தமிழகத்தின் தலைநகராம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘இந்து' நாளிதழும், அதன் இரு வார இதழான பிரண்ட்லைன் ஏடும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகின்றன. ‘நடுநிலைமை', ‘நியாயமான செய்திப் பதிவு' தரமான இதழ்கள் என்று பிதற்றிக் கொண்டு அலையும் இந்தப் பத்திரிகைகளைச் சற்று கூர்ந்து படிப்பவர்கள் இவற்றின் சார்பு நிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
ஏதோ அன்றன்று நிகழும் நிகழ்வுகளை அப்படியே வாசகர்களுக்கு செய்திகளாக வழங்குவது மட்டும்தான் இதுபோன்ற பத்திரிகைகளின் வேலை என்று சாதாரணமாக பத்திரிகைகளைப் புரட்டுவோர் எளிதாக எண்ணிவிட்டு போய்விடலாம். ஆனால் ‘இந்து', ‘டைம்ஸ் ஆப் இந்தியா' போன்ற பத்திரிகைகளுக்கு அன்றாடச் செய்திகளை வழங்குவது மட்டுமல்ல, அவற்றில் தமிழர்களுக்கு எதிராக நுணுக்கமான அரசியல் பண்ணுவது, அதை நோக்கி அதிகார மட்டங்களின் பல தளங்களிலும் காய்களை நேர்த்தியாக நகர்த்துவது போன்ற வேலைகளை திரைமறைவில் திட்டமிட்டு செயற்படுத்துகின்றன.
தமிழருக்கு எதிரான செய்திகளைத் தேர்வு செய்வதில் தொடங்கி, அவற்றுக்கு அன்றைய இதழில் எந்தப் பக்கத்தில் எவ்வளவு இடம் ஒதுக்குவது என்று தீர்மானிப்பது, அவற்றை நியாயப்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகளையும், கருத்துப் பதிவுகளையும் யார் யாரை வைத்து எழுதி, வாசகர்களுக்கு எப்படி வழங்குவது, அதற்கேற்றாற்போல தலையங்கங்களைத் தீட்டுவது போன்றவற்றை தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து மிகவும் செம்மையாக வடிவமைத்து வாசகர்களுக்கு வழங்குகின்றன. இவ்விரு பத்திரிகைகளிலும் மேல்மட்டத்தில் இருந்து வடிவமைப்பதும், வழிநடத்துவதும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவும், மலையாளிகளாகவும் இருப்பதால் இந்த வேலைகளை அவர்கள் ‘மிகத் திறமையாகச்' செய்ய முடிகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் சென்னை அலுவலகம் மலையாளிகளின் ஆதிக்கத்தில் எவ்வாறு இருக்கிறது, தமிழர் நலன்களுக்கான செய்திகள், நமக்கான நியாயம் எவ்வாறு அவ்வலுவலகத்தில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக ராதிகா கிரி என்ற எழுத்தாளர் அண்மையில் The Weekend Leader இணைய இதழில் (டிசம்பர் 1622, 2011, Vol.2, Issue 50, Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms), ‘‘மேலெழும் உணர்ச்சிகள், வீழும் நடுநிலைமை; சென்னை செய்தி அறைகளில் முல்லைப் பெரியாறு செய்திப்பதிவில் மறைந்து கிடக்கும் உண்மை'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இதற்கு டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு இந்த இணைய இதழின் ஆசிரியர் வினோஜ் குமார் மற்றும் எழுத்தாளர் ராதிகா கிரி மீதும் வழக்குத் தொடுக்கப் போவதாக மிரட்டியுள்ளது. உண்மையைச் சொல்லும்போது மலையாளிகளுக்கு எவ்வளவு கோபம் வருகிறது! முல்லைப் பெரியாறு போன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுப்பது, அதுகுறித்து தொடர்ச்சியாக கருத்துப் பரப்பல் செய்வது, பொதுமக்கள் மத்தியில் நமக்கான நியாயம் இல்லாதது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குவது, அப்பிரச்சனையில் தமிழருக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்க வைப்பதில் மத்திய அரசிற்கு தீவிரமாக அழுத்தம் தருவது போன்ற அனைத்து தளங்களிலும் ‘இவ்விரு' பத்திரிகைகளும் தங்களது வேலைகளைத் திட்டமிட்டு செய்து வருகின்ன.
தில்லியிலோ, மும்பையிலோ, கொல்கொத்தா அல்லது கொச்சியிலோ இருந்துகொண்டு இவ்வாறு செய்தால் நாம் சகித்துக் கொள்ளலாம். அல்லது ஒழியட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நான்கு பெருநகரங்களில் தங்களது பதிப்புகளை அமைத்துக் கொண்டு, நம் மக்களின் வரிப்பணத்தில் தமிழக அரசு வழங்கும் எண்ணற்ற சலுகைகளை அனுபவித்துக் கொண்டு, பெருவாரியான தமிழக வாசகர்களின் தளத்தில் அமர்ந்து கொண்டு, தமிழக வணிகர்கள், மற்றும் நம் மக்களின் விளம்பரங்களையும் பெற்று, நம்மை அண்டிப் பிழைத்துக் கொண்டே, நமக்குக் குழிதோண்டிக் கொண்டிருக்கும் இந்த இதழ்களை நாம் எப்படி தொடர்ந்து அனுமதிப்பது என்பதுதான் நமக்கு முன் எழும் கேள்வி. தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் நமக்கெதிராக சதி செய்து கொண்டு, நமது எதிர்காலத்தை முற்றிலுமாக முடக்க நினைக்கும் கும்பலின் சிந்தனைப்போக்கை ‘நடுநிலை நாளேடுகள் என்ற போர்வையில்' எப்படி நமது இல்லங்களில் அனுமதிக்க முடியும்?
முல்லைப் பெரியாறு? முல்லா பெரியார்?
தமிழகத்திலிருந்து அச்சாகி வெளிவரும் ‘இந்து' நாளேட்டிலும், ‘பிரண்ட்லைன்' என்ற இருவார இதழிலும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா' ஏட்டிலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை குறித்து வெளிவரும் செய்திகளிலும், கட்டுரைகளிலும், Mullaiperiyar என்று ஆங்கிலத்தில் எழுதாமல், திட்டமிட்டே Mullaperiyar என்று (‘i’ இல்லாமல் ‘முல்லா பெரியார்' என்ற தெளிவான மலையாள நிலைப்பாடு எடுத்து) எழுதி வருகின்றனர். இது ஏதோ போகிற போக்கில் கணிணியில் அச்சடிக்கும் போது கவனக்குறைவாக நடந்த, யதார்த்தமான விடுபாடு என்று தமிழர்கள் நினைத்துவிட வேண்டாம். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் வெளிப்படையாக எடுக்கும் மலையாளச் சார்பான அரசியல் நிலைப்பாடு, தமிழர் விரோதச் செயல்பாடு என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெயரிலும், உச்சரிப்பிலும், சொல்லாக்கத்திலும், வார்த்தைப் பயன்பாட்டிலும் எப்படி எழுதினால் என்ன? இதில் என்ன ஆகப்போகிறது? என்று நம்மில் ஒருசிலர் நினைக்கலாம். ஆனால் கீழே இடம்பெறும் ஒருசில செய்திகளைப் படிக்கும்போது, இந்த வார்த்தைப் பயன்பாடு மேற்குறிப்பிட்ட பத்திரிகைகளின் எப்படி திட்டமிட்ட சதி என்பதை விளங்கிக் கொள்ள முடியும். (அந்த வகையில் முல்லைப் பெரியார் என்று சரியாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பதிவு செய்யப்படுகிறது).
தமிழகத்தின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்வது
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயங்களையும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அறவழியில் நடக்கின்ற மக்கள் எழுச்சியையும் முழுமையாக மறைத்தும், நம் மக்களின் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்தும், அல்லது வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் சிறு சிறு செய்திகளாக ஏதோ ஒரு மூலையில் மாநிலச் செய்திகளாக குறுக்கிப் போடுவதுமான வேலைகளை இந்த ஆங்கிலப் பத்திரிகைகள் (தமிழகத்திலிருந்து வெளிவரும் பதிப்புகள்) தொடர்ந்து செய்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வருகின்றன.
‘முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும், புதிய அணை கட்டப்பட வேண்டும்' என்று கேரள அரசு மற்றும் மலையாளிகளின் பேட்டிகளையும், அவர்களுக்குச் சாதகமான செய்திகளையும் முதல் பக்கச் செய்திகளாகவும், இந்திய அளவிலான செய்திகளாகவும் இந்த பத்திரிகைகள் வெளியிடுகின்றன. ஆனால் நமது பொறியியல் அறிஞர்களின் கட்டுரைகளோ, செய்திகளோ, பதிலுரைகளோ, மாநிலச் செய்திகளாகக் குறுக்கி வெளியிடுகிறார்கள் அல்லது வெளியிட மறுக்கின்ற போக்கும் நிலவுகிறது. (விதிவிலக்காக, முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனின் கட்டுரையை மட்டும் ‘Unwarranted fears on Mullaiperiyar’ (முல்லைப் பெரியாறு குறித்த தேவையற்ற பயங்கள் என்ற தலைப்பில், டிசம்பர் 31, 2011) இந்து ஏடு நடுப்பக்க கட்டுரையாக வெளியிட்டது.
கேரளாவில் தமிழர்கள் மீது மலையாள வெறியர்களின் தாக்குதல்கள்
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரளாவில் வசிக்கும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடந்த டிசம்பர் மாத முதல் இரு வாரங்களில் மலையாளிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் மிகவும் மோசமாக, கீழ்த்தரமாக, கேவலமாக மலையாள வெறியர்களால் நடத்தப்பட்டுள்ளனர்; பாலியல் வன்முறைகள் நம் பெண்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன. ‘‘தண்ணி வேணுமா உங்களுக்கு?'' என்று தமிழ்ப் பெண்கள் வாயில் சிறுநீரை பீய்ச்சி அடித்தும், பீடா போட்டு வெற்றிலை எச்சிலை நம் பெண்களின் முகத்தில் துப்புவதும், ‘‘பாண்டிக்காரனுங்க'' என்று சொல்லி இழிவுபடுத்தி தமிழ்ப் பெண்கள் முன் தங்கள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுவதுமான கொடூரங்கள் அங்கே அரங்கேறியுள்ளது. செருப்புக் காலால் தமிழ்ப் பெண்களின் பிட்டத்தில் மலையாளிகள் மிதித்துள்ளனர்; அடித்துள்ளனர். தமிழக அரசுப் பேருந்துகளும், லாரிகளும் மலையாள வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், வீடுகள், தோட்டங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. சூறையாடப்பட்டுள்ளன; இக்கொடூரங்களை தமிழ்ப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பேட்டி கொடுத்ததற்காக பல தமிழர்கள் அங்குள்ள மலையாளிகளால் அலைபேசியிலும், பின்னர் திரும்பிச் சென்றபோது நேரிலும் மிரட்டப்பட்டுள்ளனர் என்று அங்கு இப்போதைய சூழல் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பல்வேறு குழுக்கள் தங்கள் அறிக்கைகளில் பதிவு செய்துள்ளனர்.
இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்ற தமிழ்ப் பக்தர்களைக் கூட இந்த மலையாள வெறியர்கள் விட்டுவைக்கவில்லை; அவர்களுக்கு செருப்பு மாலைகள் போட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர்; விரட்டி அடித்துள்ளனர்; இதுபோன்ற செயல்களை நாகரீகமடைந்த எந்த சமூகமும் செய்ய முன்வராது. ஆனால் படித்தவர்கள் அதிகமாக உள்ள மாநிலத்தவர் என்று மார்தட்டும் மலையாளிகள் இவ்வளவு கேவலமாக, அநாகரீகமாக, மனிதாபிமானமற்ற முறையில், அருவறுக்கத்தக்க நிலையில் செயல்பட முடியுமா என்ற வருத்தமும், ஆதங்கமும் நமக்குள் எழுகிறது. ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபடும் இராணுவத்தினர்கூட எதிரி நாட்டில் இவ்வளவு கீழ்த்தரமாக நடக்கமாட்டார்கள். நடந்த நிகழ்வுகளைப் பார்க்கிறபோது, சிங்கள இனவெறியர்களுக்கும், மலையாள இனவெறியர்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. இரண்டு இனத்தவர்களும் தமிழர்களை மிருகங்களைவிடக் கேவலமாக நடத்துகின்றனர் என்று உறுதியாக நம்பமுடிகிறது. தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கேரள காவல்துறை, தமிழர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. கேரள காவல்துறையின் செயலற்ற தன்மையைக் கண்டித்தோ, தமிழர்கள் மீது மலையாளிகள் தொடுத்த தாக்குதல்களைக் கண்டித்தோ இந்த ‘நடுநிலை பத்திரிகைகள்' எந்தக் கண்டனக் குரலையும் எழுப்பவில்லை. இந்த நாளேடுகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தோன்றுகிறது.
மனித உரிமைகள் குறித்து வண்டி வண்டியாக எழுதும் ‘இந்து' பத்திரிகையோ, ‘டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையோ இக்கொடுமைகள் பற்றி குறிப்பிடும்படியாக எந்த செய்தியையும் பதிவு செய்யவில்லை. இவற்றையெல்லாம் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துள்ளன. ஆனால் கேரளாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கான எதிர்வினையாக தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சம்பவங்களை மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை விரிவாக எழுதி தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் போக்கு இப்பத்திரிகைகளிடம் உள்ளது. (கேரளத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்களையும், தமிழ்ப் பெண்கள் மீது நடந்த வன்முறை வெறியாட்டங்களையும் அனைத்துத் தமிழ் ஏடுகளும் விரிவாக எழுதின. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏடு இவற்றைப் பரவலாக பதிவு செய்து வெளி உலகிற்கு கொண்டு வந்தது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டியுள்ளது.)
சபரிமலைக்குச் செல்லும் தமிழக ஐயப்ப பக்தர்களும், தமிழக வாகனங்களும் தாக்கப்படும் தகவல்கள் கேள்விப்பட்டு தமிழக முதல்வர் கேரள மக்களுக்கு விடுத்த வேண்டுகோளை டிசம்பர் 7ஆம் தேதி இந்து நாளேடு அன்றைய இதழின் ஒரு ஒரத்தில் சிறிய ஒரு பத்திச் செய்தியாக வழங்கியது. ஆனால் டிசம்பர் 25ஆம் தேதி நாளேட்டில் குமுளியில் ஏதோ ஓரிடத்தில் கேரள அதிகாரிகள் ஒரு சிலரும், அங்கே உள்ள ஐயப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்த சிலரும் சின்னமனூரிலிருந்து சென்ற சில தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு செண்டை மேளம் முழங்க, இனிப்பு வழங்கி மாலை போட்டனராம். இதைப் பெரிய நான்கு பத்திச் செய்தியாக Red - Carpet Welcome for Ayyappa devotees across border (எல்லை தாண்டி ஐயப்ப பக்தர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு) என்று தலைப்பிட்டு இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக ஐயப்ப பக்தர்கள் மலையாளிகளால் தாக்கப்பட்ட சம்பவங்கள் செய்தியாகாமல் அல்லது கவனிக்கப்படாத சிறிய செய்தியாகவும், தமிழகத்தைச் சேர்ந்த பத்து ஐயப்ப பக்தர்களுக்கு மலையாளிகள் வாழ்த்துச் சொன்னதும், வரவேற்றதும் அனைவரது கவனத்தை ஈர்க்கும் பெரிய செய்திகளாகப் போட்டு மலையாளிகளைப் பற்றிய நல்ல பிம்பத்தை உலகுக்கு எடுத்துரைக்க இந்து ஏடு எல்லா வகையிலும் முயற்சி எடுக்கிறது.
தேனி மக்கள் மீது தமிழக காவல்துறையின் அத்துமீறல்கள்
தென்தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை கேரள நயவஞ்சகர்களால் எங்கு இடிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்ச உணர்விலும், தங்களுக்கான எதிர்காலம் முற்றிலுமாக கேள்விக்குறி ஆகிவிடுமே என்ற ஆதங்கத்திலும் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் அமைதி வழியில் அறப்போர் புரிய திரண்டு வந்த தேனி மாவட்ட மக்களை தமிழக காவல்துறையே விரட்டி விரட்டி அடித்தது. அவர்கள் மீது தடியடி நடத்தி, கிராமப்புற விவசாயப் பெண்கள் மற்றும் அப்பகுதி தமிழ் இளைஞர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியது. தேனி மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று அமைதியாகப் போராடும் மக்களைத் தொடர்ந்து மிரட்டும் பாணியிலும், அவர்கள் மீது பொய் வழக்குகளைப் புனைந்தும் தமிழக காவல்துறையே மிருகத்தனமாக நடந்த விபரங்களை தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்தும் (காலச்சுவடு போன்ற ஒருசிலவற்றைத் தவிர்த்து), அவ்வப்போது பதிவு செய்துள்ளன. பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு சற்றும் குறையாத கொடூரம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது என்று கள ஆய்வு மேற்கொண்ட பல்வேறு குழுக்களும் பதிவு செய்கின்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தவும் தமிழகக் காவல்துறையினர் முயன்று வருவதாக செய்திகள் கசிகின்றன. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தென்தமிழகம் தழுவிய அளவில் எந்த வகையிலும் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் தமிழகக் காவல்துறை உயர் அதிகாரிகள், குறிப்பாக ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், காவல்துறை துணை தலைமை இயக்குனர் மலையாளி ஜார்ஜ் போன்றோர் மிகத் தெளிவாகச் செயல்படுகின்றனர். எந்தச் சூழலிலும் தமிழகத்தில் செயல்படும் ஜாய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடைகள், முத்தூட் நிதி நிறுவனம், கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு, மலபார் கோல்டு போன்ற கேரள வர்த்தக நிறுவனங்களுக்கோ, மலையாளிகள் தமிழகத்தில் வாங்கிக் குவித்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பண்ணைகளுக்கோ எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் தண்ணீர் இல்லாமல் செத்தாலும் பரவாயில்லை, தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகளின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் எந்தச் சேதமும் வரக்கூடாது என்பதில் தமிழர் அல்லாத தமிழக உயர் காவல்துறை அதிகாரிகள் கண்ணும்கருத்துமாக இருந்து செய்படுகின்றனர் என்ற கருத்து ஆங்காங்கே எதிரொலிக்காமல் இல்லை. இதுபோன்ற செய்திகள் இந்த ஆங்கில ஏடுகளில் எங்கேயும் பதிவாவதில்லை.
அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நடைபெறும் அத்துமீறல்களையும் ஏகாதிபத்தியங்களின் ஒடுக்குமுறைகளையும் புட்டுபுட்டு வைக்கும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நாளேடுகள், எங்களது ஆண்டிப்பட்டிக்கு அருகே எம் விவசாயத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்தக் கொடூர தாக்குதல்களை மட்டும் ஏன் இருட்டடிப்புச் செய்கின்றன? யாருக்கு இவர்கள் சேவகம் செய்கிறார்கள்? எங்கள் மண்ணில் விளையும் சோற்றைத் தின்றுவிட்டு எவனுக்கோ விசுவாசமாக இருக்க, உங்களை எங்கள் மண்ணில் ஏன் அனுமதிக்க வேண்டும்? என்ற கேள்வி முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் எங்கள் விவாசயத் தோழர்களுக்கு எழுவதில் தப்பேதும் இல்லையே!
இதுவா கருத்துச் சுதந்திரம்?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் 2006ல் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கிய பின்பும், உச்சநீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும், வல்லுநர் குழுவும் அணையின் அத்தனை அம்சங்களையும் ஆய்வு செய்துவிட்டு, அணை வலுவாகவே உள்ளது என்று உறுதிபடக் கூறிவிட்டன. இவ்வணையை வலுப்படுத்திட தமிழக அரசும், பொறியாளர்களும் அனைத்து நடவடிக்கைகளையும் இதய சுத்தியோடு எடுத்து வருகின்றனர். இவ்வாறு நமக்கான அனைத்து நியாயங்கள் இருந்தாலும், அவற்றை ஓங்கி எழுதுவதற்கு இந்த ஏடுகளிடம் உறுதிப்பாடு துளியளவும் இல்லை. ஆனால் அதே வேளையில் நியாயமே இல்லாத மலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே கட்டுரைகளை வெளியிடுவது குறித்து இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஏடுகள் கொஞ்சம் கூட தயக்கம் காட்டுவது இல்லை; வெட்கப்படுவது கிடையாது; கேட்டால் கருத்துச் சுதந்தரம், பத்திரிகைச் சுதந்தரம், சனநாயகம் என்று வாய்கிழியப் பேசுவார்கள். இந்தக் கருத்துச் சுதந்தரத்தையும் சனநாயகத்தையும் கேரளத்தில் செய்ய வேண்டியதுதானே? 50 இலட்சம் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மலையாளிகளின் சதித்திட்டத்திற்கு துணை போவதும், வெறிபிடித்தலையும் கேரள அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பதும் எப்படிக் கருத்துச் சுதந்தரமாகும்? மலையாளிகளுக்குச் சாதகமாக மட்டுமே செய்திகளை வழங்குவதும், நமக்கான நியாய தர்மங்களைக் குழிதோண்டிப் புதைப்பதும் எப்படி பத்திரிகைச் சுதந்திரம் ஆகும்? தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகளைப் பதிவு செய்யச் சொல்லவில்லை; நடக்கின்ற விஷயங்களை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு நியாயமாகவாவது பதிவு செய்யலாமே!
03.01.2012 செவ்வாயன்று வெளிவந்த இந்து நாளேட்டில் முதல் பக்கத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்து இரண்டு முதன்மைச் செய்திகள் வந்துள்ளன. (மூன்று பத்திகளில் பெரிய தலைப்புகளில் ஏறக்குறைய அரைப்பக்க அளவில்) கேரளத்தின் நியாயத்தை அப்படியே வெளிப்படுத்துவதாக அச்செய்திகள் அமைந்துள்ளன. ஒ.வெங்கடேசன் என்ற தில்லி நிருபர் தந்த செய்திகள். New Dam is the only solution, Says Kerala (புதிய அணை ஒன்றே தீர்வு, கேரளா கூறுகிறது) என்ற முதன்மைச் செய்தியும், Kerala slams attitude of Dam Panel’s Technical Members (உயர்நிலைக் குழுவின் வல்லுநர்களின் போக்கைக் கேரளம் கடுமையாகச் சாடுகிறது) என்ற அதற்கடுத்த செய்தியும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தலைப்புகளைப் பார்த்ததுமே ‘இந்து' பத்திரிகை எந்தப் பக்கம் நிற்கிறது என்று தெரிகிறது? இந்து நாளேட்டின் அப்பட்டமான மலையாளச் சார்பை விளக்க நீண்ட ஒரு கோனார் உரை எழுத வேண்டிய தேவையிருக்காது. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்க்க உச்சநீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் 02.01.2012 அன்று தமிழ்நாடும், கேரளமும் முன்வைத்த வாதப் பிரதிவாதங்கள் பற்றிய செய்தியில் இந்து ஏட்டின் ‘நடுநிலையான' பதிவுதான் இது! அதே நாளில் கேரளாவின் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் என்.கே. பிரேமச்சந்திரன் என்பவரின் The case for a new Mullaperiyar Dam (முல்லாப் பெரியாரில் புதிய அணைக்கான தேவை) என்ற தலைப்பில் (இந்திய முழுமைக்குமான 9ம் பக்கத்தில்) ஒரு கட்டுரையையும் இந்து ஏடு வெளியிட்டுள்ளது. இதேபோன்று கேரளாவில் இவர்கள் செய்ய முடியுமா? செய்யத் துணிவார்களா?
கேரளாவின் வாதத்தை ஒரு செய்திக்கான தலைப்பாக முன்வைக்க நியாயம் இருக்கும்போது, தமிழகத்திற்கான பிரதிவாதத்தை அடுத்த செய்தியாக பதிவு செய்ய மறுக்கும் இந்து பத்திரிகையின் நிலைப்பாட்டை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? இது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு அல்லவா? தமிழகத்தில் தனது தலைமையகத்தை வைத்துக்கொண்டு வெளிப்படையாக மலையாளிகளுக்கான நியாயத்தை மட்டுமே முன்னிறுத்தி, முதல் பக்கச் செய்திகளாக்கி தமிழகத்தின் வாதத்தை இருட்டடிப்புச் செய்வதில் இந்து ராமுக்கு எந்தச் சிரமமும் இல்லை. அவர் பேசும் பத்திரிகைத் தர்மம் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான செய்திப் பதிவுகளை முழுமையாக அனுமதிக்கிறது; அங்கீகரிக்கிறது. (இந்த கேடுகெட்ட ‘இந்து' நாளேட்டின் பத்திரிகைத் தர்மத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் அதே நாள் அதே ஏட்டின் முதல் பக்கத்தில் மேற்சொன்ன இரண்டு செய்திகளுக்கிடையே மற்றொரு முரணான செய்தியும் வெளிவந்துள்ளது. ‘‘பரபரப்புச் செய்திகளைத் தவிர்த்து, நடுநிலைமையோடு செயல்பட மன்மோகன் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறார்'' (Manmohan tells media to promote objectivity, curb sensationalism) என்று பிரதமர் மன்மோகன்சிங் பத்திரிகையாளர் மத்தியில் பேசியதாக இந்த செய்தி! என்ன ஒரு நகைமுரண்! ஆனால் இந்து இதழை கூர்ந்து படிக்கும் நாம் இந்து ராமின் முரண்பாடுகளையும், ஒருதலைப்பட்சமாக எழுதும் நிலையையும், தமிழர் விரோதப் போக்கையும் எண்ணிச் சிரிக்கிறோம்.
அணை பலமாக இருப்பதால், புதிய அணை கட்டுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக அரசு தெட்டத்தெளிவாகத் தெளிவுபடுத்திக் கூறியதையும், 06.01.2012 அன்று உயர்நிலைக் குழுவில் இதுகுறித்த அறிக்கை சமர்ப்பித்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு 07.01.2012, சனிக்கிழமை முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக Demolishes New Dam Idea (புதிய அணை என்ற கருத்தையே உடைத்தெறிந்த தமிழ்நாடு) என்று தலைப்பிட்டு பெரிய மூன்று பத்திச் செய்தியை வழங்கி சரியாகப் பதிவு செய்துள்ளது. ஆனால் 03.01.2012 அன்று கேரளாவிற்குச் சார்பாகவே இரண்டு முதன்மைச் செய்திகளை முதல் பக்கத்தில் விரிவாக எழுதிய இந்து ஏடு, தமிழகத்திற்கான நிலைப்பாடு என்று வரும்போது 07.01.2012 அன்றைய ஏட்டில் 9ஆம் பக்கத்தில் Kerala, Tamil Nadu Take Divergent Stands on New Mullaperiyar Dam (முல்லா பெரியார் புதிய அணை தொடர்பாக கேரளாவும், தமிழ்நாடும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுக்கின்றன) என்று பொத்தாம் பொதுவாக ஒரு தலைப்பில் ஆறு பத்திச் செய்தியாக பதிவு செய்கிறது. கேரளாவின் புதிய அணை கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழகம் ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் சாராம்சம். உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, இரு மாநிலங்களுக்குமான வெவ்வேறு நிலைப்பாடுகள் இங்கே எப்படி வரும்? தமிழகத்திற்கான நியாயத்தைப் பதிவு செய்வதில் அவ்வளவு சிரமம் இந்து நாளேட்டுக்கு! தமிழர்கள் நலன் என்பது இந்து நாளேட்டுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது!
பெரியாறு அணை குறித்த பீதியை மலையாளிகளிடம் கேரள அரசு திட்டமிட்டு உருவாக்குவதன் ஒரு அம்சமாக மலையாள பட இயக்குனர் சோகன்ராய் வரைபடக் கலை யுக்தி மூலமாக ‘அணை 999' என்ற தலைப்பில் அண்மையில் படத்தை எடுத்து திரையிட முனையும்போது, தமிழகத்தில் திரையிட அப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கொதித்துப் போயுள்ள தமிழ்நாட்டின் திரையரங்கங்களில் இப்படத்தை வெளியிட அனுமதி கோரி அவர் உச்சநீதிமன்றத்தை அணுகியது, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசிடம் அவர் நேரில் வந்து விளக்கமளித்தது போன்ற செய்திகளை இந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் பெரிய பெரிய செய்திகளாக்கி வெளியிட்டன. தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடும் தமிழ் மக்களிடம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிற மாதிரி இதுபோன்ற சோகன்ராய்களின் வன்மம் நிறைந்த, வக்கிரச் செயல்களைக் கண்டித்து எழுதும் திராணியற்றுப் போன இந்த ‘நடுநிலை ஏடுகள்' கருத்துச் சுதந்திரம், பத்திரிகை தர்மம் பற்றிப் பேச என்ன யோக்கியதை உள்ளது?
பிரண்ட்லைன் இதழில் இராமசாமி ஐயர் பேட்டி
கடந்த பிரண்ட்லைன் ஆங்கில இதழில் (Any Dam has a life என்ற தலைப்பில் ஒரு பேட்டி, டிசம்பர் 30, 2011) ராமசாமி ஐயர் என்ற ஒரு ஐயனிடமிருந்து விரிவான மூன்று பக்கப் பேட்டி ஒன்றை எடுத்து பதிவு செய்துள்ளனர். தமிழர்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு ஆப்பு வைக்கின்ற, ஆபத்தான, அபத்தமான கருத்துக்களை மிகச்சாதாரணமாக பேசியுள்ளான், இந்த ஐயன்! ‘தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களும் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழில் செய்ய தயாராக இருக்க வேண்டுமாம்! (‘Now that the dam is 116 years old, we can start thinking of phasing it out. That means giving people [of Tamil Nadu] time to get adjusted to this idea and seek alternative sources of economic activity’). உடனடியாக இல்லையென்றாலும் பரவாயில்லை; இன்னொரு பத்தாண்டுளில் இப்பகுதி மக்கள் இதற்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தயாராகிக் கொள்ள வேண்டும்' என்ற அறிவுரையை நமக்கு முன்மொழிந்துள்ளார், இந்த அறிவாளி ஐயர்! அணையை இடிக்கலாம் என்ற கேரளாவுக்கு ஐடியா கொடுக்கவும், ஐந்து மாவட்டத் தமிழ் மக்களும் மாற்று வாழ்வாதாரங்களை நோக்கி தயாராக கால அவகாசம் கொடுக்கவும் இந்த ஐயர் யார்? இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது?
தண்ணீர் பிரச்சனைகளில் இந்த ஐயர் வல்லுநர் என்றால், முல்லைப் பெரியாறு அணையின் பலம், பலவீனம், அணையின் உறுதித் தன்மை, அதன் தண்ணீர் கொள்ளளவு, அணையின் கீழ்மட்டக் கட்டுமானம், மேல்மட்ட அகலம், சிற்றணையின் ஸ்திரத்தன்மை, கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசு இந்த அணைகளைப் பலப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், இவை தொடர்பான நமது பொறிஞர்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து கருத்துக்களை விஞ்ஞானப்பூர்வமாகவும், அணை தொடர்பாக பொறியியல் ரீதியான தர்க்க வாதங்களையும் முன்வைக்கலாம். அதன் அடிப்படையில் தமிழகத்தின் நியாயங்களை நிராகரிக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு, அணைக்குப் பின்னால் உள்ள அரசியலை மட்டுமே (உம்மன்சண்டி அச்சுதானந்தன் போலவே) பேசுவதற்கு இவரை யார் அழைத்தது? இவர் முன்வைக்கும் அனைத்துக் கருத்துக்கள் அத்தனையும் தமிழர் நலனுக்கு எதிரான அரசியலாகும்; மலையாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாடே. ‘வல்லுநர்' என்ற போர்வையில் இப்படிப்பட்ட தமிழர் விரோத அரசியலைப் பேச பிரண்ட்லைன் தளம் அமைத்துக் கொடுக்கிறது. இந்திய அளவில் கேரளத்திற்கான நிலைப்பாட்டை வலுப்படுத்தத் தேவையான ஏற்பாட்டைச் செய்து கொடுக்கிறது, இந்து ஏடு.
‘‘தண்ணீர், பாதுகாப்பு போன்ற விஷயங்களை எல்லாம் தாண்டி கேரளத்திற்கு மிகப்பெரிய அநீதி கடந்த ஒரு நூற்றாண்டாக இழைக்கப்பட்டிருப்பதாக இந்த ஐயர் மலையாளிகளுக்காக மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறார். முல்லைப் பெரியாறு முழுக்க முழுக்க கேரளத்திற்கே சொந்தமாம்! இதில் தமிழ்நாடு உரிமை கொண்டாடுவதில் எந்த நியாயமும் இல்லையாம்! இருந்தாலும் கேரளம் பெரிய மனது பண்ணி புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதாகத்தான் கூறுகிறார்களாம்' என்றெல்லாம் கேரளத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஐயர், ‘1886 ஆம் ஆண்டைய ஒப்பந்தமே அடிப்படையில் அபத்தமானது!' என்றெல்லாம் உளறுகிறார்.
‘இந்த அணை பாதுகாப்பானது என்று தமிழ்நாடு சொல்லலாம்; ஆனால் மலையாளிகளிடம் எழுந்துள்ள பயம் உண்மையானதாம்! அணை உடைந்தால் கேரளம்தான் முழுப் பாதிப்பையும் தாங்க வேண்டுமாம்! வல்லுநர் குழுவே அணை பாதுகாப்பானது என்று உத்தரவாதம் வழங்கினாலும், மலையாளிகளிடம் எழுந்துள்ள பய உணர்வை எளிதில் போக்க முடியாதாம்! (Whatever the expert committee might certify (about safety), you cannot change the feelings of the people (of Kerala) and they do feel frightened). மலையாளிகளின் இந்த உண்மையான பயத்தை நாம் அனைவரும் அங்கீகரிக்க வேண்டுமாம்! கேரளம் காலகாலமாக தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருப்பதால் இப்போதுள்ள சூழலைப் புரிந்து கொண்டு தமிழகம் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் ஒத்துழைக்க வேண்டுமாம்! முல்லைப் பெரியாறு அணை நிரந்தரமானது அல்ல என்று புரிந்துகொண்டு, மாற்றுத் தொழிலுக்கும், வேறு வாழ்வாதாரத்தை நோக்கியும் புதிய திசையில் தமிழர்கள் செல்ல வேண்டுமாம்! இதுபோன்ற ஏகப்பட்ட விஷயங்களை (விஷங்களை) முத்துக்களாகப் பொழிகிறார், இந்த ஐயர். தமிழர் நலன்களுக்கு எதிராக நிலைப்பாடு எடுப்பதிலும், தமிழர்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் பறிப்பதிலும், அவற்றைக் குழிதோண்டி புதைப்பதிலும் ஐயர்களுக்குத் தான் எவ்வளவு வேகம் என்பதை இந்தப் பேட்டியை வாசிப்பவர்கள் மிக எளிதில் புரிந்துகொள்ளலாம். அந்தப் பேட்டியை சற்று சுருக்கி இந்து நாளேட்டில் ‘இரு மாநிலங்களும் ஒரு நீர்ப்பிரச்சனையும்' என்ற தலைப்பில் நடுப்பக்க கட்டுரையாகவும் (கூதீணி குtச்tஞுண் ச்ணஞீ ச் தீச்tஞுணூ டிண்ண்தஞு, டிசம்பர் 29, 2011) வெளியிட்டுள்ளனர்.
அணை பலவீனமானது என்ற கேரளத்தின் குற்றச்சாட்டு எவ்வளவு பொய்யானது என்பதை அம்மாநிலத்தின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி கேரள உயர் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் சமர்ப்பித்துள்ள அறிக்கையே எடுத்துக்காட்டுகிறது. அதனை இந்த ஐயர் படித்திருக்க நியாயமில்லை. ‘‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்துக்கும் அணையின் பாதுகாப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அணை உடைந்தாலும் அதன் நீர் அதற்குக் கீழ் உள்ள இடுக்கி, செறுதோணி, குளம்மாவு அணைகளுக்குப் போய்ச் சேரும். இந்த அணைகள் அந்தத் தண்ணீரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றவையாகும். செறுதோணி அணையின் நீரைத் திறந்துவிட்டால் நேராக அரபிக்கடலுக்குச் சென்றுவிடும்'' என்று தண்டபானி தனது அறிக்கையில் சமர்ப்பித்துள்ளார். கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரைக் கொண்ட ஆயமும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துகள் திருப்திகரமாக இருந்தன என்றும் குறிப்பிட்டுள்ளது. இதையெல்லாம் இந்த ஐயர் எவ்வளவு வசதியாக மறந்துவிட்டுப் பேசுகிறார்!
முல்லைப் பெரியாறு அணை உடையும் என்று மலையாளிகளிடம் அண்மையில் எழுந்துள்ள அச்ச உணர்வு திட்டமிட்டு அங்குள்ள அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது என்பது ராமசாமி ஐயர் போன்றோருக்குத் தெரியாததல்ல. அனால் தமிழர்களுக்கான வாழ்வாதாரமாக அமைந்துள்ள இந்த அணையை உடைக்க வேண்டும் என்ற ஒரு பொதுக் கருத்தை இந்தியா முழுக்க ஆங்கில ஊடகங்கள் மூலமாக இவர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். Economic and Political Weekly, Tehelka போன்ற வார ஏடுகளிலும், Down To Earth போன்ற சுற்றுச்சூழல் இதழ்களிலும் இந்த விஷமப் பிரச்சாரத்தை மலையாள எழுத்தாளர்கள் இதுபோன்ற ஐயர்கள் ஐயங்கார்களின் ஆதரவோடும், அனுசரணையோடும் மிகத்தீவிரமாக கொண்டு சென்று கேரளாவிற்கான நியாயத்தை இந்திய அளவில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். திட்டமிட்டு ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் தங்களுக்கான ஊடகத் தளத்தைக் கொண்டு அவர்களால் ஊதிப் பெரிதாக்க முடிகிறது. கடந்த பல ஆண்டுகளாக இதற்கான வலுவான தளம் இந்திய அளவில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
பால் சக்காரியா போன்ற மனசாட்சி உள்ள ஒன்றிரண்டு மலையாளிகளின் குரல்கள் மட்டுமே இந்தப் பிரச்சனையில் உண்மையின் பக்கம் நின்று மாறி ஒலிக்கின்றன. ‘‘கேரள அரசியல்வாதிகளும், மலையாள ஊடகங்களும் மலையாளிகளிடம் உருவாக்கி வைத்துள்ள மாஸ் ஹிஸ்டீரியாவின் (கும்பல் மனோபாவத்தின்) வெளிப்பாடுதான் முல்லைப் பெரியாறு பிரச்சனை'' என்று ஆனந்த விகடன் இதழுக்கு (28.12.2011) அளித்துள்ள பேட்டியில் இலக்கியவாதியும், சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளருமான பால் சக்காரியா இந்த உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். அதோடு அவர் நிற்கவில்லை. ‘‘40 நதிகள் ஓடும் கேரளத்தில் வெறுமனே 8 விழுக்காடுத் தண்ணீரைத் தான் மலையாளிகள் பயன்படுத்துகிறோம். வீணாக ஓடி அரபிக் கடலில் கலக்கும் மீதி 92 விழுக்காட்டுத் தண்ணீரில் முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்குச் செல்லும் நீர் கேரளாவிற்கு ஒரு பொருட்டே அல்ல. அதுவும் அந்த நீர்தான் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குச் செல்லும் அரிசி, காய்கறிகள், பால், உணவுப் பொருட்களுக்கான ஜீவநாடி என்பதை மலையாளிகள் நன்றாகவே உணர்ந்துள்ள போதிலும், இவ்வாறு மலையாளிகள் பிடிவாதம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று பால் சக்காரியா கூறுவதற்கு அந்த ராமசாமி ஐயர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
‘மலையாளியாக' சுருங்கிப் போன மனித உரிமைப் போராளி வி.ஆர்.கிருஷ்ண ஐயர்
உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண ஐயர் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தன்னை நூறு சதவீதம் மலையாளியாகக் காட்டத் தயங்கவில்லை; அதற்காக அவர் வெட்கப்படவில்லை; அணையை இடிக்க வேண்டும் என்று வெற்றுக் கூச்சல் போடும் உம்மன்சாண்டி, அச்சுதானந்தன் போலவே இவரும் பேசுவது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது; வருத்தப்பட வைக்கிறது. தனது கருத்துக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் குறித்த ரியோ பிரகடனத்தையும் எடுத்துக் காட்டி, ‘‘முல்லைப் பெரியாறு அணையின் வலு குறித்த ஐயம் எழுந்தாலோ, அவ்வணை இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் எழுந்தாலோ அதனை இடித்து விடுவதுதான் சுற்றுச்சூழலுக்கும் கேரள மக்களுக்கும் பாதுகாப்பானது. இதற்கு அறுதியான முழு அறிவியல் ஆதாரத்தை எல்லாம் கேட்கக் கூடாது'' என்றெல்லாம் கூறுகிறார். எவ்வளவுதான் மனித உரிமைக்காக குரல் கொடுத்தாலும் தன் இனம் என்று வரும்போது, கிருஷ்ண ஐயர், ஐயராகவும் மலையாளியாகவும்தான் இருக்கிறார் என்பதுதான் அடிப்படை உண்மை! நாம்தான் பெரும்பாலான வேளைகளில் இவர்களைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.
இதைவிட ஒருபடி மேலே போய் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த நாராயண குரூப் என்ற மலையாளி, ‘‘கேரள அரசு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும். புதிய நிலைமை எழுந்துள்ளதை கருத்தில் கொண்டு 1886 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட 999 ஆண்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தை கேரள அரசு தமிழகத்தின் கருத்தைக் கேட்காமலே ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துவிட வேண்டும்'' என்று பரிந்துரைக்கிறார். இதுபோன்ற செய்திகளை இந்து நாளேட்டில் இந்தியா முழுவதும் செல்லக்கூடிய பகுதியில் பதிவு செய்துவிட்டு (Intervene in Dam Issue, Krishna Iyer urges PM, அணைப் பிரச்சனையில் தலையிடுங்கள், கிருஷ்ண ஐயர் பிரதமரை வலியுறுத்தினார், டிசம்பர் 11, 2011), தமிழகத்திற்கான நியாயத்தை விளக்கும் நமது வல்லுநர்கள், பொறிஞர்களின் விளக்கங்களையும், கட்டுரைகளையும் (தமிழகப் பொதுப் பணித்துறையில் நிர்வாகப் பொறியாளராக ஓய்வுபெற்ற சி.சுதந்திர அமல்ராஜ் இந்து ஏட்டுக்கு 02.12.2011 அன்று வழங்கிய கருத்துக்களும், தமிழக அரசின் நீர்வளத்துறை ஆலோசகர் மோகன் கிருஷ்ணன் எழுதிய Mullaperiyar Dam is as good as new (முல்லைப் பெரியார் அணை புதியதாகக் காட்சியளிக்கிறது என்ற தலைப்பில் 01.01.2012 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட கட்டுரையும்) தமிழகச் செய்திகளாக மட்டுமே சுருக்கிப் போடுவது என்ன பத்திரிகை தர்மமோ? என்ன நடுநிலையோ?
பலவீனமானது முல்லைப் பெரியாறா? இடுக்கி அணையா?
நிலநடுக்கம் நிகழக்கூடிய பகுதியில் இடுக்கி மாவட்டம் இருப்பதாக கூறும் கேரள அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிடுகிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உடையும் அளவிற்கு வரும் நிலநடுக்கம் இடுக்கி அணையையும் விட்டுவைக்கப் போவதில்லை. ஏனெனில் இடுக்கி அணையை விட முல்லைப் பெரியாறு அணை வலுவாகவும், புதுப்பொலிவோடும் இருப்பதாக வல்லுநர்களே கருத்துத் தெரிவிக்கின்றனர். 1980 முதல் 2001 வரை முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபின், இவ்வணையின் கீழ்மட்ட அகலம் 200 அடி ஆகும். இவ்வளவு அகலமான கீழ்மட்டக் கட்டுமானம் உள்ள அணை உலகிலேயே இது ஒன்றுதான் என்று பொறிஞர்கள் கூறுகின்றனர். எகிப்திலே உள்ள மிகப் பிரம்மாண்டமான அணையான அஸ்வான் அணையின் கீழ்மட்ட அகலம்கூட 116 அடிதான். 1976ஆம் ஆண்டு கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் கீழ்மட்ட அகலம் வெறும் 56 அடிதான். ஆனால் இடுக்கி அணையின் உயரமோ 555 அடியாகும். முல்லைப் பெரியாறு அணையைவிட பல மடங்கு பெரிய அணையான இடுக்கி அணை உடைந்தால் பாதிப்புகள் மிக அதிகமாகும். அப்படியானால் இடுக்கி அணையைத் தான் முதலில் உடைக்க வேண்டும்.
ஒரு வாதத்திற்காக முல்லைப் பெரியாறு அணை உடைவதாக வைத்துக் கொண்டாலும்கூட, அதிலிருந்து வெறும் 8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வெளியேறும். அவ்வாறு வெளியேறும் நீர் நேராக இடுக்கி அணைக்குப் போகும் வகையில்தான் அணையின் அமைப்பே உள்ளது. இடுக்கி அணையின் கொள்ளளவோ 70 டி.எம்.சி. ஆகும். எனவே முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெளியேறும் நீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும். இந்த உண்மை நிலவரங்களை நடுநிலையோடு மக்களுக்குச் சொல்ல இந்த ஆங்கில ஊடகங்கள் ஏன் மறுக்கின்றன?
முல்லைப் பெரியாறு தண்ணீர் முழுவதும் அணையை ஒட்டியுள்ள மிக ஆழமான பள்ளத்தில்தான் விழும். அங்கு எந்தச் சமவெளிப் பகுதியும் இல்லை; குடியிருப்புப் பகுதிகளும் இல்லை. அங்குள்ள மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் அணை உடைந்தால் 35 இலட்சம் மலையாளிகள் பாதிக்கப்படுவார்கள் (அண்மையில் 50 இலட்சம் என்று உம்மன்சண்டி கூறுகிறார்) என்று பீதியை மலையாள அரசியல்வாதிகள் உருவாக்கி வருகிறார்கள். ‘பாதிப்பு ஏற்பட்டால் அணைப் பகுதியில் வசிக்கும் வெறும் 450 குடும்பங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும்' என்று கேரள அரசு பிளீடர் ரோஷன் டி அலெக்சாண்டர் கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி செய்தியாகப் பதிவு செய்துள்ளது. அவர்கள் சொல்வதுபோல 35 அல்லது 50 இலட்சம் பேர் எப்படி மூழ்கடிக்கப்படுவர்? கேரளாவில் ஐந்து மாவட்டங்களைப் பாதிக்கும் அளவுக்கு தண்ணீர் எப்படி வரும்? என்ற அறிவுக்கு ஒவ்வாத கேள்விகளை இந்த ஊடகங்கள் ஏன் எழுப்ப மறுக்கின்றன?
பெரியாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் பெரியாறு அணைக்கு மேலேதான் அமைந்துள்ளன. குமுளி நகரம் கடல் மட்டத்திலிருந்து 3,350 அடிக்கு மேலும், எலாப்பரா நகரம் 4,850 அடிக்கு மேலும் உள்ளன. முல்லைப் பெரியாறு அணையோ கடல் மட்டத்திலிருந்து 2,270 அடியில் கட்டப்பட்டுள்ளது. கீழேயிருந்து தண்ணீர் எப்படி ஆயிரம் அடிகளுக்கு மேல் நோக்கிப் பாயும்? இதையெல்லாம் கேள்வி கேட்காமல் மலையாளிகளின் வாதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வாந்தி எடுத்துவிட்டுப் போவதற்காகவா பத்திரிகைகள் நடத்த வேண்டும்?
உண்மையில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை மலையாளிகளுக்கு ஒரு பிரச்சனையே அல்ல. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதுதான் அவர்களது உள்நோக்கம். இடுக்கி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பெரியாறு அணையை தமிழ்நாடு மேலாண்மை செய்ய உரிமை பெற்றிருப்பது மலையாளிகளால் ஜீரணிக்க முடியவில்லை. இதுதான் பிரச்சனைக்கான அடித்தளம். இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் மலையாளிகள் புதிய அணை கட்டி தமிழர்களுக்குத் தண்ணீர் தரப்போகிறார்களாம்! வேடிக்கையாக இருக்கிறது! கேரளக் காங்கிரஸ் (ஆ) கட்சியின் பாலகிருஷ்ணபிள்ளை பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது கேரள சட்டமன்றத்தில், ‘ஒரு சொட்டு நீரைக்கூட தமிழகத்திற்கு கேரளா கொடுக்காது' என்று கொக்கரித்த போது கேரள ஒட்டுமொத்த சட்டமன்றமும் கரவொலி எழுப்பி ஆமோதித்தது. இதையெல்லாம் பார்க்கும்போது மலையாளிகளிடம் நிலவும் தமிழர் விரோதப் போக்கும், வன்மமும் வெளிப்படவில்லையா? இதைத் தட்டிக்கேட்க திராணி இல்லாத இந்த ஆங்கில ஏடுகள் தமிழர்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்க முனைகிறது; நம்மிடம் எந்த நியாயமும் இல்லை என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. இவையெல்லாம் ‘நடுநிலைமை, நியாயமான செய்திப் பதிவு' என்ற பதாகையின் திரைமறைவில் நடப்பவை!
சிங்கள இனவெறியன் ராஜபட்சேவின் கைக்கூலி இந்து ராம்
2009ஆம் ஆண்டு நடந்த ஈழப்போரின் போது முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் கொடூரமாகக் கொல்லப்பட்டதை உலகின் பல பகுதிகளிலிருந்தும் பத்திரிகைகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்து எழுதியபோது, அப்படுகொலைகளை நியாயப்படுத்தி எழுதியது இந்து நாளேடு! நாஜி இட்லரைவிட கொடூரமான கொலைகாரனான சிங்கள இனவெறியன் ராஜபட்சேவை மிகப்பெரிய சனநாயகவாதியாகவும், அரசியல் சாணக்கியராகவும் தொடர்ந்து சித்திரித்தது இந்தப் பத்திரிகை! இலங்கை இனவெறி அரசுக்குத் துணை நின்று அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனைத்து வகையிலும் துணைநின்ற இந்திய வல்லாதிக்க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, எதையும் எழுதத் துணியவில்லை. ஈழப்பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வடிவமும் செயல்திட்டமும் அமைத்துக் கொடுத்த மலையாள அதிகாரிகளான எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், நிரூபமா ராவ் மேனன், ஐ.நா. அதிகாரி விஜய் நம்பியார் மற்றும் அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் போன்ற தமிழர் விரோதிகளின் சதித் திட்டங்களைக் கண்டித்தும், எதிர்த்தும் ஒரு கட்டுரையோ, செய்தியோ வெளியிடவில்லை இந்தப் பத்திரிகை. (ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையில் மேற்சொன்ன மலையாள அதிகாரிகளோடு கூட்டுச் சதியில் பங்கு கொண்ட இந்து ராம் எப்படி இந்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியும்?)
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின், ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட வன்னி வதைமுகாம்களில் அடிப்படை உரிமைகள் ஏதுமின்றி ஆடுமாடுகள் போல் அடைத்து வைக்கப்பட்ட மூன்று இலட்சம் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள், அவமானங்கள் பற்றியோ, அங்கு தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்தோ, தமிழ்ப் பகுதியில் தொடர்ந்து வரும் அரக்கத்தனமான சிங்களமயமாக்கல் இனவெறி இராணுவ ஆட்சி பற்றியோ எந்தக் கட்டுரையும் இந்து நாளேடு இதுவரை வெளியிடவில்லை. மாறாக சிங்கள இனவெறியன் இராஜபட்சேவை பலமுறை நேர்கண்டு அவனது ஊதுகுழலாகவே செயல்பட்டவர் இந்து ராம்!
இலண்டனிலிருந்து இயங்கும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, நியூயார்க் நகரில் செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு, ஐ.நா. சபையின் மனித உரிமைக் கவுன்சில் போன்ற அமைப்புகளே வன்னி வதை முகாம்களில் நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளன; ஈழத்தமிழர்கள் இலங்கையில் மிகக் கொடூரமாகவும், கேவலமாகவும், இரண்டாம்தரக் குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டபோது, இராஜபட்சே உபசரித்த விருந்தை அவனோடு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, இலங்கை அரசின் ஹெலிகாப்டரிலே வன்னி சென்று, சிங்கள இராணுவப் படையினர் காட்டிய முகாம்களைப் பார்த்துவிட்டு, தமிழகம் வந்து வன்னி முகாம்கள் மிகச் சிறப்பாக இருந்தன என்று நம் காதில் பூ வைத்தவர் இந்து ராம்! இவர்களின் நடுநிலைமையையும், உழைக்கும் வர்க்கத்தின்பால் இவர்களுக்குள்ள நியாய உணர்வையும் பார்த்து தமிழகமே கைகொட்டிச் சிரித்தது! அப்படிப்பட்ட இந்துராம் ஆசிரியராக மேலாண்மை செய்யும் இந்து பத்திரிகையும், அதன் இருவார ஏடான ‘பிரண்ட்லைன்' இதழும் தமிழர்கள் மீது எவ்வளவு வன்மத்தோடு எழுதும் என்பதை இப்போது புரிந்துகொள்ளலாம்.
தமிழர்கள் உரிமையோடும், கண்ணியத்தோடும், மானத்தோடும், மரியாதையோடும், வளமோடும், நமக்கான சூழலில் நல்ல வாழ்வாதாரங்களோடும் வாழக்கூடாது என்று கங்கணங்கட்டி அலையும் இந்து ராம் போன்றோர், நமக்கு எதிராக அரசியல் பொருளியல் பண்பாட்டுத் தளங்களில் திட்டமிட்டு தங்களது வேலைத் திட்டத்தை மிகத் தெளிவாக தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலப் புலமை, பரந்து விரிந்த ஊடகத்தளம், மேட்டுக்குடியினர் மத்தியில் ஏற்கெனவே உருவாக்கி வைத்துள்ள ஆங்கில வாசகர்தளம், ‘பார்ப்பனர் என்ற ஒரே தகுதியிலே' கிடைக்கப் பெற்ற அகில இந்திய பன்னாட்டுத் தொடர்புகள், மத்தியமாநில அரசு அதிகார மையங்களில் செல்வாக்கு, பார்ப்பன பனியா வணிக வட்டங்களின் வலைப்பின்னல்கள் போன்றவற்றை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறார்கள். காலங்காலமாக நம்மை அவர்களுக்கான எடுபிடிகளாகவும், ஏவலாட்களாகவும் வைத்திருக்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள். நமக்கான அரசியல் உரிமைகள் கிடைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நாம் ஒன்று சேரவிடாமல் நமக்குள்ளே மோதல்களை பிரிவினைகளை உருவாக்கி அல்லது இருக்கின்ற சிறுசிறு பிளவுகளை ஊதிப் பெரிதாக்கி பத்திரிகைகளில் அவற்றை வெளியிடுவதை ஒரு யுக்தியாகவும் வைத்துள்ளனர்.
தமிழர்களின் அடிமை மனோபாவம் ஆங்கில ஏடுகளின் மூலதனம்
‘இந்து' பத்திரிகையிலும், ‘பிரண்ட்லைன்' இருவார இதழிலும் இந்திய அகில உலகப் பிரச்சனைகள் குறித்த விரிவான பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவருவதால் தரமான ஏடுகள் என்று ஆங்கிலம் பேசும் மத்திய தர மக்களில் பலர் எண்ணுகின்றனர். இந்து நாளேட்டை கையில் வைத்திருப்பதே அந்தஸ்து என்று கூட சில மெத்தப்படித்த மேதாவிகளும், நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலம் பேசும் ஒரு பெருங்கூட்டமும் புளங்காகிதம் அடைவதுண்டு. இக்கூட்டத்தின் ஆங்கில அடிமைச் சிந்தனையையும், அரைவேக்காட்டு மனோபாவத்தையும் மூலதனமாகக் கொண்டு இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில ஏடுகள் நல்ல வியாபாரம் செய்யும் யுக்திகளை கையாளுகின்றன. இதில் நடுநிலைமை, நியாயமான செய்திப் பதிவு என்று இந்த ஏடுகள் சொல்வது பொய்மையும், பித்தலாட்டமுமே! எந்த மொழியில் எழுதினாலும், எப்படிப்பட்ட பதிவுகளைச் செய்தாலும் நேர்மையும், நியாய உணர்வும், அடிமட்ட மக்களின் நலன் நோக்கிய பார்வையும்தான் பத்திரிகை தர்மத்திற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமே தவிர, தான்தோன்றித்தனமும், ஒருதலைப்பட்சமான பார்வையும், வணிக நோக்கும், மக்கள் விரோதப் போக்கும் எப்படி ஒரு நல்ல இதழுக்கு அழகு சேர்க்கும்? அட்டைப் படமும் தாள்களும் பளபளப்பாகவும், ஆங்கிலத்தில் செய்திகளும் அமைந்தால் மட்டும் போதாது.
இந்து ராமின் முற்போக்கு முகமுடி
மத அடிப்படைவாத, இந்துத்துவ எதிர்ப்பு, மனித உரிமைகள், மதச் சிறுபான்மையினர் உரிமைகள், தனிநபர் சுதந்திரம், சனநாயகம், ஏகாதிபத்திய எதிர்ப்பு, மார்க்சிய சிந்தனை, தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உரிமைகள், பெண்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில் இந்திய உலக அளவில் நடைபெறும் போக்குகள் குறித்தும், அவ்வப்போது ஒருசில கட்டுரைகளைத் தாங்கி இந்து, பிரண்ட்லைன் ஏடுகள் வெளிவருகின்றன என்று எண்ணலாம். முற்போக்குச் சிந்தனை கொண்ட வாசகர்களுக்கு இவ்வாறு கொஞ்சம் தீனிபோட்டுவிட்டு, அதன் வழியாக கிடைக்கப்பெறும் முற்போக்கு முகமுடியை அணிந்து கொண்டு வலம் வருகின்றன, இந்த ஏடுகள்.
உலகமெல்லாம் நடக்கும் போக்குகளுக்கு ஒரு நீதியை வைத்துக்கொண்டு, தமிழர் நலன் என்று வரும்போது முற்றிலுமான எதிர்நிலையை மிகச் சாதுரியமாக கையாளும் போக்கு இந்து இதழுக்குக் கைவந்த கலை! இவ்வாறு உருண்டு பிரண்டு எழுதுவதற்கு மார்க்சியச் சிந்தனைகளையும் துணைக்கு அழைத்துக் கொள்வதுதான் இந்த பூணூல் மார்க்சியவாதியின் வேலை! ‘உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்டு போராட வேண்டும்' என்று குரல் கொடுத்த புரட்சியாளன் கார்ல் மார்க்ஸூக்கும், அவரது சிந்தனைகளுக்கும் கூட இவர்கள் பூணூல் போட்டு அழகு பார்த்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை; இந்தியப் புவிப் பரப்பில் மார்க்சியப் புரட்சிகரச் சிந்தனை சிறிய அளவில் கூட அரும்பிவிடக் கூடாது என்று நாள்தோறும் அதற்காகவே மூளையை கசக்கி மிகக் கவனமாக வேலை செய்யும் இந்த முற்போக்குகள், இந்துத்துவம் பேசும் மதவெறியர்களைவிட ஆபத்தானவர்கள்; அவர்களை விட பல மடங்கு மோசமான பயங்கரவாதிகள்! முன்னவர்களை எளிதில் இனம் காணலாம்; எதிர்த்துக் களம் அமைக்கலாம். ஆனால் இவர்களோ முற்போக்கு, மார்க்சிய சாயம் பூசி வருவதால் நாம் ஏமாந்து போக வாய்ப்புள்ளது.
மேம்போக்காக, யதார்த்தமாக இந்து பத்திரிகையைப் படிப்பவர்களுக்கு இந்த சூட்சுமத்தைக் கண்டுணர பல ஆண்டுகள் ஆகலாம்! இவர்களின் நியாய முகமுடி ஈழப்போரின் போது அப்பட்டமாக கிழிந்து தொங்கியதை தமிழகமே கண்டு காரித்துப்பியது! இவர்களது இந்துத்துவ எதிர்ப்பு காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் சந்தி சிரித்தது! அதே வேலைகளை இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் இந்து ஏடு துணிந்து செய்யத் தொடங்கிவிட்டது. ஈழப்போரில் அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதிகள், தமிழ்த் தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் ஈழப் படுகொலைக்கு நியாயம் கற்பித்த இந்துப் பத்திரிகைக் கும்பல், இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அதேபோன்ற பொய்யான புனைக் கதைகளை அவிழ்த்துவிட முகாந்திரம் தேடி முச்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது.
இந்தியன் முதல் நிலை; தமிழர் இரண்டாம் தரம்
ஆஸ்திரேலியாவிலோ, அய்ரோப்பாவிலோ, சீனாவிலோ தமிழர் அல்லாத வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்தியன் எவனாவது தாக்கப்பட்டாலோ, அடிபட்டாலோ அப்படிப்பட்ட செய்திகளை முதல் பக்கச் செய்திகளாக்கி அல்லது இந்திய அளவிலான செய்திகளாகப் பதிவு செய்து இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்குமாறு செய்வது இவர்களது வேலை. அதுபோன்ற சம்பவங்களில் இந்தியத் தூதரகங்களைத் தொடர்பு கொண்டு உடனே ஏதாவது தலையீடுகளைச் செய்யும் வகையில் பூதாகரமாக செய்திகளாக்கி பரபரப்பாக்கி விடுகின்றனர். ஆனால் மலோசியா, சிங்கப்பூர், அரேபிய நாடுகள் போன்றவற்றில் கூலித் தமிழர்கள் தாக்கப்பட்டாலோ, அல்லது இனவெறியர்களால் அந்த நாடுகளில் நம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டாலோ, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டாலோ சாதாரண செய்தியாகக் கூட இந்த ஏடுகளில் வெளிவராது! அப்படியே அவற்றைப் பதிவு செய்தாலும் அவற்றை மாநிலச் செய்திகளுக்கான பக்கங்களில் ஒரு மூலையில் சிறிய செய்திகளாக்கி, போகிற போக்கில் அவற்றைப் போட்டுவிட்டு போகின்ற மனோபாவம்தான் அவர்களிடம் உள்ளது.
அண்மையில் நடந்த சம்பவம் இந்த கூற்றுக்கு சரியான எடுத்துக்காட்டாக அமையும். சீனாவின் யுவு பகுதியில் இரண்டு இந்தியர்கள் (தமிழர் அல்லாத வேறு மாநிலத்தவர்கள்) ஒருசில சீனர்களோடு அவர்கள் சொந்த தொழிற்போட்டி காரணமாக தாக்கப்பட்டு பணயக் கைதிகளாக விடுதி ஒன்றில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ள செய்தியை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மூன்று நான்கு நாட்களாக இந்து நாளேடு பெரிய தலைப்புச் செய்திகளாக வெளியிட்டு, இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்க அனைத்து வழிகளையும் செய்தது. இதையொட்டி Lessons from Yiwu (யுவுவிலிருந்து படிப்பினைகள்) என்ற தலைப்பில் ஒரு தலையங்கமே இந்து நாளேடு சனவரி 7ம் தேதி தீட்டியது.
Indian Traders Freed after days of Detention in Yiwu (யுவு நகரில் பல நாட்கள் சிறை வைக்கப்பட்ட இந்திய வணிகர்கள் விடுவிப்பு) என்று தலைப்பில் 05.01.2012ம் தேதி தலைப்புச் செய்தியும், In Chinese Trading Town, Disputes and Strains fuel mistrust of India, (சீன வணிக நகரில், வர்த்தக ரீதியான, சர்ச்சைகளும் இறுக்கங்களும் இந்தியாவின் மீது அவநம்பிக்கையை அதிகரிக்கின்றன), என்ற தலைப்பில் அதே நாளில் கடைசிப் பக்கத்தில் கொட்டை எழுத்தில் பெரிய வண்ணப் படத்தோடு வந்த எட்டுப் பத்திச் செய்தியும் இந்து நாளேட்டில் இடம்பெற்றன. இந்தியா சீனா இரு நாடுகளுக்கிடையே நடக்கும் வர்த்தகப் பரிவர்த்தனையில் எழுந்த மோதல்களோ, சர்ச்சைகளோ அல்ல, இந்து நாளேடு குறிப்பிடும் இந்தச் செய்திகள். தனிப்பட்ட இரண்டு கம்பெனிகள், தனிநபர்களுக்கிடையே இருந்த கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த சண்டைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறது. அதேபோல சனவரி 6ம் தேதியிலும் இந்து ஏட்டின் கடைசிப் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக பெரிய எழுத்தில் Indian Traders Face Uncertain Wait as China mulls action (சீனா நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதால் இந்திய வணிகர்கள் நிச்சயமற்ற சூழலில் காத்துக்கிடக்கிறார்கள்) என்று எழுதி, கோடிகோடியாக பணத்தைக் கொட்டி சீனாவில் வணிகம் செய்யும் வடஇந்திய பெரு வணிகர்களின் நிலைக்காக இந்து ஏடு கண்ணீர் வடிக்கிறது; ஒட்டுமொத்த வாசகர்களின் கவனத்தையும் இந்த வட இந்திய வணிகர்களின் தெருச்சண்டையை நோக்கித் திருப்பும் ‘தேசியக் கடமையை' திறம்பட ஆற்றுகிறது.
இதுபோன்ற வேலைகளில் நூற்றில் ஒரு பங்குகூட நம் தமிழர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் முனைப்புக்காட்ட மறுக்கிறதே, இந்து பத்திரிகை! தமிழர்கள் மீது அவ்வளவு வெறுப்பும், எதிர்ப்பும் இந்து ராம் கும்பலுக்கு! இலங்கை இனவெறி கடற்படையால் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பற்றிய செய்திகளை இந்திய வெளியுறவுத் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைகள் என்றாவது பெரிய செய்திகளாக்கி வெளியிட்டதுண்டா? தமிழக மீனவர்களின் உயிரும், வெளிநாடுகளில் வசிக்கும் சாதாரண நம் தமிழ்த் தொழிலாளர்களின் உயிரும் அப்படி என்ன அற்பமாகிவிட்டது?
சனவரி 7ஆம் தேதி இந்து நாளேடு 12 Diamond Traders Return after detention in China (சீனாவில் தடுப்புக் காவலில் இருந்து திரும்பிய 12 வைர வணிகர்கள்) என்று தலைப்பிட்ட படத்துடன் கூடிய ஏழு பத்திச் செய்தியை 13ஆம் பக்கத்தில் (இந்தியா முழுமைக்குமான செய்தி) வெளியிட்டது. இந்தியாவுக்காக போரில் ஈடுபட்டு அல்லது தியாகங்கள் புரிந்து சிறை சென்று திரும்பிய தியாகிகளைப் பற்றிய செய்திப் பதிவோ என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். 2009ஆம் ஆண்டிலே கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள வைரங்களைக் கடத்திய குற்றத்திற்காக சீன அரசு அதிகாரிகள் கைது செய்து சிறை வைத்த மும்பையைச் சேர்ந்த வைர வணிகர்கள் இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெருமுயற்சியில் வெளியே வந்த கதையை விவரிக்கும் பெரிய செய்தி. எதைச் செய்தியாக்க வேண்டும், அதற்கு அன்றைய ஏட்டில் எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்பது அந்தந்த ஏடுகளுக்கு உள்ள உரிமை. இதில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை ஏதும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட சார்புகளையும், விருப்பு வெறுப்புகளையும் தங்களது பத்திரிகை முழுவதும் சுமந்து கொண்டு ‘நடுநிலைமை, சார்பற்ற நியாய நிலை' என்றெல்லாம் இவர்கள் ஏன் பிதற்ற வேண்டும்?
வைரங்களைக் கடத்திய குற்றத்திற்காக சீனாவில் தடுப்பு முகாம்களில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் வடஇந்திய வைர வணிகர்களுக்காக வரிந்துகட்டி பக்கம் பக்கமாக எழுதும் இந்து ஏடு, சோமாலியக் கடற்கொள்ளையர்களால் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதைகளை இன்றும் அனுபவித்து வரும் ஏழு கப்பல் மாலுமிகளை மீட்டுத்தரக் கோரி தூத்துக்குடியில் சனவரி 6ஆம் தேதி மீனவப் பெண்கள் சார்பில் நடைபெற்ற மிகப்பெரிய உண்ணாவிரதத்தை அதற்கு மறுநாள் (சனவரி 7ஆம் தேதி நாளைய) தமிழ்நாட்டுச் செய்தியாக சுருக்கிப் போட்டுள்ளது. வடஇந்திய வைர வணிகர்களுக்கான ஏழு பத்திச் செய்தி 13ஆம் பக்கத்தில் இந்திய அளவிலான செய்தியாகவும், கடத்தப்பட்ட எமது தமிழக மாலுமிகளை விடுவிக்கக் கோரி தூத்துக்குடியில் நமது மீனவப் பெண்கள் நடத்திய உண்ணாவிரதச் செய்தி 4 பத்தியிலான தமிழகச் செய்தியாகவும் இடம்பெறுவதைக் காண்போர் இதற்குப் பின்னால் உள்ள அரசியலைக் கண்டுணராமலா இருப்பார்கள்?
இதில் வேடிக்கை என்னவெனில், 07.01.2012 அன்றைய இந்து நாளேட்டில் The glory and the blemishes of the Indian News Media (இந்தியச் செய்தி ஊடகங்களின் பெருமையும், தவறுகளும்) என்ற தலைப்பில் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமெர்த்தியா சென் எழுதிய முழுப்பக்க கட்டுரையை அவரது படத்தோடு பிரசுரித்துள்ளனர். சனநாயக இந்தியாவிற்கான மிக முக்கியமான சொத்தாக சுதந்திரமான ஊடகத்தைப் பற்றிய அவரது கருத்துக்கள் இதில் இடம்பெறுகின்றன. இன்றைய சூழலில் தரமான இதழியலுக்கு தடையாக இருக்கும் இரண்டு முக்கியமான சவால்களைப் பற்றி அவர் இக்கட்டுரையில் விவரிக்கிறார். துல்லியமாக செய்திகளை வழங்குவதில் எழுகின்ற குறைபாடும், செய்திப் பதிவில் இலைமறை காயாக இருக்கின்ற சார்புத் தன்மையும் என்ற இந்த இரண்டு சவால்களைப் பற்றி விவரிக்கிறார். எதைச் செய்தியாக்குவது, எவற்றை விடுவது என்ற ஊடகங்களின் ஊசலாட்டத்தில் உள்ள சார்பும், சாய்வும் வர்க்கப் பிரிவினைகளோடு தொடர்புடையதாகவே இருக்கிறது என்று அவர் தெளிவுபடுத்துகிறார். உண்மையில் இந்தியச் சூழலில் அவர் கூறும் வர்க்கப் பிரிவினைகளோடு, இன, மொழி ரீதியாக எழும் பாகுபாடுகளும் இதுபோன்ற ஊடகச் சார்பு நிலையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன என்பதுதான் யதார்த்தம். யாருக்குப் பொருந்துகிறதோ பொருந்தவில்லையோ, இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்து ஏட்டுக்கு இது அப்படியே பொருந்தும்!
நாம் என்ன செய்ய வேண்டும்?
நடுநிலை வேடம் போட்டு தமிழர் எதிர் நிலையை எடுத்து தொடர்ந்து நம் நலன்களுக்கு எதிராக எழுதி வரும் இந்த ஏடுகளின் போக்கைக் கண்டித்தோ, எதிர்த்தோ தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் கட்சிகள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் எதுவும் செய்வதில்லை. குறைந்தது ஆசிரியர் கடிதங்கள் வாயிலாகக் கூட நமது எதிர்ப்பைப் பதிவு செய்வது கிடையாது. (ஈழப் பிரச்சனைக்குப் பின், இந்து ஏடு படிப்பதையே நம்மில் பலரும் விட்டுவிட்டோம் என்பது நல்ல அம்சம்). ஆனால் நம்முடைய மவுனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மலையாள ஆங்கில பத்திரிகையாளர்களும், ‘இந்து' ராம் போன்ற பூணூல் புரட்சியாளர்களும் தமிழர் நலன்களுக்கு எதிராக எழுதுவதைத் தங்கள் பணியாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?
* ‘முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் ஆங்கில ஏடுகளுக்கு மதுரையிலும், சென்னையிலும் என்ன வேலை? என்ற கேள்வியை நம் மக்கள் மத்தியில் எழுப்ப வேண்டும்.
* டைம்ஸ் ஆப் இந்தியா, இந்து போன்ற ஆங்கில பத்திரிகைகளின் அப்பட்டமான மலையாளச் சார்பு, தமிழர் விரோத போக்கைக் கண்டித்து, தமிழர் நலனில் அக்கறையோடு போராடும் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் வெளிப்படையாக இப்பத்திரிகைகளுக்கு எதிராக அறிக்கைகள் விடவேண்டும்; அவற்றுக்கு பேட்டிகள், செய்திகள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். நமக்கான நியாயத்தைகூட எழுதாதவர்களுக்கு நாம் ஏன் செய்தி தர வேண்டும்; நம்மை வைத்து அவர்கள் பிழைப்பு நடத்த நாம் ஏன் அனுமதிக்க வேண்டும்?
* இந்தப் பத்திரிகைகளில் மலையாள நிருபர்களின் ஆதிக்கம், அவர்களது வெளிப்படையான தமிழர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து அப்பத்திரிகை அலுவலகங்களுக்கு முன் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள் நடத்த வேண்டும்;
* தமிழக அரசு இந்த ஏடுகளுக்குத் தரும் விளம்பரங்கள், சலுகைகளை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு நிர்பந்தம் தரவேண்டும்; நமது வரிப்பணத்தில் இதுபோன்ற பத்திரிகைகளுக்கு ஏன் விளம்பரங்களும் சலுகைகளையும் வழங்க வேண்டும்?
* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் இந்தப் பத்திரிகைகளின் மலையாள ஆதரவுப் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் வலுவான கருத்துப் பரப்பல் செய்ய வேண்டும். குறிப்பாக, தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் போன்றவை மதுரையில் செயல்படும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை அலுவலகங்களுக்கு எதிரே அறவழியில் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். இப்பத்திரிகைகளின் அப்பட்டமான தமிழர் விரோத போக்கைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இப்பத்திரிகைகள் பேசும் ‘போலியான நடுநிலை' முகமுடியை நம் மக்கள் முன் கிழித்து எறிய வேண்டும்.
* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அணை என்பதைத் தாண்டி, இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற விவாதம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லப்பட்டு, அதிகமாக தமிழர்கள் வசிக்கும் இடுக்கி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கப்பட்டால்தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு! அதை நோக்கிய நகர்வுகளே இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்!
- ம.பிரிட்டோ, திருநெல்வேலி (