சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள்

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது.

kolathormani vidulairajendran 600சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி நிற்கும் இடைநிலை ஜாதியின் ஜாதி வெறி, தலித் விரோதப் போக்கையும் எதிர்க்க வேண்டிய வரலாற்றுச் சூழலை உணர்ந்து புதிய பண்பு மாற்றத்துடன் பெரியார் திராவிடர் கழகம் நடைபோடத் தொடங்கியது. அதற்கு முன்பு திராவிடர் கழகத்தின் செயல் வீரராகப் பணியாற்றியவர் பத்ரி. அவரது முயற்சியால்தான் பகுதியிலுள்ள அனைத்துக் கட்சியினர் ஆதரவோடு வி.எம். சாலை சந்திப்பில் பெரியார் சிலை திறக்கப்பட்டது.

ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் பத்ரியின் முயற்சியால் நடந்தன. அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர்கள் இன்று தென்சென்னைப் பகுதியில் கழகத்தின் செயல்பாட்டாளர்களாக களமாடி வருகிறார்கள். அடுத்த தலைமுறையைச் சார்ந்த இளைஞர்களும் கழகத்தின் பொறுப்புகளை யேற்று துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பத்ரியின் நினைவு நாளை சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் கொள்கை அடையாளத்தோடு நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழாவாக நடத்தப்பட்டது.

ஏப். 30 அன்று காலை 9 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனுடன் கழகத் தோழர்கள் பத்ரியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதியேற்று வீரவணக்கம் செலுத்தினர். தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சார்ந்த பத்ரியின் தோழர்களும் பத்ரியின் தாயார், துணைவியார், சகோதரிகள், பத்ரியின் மகள் மற்றும் மகன் நிகழ்வில் பங்கேற்றனர்.

மாலை 6 மணியளவில் வி.எம். தெரு சந்திப்பில் “விரட்டுக் கலைப்  பண்பாட்டுக் குழு” கலைநிகழ்வுகளுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. வெளிச்சம் பெறாத பெரியார் தொண்டர்கள் பட்டுக்கோட்டை அழகிரி, குத்தூசி குருசாமி, திருவாரூர் தங்கராசு, சுவரெழுத்து சுப்பையா, புலவர் இமயவரம்பன், பாவலர் பாலசுந்தரம், நாகை பாட்சா, டபிள்யூ பி.ஏ. சவுந்தர பாண்டியனார், எஸ். நீலாவதி, குஞ்சிதம் குருசாமி, பண்டிதை ஞானாம்பாள், ஆர். அன்னபூரணி, மஞ்சுளா பாய், இரா. கண்ணம்மாள், இராயப்பேட்டை கண்ணன், இராயப்பேட்டை குமார், பத்ரி நாராயணன் ஆகியோர் தொண்டுகளை நினைவுகூரும் எழுச்சிப் பாடல்கள் நாடகங்களை நடத்திக் காட்டினர். தோழர்களுக்கு மிகுந்த உணர்வு களையும் உற்சாகத்தையும் ஊட்டிய நிகழ்வாக இது அமைந்தது.

badhrinarayana func 600நிகழ்ச்சிக்கு கழகத்தின் களப்பணிகளையே தனது இலட்சியமாகக் கொண்டு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாத செயல்வீரர் கோ. வீரமுத்து தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி தனது வரவேற்புரை யில் தோழர் வீரா என்ற வீரமுத்து தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தாது செய்து வரும் உடல் உழைப்பு நிறைந்த களப்பணிகளை உருக்கத்துடன் எடுத்துக் கூறினார். பெரியார் நினைவு நாள் சுவரொட்டி ஒட்டும் பணியின் போது கழகச் செயல்வீரர்களான தந்தையை இழந்த இளைஞர்கள் கண்ணன், குமார் விபத்தில் இறந்ததையும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞர்களின் இழப்பை அவரது தாயார்கள் இயக்கத்துக்காக சகித்துக் கொண்ட பெருந்தன்மையையும் தோழர் உமாபதி எடுத்துக் கூறியபோது கூட்டமே கண்ணீர் சிந்தியது.

தொடர்ந்து வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று களப்பணி யாற்றி வரும் பெண் தோழர் இராஜி, கழகத் தோழர்களின் தோழமை உணர்வையும், களப் பணிகளைகளையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், பத்ரியின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்திவிட்டு கழகத்தின் கூட்டத்தில் பங்கேற்றார்.

பத்ரியின் செயலூக்கத்தையும், பெரியார் தொண்டர் களின் தன்னலமற்ற களப்பணிகளையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து உரையாற்றினார். தி.மு.க. வழக்கறிஞர் அணியைச் சார்ந்த ஒ.சுந்தரம், தி.மு.க. பகுதிச் செயலாளர் துரை ஆகியோர் உரையைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வெளிச்சம் பெறாத தொண்டர்கள் குறித்து உரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர்மணி, சுயமரியாதை இயக்கத்தின் வீராங்கனைகளாக செயல்பட்ட பெண் தோழர்கள் பற்றி விரிவாகப் பேசினார். நிகழ்ச்சிக்கு காலந்தொட்டு இயக்கப் பணியாற்றி வரும் ஏ. சம்பத், வி. முருகன், பகுதி என்று தோழர்கள் அன்போடு அழைக்கும் ஆ. தமிழ்ச் செல்வன், கருப்புத் தமிழ் ஆகிய மூத்த தோழர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் அனைவரும் பாராட்டப் பெற்றனர். கோ. தமிழரசு நன்றி கூறினார்.

கழகக் கட்மைப்பு நிதியாக கழகத் தலைவரிடம் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், மாவட்டத்தலைவர் ம. வேழ வேந்தன், மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் வழங்கினர். பகுதி தி.மு.க. செயலாளர் துரை ரூ.10,000 வழங்குவதாக மேடையில் அறிவித்தார். விழாவில் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் தோழர்களிடையே மிகுந்த எழுச்சியையும் உணர்வுகளையும் உருவாக்கியது.

Pin It