இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது:
“நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று சூறையாடப்படுவதை எதிர்த்தும், தமிழகத்தின் தற்சார்பை பாதுகாக்கவும், மக்களின் கருத்துகளுக்கு எதிராக வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்படும் நாசகார ஆலைகளுக்கும் திட்டங்களுக்கும் எதிராக மக்களை திரட்டி போராடி வருபவன்.
தற்போது, ‘தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளராகவும், காவிரி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் கொள்ளையை எதிர்த்து ‘காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைக்கேட்டை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எஸ்.கே. தவுல் அவர்களை கொண்ட அமர்வு அமைத்த ‘உ.சகாயம் இ.ஆ.ப.’ ஆய்வுக் குழுவிற்கு உடன் இருந்து பல்வேறு ஆதாரங்களையும் சாட்சி களையும் கொண்டு வர ‘கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்கு ஆதரவு இயக்கம்’ என்ற அமைப்பை அமைத்து அதன் ஒருங்கிணைப் பாளராக ஓராண்டு காலம் உடன் இருந்து செயல்பட்டவன்.
நெல்லை மாவட்டத்தில் கூடன்குளம் அணுஉலை அமைக்கப்பட்டபோது அதை எதிர்த்து மக்களைத் திரட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்திய ‘கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழு’வின் பொறுப்பாளராக இருந்து செயல்பட்ட வன், செயல்பட்டு வருபவன். தற்போது டெல்டா மாவட்டத்தை அழிக்கத் துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பெட்ரோலியம், நிலக்கரி, பெட்ரோல் கெமிக்கல்’ எனப் பல்வேறு அபாய கரமான திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து செயல் பட்டு வருபவன். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுபவன்.
நான் தமிழக அரசின் பொதுப் பணித் துறையில் பொறியியல் கல்வி முடித்தவுடன் நான்காண்டு காலம் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்தேன்.
இந்த ஆண்டு ‘ஆனந்த விகடன்’ வார இதழ் தேர்ந்தெடுத்த ‘தமிழகத்தின் டாப் 10 மனிதர்களில் ஒருவராக சளைக்காத சமூகப் போராளி’ என நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரால் அமைக்கப்பட்டுள்ள ‘வானகம் உயிர்சூழல் நடுவம்’ 2017ஆம் ஆண்டின் ‘சிறந்த சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர் விருது’ எனக்கு அளித்துள்ளனர். ‘இந்தியா டுடே’ (தமிழ்) வார இதழ் தமிழகத்தின் தலைசிறந்த 10 மனிதர்களில் ஒருவர் என 2015ஆம் ஆண்டில் தேர்ந்தெடுத்து ‘மண் காக்கும் போராளி’ எனவும் என்னை சிறப்பித்தது.
நான் எழுதிய 200 பக்கம் கொண்ட ‘தாதுமணல் கொள்ளை’ நூல் 2015ஆம் ஆண்டில் சிறந்த பசுமை நூலாக ‘தி இந்து’ தினசரி பத்திரிகை தேர்ந்தெடுத்தது.
எங்களுடைய தொடர்ந்த போராட்டத்தின் காரணமாக முறைகேடாகவும், சட்ட விரோதமாக வும், மக்களின் வாழ்வாதாரத்தையும் தமிழகத்தின் இயற்கையையும் அழிக்கக் கூடிய எண்ணற்ற திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கரூர் மாவட்டத்தில் இயங்கி வந்த 12 மணல் குவாரி களில் 10 மணல் குவாரிகள் அரசால் இரத்து செய்யப் பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட இருந்த அமெரிக்காவின் ‘கொக்கோ-கோலா’ ஆலைத் திட்டம் கைவிடப் பட்டது.
திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டத்தில் எண்ணற்ற சாய ஆலைகள், கீழ் பவானி அணையை முழுக்க விசமாக்கி வந்த மேட்டுப்பாளையம் சிறு முகை, ‘விஸ்கோஸ் ஆலை’, நாமக்கல் மாவட்டத் தில் ‘பொன்னி எரிசாராய ஆலை’ என எண்ணற்ற இயற்கையை நாசப்படுத்தும் ஆலைகள் எங்களது தொடர்ந்த போராட்டங்களால் அகற்றப்பட் டுள்ளது. முறைகேடாக இயங்கிய பல தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் குவாரிகள் மூடப்பட் டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பான வகையில் காவல் துறையும், அரசும் மற்றவர்களும் செயல் படும்போது அதை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும், வழக்கு தொடுத்தும் ‘மனித உரிமை செயல்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறேன்.
இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 51(ஏ) கூறுகிறபடி ஆறுகளை, குளங்களை, இயற்கையை பாதுகாக்க வேண்டி செயல்பட வேண்டியது. ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதையும், பிரிவு 14, 19(ஏ), 21 கூறுகிறபடியும் செயல்பட்டு வருபவன்.
இதுபோன்ற மக்களுக்கான செயல்பாட்டின் காரணமாகவும், சட்டவிரோதமாக, முறைகேடாக செயல்படும் காவல்துறையினரை எதிர்ப்பதன் காரணமாகவும் கடந்த சில ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட முறை என்மீது கொலைவெறி தாக்கு தலும், சட்டவிரோத கைது நடவடிக்கையும் மேற் கொண்டும் நான் உயிர் தப்பி வாழ்ந்து வருகிறேன்.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் நான் ஈடுபட்டிருந்தபோது தமிழக அரசு முதலில் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தும், பின்பு
மார்ச் 19, 2012 அன்று தனது நிலைபாட்டை மாற்றிக் கொண்டது. அந்த நாளில் நான் ஈரோட்டில் இருந்து வள்ளியூர் நோக்கி தொடர்வண்டியில் வந்தபோது காவல்துறையினர் என்னை தொடர்வண்டியில் வைத்து ‘டி.கே.பாசு அவர்கள் கைதுசெய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய 11 வழிமுறைகள் என்பதை எதுவும் பின்பற்றாமல், கொடுமுடியில் நள்ளிரவில் கைது செய்தும், பின்பு திருநெல்வேலி கொண்டு வந்து 2 நாட்கள் சட்டவிரோதமாக மூன்றடைப்பு காவல் நிலையத்தில் அடைந்து வைத்திருந்ததையும் என்னை கூடன்குளம் காவல் ஆய்வவாளர் ராஜபால், விகேபுரம் காவல் ஆய்வாளர் பூமிநாதன், ஏ.ஆர். உதவி ஆய்வாளர் என்னை கொலை மிரட்டல் செய்தது பற்றியும் 21.3.2012 இரவு 9 மணிக்கு வள்ளியூர் குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தியபோது, நடந்ததை வாய் வழியாக நான் சொல்ல நீதிபதி அiதை எழுத்துபூர்வமாக பதிவு செய்தார். பின்பு என்னை நீதிமன்றத்திலிருந்து சிறைக்குக் கொண்டு வரும்போது மேற்சொன்ன காவல் அதிகாரிகளுடன் நெல்லை குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களும் இணைந்து என்னை கொலை வெறி யோடு தாக்கினார்கள். இது பற்றிய புகார் மாநில மனித உரிமை ஆணையத்தில் கொடுக்கப்பட்டு விசாரணையிலிருந்து வருகிறது.
கூடன்குளம் அணுஉலை போராட்டத்தின்போது அணுஉலை போராட்டக் குழு பொறுப்பாளர்கள் 31.1.2012 அன்று பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பின் பேரில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றபோது, “மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே வைத்து பத்திரிகையாளர், காவல்துறையினர் கண் முன்பே போராட்டக் குழு பொறுப்பாளர்களோடு வந்த என்னையும், பொறுப்பாளர்களையும் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் பத்துக்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு தாக்கினர். என்னை குறிப்பாக குறி வைத்து கல்லாலும், ஹெல்மெட்டா லும், கைகளாலும் தாக்கினர். உடன் வந்தவர்கள் சுற்றி வளைத்து மீட்டதால் சில காயங்களோடும், சில பாதிப்புகளோடும் உயிர் தப்பினேன். இது நெல்லை மாநகர காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.
8.5.2016 அன்று தேனி மாவட்டம் போடியில் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேவாரம், நியூட்ரினோ திட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்தில் சட்டவிரோதமாக தினமும் 90 ஆயிரம் லாரிகளுக்கு மேல் ஆற்றுமணல் கொள்ளையடிப் பதற்கு துணை நிற்பதாலும் அவரை தோற்கடிக்க வேண்டும்” என சட்டமன்ற தேர்தலின்போது பிரச்சாரம் செய்து வரும்போது போடி காவல் ஆய்வாளர் சேகர் என்பவர் காவலர்களோடு வந்து “ஓபிஎஸ் அவர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்து விட்டு உயிரோடு இங்கிருந்து போய்விடுவாயா?” எனக் கூறியும், “ஓபி.எஸ். என்ன, நீங்கள் பிரச்சாரம் செய்வதால் எவ்வளவு வருத்தத்துடன் உள்ளார் தெரியுமா?” எனக் கூறியும் போடி பேருந்து நிலையத் தில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு வைத்து என்னை கையாலும், தடியாலும் தாக்கினார். பின்பு என்னையும் அந்த இடத்தில் என்னுடன் இருந்த மூவரையும் கைது செய்து போடி காவல்நிலையம் கொண்டு வந்தார். பல்வேறு ஊடகங்களில் வெளியான கண்டனத்தால் போடி காவல் நிலையத்திற்கு வந்த பின் அங்கு வந்த போடி டி.எஸ்.பி. பிரபாகரன், “இந்த சம்பவத்திற்கு ஆய்வாளருக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம்” எனக் கூறி மாலை எங்களை விடுதலை செய்து அனுப்பி வைத்தார்.
23.1.2017 அன்று மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டு கோரி நடைபெற்றப் போராட்டத்தில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர போராட்டத்தை ஒருங்கிணைத்து வந்த என்னை கைதுசெய்த காவல்துறையினர் மற்றவர்களுடன் வைக்காமல் தனியாக வைத்தனர். பின்பு என்னை மட்டும் தனியாக அழைத்துச்சென்று அலங்காநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் அன்னராஜ், 30 காவலர்களை என்னை சுற்றி வளைக்க நிறுத்தி, தன் கையால் வைத்திருந்த தடியால் என்னை கொலை செய்யும் நோக்கோடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை போராட்டம் நடத்தி, அலங்காநல்லூருக்குள் வரவிடாமல் செய்து விட்டாயே, அலங்காநல்லூர் ஊரையே கெடுத்து விட்டாயே” எனக் கூறிக்கொண்டே என் தலையை நோக்கி தடியால் அடித்தார்.
நான் எனது கையை வைத்துதலையில் அடிபடாமல் மறைத்து தடுத்ததால் எனது கையில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடல் முழுக்க தடியால் அடித்து பின்பு என்னை கைது செய்து வைத்திருந்தாலும் அது சட்ட விரோதமான முறையில் கைது என்பதால் கணக்கு காட்டவில்லை, என்னைக் காணவில்லை என பல காட்சி ஊடகங்களில், இணைய தளத்தில், சமூக வலைத்தளங்களில் செய்தி வந்த பிறகு 24.10.2017 பகலில் மதுரை ராசாசி மருத்துவமனையில் போலீஸ் காவலோடு சிகிச்சையில் இருந்த என்னை கைது செய்வதாகக் கூறி கைது செய்து அன்று இரவு விடுதலை செய்தார். அலங்காநல்லூர் ஆய்வாளர் மீது நடவடிக்கைக் கோரி 28.1.2017 அன்று மதுரையில் உள்ள பல்வேறு சமூக இயக்கங்கள், அரசியல் கட்சியாளர் ஆகியோருடன் இணைந்து சென்று மதுரை மாவட்ட நிர்வாக செயல்துறை நடுவரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வீரராகராவ், இ.ஆ.ப.விடம் புகார் மனு கொடுத்தேன். இது விசாரணையில் உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ‘நீதிபதி ராஜேஸ்வரன் குழு’விடமும் இது பற்றி புகாரை 2.5.2017 அன்று கொடுத்து அதுவும் விசாரணையில் இருந்து வருகிறது.
(தொடரும்)