கிரிவலம் என்றவுடன் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை. அந்த திருவண்ணாமலைக்கு, பிரம்மா, விஷ்ணுவின் ஆணவத்தை அழித்த மலை என்கிற பெயரும் காலங்காலமாக முன்மொழியப்பட்டு வருகிறது. அப்படியென்றால் திருவண்ணாமலையில் ஆணவம் உண்மையாகவே அழிக்கப்பட்டுள்ளதா? பிரம்மா, விஷ்ணுவின் ஆணவத்தை அழித்த அண்ணா மலை, அங்குள்ள சாதிவெறியர்களையும் சர்வாதிகாரிகளையும் அழிக்க முடியாமல் அவமானப்பட்டுக் கிடக்கின்றதே!

water
திருவண்ணாமலையில் ஒரு சாதிக்கு ஒரு குளம், நந்தவனம், மண்டபம் போன்றவை உருவாக்கப்பட்டு, அந்தந்த சமூகத்தவர் ஆண்டாண்டு காலமாகக் கண்காணித்து வந்துள்ளனர் (அய்யன் குளம், அகமுடையர் குளம், அம்மட்டன் குளம், வண்ணாங் குளம், செட்டிக்குளம், வன்னியர் குளம், வன்னியர் மடம், குருமன் மடம், குயவர் மடம், துளுவ வேளாளர் மடம், வெள்ளாழஞ் செட்டியார் மடம் உள்ளிட்ட பல). அதைப் போலவே, திருவண்ணாமலை செங்கம் சாலையில் (நகரப்புல எண்.1745இல் 48 சென்ட்) பறையர் குளமும், (புல எண். 1747இல் சுமார் 3 ஏக்கர்) ஆதிதிராவிடர் நந்தவனமும், (புல எண். 1726/1இல் 57 சென்ட்) சுற்றுகால இடமும் வழங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளம், பாண்டவர் குளம் வழியாக, அக்னிகுளம் வந்து, பின்பு பறையர் குளம் வந்து இறுதியாக தாமரைக்குளம் சென்றடையும். இதற்கான நீர்வரத்து கால்வாய் பழுதடைந்த நிலையில் உள்ளது. அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் தை மாதத்தில் மலை சுற்றும் புறப்பாட்டின்போது, திருவண்ணா மலை நகரத்தில் உள்ள சமுத்திரம் காலனி, கல்நகர் கீழ்நாத்தூர், டாக்டர் அம்பேத்கர் நகர், நாவக்கரை ராம்ஜி நகர், பல்லவன் நகர், தியாகி அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தலித் மக்கள் ஒன்றுகூடி, சாமிக்கு முதல் மரியாதை (மண்டகபடி) பாரம்பரியமாக இன்றும் செய்து வருகின்றனர்.

1950 ஆம் ஆண்டு பறையன் குளம், தமிழக மீன் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது (அரசாணை எண். 4171/13.10.1950). மீன் வளர்ச்சித் துறையும் இக்குளத்தைக் கைப்பற்றி, பல காலம் மீன் வளர்த்துப் பராமரித்து வந்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப.உ. சண்முகம், முன்னாள் நகர மன்றத் தலைவர் எஸ். முருகையன், உள்ளிட்ட முதலியார்கள் ஒன்றிணைந்து, ஒரு பள்ளியினைத் தொடங்கினர். அப்பள்ளியின் கட்டடங்களுக்கு ஆதிதிராவிட மக்களின் நந்தவனத்தை, தலித் மக்களின் முன்னோர்களை ஏமாற்றி கையகப்படுத்திக் கொண்டனர். ‘சண்முகா தொழிற்சாலை அரசினர் மேனிலைப் பள்ளி' என்ற பெயரில் செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு ரூ. 100 கொடுத்தவர்களின் பெயர்ப் பட்டியல், கரும்பலகையில் பொறிக்கப்பட்டு, வரலாற்று ஆவணமாக இன்றும் உள்ளது. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள நிலங்களைக் கொடுத்த தலித் மக்களின் தியாகத்தைப் பறைசாற்ற ஒரு சிறிய பதிவுகூட அங்கு இல்லை.

நந்தவனத்தை இழந்த தலித் மக்கள், பறையர் மண்டபத்தையும் குளத்தையும் பயன்படுத்தி வந்துள்ளனர். நகரம் வளர்ச்சியடைந்த சூழலில் சில சமூக விரோத சக்திகள், இக்குளத்தில் மண் மற்றும் கழிவுகளைக் கொட்டி சாக்கடை நீரையும் இக்குளத்தில் திருப்பி விட்டனர். இதனால் மீன் வளத்துறை, இக்குளத்தில் மீன் வளர்ப்பதற்கான முயற்சியை கைவிட்டது. மேலும், இக்குளத்தை தூர் வாரி செப்பனிடுவதற்கும் தவறிவிட்டது. இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சண்முகா தொழிற்சாலை அரசினர் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பரசுராமன், பள்ளியின் சைக்கிள் நிறுத்தம், பூங்கா என்கிற பெயரில் இக்குளத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார். பள்ளிக்குப் போதுமான இடம் இருந்தபோதிலும் சண்முக (முதலியார்) பள்ளியின் அருகில் பறையர் குளம் இருப்பது, அவருக்குள் இருந்த சாதிவெறியை மென் மேலும் அதிகரித்தது. இதனால் பறையர் குளத்தின் மொத்த அடையாளத்தையும் அழித்துவிட திட்டம் தீட்டினார்.

இத்திட்டத்தை நிறைவேற்ற, திருவண்ணா மலை தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. பிச்சாண்டியை (நாயுடு) தலைவராகவும், அ.இ.அ.தி.மு.காவைச் சேர்ந்த மஞ்சு ஒயின்ஸ் சின்னத் தம்பியை (முதலியார்) துணைத் தலைவராக வும் வணிக சங்கத்தைச் சேர்ந்த தனுசு (முதலியாரை) பொருளாளராகவும் விதிகளை மீறி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் நியமித்தார். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தைத் தூர்வாரி செப்பனிட, தமிழக அரசை வலியுறுத்தி 14.7.2003 அன்று, ‘தமிழ் நாடு பாரம்பரிய பறை இசைக் கலைஞர்கள் நலச் சங்க'த்தின் சார்பாக பறை முழக்கி ஆர்ப்பாட்டம் நிகழ்த்தி, திருவண்ணாமலை கோட்டாட்சியர் மற்றும் நகர மன்றத் தலைவர் ஆகியோர்களுக்கு கோரிக்கை விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட விண்ணப்பங்களுக்கான பதில் கடிதம், திருவண்ணாமலை நகராட்சியிடமிருந்து எண்.8844/22.10.2003 வந்தது. அதில் ‘ஹட்கோ'விடம் நிதி கேட்டு 21.10.2003 அன்று இந்நகராட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அது வரப் பெற்றவுடன் மேற்படி குளம் தூர்வாரி செப்பனிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. எனவே 14.4.2004 அன்று, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று தலித் மக்கள் ஊர்வலமாகச் சென்று, ஆதிதிராவிடர் குளம் தூர்வாரும் பணி தொடக்கம் என்று அறிவித்து, 7.4.2004 முதல் 12.4.2004 வரை, தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர். இதன் விளைவாக ஊர்வலத்திற்கும், குளம் தூர்வாரும் பணிக்கும் அனுமதி மறுத்த காவல் துறை 13.4.2004 அன்று, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நிகழ்த்தி, அதில் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் - எவ்வித ஊர்வலமும் நடத்தக் கூடாது என்றும், தேர்தல் முடிந்து குளம் தூர்வாரி செப்பனிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு பலமுறை முயன்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2005 ஆம் ஆண்டு தைப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து, சாமிக்கு முதல் மரியாதை (மண்டகபடி) செய்து வழிபட, தலித் மக்கள் அக்குளத்தை சுத்தம் செய்ய 9.1.2005 அன்று சென்றனர். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியர் பரசுராமன் தலித்துகளை தடுத்துவிட்டார். எனவே, அவர் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, 9.1.2005 அன்று நகர காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் (10.1.2005 18.1.2005), கீழ்காணும் முடிவுகள் எழுத்துப் பூர்வமாக எடுக்கப்பட்டன :

1. ஆதிதிராவிடர் குளத்தை அளந்து, நான்கு திசைகளிலும் கல் நடப்பட வேண்டும். 2. மீன் வளத்துறை இக்குளத்தை பார்வையிட்டு, குளத்தின் பராமரிப்பை கவனிக்க வேண்டும். 3. மாவட்ட/நகர நிர்வாகத்தின் நிதியைப் பெற்று, இக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைத்து, சோமவாரக்குளம் தூர் வாரி அழகுபடுத்தியது போல் அழகுபடுத்தப்பட வேண்டும். 4. மாணவர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படாத வண்ணம் இக்குளத்தில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் குளம் தூர்வாரி செப்பனிடப்படும் என்று உறுதியளித்த நகராட்சி ஆணையரின் கடித நகலுடன் தமிழக சட்டப் பேரவை செயலகம், 9.3.2005 நாளிட்ட பதிலுரையை அனுப்பியுள்ளது. இதன் பயனாக திருவண்ணாமலை நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் ஆதிதிராவிடர் குளம் தூர்வாரி, செப்பனிடுவதற்கு ரூ. 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்தித் தாள்கள் வழியாக அறிந்தோம். (‘தினத்தந்தி' வேலூர் 11.1.2006, ‘தமிழ் முரசு' வேலூர் 27.1.2006) இதனடிப்படையில் குளம் தூர்வாரி செப்பனிடப்படும் என்று முழுமையாக நம்பினோம். ஆனால், திடீரென்று (நவம்பர் 2006) குளத்தை மக்கள் பயன்படுத்தாதவாறு சுற்றுச் சுவர் அமைத்து தடுத்து விட்டனர். இந்த ஜனநாயகப் படுகொலை மூலம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ் நாடு ஆக்கிரமிப்புச் சட்டப்படியும் திருவண்ணா மலை கிரிவலப்பாதை மேம்பாடு பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலும், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படியும், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியும், மேற்படி வன்செயல் - ஒரு பெருங்குற்றமாகும்.

இக்குற்றச் செயலை செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி ஆதிதிராவிடர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றி, குளத்தைத் தூர்வாரி, செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும். இல்லை எனில், ஆதிதிராவிடர் குளத்தை அபகரிக்க நினைக்கும் சாதி வெறிபிடித்த தி.மு.க. வினரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் தலைமைச் செயலகம் முன்பு போர்ப்பறை முழக்கி, தலித் மக்களின் பாரம்பரிய சொத்துகளை மீட்டெடுப்பது என மக்கள் முடிவு செய்துள்ளனர்.
Pin It