“என் கண்களின் முன் இந்து மதத்தின் தொன்மையை மிஞ்சிய பழங்குடி மக்களின் பண்பாடு அமைதியாக மூழ்கக் காத்திருக்கிறது. இந்த நாட்டின் உச்சமான தர்ம சபையின் நீதியரசரின் நேர்மைமிக்க ஆணையின்படி, சர்தார் சரோவர் அணை உயரும், நீர் நிறையும். எல்லாம் நிரந்தரமாக ஜலசமாதி அடையப் போகின்றன.
பாய்ஜிபாய்! பாய்ஜிபாய்! நீங்கள் எப்போது உங்களது இந்தப் பொறுமையுடனான காத்திருப்பை, கெஞ்சலை நிறுத்தி பொங்கி எழப்போகிறீர்கள்? போதும். ஆயுதத்தை எடு என்று எப்போது புறப்படப் போகிறீர்கள்? உலகமே நடுங்க உரத்த குரலில் உங்களின் கோபத்தை எப்போது ஒலிக்கப் போகிறீர்கள்? உங்களது அப்பாவித்தனமான நம்பிக்கைகளை எப்போது உடைத்தெறியப் போகிறீர்கள்?
நீங்கள் அணைகளை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், தேவை என்றாலும் இல்லை என்றாலும் இதற்குத் தரும் விலை என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கடன்கள் தீர்க்கப்படும்
புத்தகம் muuடப்படும்.
ஆனால், அது நமது கடன்
நமது கணக்குப் புத்தகம்
நாமே முடிப்போம் வாருங்கள்.''
- அருந்ததி ராய், Greater Common Good பொது நலனுக்காக.
நர்மதா பச்சோவா அந்தோலன் என்கிற ‘நர்மதா பாதுகாப்பு இயக்கம்' தனது 20 ஆவது ஆண்டு விழாவை அண்மையில் மும்பையில் கொண்டாடியது. நர்மதா என்கிற நதியின் குறுக்கே சிலந்தி வலைகளாய் கட்டப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணைகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் இது. இந்த நூற்றாண்டில் ஒரே பிரச்சினைக்காகத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் இயக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும் என்கிற பெயரை, ஆசிய நாடுகளின் சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் வரலாற்றில் பதிவு செய்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள், அறவழியிலான நூதன யுக்திகள், மக்காச்சோளம் உற்பத்தியையே பாதித்த பழங்குடியினரின் ஆற்றல் இழப்புகள், புதிய புதிய வழக்குகள், மேற்கோள் சொல்ல முடியாத தீர்ப்புகள், இது போக இந்திய வளர்ச்சிக் கொள்கைகளையும், திட்டங்களையும் உருவாக்குகின்ற அறிஞர்களிடம் முன்னேற்றம் - இடப்பெயர்ச்சி மற்றும் மறுவாழ்வு, மறுகுடியமர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகள்... இவையனைத்தும் சர்தார் சரோவர் அணையை விடப் பல மடங்கு பெரிதானவை என்பதை இவ்வியக்கத்தின் போராளி மேதா பட்கர், தேசிய கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
பல மாநிலங்களில் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வந்த ஆளுங்கட்சியையும், அரசியல் சூழலையும் திசைதிருப்பி தலைப்புச் செய்தியான மேதா பட்கரின் சாகும்வரை பட்டினிப் போராட்டம், நர்மதாவின் குறுக்கே கட்டப்படும் சர்தார் சரோவரின் கதையை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு நினைவூட்டியது. இயற்கைப் பேரிடர் ஆணையத்தை உருவாக்கிவிட்டோம்; இனி சுனாமி வந்தாலும் பூகம்பம் வந்தாலும் ஒன்றும் ஆகாது என்று மார்தட்டி நிற்கிற இந்திய அரசின் வளர்ச்சித் திட்டத்துக்கு எதிராக, செயற்கைப் பேரிடர் நாசத்தை உருவாக்க சர்தார் சரோவர் அணை தற்போது 436 அடியை நெருங்கிக் கொண்டிருப்பதை பிரதமரும், உச்ச நீதிமன்றமும், குஜராத் அரசும் கவனிக்கத் தவறியதை 21 நாள்கள் நாடே உற்று நோக்கியது.
அமர்கந்தா மலைமுகடுகளில் தொடங்கி 1,300 கிலோ மீட்டர் பரந்து விரிந்த அரபிக் கடலில் சங்கமிக்கும் நர்மதாவின் குறுக்கே கட்டப்படும் 3,000 சிறிய அணைகள், 300 நடுத்தர அணைகள், 30 பெரிய அணைகளால் மட்டும் 20 லட்சம் பழங்குடியினர் பாதிக்கப்படுகின்றனர். கரும்பு உற்பத்திக்காகவும், மின்சாரத்திற்காகவும், பாசன வசதிகளுக்காகவும், ஏன் இந்திய பொருளதார வளர்ச்சிக்காகவும் கட்டப்படுகின்றன என்கிற அரசின் விளக்கங்கள் பல்வேறு வடிவங்களில் விளக்கப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுகின்ற லட்சக்கணக்கான பழங்குடி மக்களுக்கு மறுவாழ்வு மறுகுடியமர்வு குறித்து அரசு இதுவரை எதையும் சரியாக செய்ததில்லை. இந்நிலையில், சர்தார் சரோவர் என்கிற அணையின் கட்டுமானத்தை உயர்த்துவதிலும், தண்ணீர் அளவை அதிகரிப்பதிலும் அரசு தன்முனைப்பு காட்டி வருவதற்கு எதிராக மீண்டும் போராட்டம் தலையெடுத்துள்ளது.
இப்போராட்டம் ஆதிக்க சாதியினருக்கும் காவல் துறைக்கும், அரசுக்கும் எதிராகப் போராடுகின்ற தலித்துகளின் போராட்ட அனுபவத்தைப் போன்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தளர்வு இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசுக்கு எதிராக எந்தவிதத் தளர்வும், சோர்வுமின்றி இவ்வியக்கம் போராடி வருகின்றது. முன்னேற்றம் என்கிற வளர்ச்சித் திட்டங்களை அரசு உருவாக்கினால், அதனால் ஏற்படும் இடப்பெயர்ச்சியில் மறுவாழ்வு மறுகுடியமர்வை உருவாக்க அரசிடம் எந்தவித முன்வரையறையும் இல்லை என்பதை அரசுக்கு உணர வைத்துள்ளது. இருப்பினும், இப்பிரச்சினை மகாராட்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும், இந்துத்துவ விளைச்சலுக்குப் பெயர்போன குஜராத் மட்டுமே இதன் நாட்டாமையாகத் தன்னை முன்நிறுத்தி வருகிறது. ‘குஜராத் இனக்கலவரத்துக்கு எதிராக சபர்மதி ஆசிரமத்தில் போராட்டம் தொடங்கிய மேதாபட்கரை நான் எளிதாக மறந்துவிடவில்லை' என்பதை நினைவுபடுத்தி, மேதா பட்கருக்கு எதிராக நரேந்திர மோடி பட்டினி கிடக்கத் தொடங்கினார். கூடவே தன்னையும் குஜராத் மக்களின் விசுவாசியாகக் காட்டிக் கொண்டார்.
இன்று எளிதில் மறக்க முடியாத, புறக்கணிக்கவும் முடியாத பிரச்சனையாக நர்மதா பிரச்சனை உருவெடுத்து நிற்கிறது. ஓர் அணையைக் கட்டினால் 44 ஆயிரம் பேர் இடம் பெயர்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது. அப்படியானால், இந்தியாவில் உள்ள 3,600 அணைகளால் இடம் பெயர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதை கணக்கெடுத்தால், ஒரு மாநிலமே இந்திய வரைபடத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கின்றது.
அணைகளால் இடம் பெயர்ந்த பழங்குடியினர் மட்டுமே 55 சதவிகிதத்தினர். இதில் தலித்துகளையும் சேர்த்தால் 60 சதவிகிதத்தினர் என்கிறது இன்னொரு ஆய்வு. நகர்ப்புறப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்வுக்காக பழங்குடியினரின், தலித்துகளின் நிலத்தையும், நீரையும் பிடுங்கிக் கொடுப்பதை இந்த அரசு முன்னேற்றம் என்று கூவுகின்றது. ஆனால், 20 கோடி இந்தியர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் இல்லை; மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை. பணக்கார நாடுகளில் இதுபோன்ற மிகப் பெரிய அணைகள் கட்டும் திட்டங்களுக்கு எதிராகப் பசுமை அமைதி இயக்கம், பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தொடங்கிய போராட்டங்களால், அணைகள் கட்டும் திட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால், உலக வங்கியின் எச்சில் காசை வாங்கி கூட்டணி பங்கு போட்டுப் பிரித்துக் கொள்ளவே நர்மதா அணைத்திட்டம் அரசால் படுகம்பீரமாக நிறைவேற்றப்படுகின்றது.
கடந்த 25 ஆண்டுகளில், நர்மதா பாதுகாப்பு இயக்கம் முன்னெடுத்த போராட்ட வரலாற்றின் காலச் சூழலில் நர்மதாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் பலர் உயிருடன் இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்கூட இடம் பெறாமல் அவர்களால் சமாதியானார்கள். இட்லரின் பாசிசக் கொடூரங்களை செய்நேர்த்தியோடு செய்துவரும் குஜராத் அரசு, ‘தொல்குடியினர்' என்கிற மானுட மரபையே முற்றிலும் அழிக்கக் காரண கர்த்தாவாக இருந்து விட்டது. அரசின் தவறான வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக, உரிமையுடன் போராடும் போர்க்குணத்தை நர்மதா பள்ளத்தாக்கு பழங்குடியினர் பெற்றுள்ளனர். அவர்களை நர்மதா பாதுகாப்பு இயக்கம்தான் விழிப்பூட்டியது. இத்தனை ஆண்டுகளில் தங்களுக்கான உரிமைகளை இவர்கள் போராடியே பெற்று வந்துள்ளனர்.
யார் இருந்தாலும், செத்தாலும் இந்தியா பணக்காரர்களுக்காக முன்னேறிக் கொண்டே இருக்கும். இதை யாரும் தடுக்க முடியாது என்றாலும் தடுக்கவே கூடாது என உச்ச நீதிமன்றமே வக்காலத்து வாங்குகின்றது. இரண்டு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஓர் இயக்கத்தையே நசுக்கத் துடிக்கின்றது. நர்மதா திட்டம் தொடர்பாக விரிவான மறு ஆய்வு வேண்டும், மறுவாழ்வு மறு குடியமர்வு ஆகியவற்றை மறு ஆய்வு செய்து திட்டம் தயாரித்து உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு சாத்தியம் இல்லை என்றால், அணை கட்டும் பணி நிறுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டும் அது மறுத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் மக்கள் இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் அது கொச்சைப்படுத்தியது.
நர்மதாவாக இருந்தாலும், பழங்குடியினராக இருந்தாலும் அது போராடுகின்ற மக்கள் பிரச்சினை. போராடுகின்ற மக்களும் அதன் இயக்கம் பலவீனமடைந்தால் உள்ளவையும், உணர்வும் பலவீனமடையும். ஒடுக்கப்படுகின்ற மக்களை உரிமையுடனும், சுய உணர்வுடனும் வாழ வலியுறுத்துவது நம் கடமை. தனது சொந்தப் பெயரை எழுதத் தெரியாதவர்கள் ஓர் இயக்கமாக அணிதிரண்டு, இந்திய வளர்ச்சித் திட்டங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளார்கள் என்றால், அவர்கள் ஓர் இயக்கமாக, அமைப்பாகத் திரண்டு எழுந்ததுதான் அவர்களின் வெற்றி. அந்த வெற்றியை நாம் கொண்டாடுவதும், அதில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதும் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
ஆனால், இன்றைக்கு மக்கள் இயக்கங்களுக்கும், தலித் இயக்கங்களுக்கும் பெரிய இடைவெளி இருந்து வருகின்றது. யாரும் யாரையும் போராட்டக் களத் தோழமையாகக்கூட அங்கீகரிப்பதில்லை. மக்கள் இயக்கங்கள் தலித் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்கிற தலித் விமர்சனங்களில் இருந்து நர்மதா பாதுகாப்பு இயக்கம் தனித்து நிற்கின்றது. பெண்களின் தலைமையில் செயல்படும் இயக்கங்கள் மீது அப்படியொரு குற்றச்சாட்டை எளிதாக வைக்க முடியாது என்பதை ஓரளவு நர்மதா பாதுகாப்பு இயக்கம் நிரூபித்து வருகின்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவும், பழங்குடியினரின் நலனுக்காகவும் கதர் கலாச்சாரத்தில் இதுபோல் பட்டினியிருப்பது வடஇந்தியாவில் எளிதான ஒன்று. டெக் அணைக்கு எதிராக சுந்தர் லால் பகுகுணா, பர்கி அணைக்கு எதிராக பாபா அம்தே 40 நாள், 90 நாள் என்றுகூட பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 வரை 21 நாள்கள், நர்மதா பள்ளத்தாக்குப் பழங்குடி மக்களுடன் மேதா பட்கர் மேற்கொண்ட பட்டினிப் போராட்டம், ஒட்டுமொத்த அரசியல் வட்டாரங்களில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. சோனியாவும், பிரதமரும் தலையிட வேண்டியிருந்தது. வி.பி. சிங் மேதாவை சந்தித்தார். அரசியலில் இருக்கின்ற சிலருக்கே இந்தப் பிரச்சனையைப் பற்றிய உண்மை, இதுபோன்ற சூழலில்தான் தெரிகின்றது.
ஆனால், இதே காலகட்டத்தில் மும்பையின் மிகப் பெரிய சேரியிலிருந்து 22,000 சேரிமக்களை மும்பையின் வரைபடத்திலிருந்தே தூக்கியெறிய நடந்த சதிக்கு எதிராக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர் மும்பையில் போராடி வருகிறார்; பட்டினி இருந்திருக்கிறார்; கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில், ஏன் தமிழக அளவில் அவரின் ஆதரவாளர்கள் அதனை இங்குள்ள தலித் இடப் பெயர்ச்சிப் பிரச்சனையோடு அல்லது கிராம நகர்ப்புற குடிசைப்பகுதிகளின் இடப் பெயர்ச்சிப் பிரச்சனையோடு தொடர்புபடுத்தி எங்கேயும் ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ நடத்தியதில்லை. ஒன்று அது தலித்துகளின் பிரச்சனை. அடுத்து அதில் எந்த விளம்பரம் கிடைக்காது.
தலித் இயக்கங்கள், மக்கள் இயக்கங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் இருந்தாலும், முதலில் மக்கள் இயக்கங்கள் தலித் பிரச்சினைகளில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நர்மதா பாதுகாப்பு இயக்கமும், மேதா பட்கரும் தலித் பிரச்சனைகளில் கவனம் செலுத்தக்கூடிய வகையில் தங்கள் இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். ஆனால், இங்குள்ள விவசாய இயக்கங்களும், சுற்றுச் சூழல் இயக்கங்களும், மனித உரிமை இயக்கங்களும் தலித் பிரச்சனைகளுக்காகத் தங்களை வருத்திக் கொள்ள மாட்டார்கள்; தலித் இயக்கங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் மாட்டார்கள்.
தமிழகத்தில் மக்கள் இயக்கங்களை வழிநடத்துகின்றவர்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கத்திடமிருந்து நிறைய படிப்பினைகளைப் பெற வேண்டியதை, இன்றையச் சூழலில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. போராட்டத் தோழமையில் ஓர் இணைந்த நட்புறவு தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
-அன்பு செல்வம்