சமநீதி எழுத்தாளர் ஏபி. வள்ளிநாயகம் அவர்களுக்கு, தமிழகத்தின் பல இடங்களிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வு பற்றிய செய்திகள் ‘தலித் முரசி’ல் தொடர்ந்து இடம்பெறு கின்றன. இந்த இதழில் "தலித் முரசு' சார்பில் 16.6.2007 அன்று சென்னையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பங்கேற்றோர் ஆற்றிய உரைகள் இடம் பெறுகின்றன.

Kolathur Mani
கொளத்தூர் மணி: "தோழர் வள்ளிநாயகம் அவர்களை நீண்ட காலம் அறிந்தவனாக நான்தான் இருப்பேன் போல் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக நட்புடைய ஒரு தோழர், தொடக்க காலத்தில் திராவிடர் கழகத்தில் இளைஞர் அணியில் இருந்து பணியாற்றிய காலத்திலிருந்து எங்களுக்குள்ள தொடர்பு இறுதிவரை இருந்து வந்தது. பெரியார் நூற்றாண்டின்போதுதான் நாங்கள் இன்னும் கொஞ்சம் இறுக்கமான நட்பு பெற்றோம். இருப்பினும், அதற்கு முன்பு ஒரே அமைப்பில் இயங்கியவர்கள் என்றளவிலே அவ்வப்போது சந்தித்து வந்தாலும்கூட, பெரியார் நூற்றாண்டு விழா என்பது தமிழ் நாடு முழுவதும் நடந்தபோது -குறிப்பிட்ட சில தோழர்கள்தான் எல்லா பகுதிகளிலிருந்தும் அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு சென்று வந்திருக்கிறோம். அந்தக் குழுவை கலகலப்பாக வைத்துக் கொண்டிருப்பவராக வள்ளிநாயகம் இருந்திருக்கிறார். அதைவிட சிறப்பாக அவர் அந்தப் பணியை ஆற்றி வந்த காலத்தில் அவருக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. திராவிடர் கழக இளைஞர் அணியில் ஒரு மண்டலத்துக்கு மண்டல இளைஞரணி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் காலத்தில்தான் அந்தப் பகுதியில் ஏராளமான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வந்தனர். அவரும், அந்தப் பகுதியில் திராவிடர் கழக ஈடுபாட்டோடு இயங்கி வந்த தோழர் ஸ்டாலினும் சேர்ந்து ஒரு புதிய எழுச்சியை தஞ்சை, சேலம், புதுச்சேரி மாவட்டங்களில் ஏற்படுத்தினார்கள்.

இப்போது மிக எழுச்சியோடு நடக்கின்ற ஈழவிடுதலைப் போராட்டம், அஸ்ஸாம் போராட்டம் இரண்டையும் இளைஞர் குழுவும், இங்கிருக்கிற மூத்த தோழர்களும் ஒரு குழுவாக சென்று அங்கு நடக்கின்ற நடப்புகளை ஆய்ந்து வந்து இயக்கத்திற்கு அதைப் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தனர். அதுபோன்ற ஒரு போராட்டத்தை, அதுவும் மற்றவர்கள் எல்லாம் பல்வேறு காரணங்களுக்காக நடத்தலாம். ஆனால், சாதி ஒழிப்புக்காக பெரியார் தனித் தமிழ்நாடு கேட்டார். அது குறித்து அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து இயக்கத்திற்கு, தலைமைக்குச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கூடிய கூட்டம் தவறாகக் கருதப்பட்டது. அந்தக் காரணத்திற்காக கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்தான், வெளியேற்றப்பட்டவர்தான் தோழர் வள்ளிநாயகம். அப்போது இளைஞர் மத்தியிலே அவர் ஏற்படுத்திய உற்சாகமும், எழுச்சியும் அளப்பரியது.

குடந்தைக் கல்லூரியில் படிக்கிறபோது தன்னை திராவிடர் கழகத்தில் இணைத்துக் கொண்டவர் வள்ளிநாயகம். அதற்குப் பின்னால் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை நான் சந்தித்தது, பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வாழ்வுரிமை மாநாட்டை முழுக்க முழுக்க அவர் நடத்தியபோதுதான்! அந்த மாநாட்டில் ஷெரீப்புக்கு கொஞ்சம் பங்கு இருக்கிறது. அதிலும், ஒரு பெரிய பங்கு என்றாலும் முழுப்பங்கு வள்ளிநாயகத்திற்குத்தான் உண்டு. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் பெரிதும் பேசப்பட்டன. அதில் எல்லாம் வள்ளிநாயகம் பின்னணியில் இருந்திருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் சொல்லியாக வேண்டும். இறுதியாக என்னிடம் பேசியபோதுகூட, அவரது நூல்களெல்லாம் வரவேண்டும் என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டோம். அந்தப் பணியைத் தொடங்குவதற்கு முன்னால் அவர் மறைந்து விட்டார். "இந்துத்துவத்தை வேரறுக்கும் உயிராயுதம்' என்ற நூலை மீண்டும் வெளிக்கொண்டு வரலாம் என்றுகூட பேசிக் கொண்டிருந்தோம். தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை, அங்கு இல்லாமல் இருந்த எழுச்சியை அவர்தான் ஏற்படுத்தினார் என்று சொல்ல வேண்டும். அங்கு தாழ்த்தப்பட்ட மக்களிடையே உட்சாதி பாகுபாடுகளை இல்லாமல் செய்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. அங்கு சுயமரியாதை திருமணங்கள் நடப்பதற்கு, சாதி மறுப்பு, தாலி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணங்கள் நடத்துவதில் அவருக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.

முற்றிலும் பெண்கள் மட்டுமே முன்னின்று திருமணத்தை நடத்துவதற்கு அவரும் ஒரு காரணமாக இருந்தவர். அப்படியெல்லாம் பலவற்றை அவரிடம் சொல்லலாம். தென் மாவட்டத்தில் அருந்ததியர் எழுச்சி ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உண்டாக்கினார். புதிரை வண்ணார்களுக்கான ஓர் அமைப்பை உண்டாக்க வேண்டும் என்பதில் முன்னோடியாக இருந்தார் என்று பல செய்திகள் அவரைப் பற்றிச் சொல்லலாம்.
ஏனென்றால், இயக்கம் எடுப்பதும் ஒன்றிணைப்பதும் இல்லாத ஒரு காலத்தில் அதைத் தொடங்கி வைத்தவர் வள்ளிநாயகம் என்பதைச் சொல்ல வேண்டும். அவர் பல அமைப்புகளில் இருந்தார். சமூக நீதிமன்றம் வைத்தார். ரெட்டமலை சீனிவாசன் பேரவை போன்று பல்வேறு அமைப்பு களை உண்டாக்கினார். அதன் வழியாக இந்த சிந்தனைகளை இளைஞர்கள் மத்தியிலும், அறிஞர்கள் மத்தியிலும் கொண்டு சென்றிருக்கிறார். அதோடு பிற்படுத்தப்பட்டோர் -தாழ்த்தப்பட்டோர் இணைப்பு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை தொடர்ந்து பேசிக் கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் இருந்த அந்தத் தோழருக்கு என்னுடைய வீரவணக்கத்தை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.”

Kristhudhas_Gandhi
கிருத்துதாசு காந்தி: “இன்னும் ஒரு 20 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் ஒரு போராளியாக, இந்த சமுதாயத்திற்குப் பொக்கிஷமாக இருந்திருக்க வேண்டிய ஒரு நாயகனை இழந்து தவிக்கும் உங்களது சோகத்தை, நானும் ஓவியா அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன். எங்களது சோகத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் இந்த இக்கட்டான காலத்தில் எந்த விதத்தில் எல்லாம் ஆதரவாகவும், உரமாகவும் இருக்க முடியுமோ -அந்த விதத்தில் ஆதரவையும், உரத்தையும் தருவோம் என்ற உறுதிமொழியையும் திருமதி வள்ளிநாயகத்திற்கு உங்கள் சார்பாகவும், எங்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வள்ளிநாயகம் அவர்களை நான் பெரிய அளவில் நேரடியாக அறிந்தவன் இல்லை. ஒரு பத்தாண்டு இருக்கும் என்று நினைக்கிறேன். தென்காசியில் ஒரு தொண்டு நிறுவனம் அழைத்திருந்த கூட்டத்திற்குப் போய் இருந்தபொழுது, அந்தத் தொண்டு நிறுவனத்தினுடைய அலுவலகத்தில் "மானுடத்தில் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்' என்ற நூலினைக் கண்டேன். அதுவரை, நம்மவரை எம்மவரை நம்மை மானுடத்தில் சோகமானவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். மானுடத்தில் துயறுற்றவர்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். மானுடத்தில் நசுக்கப்பட்டவர்களாகப் படம் பிடிக்க கண்டிருக்கின்றேன். மானுடத்தின் ஒடுக்கப்பட்டவர்களாக அனைவரும் திரும்பத் திரும்பச் சொல்லக் கேட்டிருக்கிறேன். மானுடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசு ஆவணங்களிலே பதியக் கண்டிருக்கின்றேன். முதன் முறையாக மானுடத்தில் அழகானவர்கள் நீங்கள் என்று சொல்லும் ஒரு நூலைப் பார்த்த உடனே ஒரு பரவசம் வந்தது. அப்போதுதான் இந்த வள்ளிநாயகம் யார் என்று எனக்குள்ளே தேடிக் கொண்டிருந்தேன். "தலித் முரசு'டன் எனக்கு இருக்கும் தொடர்பு காரணமாக, அதன் பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு வள்ளிநாயகம் அவர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஓராண்டுதான் இருக்கும் என்று நினைக்கிறேன், என்னுடைய இல்லத்திற்கு பாண்டியனுடன் வந்திருந்தார். அவருடன் வெகுநேரம் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். வள்ளிநாயகம் அவர்களை அறிந்திராதவர்கள் பட்டியலினத்தவராக இருந்தாலும் சரி, அல்லாதவராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அறிய வேண்டும். அவர் செய்தது என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆதி (திராவிடர்) நலச் செயலராக இருந்தபோது ஏதாவது புதுமைகளாக செய்ய வேண்டும் என்ற பெரும் வெறியே இருந்தது. பலருக்கும் தெரியும். இந்த சமுதாயத்தில் இருக்கும் போராளிகளைக் கண்டறிந்து, எந்த விதத்திலாவது ஒப்புரவு செய்ய வேண்டும் என்ற துடிப்பும் எனக்கு நிரம்ப இருந்தது. ஆனாலும் என்னைச் சூழ்ந்து இருந்தவர்களிடம் கேட்டுப் பார்த்து, தேடிப் பார்த்து ஒருவராலும் தான் அறியாதவரை அவர்களால் கொண்டு வந்து சேர்க்க முடியவில்லை. இந்த சமுதாயத்திற்காக யார் என்ன செய்தார்கள், எங்கு இருக்கிறார்கள் என்ற சரித்திரங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து கிடந்தனவே ஒழிய, அதை எடுத் துத் தருவார் யாருமே இல்லாமல் இருந்தது. என்னுடைய சோகம், வள்ளிநாயகம் அவர்களை பத்தாண்டுகள் கழித்து கண்டுபிடித்ததற்குப் பதிலாக, ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னதாக நான் செயலராக இருக்கும்போது கண்டுபிடித்திருந்தேன் என்றால், எங்களுடைய தொடர்புகள் இந்த சமுதாயத்திற்கு இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

அந்த வகையில் இந்த சமுதாயத் தலைவர்களை, இந்த சமுதாயத்திற்காக உழைத்தவர்களை எனக்கு முன்பு பேசியவர்களெல்லாம் சொன்னார்கள் -நமது மக்களின் சரித்திரங்கள் பற்றி. யார் யாருக்கோ சரித்திரங்கள் இருக்கின்றன. சரித்திரத்திற்கு உதவாதவர்களெல்லாம் சரித்திரமாகிப் போனார்கள். ஆயினும் நம்மவர்களுடைய சரித்திரம் காணக் கிடைக்காதது. இவர்தான் முதன் முறையாக தொடர்ந்து செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர் இல்லாமல் போய் இருந்தால் நம்மவர்களால் திரு. எல்.சி. குருசாமி யார்? பெருமாள் யார்? ஜெகநாதன் யார்? பீட்டர் யார்? பாலசுந்தர் ராஜ் யார்? ஜான் ரத்தினம் யார்? என்பதைக்கூட நாம் அறியாமல் போயிருப்போம். இவர்களையெல்லாம் வள்ளிநாயகம் மூலமாகத்தான், "தலித் முரசு' மூலமாகத்தான் என்னால்கூட அறிந்து கொள்ள முடிந்தது.

Oviya
நான் ஆதி(திராவிடர்) துறை செயலராக இருந்தபோது, 1960களிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை தலித்துகளுக்காக சேவை செய்தவர்கள் என்று விருது வழங்கப்பட்ட விவரத்தை அறிந்தேன். ஒரு 20 ஆண்டுகால ஆவணத்தையெல்லாம் எடுத்து, யார் யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தொகுத்தபோது 60 பெயர்கள் வந்தன. என்னால்கூட அறிய முடியவில்லை; தெரியாதவர்கள்தான் அதிகம். இந்த 60 பெயர்களையும் எடுத்து தமிழகத்திலுள்ள எல்லா பல்கலைக் கழகங்களுக்கும் நான் எழுதினேன். இப்படியாக 60 பேர்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு 15 பல்கலைக் கழகங்களாக இருக்கிறீர்கள். இந்த 60 பேரில் ஆளுக்கு 4 பேர்களாக பிரித்துக் கொண்டு, இந்த 4 பேர் பற்றிய வரலாற்றை நீங்கள் கொஞ்சம் தேடித் தாருங்கள். உங்களுக்கு ஊதியமாகக்கூட ஒரு தொகையைத் தருகிறேன் என்று எழுதினேன். ஒருவர்கூட ஒருவரைப் பற்றிக்கூட ஒரு செய்தியையும் சொல்லவில்லை. அதை எடுத்து செய்வதற்கும் மனமில்லாமல் போனார்கள் என்ற செய்தியை நான் உங்களிடையே பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பேற்பட்ட பல்கலைக் கழகங்கள் ஒருவரைப் பற்றிக்கூட சரித்திரத்தை அவர்களால் அகழ முடியாமல் போனதுபோது 20, 30 பேர்களுக்கு மேலாக சரித்திரத்தை தனியராக இருந்து அகழ்ந்தெடுத்து தந்திருக்கிறார் என்றால் -அவர் சமுதாயத்திற்கு எந்த அளவு தனது ஊனையும், உயிரையும் உருக்கியிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர் இன்னும் 60 ஆண்டுகள் இருந்திருந்தால் நாம் அறியாத பேர்களை எல்லாம் கொண்டு வந்து நம்முன் நிறுத்தியிருப்பார். நாம் அறிந்த பெயர்களையும் நாம் அறியாத பண்போடு நம்மிடம் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். வள்ளிநாயகம் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தபோது நான் சொன்னேன், மற்றவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களுக்கு சரித்திரம் படைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் நம்மவர்களுக்கு இறந்த பின்னும் சரித்திரங்கள் உருவாவதில்லை. நான் ஒரு வேண்டுகோளாகக்கூட அவரிடம் வைத்தேன்.

நீங்கள் கடந்த கால நமது பொக்கிஷங்களை அகழ்ந்து தருவதோடு, இந்த நடப்புக் காலங்களிலும் பல பொக்கிஷங்கள் பரவிக் கிடக்கின்றன. நடப்புக் காலத்தில் நம்மவர்கள் செய்யும் பணிகளை நாம் பேச வேண்டும். ஆகவே நீங்கள் நடப்புக் காலத்திலும் இவ்வாறு பணிபுரியும் மனிதர்களைக் கண்டு அவர்களையும் நீங்கள் அடையாளம் காட்டுங்கள். அது இந்த சமுதாயத்திற்கு இன்னும் வலுவாக இருக்கும் என்பதையும் சொல்லி, அதற்கான முயற்சியில் நான் இறங்குவேன் என்ற உறுதிமொழியையும் அவர் தந்திருந்தார். ஆனால் அய்யகோ! இந்த குறுகிய காலத்தில் நாம் அவரை இழக்க வேண்டி வந்தது என்பதுதான் இந்த சமுதாயத்திற்கான ஒரு மாபெரும் சோகம் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆகவே அவருக்கு அஞ்சலியை செலுத்துகிறோம் என்றால், முதல் அஞ்சலி அவரது குடும்பத்திற்கு ஆதரவாகவும், உரமாகவும் இருப்பது. இரண்டாவது அஞ்சலி வள்ளிநாயகத்தை யாரென்று நாம் அறிந்து அவருடைய சரித்திரத்தை எவ்வளவு புலப்படுத்த முடியுமோ அவ்வளவு விரிவாக அவருடைய சரித்திரத்தைப் புலப்படுத்த வேண்டும். மூன்றாவது அஞ்சலி, அவருடைய நூல்களை இதுவரை பார்த்தறியாமல் இருக்கிறோம் என்றால், அவருடைய பணிகளை நமது சமுதாயத்தினரிடம் கண்டிப்பாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். விரிவாக சேர்க்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு விரிவாக சேர்க்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரிவாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

"தலித் முரசில்' அவர் எழுதிய கட்டுரைகள் எல்லாம் மதுரை ‘தலித் ஆதார மய்யம்’ ஒரு நூலாகக் கொண்டுவர இருக்கிறது என்கின்ற செய்தியை அறிகிறேன். அந்த நூல் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக வரமுடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக வருவதற்கு நாம் என்னென்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். நான்காவதாக, நாம் அனைவரும் கூடி இந்த அரசிடம் சென்று வள்ளிநாயகம் அவர்களுடைய நூல்களை நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்ற செய்தியையும் ஒரு தீர்மானமாகவே இந்த மன்றத்தின் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, வள்ளிநாயகம் அவர்களுக்கு எங்கள் ‘பாலமும்’ ஒரு பாலமாக இருக்க முடிந்த மகிழ்ச்சியையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வள்ளிநாயகம் அவர்கள்தான் இந்த பாலத்தை, பாலத்திற்கு தூண்டுகோலாக இருந்து ஒவ்வொரு ஆண்டும் நம்மவர்க்கு ஒரு விருது வழங்கும் செயலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினார். அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பாகத்தான் இன்று இந்த விருதுக்காக எங்கள் "பாலம்' மூலமாக நாங்கள் ‘தலித் முரசு’டன் இணைந்து செய்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைசிறந்த மகனுக்கோ மகளுக்கோ பத்தாயிரம் ரூபாயை எங்கள் "பாலம்' அமைப்பு மூலம் கொடுக்கிறோம். இந்த ஒரு பெரிய நாயகனுக்கு, நம்முடைய அஞ்சலியை செலுத்தி அவருடைய செயலை வாயாறப் பாராட்டி, அவருடைய துணைவியாருக்கு ‘தலித் முரசோடு’ சேர்ந்து இந்த விருதை வழங்குவதில் நாம் பெருமைப்படுகிறோம்.
Pin It