ஈரோடு கள்ளுக்கடைமேடு, ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் ஆக்கிரமிப்பைச் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் 19.10.24 அன்று இடித்து அகற்றியது. ஈரோடு, கள்ளுக்கடை மேடு பகுதியில் கடத்த 20 ஆண்டுக்கும் மேலாக ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இந்தக் ஆக்கிரமிப்பு கோயிலால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறும், சாலை விபத்துகளை ஏற்படுத்தும் அபாயமும் ஏற்பட்டு இருந்தது. எனவே அந்த ஆக்கிரமிப்பு கோயிலை அகற்றி மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் எனத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அமைப்புச் செயலாளர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் அளவீடு செய்து 2004 சதுர அடி இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்றும், சாலையோரம் உள்ள அந்த இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து கோயில் கட்டப்பட்டிருப்பதையும் உறுதி செய்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பரில் கோயிலை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் அந்தக் கோயில் நிர்வாகியும் இந்து முன்னணியின் நிர்வாகியுமான வெங்கடேசன் என்பவருக்கு முறையாக தோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கியது. ஆனாலும் அந்த ஆக்கிரமிப்புக் கோயில் அகற்றப்படாமல் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாமல் இருந்தது இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறியதாகவும் உடனடியாக நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிரமிப்புக் கோயிலை அகற்ற வேண்டும் எனக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி மீண்டும் நீதிமன்றத்தை அணுகி புகார் தெரிவித்தார்.
அப்புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் 22ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி அது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தை அறிவுறுத்தியது. இதையடுத்து, 18.10.24 அன்று குறிப்பிட்ட ஆஞ்சநேயர் கோயில் மற்றும் அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டு ஆகியவற்றை அகற்றப்போவதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, ஆக்கிரமிப்பை அகற்றச் சென்றபோது, கோயில் நிர்வாகியும், ஆட்டோ சங்க நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் சதீஷ்குமார் முன்னிலையில், ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகி, பாஜக, நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி 4வது மண்டல உதவிஆணையர் கிருஷ்ண மூர்த்தி, தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டன. இதையடுத்து அனைவரும் முடிவை ஏற்றுச் சென்றனர். அதைத்தொடர்ந்து, காலை 9 மணியளவில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கோயிலின் விரிவுபடுத்தப்பட்ட கான்கிரீட் கட்டிடம் மற்றும் இதர பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த தடுப்புகளைப் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர்.
- பெ.மு. செய்தியாளர்