47 - ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், ஜனவரி 3 முதல் 21 - ஆம் தேதிவரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் தனிநபர் ஒருவர் குறித்த நூல்கள் அதிகமான அரங்குகளில் விற்பனைக்கு இருந்தது என்றால், அது பெரியாரைப் பற்றிய நூல்கள்தான். சுமார் 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில். குறைந்தபட்சமாக ஒரு நூலாவது பெரியார் குறித்து விற்பனைக்கு இருந்தது.

 கடந்த புத்தகக் காட்சி முதல் இந்த ஆண்டு புத்தகக் காட்சி வரையிலான காலத்தில் பெரியார் பற்றிய தலைப்பில் சுமார் 70 நூல்கள் வெளியாகி இருக்கின்றன. 2000 - த்தின் தொடக்கம் வரை, புத்தகக் காட்சிகளில் பெரியார் குறித்த நூல்களை ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான பதிப்ப கங்களே விற்பனைக்கு வைத்திருக்கும். ஆனால், இப்போதோ பெரியார் நூல்களைப் பதிப்பிக்காத பதிப்பாளர்கள் கூட, பிற பதிப்பகங்களிடம் இருந்து பெரியார் நூல்களை வாங்கி அரங்குகளில் பார்வைக்கு வைக்கிறார்கள். பெரியார் நூல்கள் அரங்குகளில் இருந்தால், வாசகர்கள் நிச்சயம் உள்ளே வருவார்கள் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு, இன்றைய இளம் தலைமுறை, பெரியார் நூல்களைத் தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்திருக்கிறது.

 ‘நீங்கள் பெரியாரை நேசிக்கலாம் அல்லது பெரியாரை எதிர்க்கலாம் ; ஆனால், ஒருபோதும் அவரைப் புறந்தள்ள முடியாது’ என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

நன்றி : “முரசொலி” நாளேடு 27-01-2024

ஆகம உருட்டு

 குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக் கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்தி விட்டார் ராஜாஜி.

- பெ.மு. செய்தியாளர்

Pin It