பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வேடிக்கையான வாதங்களை எல்லாம் முன்வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் முலாயம், லல்லு பிரசாத் போன்றவர்கள். எங்கே இது நிஜமாகிவிடுமோ என்கின்ற பதட்டம் அவர்களது பேச்சுக்களில் தெரிகின்றது.                      'மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்குத்தான் பெண்கள் போட்டி என்கிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண்களில் பலர், அது பொதுத் தொகுதியானாலும் மீண்டும் அங்கேயே அடுத்தப் பொதுத் தேர்தலிலும் போட்டியிடவே விரும்புவார்கள். கட்சித் தலைமையும் அவர்களுக்கு அந்த வாய்ப்பை அளிக்கும். இதனால் நாளடைவில் ஆண்களின் பிரதிநிதித்துவமும் குறையக் கூடிய வாய்ப்புண்டு' என்றொரு சகிக்க முடியாத அளவு முட்டாள்தனமான ஒரு கருத்தை முலாயம் கூறியிருக்கின்றார். (தினமணி, 15.3.10).

mulayam_lalu பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதால் ஆண்களுக்கு பிரதிநிதித்துவம் குறைந்து போய்விடும் என்கின்ற கருத்தை எப்படிச் சுற்றி வளைத்துச் சொன்னாலும் அது ஆணாதிக்க சிந்தனை என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போதைய மக்களவையில் 59 பெண்கள் மட்டுமே இருக்கின்றனர். மொத்த மக்களவையின் பலத்தில் வெறும் 10.8% மட்டுமே. 2004 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவையில் வெறும் 45 பெண்கள்தான் இருந்தனர். அதாவது வெறும் 8% மட்டுமே. இந்த எண்ணிக்கையிலோ அல்லது வீதத்திலோ முந்தைய மக்களவைகளில் பெரிய மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. கடந்த அறுபது ஆண்டுகளாக ஆண்கள் சற்றேறக்குறைய 90% பேர் மக்களவையில் இருந்திருக்கிறார்கள். நாடு முழுவதும் இருக்கும் சட்டமன்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் சராசரியாக 87% பேர் ஆண்களாகவே இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஆண்களின் பிரதிநிதித்துவம் என்று பேசுவதே அபத்தம். இந்த அவைகள் ஆண்களின் அவைகளாகவே இருந்திருக்கின்றன. ஏதோ போனால் போகிறது என்று பெண்களையும் (கறிவேப்பிலை போல்) போட்டியிட அனுமதிள்ளார்கள். வெற்றி பெறவும் அனுமதித்துள்ளார்கள். அதிலும் ஏற்கனவே எம்பியாக இருந்த ஆண்களின் மரணத்தால் அவர்களது மனைவிமார்கள் அல்லது பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள்தான் கணிசமானவை என்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அவர்கள் பெண்கள் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் அல்ல; பதவியிலிருந்த ஆண்களின் உறவினர்கள் என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள்.

மக்களவையில் இடதுக்கீட்டிற்குப் பின் பெண்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 181 ஆக உயரும். முலாயமின் வாதம் என்னவென்றால், பெண்களுக்கு நிரந்தரமாகக் குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படப் போவதில்லை; சுழற்சி முறையில் ஒவ்வொரு தேர்தலுக்கும் பெண்கள் போட்டியிடும் தொகுதிகள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு முறை வெற்றி பெற்ற பெண்ணுக்கே அந்தத் தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக மாறினாலும் மீண்டும் கட்சிகள் வாய்ப்பளிக்கும் என்பதால் ஆண்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்கிறார். அதாவது, முதல் முறை 33% ஆக இருக்கும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் இரண்டாவது முறை 66% ஆகவும், மூன்றாவது முறை 99% ஆகவும் ஆகிவிடும் என்கிறார். (ஆதாரம்: தி ஹிந்து, 15.3.10).

சரி, அப்படியே நடப்பதாக ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். என்ன குடி முழுகிப் போச்சு? 90% ஆண்கள் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும், 33% அல்லது 66% அல்லது 99% பெண்கள் இருந்தால் எல்லாம் குடிமுழுகிப் போகும் என்கிறாரா? (கொள்கையும், அமைப்பும் மாறாமல் நிரந்தர நன்மை எதுவும் மக்களுக்கு நடக்கப் போவதில்லை என்பது தனி விஷயம்). ஒடுக்குவது ஆணின் உரிமை, அந்த வேலைக்கெல்லாம் பெண்கள் வரக்கூடாது, ஏனெனில், அவர்கள் ஒடுங்கிக் கிடக்க வேண்டியவர்கள் என்கிறாரா? அவர்கள் ஒடுக்குகிறவர்களாக மாறினால் ஆண்கள் அடிமைகளாகக் கிடக்க வேண்டியதுதான் என்கிறாரா? ஆணுரிமை பற்றிப் பேசுகிறாரா? அதனால்தான் இவரும் லாலுவும் சரத்யாதவும் ராம் விலாஸ் பாஸ்வானும் மாயாவதியும் இந்த மசோதாவை ஆதரிக்கும் கட்சிகளில் உள்ள ஆண் எம்பிக்கள் இதை எதிர்க்கிறார்கள் என்கின்றனரா? அவர்கள் உண்மையிலேயே இச்சட்டத்தை எதிர்த்தாலும் அதற்குக் காரணம் சமூகநீதி அல்ல என்பதும், மாறாக ஆணாதிக்க சிந்தனையே என்பதும் வெளிப்படை.

பிற்ப்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆண் வெற்றி பெறும் தொகுதியில் அதே சாதியைச் சேர்ந்த பெண் வெற்றி பெறமுடியாதா? வெற்றி பெறமுடியும் என்கிறார் முலாயம். ஒரு முறை மட்டுமல்ல, பலமுறை வெற்றி பெறமுடியும் என்கிறார். அதனால்தான் ஒரு முறை தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வெற்றி பெறும் பெண் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புவார், அவர் வெற்றியும் பெறுவார் என்கிறார்; அவர் அப்படி நினைப்பதால்தான் ஆண்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று மற்ற கட்சிகளில் உள்ள ஆண்களை இந்த மசோதாவிற்கு எதிராகத் தூண்டிவிட முயற்சிக்கின்றார். அது சரி, பெண்கள் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்றால் எந்தக் கட்சிதான் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாது?

மேலும், பெண்களுக்காக ஒதுக்கப்படும் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டுமானால், அதுவும் ஆண்களை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமானால், அவர் தொகுதிக்கு ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்கின்றவர் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன?

பெண்களுக்குத் திறமை இல்லை, அனுபவம் இருக்காது, நிர்வாகம் கெட்டுவிடும் என்ற பெயரில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை எதிர்க்கும் தரப்பிற்கு முலாயம் தெரிந்தோ தெரியாமலோ தக்க பதிலளித்துவிட்டார். ஒரு முறை ஒரு தொகுதியில் ஒரு பெண் வெற்றி பெற்றுவிட்டால் அவர் மீண்டும் மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெறுவார் என்று அவர் 'அஞ்சுவதன்' பொருள் வேறென்ன? பெண்களுக்குத் திறமை இருக்கின்றது, நிர்வாகம் செய்வார்கள் என்பதுதானே? அதற்கு நம்மிடையே ஏற்கனவே போதுமான அளவு உதாரணங்கள் இருக்கின்றன.

பெண்களும் வேலைக்குப் போவதால்தான் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கின்றது என்று ஒரு கூட்டம் நீண்ட நாட்களாக உளறிக் கொண்டிருக்கின்றது. அதாவது ஆண்கள் மட்டும் வேலைக்குப் போனால் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காதாம். அரசின் முதலாளித்துவ, உலகமயக் கொள்கைகள் காரணமில்லை; வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டிய பெண்கள் வேலைக்குப் போவதால்தான் ஆண்கள் மத்தியில் வேலையற்றவர்கள் இருக்கின்றார்களாம்! முற்போக்கு கண்ணோட்டம் கொண்டவர்கள் எழுப்புகின்ற ஒரு பிரச்சனையை வைத்து ஒரு பிற்போக்குத்தனத்தை நீடிக்கச் செய்யும் சகுனித்தனமான வாதம்! ஒரே நேரத்தில் பெண்களை வீட்டுக்குள் முடக்கிப் போடும், வேலையின்மையை அதிகரிக்கும் மக்கள் விரோதக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு முழுச்சுதந்திரமும் அளிக்கும் வாதம்!

பிற்படுத்தப்பட்டவர்களையும், முஸ்லிம்களையும் வைத்து பெண் விடுதலையை, பெண்கள் மசோதாவை முலாயம் போன்றவர்கள் எதிர்ப்பதும் இந்த ரகம்தான். உண்மையில் இவர்கள் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை எதிர்க்கின்றார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறலாம். நாம் சொல்வதென்ன, அவர்களே அதைத்தான் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கட்சிகள் ஏற்கனவே தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் எவ்வளவு பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் இது மேலும் உறுதியாகிவிடும். 2009 மக்களவைத் தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 28 (5.6%) பேருக்கு வாய்ப்பளித்திருக்கின்றது. 193 தொகுதிகளில் போட்டியிட்ட சமாஜ்வாதிக் கட்சி 15 (7.5%) பெண்களுக்கும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் 3 (10.3%) பெண்களுக்கும், 44 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்டிரீய ஜனதாதளம் வெறும் 2 (4%) பெண்களுக்கும் வாய்ப்பளித்தன. இக்கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் நலன்களுக்காகப் போராடுபவை என்று தங்களைக் கூறிக் கொள்வதால் நிச்சயமாக அப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு அவை வாய்ப்பளித்திருக்கும். ஆனால், இவ்வளவு சிறிய எண்ணிக்கைக்குள் அது எந்த வகையில் மேற்குறிப்பிடப்பட்ட பிரிவுகளின் பெண்களுக்கு அதிகாரமளிப்பதாகக் கருதப்பட முடியும்? (ஆதாரம்: வித்யா சுப்பிரமணியம், தி ஹிந்து, 16.3.10 மற்றும் எகனாமிக் அன்ட் பொலிடிக்கல் வீக்லி, செப்டம்பர் 26, 2009).

தற்போதைய மக்களவையில் மொத்தம் 10.8% பெண் எம்பிக்கள் இருக்கின்றார்கள். அந்த வீதாச்சாரத்தில் கூட இக்கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. கிட்டத்தட்ட பக்கத்தில் வருவது ஐக்கிய ஜனதாதளம் மட்டும்தான். இவர்களின் நோக்கம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்கிற பெயரில் மகளிர் இடஒதுக்கீட்டையே தடுப்பதுதான்.

இவர்கள் கூறும் பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதிலிருந்து இவர்களை யார் தடுத்தார்கள் என்கின்ற கேள்வி ஒரு வகையில் சரியாகத் தோன்றினாலும் அக்கேள்வியைக் கேட்கும் சோனியா காந்தி என்ன செய்திருக்கிறார் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

2009 தேர்தலில் 440 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 43 பெண்களுக்குத்தான் வாய்ப்பளித்தது; 432 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 44 பெண்களுக்கு வாய்ப்பளித்தது. அதாவது சுமார் 10% தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட 56 வேட்பாளர்களில் வெறும் 2 பேர் மட்டுமே பெண்கள் (4%); மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட 82 வேட்பாளர்களில் 8 பேர் பெண்கள் (9.8%). இதுவும் மிகக் குறைவுதான். மக்களவையில் 10.8% பெண் எம்பிக்கள் இருக்கின்றனர் என்கின்ற சராசரிக்கும் குறைவு.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரையில் சோனியா காந்தி நினைத்தால் நடக்காதது எதுவுமில்லை; பாஜகவைப் பொருத்த வரையில், சுஸ்மா ஸ்வராஜ் கட்சியை நிர்ப்பந்திக்கக் கூடிய இடத்தில், கட்சியின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றார். இவர்கள் இருவரும் நினைத்திருந்தால் கூடுதலாக பெண்களுக்கு வாய்ப்பளித்திருக்க முடியும். (வித்யா சுப்பிரமணியம், தி ஹிந்து).

இடதுசாரிக் கட்சிகளுக்கும் கூட இந்த வாதத்தைப் பொருத்த சிலர் முயற்சிக்கக் கூடும். ஆனால், இடதுசாரி பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதத்திற்கும் (50% லிருந்து 62.5% வரை) மற்ற கட்சிகளின் வெற்றி விகிதத்திற்கும் (அதிகபட்சமாக 40% தான்) பெரும் இடைவெளி இருக்கின்றது (பார்க்க: ஆசிரியரின் முந்தைய கட்டுரை, கீற்று.காம்). இருந்தபோதும், அதைக் காரணம் காட்டி மசோதாவிற்கு அவர்களும், காங்கிரசும், பாஜகவும், மற்ற பல கட்சிகளும் அளித்து வரும் ஆதரவைக் குறை கூறுவது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில், அவர்கள் இதுவரை என்ன செய்திருந்தாலும் இச்சட்டம் மக்களவையிலும் நிறைவேறினால் கண்டிப்பாக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெண்களை மட்டுமே நிறுத்தியாக வேண்டும்.

ஆனால், 'பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு டிக்கெட் கொடுப்பதிலிருந்து இவர்களை யார் தடுத்தது என்று கேட்டதற்குப் பதிலாக சோனியா காந்தி 'நாங்கள் அப்பிரிவுகளைச் சேர்ந்த பெண்களை பெரும் எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடச் செய்வோம். மசோதாவை எதிர்ப்பவர்களின் வாதங்களில் விஷயமில்லை என்பதைக் காட்டுவோம்' என்று கேள்வி எழுப்பயிருந்தால் அது மசோதாவை எதிர்ப்பவர்களை வாய்மூடச் செய்திருக்கும் என்று வித்யா சுப்பிரமணியம் கூறுவது மிகச்சரி. புத்திசாலித்தனமான வாதமும் கூட. சொல்வதோடு மட்டுமின்றி செயல்படுத்தினால் அது அப்படிச் சொல்கின்ற கட்சிகளின் வெற்றி வாய்ப்புகளை பெருமளவு அதிகரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

'முஸ்லிம்களை ஒடுக்க சர்வதேச அளவில் சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதிதான் அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கச் செய்யும் இந்த மசோதா.....முஸ்லிம்களில் ஆண் வேட்பாளர்களே வெற்றி பெறமுடியவில்லை என்னும்போது பெண் முஸ்லிம் வேட்பாளர்களால் எப்படி பொதுத் தொகுதிகளில் வெற்றி பெறமுடியும்? அதற்காகத்தான் முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு கேட்டோம்.'

'மூன்று முறை மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்பதால் அவர்களைப் பழிவாங்கவும் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு ஏற்படாமல் தடுக்கவும் காங்கிரஸ் கையாண்ட தந்திரமே இந்த மகளிர் மசோதா.'

'மகளிருக்குப் பிரதிநிதித்துவம் தருவதற்குத்தான் இந்த மசோதா என்று மேலுக்குக் கூறிவிட்டு உள்நோக்கத்துடன் இதை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். இதனால்தான் பாரதிய ஜனதா அவர்களுடன் கைகோர்த்து செயல்பட்டிருக்கிறது' என்றும் ஒரு அரிய சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தொகுதிகளில் முஸ்லிம் ஆண்களாலேயே வெற்றி பெறமுடியாதபோது முஸ்லிம் பெண்களால் எப்படி வெற்றி பெறமுடியும் என்கிற கேள்வி அபத்தமானது. ஏனெனில், முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 14 வது மக்களவையில் 36 ஆக இருந்தது; 15 வது மக்களவையில் 29 ஆகக் குறைந்துள்ளது. எனினும், அவை பொதுத் தொகுதிகள்தான். முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் அல்ல. எனவே, பொதுத் தொகுதிகளில் முஸ்லிம்கள் வெற்றி பெறமுடியாது என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது தவறு. முலாயமிற்கும் இவ்விவரம் தெரியும் என்பதால் வேண்டுமென்றே அவர் பொய் சொல்கிறார் என்றுதான் கருத வேண்டும்.

1977, 1989, 1996 தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றதற்குக் காரணமான முஸ்லிம்களை பழிவாங்கவே காங்கிரஸ் இந்த மசோதாவைக் கொண்டு வந்திருக்கின்றது என்கிற வாதம். காங்கிரஸ் மதச்சார்பின்மையில் போதுமான அளவு உறுதியாக இல்லை என்பதும், அது அடிக்கடி மித இந்துத்துவத்தை ஒரு உத்தியாகப் பயன்படுத்துகின்றது என்பதும், காங்கிரசில் உள்ளவர்கள் எல்லோருமே மதச்சார்பற்றவர்கள் அல்ல என்பதும் தனி விஷயம். ஆனால், 1980, 1984, 1991, 2004, 2009 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு யார் காரணம்? தோல்விக்கு முஸ்லிம்கள் மட்டும்தான் காரணம் என்றால் வெற்றிக்கும் அவர்கள் மட்டும்தானே காரணமாக இருக்க முடியும்? அப்படி வெற்றி பெறக் காரணமாக இருந்த முஸ்லிம்களை காங்கிரஸ் ஏன் பழிவாங்க வேண்டும்? தங்களது எதிரிகளான, தங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களை பழிவாங்க பாஜக இச்சட்டத்தை ஆதரிக்கின்றது என்று சொன்னால் புரிந்து கொள்ளலாம். மேலும், கட்சிகள் வெற்றி பெறுவதற்கு ஒரு சில குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளின் ஆதரவு மட்டுமே போதாது. இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும். தேர்தல் வெற்றி தோல்விகளைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.

காங்கிரசோ, பாஜகவோ, சமாஜ்வாதிக் கட்சியோ அல்லது முதலாளித்துவக் கட்சிகளோ எப்போதுமே தாங்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்த மக்களைப் பழிவாங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. விலை உயர்வு, வேலையின்மை, பட்டினிச் சாவுகள், விவசாயிகளின் தற்கொலைகள், சிறுதொழில்களுக்கு எதிராக பெரும் தொழில்களுக்கு ஆதரவு, பெருமுதலாளிகளுக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் ஆதரவான பொருளாதரக் கொள்கைகள், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடரும் தாக்குதல்கள் போன்றவை அதற்கு எடுத்துக் காட்டுகள்.

இந்திய நலனுக்கு எதிரான அணுசக்தி ஒப்பந்தம் ஒரு அமெரிக்க அல்லது சர்வதேச சதி அல்ல; ஆதலால் முலாயம் அதை ஆதரித்தார். ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஒரு சர்வதேச சதியாம்! இதுவல்லவோ சமதர்மம்! (சமாஜ்வாதி என்றால் சோஷலிசம் என்று பொருள்). மொத்தத்தில் தாங்கள் காங்கிரசிடம் இழந்த முஸ்லிம் வாக்குகளைக் குறி வைத்து முலாயம் திட்டமிட்டு உளறிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்துவிட்டுத்தான் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதும், மசோதாவைத் தூக்கி குப்பைத் தொட்டியில் வீசுவதும் ஒன்றுதான். ஏனெனில், அதற்கு முதலில் பொதுவாகவே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்யும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும். அதற்கு இந்துத்துவ கட்சிகள் ஒப்புக் கொள்ளாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவவாதிகளும் விட மாட்டார்கள். இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம், கிறித்துவர், சீக்கியர் போன்ற மற்ற சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கை எழலாம். இது முடிவில்லாத சிக்கலில் கொண்டு போய்விடும் என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்க முடியாது. எனவே இப்பிரச்சனையை இப்போது எழுப்புவது முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்துத்தானே தவிர, நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றுவதோ, அதிகரிப்பதோ அல்ல.

எப்படியாயினும், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைந்த பட்சம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டுமானால் அது மதச்சார்பற்ற கட்சிகளின் கைகளிலும், முஸ்லிம்களின் கைகளிலும்தான் இருக்கின்றது. மதச்சார்பற்ற கட்சிகள் மேலும் கூடுதலான முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்; அதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்களும் மதச்சார்பற்ற கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். இந்துத்துவ சக்திகளை முஸ்லிம்கள் என்கின்ற அடிப்படையில் எதிர்ப்பதை விடவும் மதச்சார்பற்ற சக்திகள் என்கின்ற அடிப்படையில் எதிர்ப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது ஒரு புறமிருக்க, அது ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்திற்கும் மதிப்பிட முடியாத அளவு பெரும் நன்மையாக அமையும்.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)