1936 ஆம் ஆண்டு லாகூர் "ஜாத்பட்தோடக் மண்டல்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக

டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட -

ஆனால், பேசப்படாத உரை

இம்மாநாட்டுக்கு டாக்டர் அம்பேத்கர் தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது

"உண்மையை உண்மையாகவும்
உண்மையல்லாதவற்றை உண்மை
அல்லாதவையாகவும் தெரிந்து கொள்''
- புத்தர்

"பகுத்தறியாதவன் ஒரு மூட நம்பிக்கைவாதி
பகுத்தறிய முடியாதவன் ஒரு முட்டாள்
பகுத்தறியத் துணியாதவன் ஓர் அடிமை''
- எச். டிரம்மண்ட்

சாதியை ஒழிக்கும் வழி என்ன?
இரண்டாம் பதிப்பின் முன்னுரை

லாகூர் ஜாத்பட்தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த உரை, இந்துக்களை மனதில் இருத்தியே தயாரிக்கப்பட்டது. அதற்கு இந்துக்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் அச்சிட்ட 1500 படிகளும் இரண்டே மாதத்தில் தீர்ந்து விட்டன. குஜராத்தியிலும் தமிழிலும் உரை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் பதிப்புக்கான தேவை இன்னும் குறையாமல் உள்ளது. இந்தத் தேவையை நிறைவு செய்வதற்காக, இரண்டாம் பதிப்பை வெளியிடுவது அவசியமாயிற்று. உரையை ஒரு வரலாற்றுப் பதிவு என்ற முறையிலும் உத்வேகத்துடன் வெளிப்பட்டுள்ள அதன் வடிவத்தைப் பாதுகாக்கவும், ஏற்கனவே இருந்த சொற்பொழிவு அமைப்பிலேயே வெளியிட்டு விட்டேன். பலரும் கேட்டுக் கொண்டது போல் நேரடி விவரண அமைப்புக்கு மாற்றவில்லை.

இந்தப் பதிப்பில் இரு பிற்சேர்க்கைகளை இணைத்துள்ளேன். முதல் பிற்சேர்க்கையில் என் உரையை மதிப்பிடும் முகமாக ‘அரிஜன்' இதழில் திரு. காந்தி எழுதிய இரண்டு கட்டுரைகளையும், ஜாத்பட்தோடக் மண்டலைச் சேர்ந்த திரு. சான்ட் ராமுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் சேர்த்துள்ளேன். இரண்டாம் பிற்சேர்க்கையில், திரு. காந்தியின் மேற்படி கட்டுரைகளுக்கு என் கருத்துரைகளைப் பதிலாகத் தந்துள்ளேன்.

திரு. காந்தியைப் போலவே பலரும் என் உரையில் உள்ள கருத்துக்களை, எதிர் நிலையில் நின்று விமர்சித்துள்ளனர். ஆனால், திரு. காந்திக்கு மட்டும் நான் பதில் தந்துள்ளேன். ஏன்? பதில் தந்தாக வேண்டிய அளவுக்கு அவரது கட்டுரையின் செய்தி கனமுள்ளது அல்ல. ஆனால், இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிக்கிறார்கள். அவர் தன் வாயைத் திறந்ததுமே எல்லோருமே தம் வாயை மூடிவிட வேண்டும்; தெருவில் போகும் நாய் கூட குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு - அவரது வார்த்தைகள் பொய்யா மொழியாக இந்துக்களால் கொள்ளப்படுகிறது.

ஆனால், கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் அல்ல என்று நேருக்கு நேர் நின்று வாதிடத் துணியும் கலகக் காரர்களுக்கு இந்த உலகம் கடமைப்பட்டுள்ளது. முற்போக்கான எந்தவொரு சமுதாயமும் தன் கலகக்காரர்களுக்கு தர வேண்டிய மதிப்பு குறித்து எனக்குக் கவலை இல்லை. இந்துக்கள் - இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும் படிச் செய்துவிட்டால், அதுவே எனக்குப் போதும்.

1937 பி. ஆர். அம்பேத்கர்

மூன்றாம் பதிப்பின் முன்னுரை

இந்த உரையின் இரண்டாம் பதிப்பு, 1937 இல் வெளியிடப்பட்டது. அது, மிகக் குறுகிய காலத்தில் தீர்ந்து போனது. புது பதிப்பு வெளியிட வேண்டிய தேவை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. 1917 ஆண்டு மே மாதத்தில், இந்திய அரும்பொருள் ஆய்வேட்டில் வெளியான என்னுடைய ‘இந்தியாவில் சாதிகள் : அவற்றின் அமைப்பியக்கம், தோற்றுவாய், வளர்ச்சி' என்ற கட்டுரையையும் இதனுடன் இணைத்து - அதற்கேற்ப இந்த உரையை மாற்றி அமைக்க எண்ணி இருந்தேன். ஆனால், அதற்குரிய நேரமும் கிட்டவில்லை; செய்து முடிக்கும் நிலையிலும் நான் இல்லை. இந்நூலை உடனடியாக வெளியிடக் கோரி, பொது மக்களின் கோரிக்கை அதிகரித்து வந்தது. எனவே, இந்தப் பதிப்பு, இரண்டாம் பதிப்பின் மறுபதிப்பாகவே வெளிவருகிறது.

இந்த உரையின் செய்தி, இவ்வளவு தூரத்துக்குப் பரவியதில் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரை வெளியிடப்பட்டதோ, அந்த நோக்கத்துக்கு இது உதவும் என்று நம்புகிறேன்.

22, பிருதிவிராஜ் சாலை பி. ஆர். அம்பேத்கர்
புது டெல்லி
1.12.1944
Pin It