சங்கிகளின் பொய்யுரைகளை அம்பலப்படுத்துவோம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி உத்தரப் பிரதேசம் இரண்டாவது இடத்தை பிடித்துவிட்டதாக, பாஜகவினர் சமூக ஊடகங்களில் பொய்ச்செய்தி ஒன்றை பரப்பினர். இதுபோன்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுதான் “குஜராத் மாடல்” என்ற போலி பிம்பத்தை உருவாக்கினார்கள். அந்த பிம்பம் இப்போது சுக்குநூறாக உடைந்துவிட்டதால் “உ.பி. மாடல்” என்ற ஒன்றுக்கும் உதவாத மாடலை போலிச் செய்திகளால் கட்டமைக்க பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன? உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி என்பதற்கான சிறு ஒப்பீட்டை இங்கு காணலாம்.

2024-25 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மதிப்பீட்டின்படி, ஒன்றிய நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப் போகிற தொகை 49,754.95 கோடி ரூபாய். ஆனால் உத்தரப் பிரதேசத்துக்கு கிடைக்கப் போகிற தொகையோ 2,18,816.84 கோடி ரூபாய்.

ஒன்றியத்துக்கு வரியாகச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. ஆனால் உத்தரப் பிரதேசமோ 2.73 ரூபாயாக பெறுகிறது.

ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டின் பங்கு கடந்த 20 ஆண்டுகளில் 5.38% இல் இருந்து 4.18% ஆக குறைந்திருக்கிறது. அதாவது 20 ஆண்டுகளில் 22% இழந்திருக்கிறோம். ஆனால் உத்தரப் பிரதேசமோ 19.79%-இல் இருந்து 17.93% ஆக மட்டுமே இழந்திருக்கிறார்கள். இழப்பு 9% மட்டுமே.

இவ்வளவு அதிகமான நிதியை கால் நூற்றாண்டாக பெற்றுக் கொண்டிருக்கும் உத்தரப் பிரதேசம் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதார நிலைகளில் எவ்வளவு மேம்பட்டிருக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியை விட உ.பி.-யின் தனிநபர் வருமான வளர்ச்சி 2% அதிகமாக இருக்கிறது. உ.பி.-யின் தனிநபர் வருமான வளர்ச்சி இதே வேகத்தில் இருந்தால்கூட தமிழ்நாட்டின் தனிநபர் வருமான வளர்ச்சியை எட்ட இன்னும் 62 ஆண்டுகள் ஆகும். ஏனென்றால் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானத்தை விட உத்தரப் பிரதேசத்தின் தனிநபர் வருமானம் இரண்டு மடங்குக்கு மேல் குறைவாக உள்ளது.

2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.39 லட்சம் கோடி ரூபாய். ஆனால் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கிற உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 22.57 கோடி ரூபாய்தான். 2023-24 நிதியாண்டின் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 28 லட்சம் கோடி ரூபாயை தாண்ட போகிறது. உத்தரப் பிரதேசமோ 24 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே எட்ட போகிறது.

பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) கோட்டிற்கு கீழ் தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் 1.47% மட்டுமே. ஆனால் உத்தரப் பிரதேசத்திலோ 17.40% உள்ளனர்.

தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47.3%. இது ஆண்களை விட 0.1% அதிகம். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் இதில் பாதியாகத்தான் உள்ளது.

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்பதுதான் உலக சுகாதார அமைப்பின் இலக்கே. ஆனால் தமிழ்நாட்டில் 4 மருத்துவர்கள் இருக்கின்றனர். இது ஸ்கேண்டி நேவியன் நாடுகளுக்கு இணையானது. உத்தரப் பிரதேசத்திலோ 2,000 பேருக்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத அவலம் நீடிக்கிறது.

தமிழ்நாட்டுடன் அல்ல, இந்தியாவின் தேசிய சராசரியுடன் கூட போட்டியிட முடியாத நிலையில்தான் உத்தரப் பிரதேசத்தை பாஜக ஆட்சி வைத்திருக்கிறது. ஆனால் போலியான தரவுகளை உருவாக்கி, உயர்ந்த மாநிலம் போன்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள். ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் பெரும் நிதியை வாங்கிக்கொண்டும், அந்த மக்களின் முன்னேற்றத்திற்கு செலவிடாமல், நிதி முறைகேட்டில் பாஜக அரசு ஈடுபடுவதால்தான் வளர்ச்சி தடைபட்டிருக்கிறது என்பதே உண்மை.

- விடுதலை இராசேந்திரன்

Pin It