"நாட்டின் சுதந்திரம் என்ற நோக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நலிவடைந்தவர்களை ஒடுக்குவதற்கு, வலிமையுள்ளவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கும் - முழு மனிதர்களாக வளர்வதற்கான வாய்ப்போடு, நலிவடைந்தவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருக்கிறது. சுதந்திரம் போன்ற அபத்தங்களைப் பற்றிப் பேசும் இந்து தேச பக்தர்களிடம் நான் கேட்கிறேன்: அவர்கள் இந்த சுதந்திரத்தினால் என்ன பலனை அடையப் போகிறார்கள்? சமூக விடுதலை தற்போது இருக்கும் நிலையிலேயே இருக்குமானால், வெள்ளையர்களிடமிருந்து அவர்கள் பெறப்போகும் சுதந்திரம் - ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதற்கே பயன்படுமானால், நாம் ஏன் அதற்காகப் போராட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மாறாக, எமது நோக்கத்தை ஆராய்ந்தால், நாங்கள் எந்த கொள்கைக்காகப் போராடுகிறோம் என்று பார்த்தால் - அது குறுகிய வட்டத்தை கடந்து நிற்பதைப் புரிந்து கொள்வீர்கள்.''

- டாக்டர் அம்பேத்கர், 3.1.1945

முதல் "சுதந்திர'ப் போராட்டம் நடைபெற்று 150 ஆண்டுகளும், நாடு "சுதந்திரம்' பெற்று 60 ஆண்டுகளும் ஆகியுள்ளன. அந்நியர்களை வெளியேற்றி, இம்மண்ணை விடுவித்து இந்நாட்டு மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் பொதுவான குறிக்கோள். ஆனால் நடந்தது என்ன? வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆனால், வெள்ளையர்களுக்கு முன்பே மூன்றாயிரம் ஆண்டுகளாக, இம்மண்ணின் தொல்குடி மக்கள் மீது மாபெரும் பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திய ஆரியர்கள் வெளியேற்றப்படவில்லை. ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ஆரியர்களை வெளியேற்றுவதற்கு அளிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை உற்று நோக்குவது மிகவும் அவசியம்.
.

வெள்ளையர்களின் ஆட்சி, மநுதர்மத்தின் அடிப்படையில் இல்லை. இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி, ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு, பார்ப்பனர்களை கேள்விக்குட்படுத்தியது. இதன் விளைவு, வெள்ளையனை வெளியேற்றும் போராட்டம் தீவிரமடைந்தது. பார்ப்பனர்கள் இந்நாட்டின் குடிமக்களாகத் தங்களை மாற்றிக் கொள்வதற்காகத்தான், வெள்ளையர் எதிர்ப்பில் தீவிரம் காட்டினர். அதன் மூலம் அவர்கள் தங்களை தேசபக்தர்களாக, தேசத் தலைவர்களாக, தேசத்தையே ஆட்சி செய்யும் குடிமக்களாகப் பரிணாமம் பெற்றனர்.

அதனால்தான் நாட்டு விடுதலைக்காக அதிதீவிரப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அம்பேத்கரும் பெரியாரும் பார்ப்பன எதிர்ப்பையும் - சாதி ஒழிப்பையும் முதன்மைப்படுத்தினர். இன்று மீண்டும் உலகமயமாக்கல் ஆபத்தை முன்வைத்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்து/பார்ப்பனியப் பண்பாடுதான் இன்றளவும் ஏகாதிபத்தியத்திற்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. எனவே, பார்ப்பனியத்தை எதிர்ப்பதும், உள்நாட்டு ஏகாதிபத்தியமான சாதியை ஒழிக்கப் போராடுவதுமே - மறுகாலனியத்தை நிரந்தரமாகத் தடுக்கும். இதைச் செய்யாமல், மறுகாலனியத்திற்கு எதிராக மட்டுமே மக்களைத் திரட்டுவது, பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடிப்பதிலும் சாதியமைப்பைப் பாதுகாப்பதிலும்தான் முடியும்.

இதை சரியாகப் புரிந்து கொண்டு, இதுநாள் வரை முன்னுரிமை அளிக்கப்படாத சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்கப் போராடுவதே - உண்மையான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

சுதந்திரப் போராட்டம், எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அம்பேத்கரே வரையறுத்துள்ளார் : "தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதைத் தவிர, இந்தியாவில் வேறெந்த உயரிய பணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை... தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடும் ஆற்றல் கொண்ட நானோ, மற்றவர்களோ இந்தப் பணியை கைவிட்டு வேறு பணிக்குச் சென்றால், வேறு எவரும் இப்பணியைச் செய்ய வரமாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் 2000 ஆண்டுகளாக எத்தகைய சிதைந்த நிலையில் இருந்தார்களோ அந்நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்... தாழ்த்தப்பட்ட மக்கள் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது. அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறார்கள். அம்மக்களின் கொள்கைகள் குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர்களது கொள்கைகள், இந்தியாவை மட்டுமல்ல; உலகையே மறுசீரமைக்கக் கூடியவை.''
Pin It