உருக்கமும் உணர்வுமாய் நடந்த நினைவேந்தல்

மக்களிடம் ஜாதி, மதம் பார்ப்பனியத்துக்கு எதிரான பாடல்களை எழுதியும் இசையமைத்தும் தனது ‘விடுதலைக் குரல்’ கலைக்குழு வழியாக போரிசைப் பாடல்களை பாடி வந்த தலித் சுப்பையா, பிப். 16, 2022 அன்று புதுச்சேரியில் முடிவெய்தினார். இறுதி காலத்தில் தலித் சுப்பையா எனும் பெயரை லெனின் சுப்பையா என்று மாற்றிக் கொண்டார்.

kolathoor mani and vidhuthalai rajendran 332ஜாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் ஏழைக் குடும்பத்தில் மதுரை மாவட்டத்தில் பிறந்த அவர், தடைகளைத் தகர்த்து, கல்வி பயின்று, 1980களில் புதுச்சேரிக்கு குடியேறினார். தொடக்கக் காலத்தில் மார்க்சிய சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கரிய பெரியாரிய சிந்தனைகளோடு புரட்சிப் பாடகரானார். பல நூறு பாடல்களை எழுதி, அவரே இசை அமைத்தார். தலித் சுப்பையா என்று தன்னை அடையாளப்படுத்தினார். பாடல் வரிகளில் அலங்காரங்கள் அழகுச் சொற்களைத் தவிர்த்து, வரலாறு களையும் சிந்தனைகளையும் பொதித்து வைத்தார். தனது இசை நிகழ்ச்சி மேடைகளை சிந்தனை மேடைகளாக்கினார். பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர் விடுதலைக் கழக மேடைகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

அவர் இறப்பு செய்தி கிடைத்தவுடன் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, அவரது குழுவில் பங்கேற்றுப் பாடி வந்த தோழர் நாத்திகன், அருண்குமார் ஆகியோர் புதுவை சென்று இறுதி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, 18.02.2022 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித் சுப்பையாவின் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடந்த 20.2.2022 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அவரது படத் திறப்பு நினைவேந்தல் நிகழ்வையும் திராவிடர் விடுதலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. அவரது கலைக் குழுவில் 20 ஆண்டுகாலம் தொடர்ந்து பயணித்த பாடகர் மணிமேகலை, அவரது துணைவர் கார்த்திக், நாத்திகன் ஆகியோர் லெனின் சுப்பையாவின் பாடல்களைப் பாடி அவரது மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அவரது குழுவில் தொடர்ந்து பயணித்த கார்த்திக், ஒவ்வொரு பாடலையும் லெனின் சுப்பையா எந்தப் பின்னணியில் எழுதினார், யாருக்காக எழுதினார் என்ற வரலாற்றத் தகவல்களையும் எந்த நேரத்திலும் தனது கலையை விலை பேசாத சமரசமற்ற இலட்சிய உறுதியையும் இணைப்புரையாக ஒவ்வொரு பாடலுக்கும் வழங்கியபோது அவையே கண்ணீர் சிந்தியது. ஒன்றரை மணி நேரம் இசை நிகழ்ச்சி உருக்கத்துடன் பார்வையாளர்கள் இதயங்களில் துயரச் சுமையை அழுத்தியவாறே நடந்தது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, லெனின் சுப்பையா படத்தைத் திறந்து வைத்தார். லெனின் சுப்பையாவுக்கு தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி, அவருக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சார்ந்த தீனா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை மீது அவர் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்ததையும் தனது குடும்பத்தைவிட இலட்சியத்தை மிகவும் ஆழமாக நேசித்ததையும் உருக்கமாக எடுத்துச் சொன்னார். தலித் சுப்பையாவின் இரண்டாவது மகன் கார்க்கி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு, 2005ஆம் ஆண்டு, அக்.2 இல் திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய தமிழர் எழுச்சி விழா மாநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்திய தலித் சுப்பையா, பாடல்களுக்கான இணைப்புரையாகப் பேசிய கருத்துகளைத் தொகுத்து 27.2.2005 அன்று ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டிருந்தது. அத் தொகுப்பில் தலித் சுப்பையா பதிவு செய்த கருத்துகளை விடுதலை இராசேந்திரன் எடுத்துக் காட்டி உரையாற்றினார். (அந்த உரையின் சுருக்கம் இந்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது) தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைமையேற்று நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி உணர்வுடனும் உருக்கத்துடனும நடந்தேறியது.

‘விடுதலைக் குரல்’ கலைக் குழுவை தலித் சுப்பையா பாடல்களுடன் தொடர்ந்து அவரது குழுவில் பயணித்தவர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நிகழ்வில் பேசியவர்கள் வலியுறுத்தினார்கள்.

மாட்டிக்கிட்டாரு; அய்யரு மாட்டிக்கிட்டாரு : வி.பி.சிங் மீண்டும் பாடச் சொன்ன தலித் சுப்பையா பாட்டு

‘மாட்டிக்கிட்டாரு, அய்யரு மாட்டிக்கிட்டாரு’ என்ற பாடலை காஞ்சி ஜெயேந்திரன், சங்கர்ராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதையொட்டி தலித் சுப்பையா எழுதினார். இந்தப் பாடல் பிறந்த வரலாற்றை அவரது குழுவில் இடம் பெற்றிருந்த கார்த்திக் சென்னையில் நடந்த படத்திறப்பு நிகழ்வில் விளக்கினார்.

“2004ஆம் ஆண்டு எங்கள் குழு டெல்லிக்குப் பயணமானது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அப்போது டெல்லியில் இரட்டை வாக்குரிமை, தனியார் துறை இடஒதுக்கீடு சுய நிர்ணய உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 நாள் மாநாடு நடத்தினார். அம்மாநாட்டுக்கு நாங்கள் நிகழ்ச்சி நடத்தப் போனோம். பயணத்தில் சங்கராச்சாரி கைது பற்றிய செய்தி கிடைத்தது. உடனே இந்த ஜெயேந்திரனுக்கு ஒரு பாடல் எழுத வேண்டுமே என்று சுப்பையா கூறினார். அது குறித்து சிந்தனையில் மூழ்கினார். டெல்லிக்குப் போனவுடன் ஓர் இரவு முழுதும் கண் விழித்து, ‘மாட்டிகிட்டாரு; அய்யர் மாட்டிகிட்டாரு’ என்ற பாடலை எழுதி மெட்டும் போட்டார்.

அடுத்த நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் அப்பாடலைப் பாடியபோது அரங்கம் அதிரும் அளவுக்கு கைதட்டல். மாநாட்டைத் திறந்து வைக்க வந்த வி.பி. சிங், கரவொலியைக் கேட்டு எதற்காகக் கை தட்டுகிறார்கள் என்று விசாரித்தார். ஆங்கிலத்தில் சங்கராச்சாரி கைது - கைதின் பின்னணி அவரிடம் விளக்கப்பட்டவுடன், மிகவும் உற்சாகமடைந்த வி.பி. சிங், மீண்டும் ஒரு முறை பாடச் சொன்னார். அப்போதும் கை தட்டல். பாடலைப் பாராட்டி ரூ.5000/- நிதியை குழுவினருக்கு வழங்கினார். தொடர்ந்து பல தலித் தலைவர்கள் பாடலை வரவேற்று மேடையில் நிதி வழங்கினார். அடுத்த நாள் மாநாட்டிலும் அதே பாடல்களைப் பாடச் சொன்னார்கள்! என்று கார்த்திக் விளக்கினார்.

Pin It