Rally for disabled

வேலூருக்குப் போகும் போதெல்லாம் பேராசிரியர் அய். இளங்கோவன் அவர்களை சந்திக்க விரும்புவேன். அவருடன் உரையாடிவிட்டு கிளம்பும் போது மனதில் தன்னம்பிக்கையின் அளவும், துணிச்சலின் முனைப்பும் கூடியிருக்கும். சில நேரங்களில் புதிய சிந்தனையின் கீற்று குடிசையின் உள் பாயும் கூரைக் கதிரொளியின் நேர்த்தியோடு விழும். மனம் உற்சாகம் கொண்டு விடும்.

அண்மையில் அவரை சந்தித்தபோது அலைகள் நிரம்பிய குளமென நாற்புறமும் பரந்து அலைந்து கொண்டிருந்த பேச்சு, ஒரு தருணத்தில் நீர்ச்சுழியைப்போல மய்யம் கொண்டு ஓரிடத்தில் வந்து நின்றது. இயலாதவர்களைக் குறித்த அவல நிலையினை அவர் பேசினார். இச்சமூகத்தில் அவர்கள் ‘சம பங்காளிகள்’ என்றார் அவர். வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேராசிரியருடன் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தது மனம். இயலாதோருக்கான ஆதரவுப் பணிகளில் ஈடுபடும் தம்பி காமராஜ் ஒருமுறை என்னிடம் சொன்னார் : “கல்லூரி சுற்றுலாவில் என்னை அழைத்துப் போகாமல் விட்டுவிட்டார்கள். என்னால் நடக்க முடியாது என்றார்கள் அவர்கள். ஆனால் நான் இன்று தனியாகவே இந்தியா முழுவதும் சுற்றுகிறேன்.''

இந்தச் சமூகத்தில் இயலாதோர் சம பங்காளிகளாக இருக்கிறார்களா? தம் குடும்பத்தினராலும், பிற மனிதர்களாலும் அவர்கள் சம பங்காளிகளாகக் கருதப்படுகின்றார்களா? இந்த எளிய கேள்வி புறக்கணிப்புகளாலும், கேலிகளாலும், அவமானங்களாலும், துயரங்களாலும் தொப்பலாய் நனைந்து எழ முடியாமலிருக்கிற கேள்வி. பல கண்ணீர்க் கதைகளைக் கொண்ட கேள்வி.

இயலாதவர்களிடம் இந்தச் சமூகம் இரக்கம் கொள்கிறது. கருணை காட்டுகிறது. பரிதாபப்படுகிறது. ஆனால், உரிமைகளை மட்டும் வழங்க மறுக்கிறது. தன் மீது இரக்கம் கொண்டு பிச்சைப் போடுவதை ஓர் இயலாத மனிதன் எப்போதுமே விரும்புவதில்லை. மாறாக, தனக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகளையே அவன் பெற விரும்புகிறான். ஆனால், தான் எதிர்கொள்ளும் இயலாத மனிதனுக்குப் பிச்சையிட்டு விட்டு, அந்த நாணயத்தைப் போலவே மதிப்பு குறைந்த பரிதாபத்தின் உணர்வினை – ‘ச்சே', ‘உச்’ - என்று ஒலியாக உதிர்த்துவிட்டு கடந்து சென்றுவிட பொது சமூகம் பழக்கப்பட்டு விட்டிருக்கிறது.

நமது மொழியில், சிந்தனையில், மரபிலேயே இந்த வழக்கம் மாறாமல் இருந்து வருகிறது. ‘மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது’ என்று அவ்வை பாடியதை அடிக்கடி நினைத்துக் கொள்கிறது பொது சமூகம். மனிதராய் பிறப்பதில் என்ன அரிய தன்மை இருக்கப் போகிறது? இந்தியாவில் மிக எளிமையானது குழந்தையைப் பெற்றெடுப்பது தான். உடல் குறைபாடு இல்லாமல் பிறப்பது இன்னும் அரிது என்று புளகாகிதம் அடைகிறது. மனக்குறைபாடும், செயல்குறைபாடும், திறன் குறைபாடும், அறிவுக் குறைபாடும், வாழ்க்கைக் குறைபாடும், உடல்நலக்குறைபாடும் இல்லாத மனிதர்கள் யாருமே உலகில் இல்லை. இவற்றை இச்சமூகம் மறந்து விடுகிறது.

கடவுளர்களின் அற்புதக் கதைகள் பலவும்கூட, உடல் குறைபாடு உடையவர்களை குணப்படுத்திய அரிய செயலைத் தான் விவரிக்கின்றன. சமூகக் குறைபாடுகளையும், வாழ்க்கைக் குறைபாடுகளையும் சிந்தனைக் குறைபாடுகளையும் கடவுளர்கள் குணப்படுத்தியதாக எந்தக் கதைகளும் இல்லை. இயலாதவர்களைப் பற்றி சிந்திக்கும் அறிஞர்கள் இயலாமை ஒரு குறையல்ல, இச்சமூகம் தான் குறையுள்ளது என்கிறார்கள். இக்கருத்தை பொதுச் சமூகம் பொருட்படுத்தத் தவறிவிடுகிறது.

அரசு அலுவலகங்களுக்கோ, பிற அலுவலகங்களுக்கோ இயலாதவர்கள் போகின்ற போது அங்கிருக்கும் ‘அரிய’ மனிதர்கள் அருவருப்படைகிறார்கள், எரிச்சல் கொள்கிறார்கள் அல்லது வெகுவாய் இரக்கப்பட்டு சில சலுகைகளை வழங்குகிறார்கள். பேராசிரியரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தின் ஊளைச் சதையாக, வெட்டி எறியப்பட வேண்டியவர்களாக நினைக்கப்படுகிறார்கள் இவர்கள். பேருந்துகளில் இயலாதோருக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதில் ஓர் இயலாதவர் பயணம் செய்வதை வழக்கமாக நம்மால் பார்க்க முடிவதில்லை. தொடர் வண்டிகளிலும் இதே நிலைதான். இயலாதவர்களுக்கென இருக்கும் இருக்கைகள் பிறரால்ச் பயன்படுத்தப்படுவதோடு, அவர்களுக்கென்று இருக்கும் தனிப் பெட்டிகளும் கூட மற்றவர்களாலேயே ஆக்கிரமிக்கப்படுகின்றன.

அரசு அலுவலகங்கள், ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலைங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற எவற்றிலுமே இயலாதோர் நுழைவதற்கும், மேல்மாடிகளுக்குச் செல்வதற்கும் சாய்தள வழிகள் கிடையாது. கடும் இயலாதோர் அக்கட்டடங்களில் தவழ்ந்தோ, மண்டியிட்டோதான் செல்ல வேண்டும். இப்படி ஒவ்வொரு நிலையிலும் இயலாதவர்களுக்கான உரிமை மறுப்புகளும் புறக்கணிப்புகளும் தொடர்கின்றன.

இயலாதோரை நொண்டி, முடவன், குருடன், செவிடன், ஊமை என்றெல்லாம் பல வகைகளில் அழைக்கின்ற வழக்கம் இங்கு உண்டு. இச்சொற்களில் இருக்கும் இழி தன்மையையும், குரூரத்தையும் கருத்தில் கொண்டு உடல் இயலாதோரை அழைப்பதற்கென புதிய சொற்கள் இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளன. உடல் ஊனமுற்றோர் என்று அழைக்காமல் ‘இயலாதோர்’, ‘மாற்றுத்திறன் படைத்தோர்’ என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். ஆனால் இச்சொற்கள் மிகவும் குறைந்த அளவிலேயேதான் பயன்பாட்டில் உள்ளன. பத்திரிகைகளும் கூட வழக்கமான சொற்களையே தான் பயன்படுத்தி வருகின்றன.

இந்த மக்கள், சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு நல்ல கல்வியும், வேலைவாய்ப்பும் கொடுத்தால் அவர்களை உள்ளடக்கி இந்தியாவே முன்னேறும். ஆனால் நிலைமை அவ்வாறில்லை. அவர்கள் தமது இயலாமையோடு, பல்வேறு வகையான சமூகப் பிரச்சினைகளையும் சந்திக்கின்றனர். இயலாதோர்களை கொண்ட குடும்பங்கள் வறிய நிலையில் இருக்கின்றன. உடல் குறைபாடு உடையவர்களைக் காட்டிலும் இயலாதோருக்கான வேலைவாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

1991இல் 43 சதவிகிதம் இருந்த இயலாதோருக்கான வேலைவாய்ப்பு, 2002 இல் 38 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தனியார் துறைகளில் இவர்களுக்கான இடமே இல்லை என்று சொல்லிவிட முடியும். தனியார் நிறுவனங்களில் 0.3 சதவிகித இயலாதோர் பணியில் இருக்கின்றனர். 0.05 சதவிகித இயலாதோர் பன்னாட்டு நிறுவனங்களில் பணியில் உள்ளனர்.

இந்தப் போக்கிற்கு சமூகத்தில் நிலவும் ஒரு தவறான கருத்தே காரணமாக இருக்கிறது. உடல் குறைபாடு கொண்டோரால் சரியாக உழைக்க முடியாது என்ற கருத்தே அது. ஆனால், இயலாதோர் செய்யும் வேலையின் தன்மை பிறரை விடவும் மிகச்சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

கல்வி பெறுவதில் இவர்களுக்குச் சிரமங்கள் இருக்கின்றன. இயலாதோரில் 52 சதவிகிதத்தினர் படிக்காமல் இருக்கிறார்கள். தமிழகத்தில் 33 சதவிகித இயலாதோர் பள்ளிகளில் இருக்கின்றனர். இயலாதோர் கல்வி கற்பதிலும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதிலும் இருக்கின்ற சிரமங்களை பேராசிரியர் அய். இளங்கோவன் விளக்குகிறார். இம்மக்களின் நலன்களுக்காக இதுவரை ஏழு பொது நல வழக்குகளைத் தொடுத்து, புரட்சிகரமான தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறார் அவர். அவற்றில் ஒன்று கல்விக்காகப் போட்டது.

அவர் குடும்பத்திலிருக்கும் செவித்திறன் குறைந்த குழந்தையொன்று நான்கு ஆண்டுகளாக சென்னையில் இருக்கும் ஒரு சிறப்புப் பள்ளியில் படித்து வந்தது. அப்பள்ளியின் மருத்துவ ஆலோசகர்களின் கருத்தின் பேரில் அக்குழந்தையை அவர் வேலூரில் உள்ள ஆக்சீலியம் தொடக்கப்பள்ளியில் சேர்க்க விரும்பினார். அக்குழந்தைக்காகவே தமிழ் வழிக் கல்விப்பிரிவில் இரண்டாம் வகுப்பில் இடம் கேட்டு விண்ணப்பித்த போது பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது.

செவித்திறன் குறைந்த குழந்தையை பொதுப் பள்ளியில் சேர்க்க முடியாது என்றது நிர்வாகம். இதை எதிர்த்துப் பெறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பின்னர் அக்குழந்தை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு வார்த்தையும் பேசாத அக்குழந்தை, இன்று இயல்பானவரைப் போல பேசுகிறது. இதுபோல எத்தனை பேரால் நீதிமன்றம் போக முடியும்? இதைப்போன்ற எண்ணற்ற குழந்தைகள் படிக்காமல் தமிழகம் முழுவதும் கேட்பாரற்றுக் கிடப்பது இப்படித்தான் நடக்கிறது.

இயலாதவர்களுக்கான வேலையிடங்கள் இப்படித்தான் நிரப்பப்படாமல் இருக்கின்றன. பேராசிரியர் இளங்கோவன், ‘கடும் இயலாதோருக்கான தேசிய பயிற்சிக் குழு’வின் தமிழக உறுப்பினர்களில் ஒருவரான காமராஜ் ஆகியோரால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இயலாதோர் தேசிய சட்டம் 1995 இன் படி (PWD ACT 1995) நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் 3% இயலாதோருக்காக ஒதுக்கப்பட வேண்டும் (விழி, செவி, உடல் குறைபாடுடைய ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு சதவிகிதம்). ஆனால் இச்சட்டம் இன்று வரையிலும் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள பல துறைகளுக்கும் மனு செய்ததில், அத்துறைகளில் 3 சதவிகிதம் இன்னும் நிரப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. பால் வளத்துறையில் இயங்கும் ‘ஆவினில்’ ஓர் இயலாதவரும் பணியில் இல்லை. பள்ளிக் கல்லூரிகளிலும் இதே தான் நிலை. அரசுக் கல்லூரிகள் 67, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 160 ஆகியவற்றில் சுமார் 1,290 பணியிடங்கள் உள்ளன. கடந்த முறை 1000 பணியிடங்கள் அரசு கல்லூரிகளில் நிரப்பப்பட்டபோது 3 சதவிகித இடங்கள் வேண்டும் என்று இளங்கோவன் அவர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டு தீர்ப்பு பெறப்பட்டது. பார்வையற்றோர் மற்றும் கையில் குறைவுடையோருக்கு இடம் ஒதுக்கிய அரசு, செவித்திறன் அற்றோருக்கு இடம் மறுத்திருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா அவர்கள் மய்ய அரசால் 18.1.2007 அன்று வழங்கப்பட்ட அறிவிப்பை சுட்டிக்காட்டி, செவித்திறன் அற்றோருக்கும் ஆசிரியர் பணியிடங்களை 1 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். மய்ய அரசு செவி, விழி மற்றும் அவையக்குறையுடையோர்க்கான பணியிட சிக்கல்களை ஆராய தனித் தனிக் குழுக்களை அமைத்தது. அக்குழுக்கள் மிகத் தெளிவாக இவர்களுக்கு ஆசிரியர் பணியிடங்களை வழங்கலாம் என்றும், இக்குறைபாடு உடையோர் பாடம் நடத்துவதற்கேற்ற உபகரணங்களை வாங்கித் தரவேண்டியது அரசுத் துறையின் பொறுப்பு என்றும் கூறியிருந்தது. இதை நீதிபதி அவர்கள் தமது தீர்ப்புரையில் சுட்டியிருந்தார்.

அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் 160 இல் உள்ள சுமார் 8000 பணியிடங்களில் மாற்றுத்திறன் படைத்தோருக்கென சுமார் 230 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் 30 பேர் கூட இக்கல்லூரிகளில் இல்லை. இக்கல்லூரிகளில் 67 கல்லூரிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுபவை. அங்கே இடஒதுக்கீடு செல்லாது என்பதால், அவர்கள் மாற்றுத்திறன் படைத்தோருக்கான இடங்களை நிரப்ப மறுத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் 383இல் 18 பணியிடங்கள் மாற்றுத்திறன் படைத்தோர்க்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஓரிடம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம், கடந்த ஆண்டு பலவகையான துறைகளில் உள்ள சுமார் 8000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தந்திருந்தது. இதில் 100 தட்டச்சர் மற்றும் 15 சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கும், இதைப்போன்ற 123 பணியிடங்களுக்கும் 3 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பொது மனு செய்திருந்தார் இளங்கோவன். இவ்விடங்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டபோது, மாற்றுத்திறன் கொண்டோருக்கான 3 சதவித இடங்கள் அதில் வரவில்லை.

மாவட்ட அளவிலான துறையையே ஓர் அலகாக எடுத்துக் கொண்டு பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அரசு பதில் மனுவில் தெரிவித்திருந்தது. மேலும் சில பணியிடங்களில் இயலாதோருக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இடம் தரவில்லை என்றும் அரசு கூறியிருந்தது. இவ்வழக்கிலும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா அவர்கள் அற்புதமான தீர்ப்பினை வழங்கியிருந்தார். பணியிடங்கள் நிரப்பப்படும்போது மாநில அளவிலான ஓர் துறையையே ‘ஓர் அலகாக’க் கருத வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் 253இன்படி, சர்வதேச ஒப்பந்த சட்டங்கள் உயர்வானவைகளாகக் கருதப்பட வேண்டும். எனவே 1992 பெய்ஜிங் பிரகடனத்தின் படி, அப்பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருப்பதால், மாற்றுத்திறன் படைத்தோருக்கு எல்லா துறைகளிலும் 3 சதவிகிதம் இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்பது செல்லும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாற்றுத்திறன் படைத்தோருக்கான ஒவ்வொரு சிக்கலுக்கும் இவ்வாறு பொதுநல நோக்கம் கொண்டோர் தான் நீதிமன்றம் சென்றபடி இருக்கிறார்கள். அய். இளங்கோவன் அவர்கள், ரயில் பயணச் சலுகையில் மாற்றுத்திறன் படைத்தோருக்கு காட்டப்படும் பாகுபாட்டை எதிர்த்தும் வழக்குமன்றம் போய் இருக்கிறார். பார்வையற்றோருக்கும், இயக்கக் குறைபாடு உடையவருக்கும் 75 சதவிகித கட்டணச் சலுகையும், செவித்திறன் குறைந்தவர்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகையும் தொடர்வண்டித் துறை அளிக்கிறது. ஆனால் இச்சலுகையை இயக்கக்குறைபாடு உடையவர் பாதுகாவலருடன் பயணித்தால்தான் பெறமுடியும்.

மற்ற இரு பிரிவினரும் தனியாகவே கூட பயணம் செய்து இச்சலுகையைப் பெறலாம். கடும் இயக்கக் குறைபாடு உடையவர்களுக்கு வேண்டுமானால் இவ்விதி பொருந்தலாம். ஆனால், தனித்து நடக்கக்கூடியவர்களுக்கும் பாதுகாவலர் தேவை என்பதால், அவர்களால் இச்சலுகையை பயன்படுத்த இயலாத சூழல் உள்ளது. மேலும் பார்வையற்றோருக்கு எல்லா பிரிவிலும் பயணச் சலுகையை வழங்குகிறது தொடர்வண்டித்துறை. ஆனால், மற்ற இரு பிரிவினருக்கு சில பிரிவு பெட்டிகளிலே மட்டும் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பேருந்திலும் கூட 100 கிலோ மீட்டருக்குத்தான் இலவச பயணச் சலுகையை, இயக்கக் குறைபாடு உடையவர்களுக்கு தருகிறார்கள். ஆனால் பார்வையற்றோருக்கு மாவட்டம் முழுவதும் பயணம் செய்ய சலுகை வழங்கப்படுகிறது. இம்மாதிரியான சில வேறுபாடுகளும், பாகுபாடுகளும் நடைமுறையில் இருந்தாலும் பெருவாரியான பொதுவான பாகுபாடுகள் வழக்கத்தில் இருக்கின்றன.

பெய்ஜிங்கில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய பசிபிக் நாடுகளின் மாநாட்டில் இந்த நாடுகளில் இருக்கும் மாற்றுத்திறன் பøடத்தோரின் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது. இவர்களுக்கு முழு பங்கேற்புக்கும், பாதுகாப்புக்கும், வாய்ப்புக்கும் நாடுகள் வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே மாற்றுத்திறன் படைத்தோருக்கான 1995 சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தை இன்னும் நடைமுறைப்படுத்தாத அரசுகளாக மாநில அரசுகளும், மய்ய அரசும் இருக்கின்றன. இச்சட்டத்தின்படி இவர்களுக்கு கல்வி 18 ஆண்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ உதவிகளும், மறுவாழ்வு வசதிகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். அவர்களை உடல் நலம் பொருந்தியோர் சுரண்டவும், இழிவு செய்யவும், பாதிப்புக்குள்ளாக்கவும் கூடாது. அவர்கள் சமமானவர்களாகக் கருதப்பட வேண்டும்.

இந்த நிலையை அரசும் பொது மக்களும் இணைந்தே எட்ட முடியும். தமிழக அரசு இயலாதோருக்கான கொள்கை வரைவை இன்னும் உருவாக்கவில்லை. உலகவங்கி அறிக்கையின்படி, சட்டிஸ்கர் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும்தான் இக்கொள்கைகளை உருவாக்கியுள்ளன. இவற்றில் சட்டிஸ்கர் அரசின் அறிக்கை மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

அரசு பொது மக்களிடையே மாற்றுத்திறன் படைத்தோருக்கான புரிந்துணர்வுகளை உருவாக்க திட்டங்களைத் தீட்டுவதோடு, தொடர் பரப்புரைகளை செய்ய வேண்டும். மாற்றுத்திறன் படைத்தோரைக் காட்டிலும் எண்ணிக்கையில் குறைவாக உள்ள திருநங்கைகளின் சிக்கல் இன்று ஊடகத்தில் பேசப்படும் அளவுக்குக்கூட, மாற்றுத்திறன் படைத்தோருக்கான சிக்கல்கள் பேசப்படுவதில்லை. திட்டங்களை உருவாக்கும் இடத்தில் மாற்றுத்திறன் படைத்தோருக்கான பிரதிநிதித்துவம் இல்லாததால், அவர்களின் சிக்கல்கள் புரிந்து கொள்ளப்படுவதில்லை. அதற்கேற்றவகையான திட்டங்களும் தீட்டப்படுவதில்லை.

இங்கே இருக்கும் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளுக்காக மாநாடுகளையும் பேரணிகளையும் நடத்தியுள்ளன. ஆனால், இதுவரை மாற்றுத்திறன் படைத்தோரின் நலனுக்காக இதைப் போன்ற எதையும் செய்ததில்லை. கஜகிஸ்தான் போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாற்றுத்திறன் படைத்தோருக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இங்கும் அப்படி வேண்டும் என்கிறார், மாற்றுத்திறன் படைத்தோருக்கான களப்போராளி காமராஜ்.

திரைப்படங்களிலும் இவர்களை இழிவாக சித்தரிப்பது தொடர்கிறது. அண்மையில் வெளியான ‘பொல்லாதவன்’ என்ற திரைப்படம், இயலாதோரை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று சித்தரித்திருந்தது. ‘வானமே எல்லை’, ‘பொற்காலம்’, ‘மொழி’ போன்ற படங்கள் எப்போதாவதுதான் வருகின்றன. இயல்பான பாத்திரங்களாய், முதன்மைப் பாத்திரங்களாய், கதைநாயகர்களாய் மாற்றுத்திறன் படைத்தோரை பயன்படுத்திக் ச்கொள்ள இன்னும் திரை உலகம் தயாராக இல்லை.

இவர்களுள் உடல் குறைபாடு கொண்ட பெண்களின் நிலை மிகுந்த கவலைக்குரியது என்கிறார் காமராஜ். அப்பெண்களுக்கு கல்வி பெறுவதிலும், வெளியே சென்று வருவதிலும் பெருத்த சிரமங்கள் இருக்கின்றன. சில பெற்றோர்கள் அறியாமையால், தன் இயலாத பெண்ணை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கருப்பையையே கூட நீக்கி விடுகின்றனர் என்கிறார் காமராஜ்.

பொதுச்சமூகத்தில் நிலவும் பிற்போக்குத் தனமான கருத்துகளையும், மொழிப் பயன்பாட்டில் உள்ள தவறான பொருள் தரும் கேலிச் சொற்களை தவிர்ப்பதிலும் உரிமைகளை அளிப்பதிலும்தான் இதற்கான மாற்றங்கள் தொடங்கும். நம்மிடையே பிற்போக்குத் தனமான எண்ணற்ற பழமொழிகளும், சொலவடைகளும் உள்ளன. ‘குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரி', ‘செவிடன் காதில் ஊதிய சங்காய்’, ‘நொண்டிச் சாக்கு', ‘ஊமை ஊரை கெடுக்கும்', ‘குருட்டுத்தனமான எண்ணம்', ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல' இப்படி இருக்கின்றவற்றை கூச்சமும், குற்ற உணர்வுமின்றி பயன்படுத்துகிறோம். ‘எழுதியதெல்லாம் குருடன் எதிரில், பேசியதெல்லாம் செவிடன் காதில், செவிடன் சங்காய் வீணாய்ப் போக’ என தொழிற்சங்கவாதிகள் கூட சங்கடப்படாமல் முழக்கமிடுகிறார்கள்.

இம்மாதிரியான சொல் வழக்கை நாகரிக சமூகம் தவிர்க்க வேண்டும். ‘ஊனம்’ என்பது முன்ஜென்ம வினை, பாவம் ஆகியவற்றால் வருவது என்கிற கருத்துகளை மாற்றிக் கொள்ள வேண்டும். தொற்று நோய்களாலும், விபத்து மற்றும் காயங்களாலுமே உடல் குறைபாடுகள் ஏற்படுகின்றன. உலக வங்கியின் அறிக்கை, பெருகி வரும் மருத்துவ வசதிகளால் தொற்று நோய் மூலம் உருவாகும் ஊனம் ஒப்பீட்டளவில் குறைந்து வந்தாலும், காயம் மற்றும் விபத்து மூலம் உருவாகும் ஊனம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டுகிறது.

உடல் குறைபாடு குறித்த மாற்றுப்பார்வையும் நமக்கு தேவை. ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட, சுகாதாரமற்ற, கடும் உழைப்பை பேறுகாலத்திலும் மேற்கொள்கிற, மருத்துவ வசதியற்ற சூழல்களில் வாழ்கின்ற தலித் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களிடையேதான் இயலாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சமூகவியலின் படி ஊனம் ஏற்றத்தாழ்வுகளால் உருவாகிறது. இந்த நிலைமைகளோடு இன்று நவீன அறிவியலின் சீரழிவுகளும் கைகோத்துக் கொண்டுள்ளன. நவீன மருந்துகளும், உரங்களின் பயன்பாடு, பூச்சிக் கொல்லிகளும், அணு ஆயுத பயன்பாடு, போபால், செர்னோபில் போன்ற பேரழிவுகளும் தம் பங்குக்கு இயலாதவர்களை உருவாக்கி வருகின்றன.

இவர்களைப் பாதுகாப்பதும் உரிமைகளை வழங்குவதும் பொது மக்களின், அரசின் கடமையாகிறது. ஆனால் இந்த இரு சாரருமே இயலாதோருக்கு உரிமைகளை அளித்து மேம்படுத்துவதற்கு மாறாக, அவர்களும் பரிதாபத்தால் பிச்சையிடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். மூன்று சக்கர வண்டிகளையும், ஊன்று கோல்களையும், கண்ணாடிகளையும் வழங்குவது மட்டுமே ஓர் அரசின் கடமையாக எப்படி இருக்கமுடியும்?

பரிதாபத்தை விரும்பாத ஒரு சமூகத்துக்கு பரிதாபத்தையே வலிய தருவது எத்தனை கொடுமையானது என்பதை பொதுச்சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும். மாற்றங்களும், சீர்திருத்தங்களும் தனி மனிதர்களிடமிருந்து தான் தொடங்குகின்றன. வீடுகளிலிருந்து மாற்றங்கள் தொடங்குவது இவர்கள் விஷயத்தில் பொருத்தமானது. சில்லறைகளை நம் பைகளிலேயே போட்டுக் கொள்ளலாம். இயலாமையைப் பார்த்து அவர்களை வேடிக்கைப் பொருளாக்காமல் அவர்களின் முகத்தைப் பார்க்கலாம். அவர்களுக்கான உரிமைகளை வழங்கலாம். மாற்றுத்திறன் படைத்தோரை சக மனிதர்களாக மதிக்கலாம். குறைகள் உருவாக்கிய வெற்றிடத்தில் அன்பை இட்டு நிரப்பலாம்.


“ஆழ் மனநிலையிலேயே மாற்றம் வர வேண்டும்''- பேரா.அய்.இளங்கோவன்

Ilangovanதமிழில் நாம் பயன்படுத்துகின்ற பழமொழிகள், சொல் வழக்குகள் ஆகியவை இயலாதோருக்கு எதிராக உள்ளன.

பள்ளன், பறையன், சக்கிலியன், சண்டாளன் என்று அழைப்பது போலத்தான் நொண்டி, குருடன், செவிடு என்று சொல்வதும், இப்படியான சொற்களை மாற்றுத்திறன் படைத்த மனிதர்களை குறிப்பிடப் பயன்படுத்துவது வன்கொடுமைக்கு நிகரானது.

குடும்பத்திலே கூட இயலாதோருக்கு மதிப்பில்லை. அவர்களுக்கு உரிய மரியாதையும், நல்ல கல்வியும், சம உரிமைகளும் தருவதற்கு மாறாக பத்து சென்ட் கூடுதலாக சொத்து எழுதித் தந்து விட்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள்.

மாற்றுத்திறன் படைத்தோரை புறக்கணிப்பது, அவர்களின் வீடுகளிலிருந்தே தொடங்குகிறது.

மாற்றுத்திறன் படைத்தோரின் மேம்பாட்டுக்கு பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை யாரும் செயல்படுத்துவதில்லை. இயலாதோர் பிச்சையெடுக்கவும், யாசகம் பெறவும், அழவும், ஓலமிடவும் மட்டுமே தகுதியானவர்கள் என்று அரசு அதிகாரிகளும் நினைக்கின்றனர். அவர்கள் அணுகும்போது சில்லரைகளையோ, ஏதாவது நலத்திட்ட உதவிகளையோ தந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் மாற ஆழ்மன அளவிலேயே மாற்றம் வர வேண்டும்.

செவித்திறன் குறைந்தோர், பார்வையற்றோர் போன்றவர்களுக்கு கல்வியை கற்பிக்க சில சிறப்பான உத்திகள் தான் தேவைப்படுகிறதே ஒழிய, சிறப்புப் பள்ளிகள் தேவையில்லை. பொதுப் பள்ளிகளிலேயே அவர்கள் படிக்க முடியும்.

மாற்றுத்திறன் படைத்தோரை தனிப்பள்ளிகளில் வைப்பதன் மூலம் அவர்கள் தம்மை ஒரு தனி சமூகமாகவே கருதிக் கொள்கிறார்கள். தனிமைப்பட்டும் போகிறார்கள். இதை மாற்ற பொதுப் பள்ளிகளில் அவர்களை சேர்க்க வேண்டும் என்று PWD ACT 1995 சொல்கிறது. ‘சர்வ சிக்ஷா அபியான்’ திட்டத்திலும் இதற்கான இடம் இருக்கிறது. ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில்லை.

மாற்றுத்திறன் படைத்தோரின் எண்ணிக்கையில் நூற்றுக்கு எண்பது விழுக்காட்டினர் தலித்துகளும் குடிசைவாசிகளும் தான். அவர்களின் பெண்களுக்குத்தான் மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.

கருவுற்றிருக்கும்போது போதிய சத்துணவு கிடைப்பதில்லை. கருக்காலத்தில் கடினமான உடல் உழைப்பு இருக்கும். இக்காரணங்களால் தான் இயலாத குழந்தைகளை அவர்கள் பெற்றெடுக்கிறார்கள்.

உடல் ரீதியாகவும், உரிமை ரீதியாகவும் கேட்பாரற்று கிடக்கின்ற சமூகமாக இயலாதோர் நிலை இருக்கிறது.
அறிவுஜீவிகள் கூட இதைப்பற்றி தம் படைப்புகளில் எழுதிவிட்டு அமைதியாகி விடுகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் உரிமைகளைப் பற்றி அறியாமல் பொதுச் சமூக கருத்தியலிலேயே எழுதியும் வருகின்றனர்.

நான் வழக்கு மன்றத்தில் தொடுத்த பல வழக்குகளில், இயலாதோருக்கு என்று நான் தொடுத்த ஒரு வழக்கில்கூட வழக்குரைஞர் திரு. அரிபரந்தாமன் அவர்கள் ஒரு பைசா கூட வாங்கிக் கொண்டதில்லை.

பாடத் திட்டத்திலும், கல்வி நிலையங்களிலும் இயலாதோர் குறித்த செய்திகளும், அவர்களுக்காக பாடுபட்டவர்களைப் பற்றிய வரலாறுகளும் வெறுமனே கட்டுரைப் பொருளாகவும், பேச்சுப் போட்டி பொருளாகவுமே பார்க்கப்படுகின்றன.

Pin It