சாதி இந்துக்கள் மேலாதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கத்தாலும், அதிகாரிகள் கூட்டத்தாலும், ஊடகம், நீதித்துறை போன்றவற்றாலும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் பாரபட்சத்தை சந்திக்கின்றனர். நன்கு முறைப்படுத்தப்பட்ட தங்களது ஒருங்கிணைப்பின் மூலம் இந்த நாட்டிலுள்ள வரம்புக்குட்பட்ட வளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதோடு, பிற பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேல்நோக்கிய நகர்வை திட்டமிட்டே தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில், சமூகப் போராளியான பிரபாத்குமார் சாண்டிலியாவால், பீகார் மாநிலத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் சாதி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தலித்துகள், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு மரண தண்டனையில் 100 சதவிகித இடஒதுக்கீடு இருப்பதை அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது. தூக்கில் இடப்படுவதற்காக காத்திருக்கும் 36 கைதிகளில் 25 பேர் பிற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவர். இந்த கொடூர உண்மைகளை சி.பி.எம்.இன் மேல் மட்டத் தலைமை அறியுமா? மரண தண்டனை விதிக்கத் தக்க குற்றங்களை ஆதிக்க சாதியினர் செய்வதே இல்லை போலும்!

அய்க்கிய ஜனதா தளத்தின் அனைத்திந்திய தலைவரான சரத் யாதவ், 7. 7. 2006 அன்று ‘தி இந்து' இதழில் எழுதியுள்ள தமது கட்டுரையில், இந்திய அரசின் மத்தியப் பணியாளர் தேர்வுக்குழுவும், பணியாளர் மற்றும் பயிற்சித்துறையும் இந்தியாவின் எதிர்கால ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் தேர்வில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் எவ்வாறு வெளிப்படையான பாரபட்சத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.

பொதுப் பிரிவில் தேர்ச்சி அடைந்த பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 40 பேரை இடஒதுக்கீடு பட்டியலுக்குத் தள்ளிவிட்டு, அதன் மூலம் அதே எண்ணிக்கையிலான பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள் ஆட்சிப் பணியில் தேர்ச்சி பெறுவதை, கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தடுத்த செயலை அவர் சுட்டிக் காட்டியிருந்தார். இது, புறவாசல் வழியாக 50 சதவிகித இடஒதுக்கீட்டை பொதுப் பிரிவிற்கு, இன்னும் சரியான வார்த்தையில் சொல்வதென்றால் ஆதிக்க சாதியினருக்கு உறுதி செய்வதாக இருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாகத்தான் மய்ய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு பெற்று வருகின்றனர். மேலும், மய்ய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, மய்ய அரசுப் பணியில் இருந்த மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டு விட்டது. அரசுத் துறைக்கான பணி நியமனமே நடைமுறையில் தடை செய்யப்பட்டு விட்டது. அண்மையில், அனில் சமாரியா, ஜிதேந்திர குமார், யோகேந்திர யாதவ் ஆகிய புகழ்பெற்ற பத்திரிகையாளர்களின் குழு ஒன்று, டெல்லியிலுள்ள 37 தேசிய ஊடக நிறுவனங்களில் உள்ள 315 பேரின் சமூகப் பின்புலத்தை ஆய்வு செய்ததில், வெறும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், தலித் மற்றும் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்றும் கண்டுபிடித்தது.

பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் சந்திக்கும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் குறித்த கதைகள் ஏராளமாக உள்ளன. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும்; எல்லா தகவல்களும் தெளிவாக வெளிப்படும் அளவுக்கு இந்திய சென்சஸ் நிறுவனம், தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்பதே நம் முழக்கம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதியவாதிகளான மேட்டுக்குடியினர் ஒருபோதும் அனுமதிக்காத ஒன்றாகவே இருக்கும். சாதி குறித்த விபரங்கள் இல்லாத மக்கள் தொகை கணக்கு என்பது கேலிக்கூத்தாகவும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பயனற்ற ஒன்றாகவுமே இருக்கும்.

கடைசியாக வெளியான மக்கள் தொகை அறிக்கையில், மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் மற்றும் பழங்குடியினரின் சதவிகிதக் கணக்கு இருக்கவே செய்கிறது என்றாலும், பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்த எந்த விபரமும் அதில் இல்லை. மண்டல் 2 க்கு எதிரான தற்போதைய கிளர்ச்சியில் பார்ப்பனிய சக்திகள் 1931இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை வைத்துக் கொண்டு, பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று தொண்டை வறளும் அளவுக்குக் கூப்பாடு போடுகிறார்கள். அன்றைக்கும் இதே பார்ப்பனிய சக்திகள்தான் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தார்கள் என்பதுவும் கூட, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பார்ப்பனிய சக்திகள், சாதிவாரி கணக்கெடுப்பை அனுமதிக்கவில்லை. சாதி குறித்த கேள்வி மேலெழும்பாமல் அடக்கவே இவையெல்லாம் நடைபெறுகின்றன. இருப்பினும் ஒவ்வொரு முறையும் சாதி குறித்த கேள்வி தீவிரத்துடன் மேலெழும்பவே செய்கிறது. சாதி என்பது அருவருப்பான நாற்றத்தை வெளியிடும் ஒரு வார்த்தையாக வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இருக்கிறது. சாதி குறித்த கேள்வியை மேலெழும்ப விடாமல் அமுக்கும் புள்ளியில், வலதுசாரிகளும் இடதுசாரிகளும் ஒன்றிணைகின்றனர். ஏமாற்றுத்தனமான இந்து மத அடிப்படையிலான ஒருங்கிணைவுக்காக வலதுசாரிகளும், தெளிவற்ற வர்க்க ஒற்றுமைக்காக இடதுசாரிகளும் இவ்வாறான புள்ளியில் ஒன்றுபடுகின்றனர். இதைப் பின்னர் பார்ப்போம்.

சாதிப்பிரச்சனை என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தலித்துகளோடு முடிந்து விடுகிறது. மொத்த சாதிப் பிரச்சனையின் மீச்சிறுபொது வகு எண்ணாக, அதன் கொடூர வடிவமாக, மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானதாக தலித் பிரச்சனைதான் இருக்கிறது என்பதாலும், சி.பி.எம். கட்சி சாதிப்பிரச்சனையின் முழுமையை எதிர்கொள்ள அஞ்சுவதாலும் தான் இவ்வாறு நிகழ்கிறது. மீச்சிறு பொது வகு எண்ணோடு மட்டும் தன்னைக் குறுக்கிக்கொள்ளும் அரசியலால், இந்திய அரசியல் ஓர் அங்குலம் கூட நகர முடியாது.

எடுத்துக்காட்டாக, அரசியலின் மீச்சிறு பொதுவகு எண்ணான மதச்சார்பின்மையை எப்படியேனும் பாதுகாத்து விட வேண்டும் என்பதற்காகவே அனைத்து வகை ஆற்றலும் அர்ப்பணிக்கப்படுவதால், இந்திய அரசியல் தேக்கம் அடைந்திருக்கிறது. ஒன்றுக்கொன்று பகைமை கொண்ட சக்திகள் மதச்சார்பின்மையைக் காப்பதற்காக இணைவதால், அடிப்படையான முரண்பாடுகள் கூர்மையடைவது தடுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே உள்ளவர்களின் சாதிப்பிரச்சனையைத் தாண்டிப் போகாத அளவுக்கு, சி.பி.எம்.இன் பார்வை மிகக் குறுகியதாக இருக்கிறது.

வாழ்வைத் தமது கடின உழைப்பால் தாங்குபவர்களும், செல்வத்தை உருவாக்குபவர்களும், ஆனால் அச்செல்வத்தின் மீது மிகச்சிறிய அளவே உரிமை உடையவர்களுமான பிற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் திரளுக்கு சி.பி.எம். தலைவர்களின் ‘புரட்சிகரப் பார்வை'யில் ஓரிடமும் இல்லை. விவசாயி, குறு விவசாயி, குத்தகை விவசாயி, நெசவாளர், தச்சர், பால்காரர், மீனவர், படகோட்டி, கொல்லர், நாவிதர், பொன்னாசாரி, இடையர், குயவர், போன்றவர்களே பிற்படுத்தப்பட்ட மக்களாகவும், இந்தியாவின் 60 சதவிகித மக்கள் தொகையுடையவர்களாகவும் உள்ளனர்.

ஆனால் சி.பி.எம்.முக்கு விவசாயி என்பவன் ஒரு பொருளாதார வர்க்கம் மட்டுமே. மொத்த விவசாய வர்க்கமும் பெரும்பான்மையான சாதி அடையாளத்தை ஒருபோதும் இழக்க முடியாத பிற்படுத்தப்பட்ட சாதி மக்களே ஆவர். தற்கொலை செய்து கொண்டு மடிந்து போன ஆயிரக்கணக்கான விவசாயிகளில் பெரும்பான்மையோர் பிற்படுத்தப்பட்ட சாதி மக்கள்தான். விவசாயிகளைப் போன்றே நெசவாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றத் துறை ஆவணம், 1998 முதல் 2006 வரையில் ஏறத்தாழ 1 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றனர் என்று சொல்கிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியிலும் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எந்த பயனுள்ள நடவடிக்கையையும் மய்ய அரசும் சரி, மாநில அரசும் சரி எடுக்கவில்லை.

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசு காட்டிய செயலின்மை அல்லது அலட்சியம், ‘கீழ்சாதி’ மக்களுக்கு எதிரான மிகப்பெரிய பாரபட்ச உணர்வைக் கொண்ட பார்ப்பனிய அமைப்பிலேயே குடிகொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த அமைப்புக்கு விவசாயிகள் என்பவர்கள் ஒரு பொருளாதார வர்க்கம் என்பது மட்டுமல்லாமல், எப்படியேனும் வஞ்சிக்கப்பட்டே ஆக வேண்டிய ஒரு சமூகக் குழுவினராகவும் இருக்கிறார்கள். அவர்கள் செத்தொழிகிறார்கள் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.

அது மட்டுமல்ல, சூத்திர, ஆதி சூத்திர மற்றும் பழங்குடியினர் கல்வி கற்று, அதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்திற்குச் சவாலாக வந்து விடுவார்கள் என்ற தீய நோக்கத்துடன், அடிப்படைக் கல்வியைப் பரவலாக்கும் ஒவ்வொரு முயற்சியையும் தடுக்கும் பார்ப்பனிய மனநிலைதான், சுதந்திர இந்தியாவில் தொடக்கக்கல்வி மற்றும் உயர் நிலைக்கல்விக்கு எதிரான வரலாற்று ரீதியிலான புறக்கணிப்புக்குக் காரணமாகும். இந்தியாவில், அடிப்படைக் கல்வியின் கேவலமான அலட்சியத்திற்கு வேறென்ன விளக்கத்தைக் கொடுத்துவிட முடியும்?

ஒரு சூத்திரனின் முதன்மை அடையாளமாக இருப்பது சாதியேயன்றி வர்க்கம் அல்ல. இதற்கான மிக எளிய காரணம், சமூக மற்றும் பொருளாதார நிலையை ஒன்றாகக் குறிப்பிடுவதாகவும், வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவாக தாங்கள் மாறிய வரலாற்றைக் குறிப்பிடுவதாகவும் சாதியே உள்ளது என்பதுதான். அதே வேளையில் வர்க்கம் என்பது பொருளாதார நிலையை மட்டுமே குறிப்பிடுவதாகவும், நமது வரலாற்றை அசட்டை செய்வதாகவும் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளிலிருந்து வசதிபடைத்த ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி வெளிப்பட்ட போதிலும் கூட, இந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை சாதி வர்க்க இணைவைப் பெருமளவுக்குப் பாதிக்கக் கூடிய அளவிற்கு இல்லை.

வர்க்கப் போராட்டமானது அல்லது அவ்வாறு நம்பப்படுவது, சாதியின் இடத்தில் வர்க்கத்தை வைப்பதில் ஒரு போதும் வெற்றியடையாது. சமூக எதார்த்தத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வழிவிலகிச் சென்றுவிட்ட வர்க்கச் சக்திகள் அல்ல; சாதிய சக்திகளின் தோற்றமே நிலைப்பட்டுவிட்ட ஆளும் மேட்டுக்குடியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்றன. இதற்கு மேலும் விமர்சனங்களை வளர்த்துக் கொண்டு போகாமல், சி.பி.எம்.முக்கு பிற்படுத்தப்பட்டவர்கள் என்போர் ஒரு பொருட்டே அல்ல என்பதையும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதன் தடுமாற்றமான நிலைக்கு இதுதான் காரணம் என்பதையும் மட்டும் இங்கு அழுத்தமாகச் சொல்வது போதுமானது.

-அடுத்த இதழிலும்
Pin It