மக்களோடு கூட்டணி அமைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், இன்றளவும் மக்கள் கூட்டாக வாழவில்லை. அடிப்படை உரிமைகளிலிருந்து அரசியல் உரிமைகள் வரை தலித் மக்கள் அங்குள்ள கிராமங்களில் சாதி ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். மக்களோடு கூட்டணி அமைத்திருப்பவர்கள், வெறும் மழைக்கால நிவாரணத்தை மட்டும் அறிவித்துப் பயனில்லை; கிராமங்களில் நடைபெறும் சாதிக் கொடுமைகளால் கடும் பாதிப்பிற்கு ஆளாகும் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பும் முதலமைச்சருக்கு இருக்கிறது.

Abinaya தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, அபிநயா என்ற சட்டக் கல்லூரி மாணவி நவம்பர் 5 அன்று ஆண்டிப்பட்டியில் கொல்லப்பட்டுள்ளார். இது, அங்குள்ள மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலுக்கு கண்ணில்லை. ஆனால், அதற்கு சாதி இருக்கிறது. காதலித்த பெண் தலித் என்ற காரணத்தால், காதலித்தவனின் குடும்பமே சேர்ந்து அப்பெண்ணைக் கொன்ற கொடூரம் நடந்தேறி இருக்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா, மதுரை இரண்டாம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி. அவருக்கும் தேவர் சமூகத்தைச் சேர்ந்த மெக்கானிக் கடை வைத்திருக்கும் ஆனந்த்ராஜ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், அபிநயா தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆனந்த்ராஜை வற்புறுத்த, வேறு வழியின்றி இதனைத் தனது பெற்றோரிடம், அக்காவிடம் தெரிவித்துள்ளார் ஆனந்த்ராஜ். ஆனால், "ஒரு பள்ளச்சிய நீ கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது'' என அவர்கள் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக எதிர்க்கவே, அபிநயாவைத் தவிர்க்க முயன்றிருக்கிறார் ஆனந்த்ராஜ். திருமணம் செய்ய வேண்டும் என அபிநயா உறுதியாக இருக்க, வேறுவழியின்றி அவரைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த ஆனந்த்ராஜ், அவரது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்து விட்டார்.

இதுகுறித்து உண்மையறிய, அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)யும் களமிறங்கின. பெண்ணைப் பறிகொடுத்து மூன்று நாட்களேயான அபிநயாவின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தை சிதம்பரத்திடம் பேசினோம். "என்னோட தலைமுறைதான் எங்க சாதியில படிச்சு வெளியில வர்ற முதல் தலைமுறை. இன்னும் நிறைய பேரை எங்க சாதியில படிக்க வைக்கணும்; எங்க மக்களோட பொருளாதார நிலை உயரணும். என்னை மாதிரி கருத்துடைய சிலரும் இன்னிக்கும் எங்க கிராமத்தில இருக்குற பசங்களப் படிக்க வைக்க முயற்சி எடுத்திட்டு இருக்கோம். எம்பொண்ணு அபிநயாவும் அந்த வகையில் படிச்சு சமூகத்துக்குப் பயனுள்ளவளா இருப்பான்னு நினைச்சேன்'' எனக் கூறும் பொழுதே அவர் குரல் உடைகிறது.

தொடர்கிறார் சிதம்பரம் : "அவளுக்கு காதல்ங்கறதெல்லாம் என்னால நம்ப முடியலைங்க. ஏன்னா, 12 மணி பஸ்சுக்கு போனா, சாயந்தரம் சரியா வீட்டுக்கு வந்துருவா. கல்லூரியிலும் எல்லா நாளும் வருகைப் பதிவேட்டில் அவளது பெயர் இருந்துருக்கு. அன்னிக்கு வீட்டிலிருந்து புடவை கட்டிட்டு, கல்லூரியில் விழா இருக்குன்னு சொல்லிப்போன பொண்ணு, வீட்டுக்கு வரலை. பதறிப்போய் தேடறோம். இரண்டு நாளாகியும் எந்த விவரமும் தெரியாத இருந்தப்பதான் அந்தப் பெண்ணோட டைரியில இந்தப் பையனோட பேரு, விலாசம் எல்லாம் குறிச்சு வைச்சிருந்தது.

இதுக்கிடையில், மண்ணாடி மங்கலத்துல இருக்கற சில பசங்களும் அபிநயாவை அந்தப் பையன் ஆண்டிப்பட்டிக்கு கூட்டிட்டுப் போனதாகவும் சொல்லவே, எங்க ஊருல இருக்கிற தேவர் சமூகத்தைச் சேர்ந்த சிலரோட ஆண்டிப்பட்டி போனோம். போன அன்னிக்குத்தான் கம்மாயில ஒரு பெண்ணோட பொணம் மிதக்குதுன்னு சொல்லவும், எங்ககூட வந்த தேவர் சமூகத்து ஆட்கள், ‘எங்க சமூகத்துல பிரச்சனையாயிடும்னு' சொல்லி கையெடுத்துட்டாங்க. அப்புறம் என் தம்பி அங்க இருக்கிற காவல் துறை அதிகாரிகிட்ட விவரத்தைச் சொல்லவுமே, எங்களை அழைச்சுட்டுப் போயி காண்பிச்சாங்க. அந்தப் பொண்ணு போட்டிருந்த வாட்சு, டிரெஸ் வைச்சு அடையாளம் காட்டினோம். அப்புறம்தான் தெரிஞ்சுது, வீட்ல இருந்து அந்தப் பொண்ணு 13 பவுன் நகை எடுத்துட்டுப் போயிருக்குறது.''

Students agitation காவல் துறை உடனே வழக்குப் பதிவு செய்து, ஆனந்த்ராஜை கைது செய்துள்ளது. ஆனால், இதற்குப் பிறகுதான் ஏகப்பட்ட மர்ம முடிச்சுகளுக்கு விடை தெரியவில்லை. அபிநயாவின் உடலில் காயங்களும், கழுத்தை சைக்கிள் செயினால் இறுக்கியிருப்பதாகவும் சிதம்பரம் கூறுகிறார். அவளது கண், வாய் எல்லாம் வெளியில் வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த்ராஜ் மீது சிறு காயம் கூட இருப்பதாகத் தெரியவில்லை. இது, ஒரு தனிநபர் மட்டும் செய்த கொலையாக இருக்க முடியாது. ஆனால், இன்றுவரை ஆனந்த்ராஜைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. பி.சி.ஆர். வழக்கு போடப்பட்டிருந்தாலும், அதில் மிகவும் சாதாரணப் பிரிவுகளிலேயே போடப்பட்டுள்ளது. இது, வழக்கை வலுவிழக்கச் செய்வதாகவே உள்ளது.

ஆனந்த்ராஜின் குடும்பத்திற்கு இக்காதல் திருமணத்தில் விருப்பமில்லை என்பது மட்டுமின்றி, அவரது தமக்கை மற்றும் வேறு சில நண்பர்களுக்கும் இக்கொலையில் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் யார் மீதும் காவல் துறை எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. 16.11.2005 அன்று முற்போக்குப் பெண்கள் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் இணைந்து பல்வேறு அமைப்புகளுடன், மேலக்கால் மக்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, மதுரை தபால்தந்தி அலுவலகம் அருகில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பாதிக்கப்பட்ட அபிநயாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி உடனே அளிக்கப்பட வேண்டும்; வழக்கை சி.பி.அய். விசாரணைக்கு மாற்ற வேண்டும்; வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்; குற்றவாளிகளுக்குப் பிணை அளிக்கக் கூடாது என்ற மய்யக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அய்நூறுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் சி.பி.அய். எம்.எல். கட்சியின் மாவட்டச் செயலாளர் பாண்டியன், முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாநில அமைப்பாளர் மேரி மற்றும் உஷா, விடுதலை வேங்கைகள் கூட்டமைப்பின் செயலாளர் குரு விஜயன், தமிழக மாணவர் முன்னணியைச் சேர்ந்த வையவன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அகராதி, வழக்கறிஞர் பொற்கொடி, சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Pin It