந்து கொண்டார். அவ்வாறே அந்தப் பேருந்தில் புறப்பட்டனர்.

மேலூர் வந்ததும் குற்றவாளிகள் சிலரும் தலித் சமூகத்தைச் சார்ந்த சிலரும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். வண்டி அக்ரகாரம் பழைய கள்ளுக்கடைமேடு என்ற இடத்தின் அருகே வந்ததும், பேருந்தில் வந்த துரைபாண்டி என்பவர், ஓட்டுநரை வண்டியை நிறுத்தும்படி கூச்சல் போட்டார். அதே சமயம், சென்னகரம்பட்டி ராமர் தலைமையில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டது.

பேருந்தில் வந்த முருகேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர்) பூபதி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசன் தலையை உடம்பில் இருந்து தனியாக வெட்டி எடுத்து, அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிணற்றில் போட்டனர். கொல்லப்பட்டவர்களில் முருகேசன் மற்றும் ராஜா இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள்.

25.9.97 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு மா. சுப்பிரமணியன் என்ற துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணையை மேற்கொண்டார். அவருக்கு உதவியாக காவல்துறையின் குழுக்கள் செயல்பட்டன. 85ஆவது நாளில் 25.9.97 அன்று குற்றப்பத்திரிகை 41 பேர் மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது (90 நாட்கள் முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதிருந்ததால், கைதானவர்களை பிணையில் தவிர்க்க முடியாமல் விடுவித்தாக வேண்டும் என்பது சட்டவிதி). குற்றம் சாட்டப்பட்டவர்களது பட்டியலில் 40 பேர் காட்டப்பட்டனர்.

1998 மார்ச் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் பெரும்பான்மையினருக்குப் பிணை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலருக்கு நிபந்தனையற்ற பிணை வழங்கப்பட்டது. இருப்பினும், பெரும்பாலான குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலவளவிற்குத் திரும்பியதால், தலித் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் செல்வாக்குள்ள முக்கியமான ஓரிருவர் சம்பவ சாட்சிகளான தலித் மக்கள் சிலரிடம் மறைமுக மிரட்டலில்ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கு காரணமாக இது குறித்து அவர்களால் நேரடியாக ஒன்றும் செய்ய இயலவில்லை. முருகேசனின் தம்பி கருப்பையா இச்சூழ்நிலையை விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்தார். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இத்தகவல்களைக் கேள்விப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் பொ. ரத்தினமும், இக்கட்டுரையாளரும், மற்ற சக வழக்குரைஞர்களும் இச்சூழ்நிலை குறித்துப் பெரும் கவலையடைந்தனர். 1998 ஏப்ரல் மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அப்போதிருந்த மன்மோகன் சிங் லிபரான் (பாபர் மசூதி இடிப்பு குறித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதியாக தற்பொழுது உள்ளார்) அவர்களை சந்தித்து நிலைமையை விளக்கி, இச்சூழலால் வழக்கில் சாட்சிகளாக உள்ள தலித் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமெனில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பிணையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, 75 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்ட மனுவை உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரப்படி நடவடிக்கை எடுக்க, இரு நீதிபதிகள் கொண்ட ஆயத்தின் விசாரணைக்கு அம்மனுவை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயராம் சவுத்தா மற்றும் பி. பக்தவச்சலு ஆகியோர், மனுதாரர்களான வழக்குரைஞர்கள் வழக்கில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட நபர்களோ, அரசோ அல்லர்; அவர்கள் வழக்கிற்கு மூன்றாம் தரப்பினர். எனவே, அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று இவ்வகையில் உயர் நீதிமன்றத்தின் தன்னதிகாரத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை என்று அதிரடித் தீர்ப்பு வழங்கினர்.

இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் பொ. ரத்தினம் (முதலாம் மனுதாரர்) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பிணை ரத்து குறித்த குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவை ஆய்ந்து அளித்த தீர்ப்பு, மிகவும் முன்னோடித் தீர்ப்பாக இன்று வரை அறியப்படுகிறது. அதற்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்புகள், “ஒரு குற்றம் சாட்டப்பட்டவரின் பிணை உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனுவை குற்றவியல் வழக்கைத் தொடுத்து நடத்தும் அரசோ அல்லது அவ்வழக்கில் குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது உறவினரோதான் தாக்கல் செய்ய முடியும்” என்றிருந்த நிலையை மாற்றி, வழக்கில் நேரிடையாகத் தொடர்பற்ற ஆனால் அக்குறிப்பிட்ட வழக்கின் தன்மையில் உண்மையான, நேர்மையான அக்கறையுள்ள நபர்களும் பிணை ரத்து மனு தாக்கல் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பில் (ரத்தினம்-எதிர்-அரசு (2000) 2SCC 391) சட்ட விளக்கமளித்தது.

இத்தீர்ப்பின் காரணமாக மேலவளவு படுகொலை வழக்கு, சட்டரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததால், இதற்குப் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வட்டாரத்தில் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய வழக்கு என்ற தனிக்கவனம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்னொரு செய்தியையும் இங்கு பதிவு செய்வது, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் நீதிமன்றத்தை எவ்விதம் அணுகலாம் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக அமையும்.

மேலவளவு வழக்கின் விசாரணை மதுரையிலேயே நடத்தப்பட்டால், மதுரை மற்றும் பிற தென்மாவட்டங்களில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆதிக்க சாதியின மக்களே பெரும்பான்மையினராக இருப்பதால், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சியளிக்க பல்வேறு விதமான இடையூறுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை நிகழும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, ஏற்கனவே பாதிக்கப்பட்ட தரப்பினரை அச்சுறுத்துதல், சாட்சிகளை விலை பேசுதல் போன்றவை நிகழ்ந்ததாலும் வழக்கு விசாரணையை வேறு வட மாவட்டத்திற்கு மாற்றக்கோரி, பாதிக்கப்பட்டோர் சார்பில் மனு செய்யப்பட்டது. இம்மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த போதுதான் உச்ச நீதிமன்றத்தின் மேற்கூறிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் பின்னரே உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டோர் தரப்பு கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தது. எனவே, வழக்கு விசாரணை மதுரையிலிருந்து சேலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

வழக்கு விசாரணையை சேலத்தில் நடத்த மூத்த குற்றவியல் வழக்குரைஞர் திருமலைராஜன் அவர்களை அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞரான நியமனம் செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்டோர் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது அரசு உத்ததரவு ஏதும் பிறப்பிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து ஒரு மனுவம் தாக்கல்
செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலவளவு வழக்கை நடத்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். அவருடன் மற்றொரு மூத்த குற்றவியல் வழக்குரைஞரான ப.பா. மோகன் அவர்களும் வழக்கு விசாரணையை திறமிக்க வகையில் நடத்தினார். பல்வேறு இடையூறுகளைக் கடந்து நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் 26.7.2001 அன்று வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; 23 நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு நிலுவையிலிருக்கும் காலத்திற்கு தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று அவர்கள் தாக்கல் செய்த பிணை மனுக்கள், முதல் சுற்றில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் செய்யப்பட்ட எதிர் மனு காரணமாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டது. மேலவளவு போன்ற கொடூரமான சாதி வெறி காரணமாக நடந்த கொலை வழக்கில், உயர் நீதிமன்றம் வழக்கமான கொலை வழக்குகளில் பிணை வழங்குவது போல் வழங்கியது, மனித உரிமை மற்றும் தலித் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.

-காயங்கள் தொடரும்
Pin It