ஓர் ஊரில் மெத்தப் படித்த நரி ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு கரும்பு என்றால் கொள்ளை ஆசை. தினமும் அது கரும்பினைத் தின்பதற்காக அந்த ஊரில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்திற்கு திருட்டுத்தனமாகச் சென்று வந்தது. ஒரு நாள் நரி கரும்புத் தோட்டத்தில் இருந்த போது பெரிய குளவி ஒன்றின் கூட்டைப் பார்த்தது. அக்கூடு நன்றாக வளர்ந்திருந்த கரும்புக் கிடையின் உச்சியில் இருந்தது. அதற்கு முன்னால் நரி குளவிக் கூட்டைப் பார்த்ததில்லை. அதனால் அக்கூட்டை கரும்புப் பழம் என்று நினைத்துக் கொண்டது.

கூட்டைப் பார்த்ததும் நரி தனக்குத் தானே சொல்லிக்கொண்டது. “ஆகா! கரும்பே இவ்வளவு சுவையானது என்றால், அதன் பழம் எவ்வளவு சுவையாக இருக்கும்!''

நரி ஆவலோடு கூட்டின் அருகே போனது. கூட்டிலிருந்து வெளியே வந்த பெருங்குளவி நரியைக் கொட்டி விரட்டியது. நரி தன் வாழ்க்கையிலேயே காணாத வேடிக்கை அது! உயிருக்கு பயந்து ஓடியது.

“இனிமேல் கரும்புத் தோட்டத்தின் பக்கமே வரமாட்டேன்''

குளவி பயத்தை மறந்த பிறகு நரி ஒருநாள் தன் இருப்பிடத்தில் அமர்ந்து எண்ணிக் கொண்டிருந்தது. “தினமும் தான் தோட்டத்துக்குப் போகிறேன். இப்படி எதுவும் நடந்ததில்லையே. அந்தப் பழத்தைச் சாப்பிடப்போய் தானே ஆபத்தில் சிக்கிக் கொண்டோம். அப்பாடா, இனிமேல் கரும்புத் தோட்டத்துக்குப் போனால் கூட, கரும்புப் பழத்தைச் சாப்பிடக் கூடாது'' இரண்டு மூன்று நாட்களுக்கு அதையே சொல்லிக்கொண்டிருந்தது நரி.

குளவி கொட்டிய வலி மறைந்து போனதும் நரி நினைத்தது. “என்னைக் கடித்த பூச்சிகள் கரும்புப் பழத்தில் தான் இருந்திருக்க வேண்டும். பழத்திலிருந்து அவைகளைத் துரத்திவிட்டால், அதைச் சாப்பிடுவது எளிதாகிவிடும். பழம் மிகவும் இனிப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பழத்தை ஒரு கடியாவது கடித்துத் தின்றுவிட வேண்டும். இந்த முறை போகும்போது பூச்சிகளை முதலில் துரத்திவிடலாம் ஒரு குச்சியை எடுத்துச் சென்று விரட்டினால் பூச்சிகள் ஓடிவிடும்!''

அடுத்த நாள் நரி மிகவும் ஆவலோடு கரும்புத்தோட்டத்திற்குச் சென்றது. கையிலே ஒரு குச்சியையும் எடுத்துக் கொண்டது. நேராக குளவிக் கூண்டு இருக்கும் இடத்துக்குப் போய், அதை குச்சியால் அடித்தது. எவ்வளவு பரிதாபம்!

அந்தக் கூட்டிலிருந்து பெருங்குளவி கோபத்துடன் வெளியே பறந்து வந்தது. நரியை உடல் முழுக்கக் கடித்துக் குதறியது. நரி குற்றுயிரும் குலை உயிருமாக ஓடி ஒளிந்தது. அதற்குப் பிறகு கரும்பு தின்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை நரி.
Pin It