முதல் பாதகம் :- ஒன்று
பார்ப்பனன் ஓட்டலுக்குச் (உணவகத்துக்குச்) செல்வது.
நமது தன்மானத்திற்குக் கேடு. நாமே பார்ப்பனரை மேல் ஜாதி என்று கருதுகிறோம் என்பதாகும்.
நம்மவர்கள் ஓட்டல், சிற்றுண்டி சாலை, உணவு விடுதி முதலியவைகள் ஏற்படுத்துவதையும், நம்மவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதையும், நம்மவர்கள் பொருளாதார வசதி உயர்வதையும் தடுக்கிறது. உண்மையிலேயே "நாம் கீழ் ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டிருக்கிறோம்" என்பதை நாமே நம்பவில்லை; உணரவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஜாதி ஒழிப்புக்கு ஆக இவ்வளவு பெரிய கிளர்ச்சி நடக்கிற போதும், "பார்ப்பான் ஓட்டலுக்குப் போவதில்லை; அங்குச் சென்று உணவருந்துவதில்லை; சிற்றுண்டி அருந்துவதில்லை என்று 10000 பேருக்கு மேல் தங்கள் உறுதிமொழி கையொப்பமிட்டு பெயர்கள் விளம்பரப்படுத்தி இருக்கிறபோதும், ஏறத்தாழ 700 பேர் வரை பார்ப்பனர் ஓட்டல் முன் நின்று மக்களை வேண்டிக் கொண்டு அதற்கு ஆக 5 வாரம், 4 வாரம், 3 வாரம், 2 வாரம், ஒரு வாரம் தண்டனை பெற்றுச் சிறை சென்றும், சுமார் 1,00,000 ரூபாய் (ஒரு இலட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டுமென்று தண்டிக்கப்பட்ட பின்பும் மற்றும் பல பெரும் உயிர் தியாகப் பெரும் கிளர்ச்சிகள் நடக்கும் போதும், தமிழன் - திராவிடன் ஒருவன் பார்ப்பான் ஓட்டலுக்குப் போவான், போகிறான் என்றால் அவன் குலத்தின் கண் அய்யப்பட வேண்டியதைத் தவிர அப்படிப்பட்டவனைப் பற்றி மக்கள் வேறு என்னதான் எண்ணுவார்கள்? வேறு என்னதான் எண்ண முடியும்? அப்படிச் செல்லுவதானது தன்குலம் இன்னது என்று காட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன காரியத்திற்காகவது பயன்படுமா?
பாதகம் :- இரண்டு - பார்ப்பனரைப்பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் வரும்போது அவர்களைப் பிராமணர்கள் என்கிற சொல்லால் குறிப்பிடுவதானது.
இது நம்மை நாமே சூத்திரன் என்று ஒப்புக்கொண்டதாகிறது அல்லவா? அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் 'சூத்திரன்' என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? "பிராமணன்" என்ற சொல்லால் ஒருவரைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு சொல் இல்லாவிட்டால், வேறு சொல்லால் சொன்னால் ஒருவரின் வகுப்பு, குறிப்பு, அடையாளம் தெரியாது என்ற நிர்பந்தம் (கட்டாய நிலை) இருந்தால் மாத்திரம் அப்படிக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமலேயே வேறு சொல்லால் குறிப்பிடலாம் என்பதற்குத் தக்க சொல்லாகப் 'பார்ப்பனர்' என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும்போது, ஒருவரைப் 'பிராமணன்' என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை; அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை.
நாட்டில் மற்றத் தமிழர்கள் நடத்துகிற கிளர்ச்சிகளுக்கு விரோதமாய் நடந்து, பார்ப்பனருக்கு அடிமையாகி, எப்படி எப்படி ஈனப் பிழைப்பையாவது நடத்தி வாழவேண்டுமென்கிற இழிநிலையில் இருப்பவர் நாம் என்பதல்லாமல், இதற்கு வேறு என்ன பெயர்க் கருத்து கொள்ள முடியும்.
பாதகம் : மூன்று - தீபாவளி கொண்டாடுவது
இது ஒரு பொய்க்கதையை, அதுவும் காட்டமிராண்டித்தனமான முட்டாள் தன்மை கொண்ட, ஒரு துவேஷ சூழ்ச்சித் தன்மையைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. திராவிடனை இழிவுபடுத்திய, கொலை செய்ததாகிய கருத்தைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. கதை அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, உண்மைக்கோ, படிப்பினைக்கோ சிறிதும் ஏற்றமும் பொருத்தமும் அற்றது தீபாவளி.
பாதகம் : நான்கு - சினிமாவிற்குப் போகக் கூடாது.
இந்த நாட்டில் சினிமா நடப்பதை அனுமதித்துவிட்டு, அதில் பங்கு கொண்டு ஆதரித்து விட்டு, அரசாங்கத்தின் அய்ந்தாண்டுத் திட்டத்தையும் ஊதாரிச் செலவையும், (வீண் கொள்ளை) வரியையும் கண்டிப்பவர்கள் ஒன்று மடையர்களாக இருக்க வேண்டும் அல்லது மக்களை ஏய்க்கும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.
அய்ந்தாண்டு திட்டம் நல்ல எண்ணத்தின் மீது இருக்க வேண்டும். அல்லது நம்மால் இன்ன காரியம் ஆயிற்று என்கின்ற பெருமை தங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட வேண்டும். இதுவும் கட்டுப்பாடான ஒரு சர்க்கார் (ஆட்சி) கொள்கை திட்டம் என்கின்ற பெயரால் நடத்தப்படுவது. இதில் உள்ள சுயநலம் மறுபடியும் தாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதாக இருக்கலாம். நீண்ட நாளாய் சட்டப்படி ஏற்பட்ட வரும்படியும் ஆதிக்காரர்களுக்கு இருக்கலாம்.
வசூலிக்கப்படும் வரியும் கணக்குக் காட்டி, வரவு செலவு பட்ஜெட் திட்டம் காட்டி மெஜாரிட்டி (பெரும்பான்மை) மக்களால் ஓட்டு செய்யப்பட்ட மக்கள், மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஓட்டுப்பெற்று நிறைவேற்றி, பெரிதும் பணக்காரர்களிடம் வரும்படியில் பங்கு என்னும் பேராலும், தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொண்டு, "சம்பாதித்துக் கொள்" என்னும் உரிமை கொடுத்து வசூலிக்கப்படுகிறதுடன் வரவுக்கும் செலவுக்கும் கணக்குக் காட்டப்படுகிறது.
ஆனால் சினிமாவின் (திரைப்படத்தின்) பெயரால் கதை எழுதுகிறவன், வசனம் எழுதுகிறவன், சாயம் பூசுகிறவன், நடிக்கிறவன், பாடுபடுகிறவன், முதலியவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? யாரிடம் ஓட்டுப் பெற்றவர்கள்? எதற்காக வசூலிப்பவர்கள்? என்ன கணக்குக் காட்டுகிறவர்கள்? இவர்கள் தகுதிக்கு, தேவைக்கு எந்தவித முறையில் கணக்குப் பார்த்து, என்ன செலவுக்கு யாருக்குக் கணக்குக் காட்ட, என்ன பொதுநலத்திற்கு என்ற கொள்ளை கொள்ளையாக வசூலிக்க வேண்டியதாகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
சினிமா (திரைப்பட) முதலாளிகளாவது மக்களின் முட்டாள் தனத்தையும் மிருகக் காட்டுமிராண்டி உணர்ச்சியையும் முதலாக வைத்துக் கொண்டு வசூலிக்கிறார்கள். 10 லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டுப் பல கோடிக்கணக்கில் வசூல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது அல்லாமல் வேறு ஏதாவது சினிமா முதலாளிகள் கொள்ளைக்கு நியாயமோ சமாதானமோ சொல்ல முடியுமா?
அல்லது மேற்கண்ட இக்கூட்டத்தார் எல்லோரும் கொள்ளையடிக்கும் பணம் 100க்கு 99 பாகம், குடி, கூத்தி, விபசாரம், சூதுவாது ஆகிய காரியங்களுக்குப் பாழாகிறதல்லாமல் வேறு பலன் எதற்குப் பயன்படுகிறது? இதில் ஈடுபடுபவர்கள் ஆணோ, பெண்ணோ, செல்வவானோ, புலவனோ, அறிஞனோ, யாரானாலும் இந்த மேற்கண்ட கதிகளுக்கு ஆளாவதல்லாமல் கடுகளவு மனிதத் தன்மைக்கோ, நல்வாழ்வுக்கோ, மக்களுக்கு நன்மை ஏற்படவோ பயன்படுகிறார்களா? என்பதையும் சிந்தித்தால் அத்தனையும் கேடும் நாசமுமாகத்தான் இருக்கும்.
இதைப் பார்ப்பவர்கள் மிருக உணர்ச்சி என்பதன் பரிகாரத்திற்கு ஆகவே பெரும்பாலான ஏழை மக்கள், எளிய மக்கள் தங்கள் குடும்பவாழ்வுக்கு நியாயமாய்ச் செலவு செய்ய வேண்டிய இன்றியமையாப் பணத்தை நாசமாக்குகிறார்கள். இதன் மூலம் ஆணும், பெண்ணும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பதான 3-வயது முதல் 90 வயது வரை உள்ள பெண்களும், அதுபோலவே உள்ள ஆண்களும் ஒழுக்கத்தில் கேடு கெட்ட கடையர்கள், காமாதுர, தூர்த்தர்கள் ஆகிப் பொது ஒழுக்கம், நாணயம், நம்பிக்கை, நன்றியறிதல் ஆகிய காரியங்களில் கீழ்மக்களாகவே தங்களை அறியாமலேயே ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனித சமுதாய ஒழுக்கக்கேட்டிற்குக் காந்தியும், காங்கிரசும், தேர்தலும், அரசியலும் காரணங்களாக இருந்தாலும் இந்தச் சினிமா வந்த பிறகு இந்தத் துறை பணந்திரட்டவும் கலைஞானத்திற்குப் பொது நலத்திற்கு என்று உழைப்பவர்களுக்கு ஒரு சாதனமாகக் கொள்ளப்பட்ட பிறகு திடீர் வளர்ச்சிக்குக் காரணமாகிவிட்டது.
காந்தி, காங்கிரஸ் தேர்தல் முதலியவைகள் பற்றிச் சிலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தாலும் இக்கேடுகளுக்குச் சினிமாவே முக்கியக் காரணம் என்பதில் பாபு ராஜேந்திரர், ஜவகர்லால் நேரு முதல் ராஜாஜி வரை மாறுபட்ட கருத்தில்லாமல் காமராசர் முதல் காங்கிரசுக் கண்ணீர்த் துளி வரையில், சங்கராச்சாரி பண்டார சந்நிதிகள் முதல் வீரமுத்து சாமியார்கள் வரையில் மற்றும் பெரும் பெரும் புலவர் அறிஞர், பொது வாழ்வில் பெயர் பெற்ற உலக அறிஞர் முதல் காங்கிரசுக்காரர்கள், கம்யூனிஸ்ட்கள், சோஷயலிஸ்ட்கள் வரை எல்லாத் துறை மக்களும் சினிமாவை மனித சமுதாய நல்வாழ்வுககும் ஒழுக்கத்திற்கும் கேடானது என்றே சொல்லி விட்டார்கள். அதில் ஈடுபட்டவர்கள், அதனால் மனிதர்கள் மனுஷிகள் ஆனவர்கள், வாழ்வு நடத்துபவர்கள் தவிர எல்லோரும் சினிமா கேடானது, ஒழுக்கக் கேடானது, ஏழை மக்களைப் பிடுங்கித்தின்பது என்று சொல்லி விட்டார்கள். மற்றும் சொல்ல வேண்டுமானால் நகைச்சுவையரசு என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா முதற்கொண்டு சில கலைஞர்களும் சொல்லிவிட்டார்கள். இனி யார் சொல்ல வேண்டும்?
பாதகம்: அய்ந்து - இராட்டினம் சுற்றுவது, இராட்டினம் சுற்ற வேண்டாம்; கதர் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கை.
இராட்டினம் அல்லது கைராட்டை என்பது அறிவுப்பெருக்கமில்லாமல், காட்டானாய் இருந்த காலத்தில் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சாதனமாகும். எதுபோலவென்றால், மனிதன் நெருப்பு உண்டாக்குவதற்குச் சக்கி முக்கிக் கல்லைக் கண்டு பிடித்தது போலும், விளக்குக்கு மண் அகலை எண்ணெய் விளக்குக் கண்டுபிடித்தது போலும், மனிதன் போக்கு வரவுக்குக் கட்டை வண்டியைக் கண்டுபிடித்தது போலவும், உடைக்காக நூல் நூற்க இராட்டினமும், துணி நெய்ய கைத்தறியும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
அவைகளில் சக்கிமுக்கிக் கல்லுக்குப் பதில் நெருப்புக் குச்சியும் சிம்னி விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மின்சார நெருப்பும் மின்சார (Electric) விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டதுடன் வராத இடங்களில் மக்களுக்கு அதிக வேட்கையும் ஏற்பட்டுவிட்டது. கட்டை வண்டிக்குப் பதில் சைக்கில் (மிதிவண்டி), மோட்டார், ஆகாய விமானம் ஏற்பட்டு விட்டன. இராட்டினத்திற்குப் பதில் நூற்பு யந்திரமும், கைத்தறிக்குப் பதில் நெசவு யந்திரமும் ஏற்பட்டு உலக முழுவதிலும் அமலுக்கு வந்திருப்பதோடு இந்த இரண்டு சாதனங்களினாலும்தான் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு ஆடை அளிக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இராட்டினத்தைக் கொண்டு நூல் நூற்கச் செய்வதென்பது, நெருப்புக்கு சக்கிமுக்கிக் கல்லையும், வழிப்பயணப் போக்குவரத்துக்குக் கட்டை வண்டியையும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறவன் புத்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவு மதிப்புதான் கொடுக்கத் தக்கதாகுமே ஒழிய, வேறு எந்தவித்திலும் கைராட்டினம் புகுத்தியவர்களை இக்கால மனித வளர்ச்சித் தன்மைக்கு ஏற்றவர்கள் என்று சொல்ல முடியாது.
எப்படியிருந்தாலும் காந்தியாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இராட்டினம் அநேகமாக ஒழிந்து போய்விட்டதென்றே சொல்லலாம். அதுவும் யாராலும் ஒழிக்கப்படாமல் தானாக ஒழிந்து போய்விட்டது! எப்படியெனில் பழையகால இராட்டினமாகிய (காந்திராட்டினம்) ஒரு கதிர் இராட்டினம் மறைந்துவிட்டது.
என்ன சொல்லிக் கொண்டு மறைந்தது என்றால், "மக்களின் வாழ்வுக்கு (இராட்டினம் சுற்றுகிறவர்களுக்குக் கஞ்சி வார்க்க) ஒரு கதிர் இராட்டினம் போதாது, உதவாது, ஆதலால் நான் போகிறேன் அடுப்புக்கு" என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது! இக்கருத்தை இராட்டினம் புகுத்தப்பட்ட காலத்தில் அறிவு சுதந்திரமுள்ள மக்கள் அத்தனை பேரும் எடுத்துக் கூறினார்கள் என்றாலும், காந்தி சர்வாதிகார காலத்தில் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதுடன், இராட்டினம் தானாகவே நான் சாகப்போகிறேன் என்று சொன்ன காலத்தில் காந்தியாரே 'இது வேண்டாம், வேறு ஏதாவது நூல் யந்திரம் போல் பல கதிர் இராட்டினம் கண்டு பிடித்ததாக வேண்டும்' என்கின்ற அவசியத்திற்கு (கட்டாயத் தேவைக்கு) வந்துவிட்டார்.
அதுபோலவே கைத்தறிக்காரர்களும் பட்டினியால் சாக ஆரம்பித்த பின்பு, விசை நாடா தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறிவந்து பழைய கைத்தறி அனேகமாய் அடுப்புக்குப் போய்விட்டது. இந்த நிலையில் 'காந்திக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்' என்கின்ற பெயரால் கல்வித்துறையில் கைராட்டினத்தையும், கைத்தறியையும் புகுத்திக் கூத்தடிக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.
கதர் (செலவு) துணி என்பது சுத்த காட்டுமிராண்டித்தனமானது. பொருளாதாரத்தையும், நாகரிகத்தையும் கொலை செய்யக் கூடியது என்று தெரிந்தும், பொதுமக்கள் வரிப்பணத்தை நாசமாக்கும் தன்மையில் ஆண்டு ஒன்றுக்குப் பல கோடி ரூபாய்களைக் கதர் வளர்ச்சிக்கு என்று உதவித் தொகையாகக் காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்துக் கதரைச் சாகாமல் காப்பாற்றி வருகிறது.
இது அதாவது இராட்டினம், கதர் என்கின்ற இரண்டு சாதனமும் அரசியல் விவகாரம் என்கின்ற தன்மையில் இன்று இந்த நாட்டில் உலவிக் கொண்டு இருக்கின்றன.
காந்தியையும், காங்கிரசையும் ஆதரிக்கிறவர்கள் என்பவர்களுக்கு இவை இரண்டும் சின்னங்களாக இருந்து வருகின்றன.
இவைபற்றி இன்னும் அநேகம் சொல்ல இருக்கின்றன என்றாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.
ஆகவே தோழர்களே!
1. பார்ப்பான் ஓட்டலுக்குப் (உணவகத்துக்குப்) போகாதீர்கள்.
2. பார்ப்பானைப் பிராமணன் என்று சொல்லாதீர்கள்.
3. தீபாவளி கொண்டாடாதீர்கள்.
4. சினிமாவுக்குப் போகாதீர்கள்.
5. இராட்டினம் சுற்றுவதும், கதரை உடுத்துவதுமான காரியம் செய்யாதீர்கள்.
தோழர்களே! நான் வேண்டிக் கொள்வதை சிந்தித்து இந்த அய்ந்து காரியத்தையும், பஞ்சமாபாதகம் என்பதாகவே கருதி, செய்வதினின்று நீங்கி, மானத்தையும், அறிவையும், ஆராய்ச்சித் திறனையும், ஒழுக்கத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்: "விடுதலை" 21-10-1957