உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் நிர்ணயித்தீர்கள்? பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.8 இலட்சம். அதே ‘எட்டு இலட்சம்’ வரம்பை உயர்ஜாதியினருக்கும் நிர்ணயித்தது சம நீதியா என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியது உச்சநீதிமன்றம்.
நீதிமன்றத்தின் ‘கிடுக்கிப் பிடி’ கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போய் நின்ற ஒன்றிய அரசு கடைசியாக ‘சின்கோ குழு’ (Sinho) பரிந்துரையில் அடைக்கலம் புகுந்திருக்கிறது. சின்கோ குழு’ திறந்த போட்டியில் போட்டியிடுவோருக்கான கல்வி உதவித் திட்டங்களை பரிசீலிக்க அமைக்கப்பட்ட குழு, அந்தக் குழு தனது பரிந்துரையில் திறந்த போட்டியில் (General Categories) தேர்வு செய்யப்படுவோருக்கும் பிற்படுத்தப்பட் டோரைப் போலவே ‘கிரிமிலேயர்’ நிர்ணயிக்க வேண்டும் என்றே பரிந்துரை செய்திருந்தது.
‘உயர் ஜாதி ஏழை’ என்ற பிரிவுக்கு 8 இலட்சம் வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஏதும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்று சமூக நலத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். திறந்த போட்டியில் இடம் பிடிக்கும் அனைவருக்கும் ‘சின்கோ குழு’ அளித்த பரிந்துரையை ஒன்றிய அரசு பார்ப்பன உயர்ஜாதியினருக்காக மட்டும் தனியாகக் கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீட்டோடு இணைத்து உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அது மட்டுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரிமிலேயர்’ 8 இலட்சமாக 1993ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.
உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை ஒன்றிய ஆட்சி கொண்டு வந்ததோ 2019ஆம் ஆண்டில். 26 வருடத்துக்கு முன்பு பிற்படுத்தப்பட்டோருக்கு நிர்ணயித்த ரூ.8 இலட்சம் வரம்பை முன்னேறிய ஜாதியினருக்கு அப்படியே நிர்ணயித்திருப்பது மிகப் பெரும் சமூக அநீதி. இடையில் ரூபாய் மதிப்பு வருமானம் போன்றவற்றில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து விட்டன. எனவே, ஒன்றிய ஆட்சியின் இந்த ‘ஓட்டை’ வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பது, இனிமேல் தான் தெரியும். 25ஆம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கை 28ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. மட்டுமின்றி, 10 சதவீத இடஒதுக்கீடு 50 சதவீத ஒதுக்கீட்டு எல்லையை மீறுவதால் சட்டப்படி செல்லுமா என்ற வழக்கும் உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்தத் தகவல்களை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (அக்.25, 2021) நாளேடு வெளியிட்டுள்ளது.
- விடுதலை இராசேந்திரன்