நாவலர் வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர மற்றவை அல்ல என்றார், வள்ளலார் பாடல்களை நேரடியாக கண்டித்து மருட்பா என்றார், பார்ப்பனர்களைக் கடுமையாக சாடும் திருமந்திரத்தையே அருட்பா பட்டியலில் சேர்க்காதவர் அவர், ஆறுமுக நாவலர் கருத்துக்கு எதிராக 1868இல் ‘திருவருட்பா தூசன பரிகாரம்’ எனும் நூலை திருமயிலை சண்முகம் பிள்ளை என்பவர் எழுதி வெளியிட்டார்.

அருட்பா மருட்பா விவாதங்கள் அனல் பறக்கத் தொடங்கின; அடிகளாருக்கு ஆதரவாக அட்டாவதனம் வீராசாமி செட்டியார், இறுக்கம் இரத்தினம் முதலியார், பூவை கல்யாணசுந்தர முதலியார், செய்கு தம்பி பாவலர் உள்ளிட்ட சுமார் 23 பேர் களமிறங்கினர்.

மருட்பாவுக்காக களமிறங்கியவர்களில் திருவாடுதுறை வேதாரண்யம், திருவண்ணாமலை மற்றும் தருமபுரம் ஆதீனங்கள், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உவே சாமிநாத அய்யர், நா. கதிரைவேற் பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் உள்ளிட்ட சுமார் 15 பேர்.Vallalarஉண்மையில் இந்த மோதலின் பின்னணி என்ன? அவற்றை சுருக்கமாக இவ்வாறு பட்டியலிடலாம்.

  • ஆறுமுக நாவலார், கதிரை வேற்பிள்ளை முதலியோர் வள்ளலாரை தனிப்பட்ட முறையில் இழிவு செய்யும் பரப்புரையில் இறங்கினர். அவர் பிறந்த, ‘கருணீகர்’ என்ற பிரிவு சைவத்தில் கீழானது என்று ஜாதிகளின் அடிப்படையிலும் இழிவு செய்தனர்.
  • ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை கடுமையாக விமர்சித்து துண்டுப் பிரசுரங்கள், நூல்கள் எழுதி வெளியிட்டனர்.
  • தன்னை ‘சாமி’ என்றோ, ‘அடிகள்’ என்றோ அழைப்பதை வள்ளலார் விரும்பவில்லை. தனது பாடல் தொகுப்பை வேலாயுத முதலியார் அந்தப் பெயர்களோடு வெளியிட்ட போது அதில், கடும் கோபமடைந்த வள்ளலார், இராமலிங்கம் பிள்ளை என்று மட்டுமே தனது பெயரைப் போட வேண்டும் என்றார். ஆனால் தனக்குத் தானே, ‘சாமி’ என்று தற்பெருமையோடு பெயர்சூட்டிக் கொண்டதாக, கதிரை வேற்பிள்ளை போன்றவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
  • அப்பர், சம்மந்தர், நாவுக்கரசர் போன்றவர்கள் அறிவியலுக்கு எதிரான ‘வித்தை’களைக் காட்டி சைவத்துக்கு இழுத்தது போல வள்ளலாரும் செத்தவரை எழுப்பினார் என்ற கதையும் உண்டு. ஆறுமுக நாவலர், வள்ளலார் மோசடி வித்தைகளை செய்கிறார் என்பதை மட்டும் கண்டித்தார். அதே ‘வேலை’களை செய்த அப்பர் சம்பந்தர்களைக் கண்டிக்கவில்லை.
  • தில்லை தீட்சதர்களுக்கும் வள்ளலாருக்கும் இடையே பல முரண்பாடுகள் உண்டு. சிதம்பரத்தில் நிலையாகத் தங்காமல் அவர் வெளியேறியதற்கு அடிப்படையான காரணம் தீட்சதர்கள் மீது அவர் கொண்டிருந்த மாறுபாடு களும், வெறுப்பும் தான். அதே நேரத்தில் தீட்சதர்களை நேரடியாகக் கண்டித்த ஆறுமுக நாவலரைப் பழிவாங்க, வள்ளலாரை, தீட்சதர்கள் பயன்படுத்த முயன்றனர். சிதம்பரம் பேரம்பலத் தில் ஆறுமுக நாவலருக்கு எதிராக தீட்சதர்கள் திரண்டு, அதில் உரையாற்ற - வள்ளலாரை அழைத்தனர் (1869-ஜூன் 7ஆம் தேதி).
  • பேரம்பலக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை ‘ஃபிரிமேன்’ (Freeman) பத்திரிகை (1869 டிசம். 16) விரிவாகப் பதிவு செய்தது. வள்ளலார் பேசும் போது, “ஆறுமுகநாவலரின் ‘நாவலர்’ பட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். நா + அலர் எனப் பிரித்து பொய்யர்; நாவில் பழி சொல் உடையவர் எனப் பலவாறு பொருள் உண்டு என்று பேசினார். அப்போது ஈசான சிவாச் சாரியார் என்பவர் எழுந்து உங்கள் கருத்துப்படி தான் திருவாவடுதுறை ஆதினம் நாவலர் பட்டம் தந்ததா? என்று எதிர் கேள்வி கேட்டார்.

அப்போது தலைமை தீட்சதர் சபா நடேசர் ஆவேசத்துடன் ஆறுமுகநாவலர் இருக்கும் இடத்துக்குச் சென்று, அவரை இழுத்துக் கொண்டு வந்து நய்யப்புடைப்பதற்கு தாம் விரும்புவதாகவும் மற்றவர்கள் தமக்கு உதவியாய் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆயினும் எவரும் போக வில்லை” என்று அந்த ஏடு பதிவு செய்துள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆறுமுக நாவலர் கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் தீட்சதர், இராமலிங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு தொடர்ந்தார். (தீட்சதப் பார்ப்பனர்களின் பிரித் தாளும் சூழ்ச்சியினை யும் விவாதத்தை வன் முறையாக மாற்ற துடித் ததையும் இதிலிருந்து உணர முடியும்) வழக்குப் பற்றிய முழுமையான சரியான பதிவுகள் இல்லை என்கிறார், ஆய்வாளர் ப. சரவணன். இதில் வள்ளலார் மீது தொடரப்பட்டது மான நட்ட வழக்கு. தீட்சதர்கள் மீது மான நட்டம் மற்றும் அச்சுறுத்தல் வழக்குகள். தீர்ப்பில் நான்கு தீட்சதர்களும் விடுவிக்கப்பட்டனர். வள்ளலாரும் விடுவிக்கப்பட்டார். முதல் எதிரி சபா நடேசர் தீட்சதருக்கு ரூ. 50 அபராதம் தவறினால் ஒரு மாதம் சிறை; தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரோபார்ட்ஸ் (Robarts). தீர்ப்பு வழங்கியது முத்துசாமி அய்யர் என்பது தவறான வதந்தி.

  • முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய சேதி - வழக்கு அருட்பா எதிர் மருட்பா தொடர்பானது அல்ல; மான நட்ட வழக்கு என்பதுதான் உண்மை. ஆனால் வையாபுரிப் பிள்ளை, மா.பொ.சி. மற்றும் குமுதம் ஏட்டில் தொடர் எழுதிய துமிலன் போன்றவர்கள் இராமலிங்கர் எழுதியது அருட்பா இல்லை என்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டதாக கற்பனையான கதைகளை வரலாறுகளாக எழுதி வைத்துள்ளனர். அதுவும் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தனது ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ நூலிலேயே தவறான தகவலைப் பதிவு செய்துள்ளார் மா.பொ.சி.

 நாவலர் என்ற சொல்லுக்கு இராமலிங்கர் தந்த பொருள் விளக்கம் தீட்சதர்கள் தந்த அழுத்தத்தினால் தான்; பேரம்பலக் கூட்டத்தில் நாவலர் சொல்லுக்குப் பொருள் விளக்கம் தருமாறு தீட்சதர்கள் கேட்டதால் அது குறித்து மட்டுமே பேசினார். வேறு எதுவும் ஆறுமுக நாவலர் பற்றி இராமலிங்கர் பேசவில்லை என்றும், ஈசான சிவாச்சாரியார் தன்னை நோக்கிக் கேள்வி எழுப்பிய போதும் வள்ளலார் கண்மூடி அமைதியே காத்தார்’ என்றும் தனஞ்செய இராச சிங்கம் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

 மேலே விவரிக்கப்பட்டது முதற்கட்ட போராட்டம் தான். அதற்குப் பிறகு ஆறுமுக நாவலரின் மாணவர் ந. கதிரைவேற்பிள்ளை இருபது ஆண்டுகள் கழித்து, இப்போராட்டத்தை மீண்டும் 1903இல் தொடங்கினார்.

வள்ளலார் குறித்து கதிரைவேற்பிள்ளை தவறாகப் பல நூல்களை எழுதினார். அதற்காக வள்ளலாரின் தமயன் மகன் வடிவேலுப் பிள்ளை அவர் மீது மான நட்ட வழக்கு தொடர்ந்தார். உ.வே.சாமிநாத அய்யர் மற்றும் கதிரை வேற்பிள்ளையால் சிதம்பரத்தி லிருந்து திரட்டி வரப்பட்டவர்களும் திரு.வி.க.வும் வள்ளலாருக்கு எதிராக சாட்சி கூறினார்கள்.

சாட்சி கூற வந்ததால் திரு.வி.க. தேர்வு எழுத முடியாமல் அவரது உயர்கல்வி தடைபட்டது என்று ம.பொ.சி. இதிலும் உண்மைக்கு மாறான கருத்தை எழுதி பரப்பினார். உண்மையில் கதிரைவேற் பிள்ளைக்கும், வில்வபதி செட்டியார் என்பவருக்கும் நடந்த அடிதடிச் சண்டை தொடர்பான வழக்கில் சாட்சி கூறப் போனதாலேயே திரு.வி.க. தனது உயர்கல்வியைத் தொடர முடியவில்லை.

வழக்கின் தீர்ப்பு கதிரைவேற்பிள்ளைக்கு சாதகமாகவே இருந்தது உண்மைதான்; ஆனாலும் சாட்சியங்களாக வள்ளலாருக்கு எதிராக எழுதப்பட்ட நூல்கள் என்று கதிரைவேற்பிள்ளை முன் வைத்தது அவரே எழுதிய நூல்கள் தான். அவர் சாட்சிக்கு வைத்த பல நூல்கள் அச்சிடப்படவே யில்லை. (உ.ம் - குதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்) மறைமலையடிகளும் செய்கு தம்பி பாவலரும் (பிறப்பால் ஓர் இஸ்லாமியர்). வள்ளலார் பக்கமே நின்று நியாயங்களைப் பேசினார்.

வள்ளலார் தொடங்கிய ஞான சபையில் இணைந்த பலரும் தனது கொள்கைகளுக்கு நேர்மாறாக செயல்படுவதை உணர்ந்த அவர், சபையை இழுத்து பூட்டுப் போட்டு பூட்டி, சாவியை தன்வசம் எடுத்துக் கொண்டார். அவர் ஒளி வடிவத் தில் கடவுளைப் பார்த்ததுக்கூட எதிர்காலத்தில் குத்துவிளக்காக மாறி இந்து மதச் சடங்காகி விடக்கூடாது என்பதற்காக விளக்கு தகரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ஒரு முறை காஞ்சி சங்கராச்சாரியுடன் உரையாடியபோது சமஸ்கிருதமே ‘மாத்ரு பாஷை’ (அனைத்து மொழிக்கும் தாய்) என்று கூறியபோது, அப்படியானால் தமிழ் ‘பித்ரு பாஷை’ (தந்தை மொழி) என்று வாதிட்டு, தமிழின் சிறப்பை விரிவாக விளக்கி வாதம் செய்திருக்கிறார், அடிகளார்.

பூணூல், உச்சிக்குடுமி என்ற பார்ப்பன அடையாளங்களுக்கு ஞானசபையில் இடமில்லை. அதனால் அவரது சீடரான சபாபதி சிவாச்சாரியார் அந்த அடையாளங்களை நீக்கிக் கொண்டார்.

தில்லை நடராசன் கோயிலுக்கு தரிசிக்கச் சென்ற அடிகளார், இரகசிய லிங்கத்தைக் காட்டுமாறு தீட்சதர்களிடம் கேட்க, தீட்சதர்கள், கோயிலுக்குள் உங்களுக்கான இடத்தில் போய் தரிசியுங்கள்; கர்ப்பகிரகம் அருகே வரக் கூடாது என்று கூறினர். சினமடைந்த வள்ளலார், உங்களுக்கு எதிராக ஒரு தலம் உண்டாக்கி, நடராசனையும் அங்கே அழைத்துக் கொள்கிறேன் என்று சபதம் செய்தார். தில்லைக்கு அருகே வடலூரில் தனது சன்மார்க்க சபையை உருவாக்கியதற்கு காரணம் அதுதான் என்கிறார் பு. பாலசுந்தரநாயகர். தனது “இராமலிங்கப் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் - மருட்பா மறுப்பு” என்ற நூலில் இது பதிவாக்கியுள்ளார். திரு.வி.க.வும் தனது வாழ்க்கைக் குறிப்பில் இதைப் பதிவு செய்கிறார். உண்மையில் இது வள்ளலாரை எதிர்த்து எழுதப்பட்ட நூல். அப்படி வள்ளலார் வடலூரில் உருவாக்கிய கட்டிடம் இடி விழுந்து தகர்ந்து விட்டது என்ற செய்தியும் வள்ளலாருக்கு எதிராக மேற்குறிப்பிட்ட நாயகர் தனது நூலில் எழுதினார். அது உண்மையல்ல; அந்தக் கட்டிடம் தாமரை வடிவில் இப்போதும் காட்சியளிக்கிறது. கட்டிடத்துக்கு முன்பு போடப்பட்ட பந்தல்தான் தீப்பற்றி எரிந்தது.

ம.பொ.சி.யும் தில்லை கோயிலில் தீட்சதர்கள் வள்ளலாரை அவமதித்ததற்கு சான்றுகள் இல்லை என்றே எழுதுகிறார். “வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே” என்ற கீர்த்தனை ஒன்றைத் தவிர வேறு சான்றுகள் இல்லை என்று ம.பொ.சி. சாதிக்கிறார். உண்மையில் வள்ளலாரே அருட்பா உரை நடைப் பகுதியில் சிதம்பரம் கோயிலைத் தான் தனது திருச்சபைகளின் வழியாக புதிதாக உருவாக்கினேன்” என்று எழுதியிருக்கிறார். தனது ஞானசபைக்கு அதுதான் உண்மை. சிதம்பரம் என்பதை வலியுறுத்த ‘உத்திரஞான சிதம்பரம்’ என்றே வள்ளலார் அழைத்தார், ம.பொ.சி.யின் ஒரு சார்பு பார்வையினால் இந்த ஆதாரங்களை மறைத்து தனது ‘விபீடண’ சிந்தனையை வெளிப்படுத்துகிறார்.

சமரச சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்ற பெயர் களோடு தொடக்கத்தில் இணைத்திருந்த ‘வேத’ என்ற சொல்லை பிறகு முற்றிலுமாக நீக்கினார்.

வடலூருக்கு பெரியார் ஒருமுறை நேரில் பார்வையிடச் சென்ற போது, அசைவ உணவு உண்போருக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து உள்ளே செல்ல நிர்வாகிகள் அழைத்தும் மறுத்து விட்டார். ஆறாம் திருமுறையில் தேர்வு செய்த பாடல் தொகுப்பை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் பெரியார் வெளியிட்டார்.

தொடர்ந்து ‘ஞானசபை’ வருவதை நிறுத்திக் கொண்ட வள்ளலார் தனது சித்தி விளாகம் குடியிருப்பிலேயே தங்கிக் கொண்டார். எப்போதோ ஒருமுறை வருவதும் சன்மார்க்கிகளைச் சந்திப்பதும் வழக்கமாக்கிக் கொண்டார். இறுதியாக தன் குடிலுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டவர் திரும்பவே இல்லை. (1874-ஜன.30)

விடைபெறும் முன்அவர் “கடை விரித்தேன் கொள்வாரில்லை” என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு வரலாற்றுப் பதிவு இல்லை; செவி வழி செய்தி தான்.

சொந்த சைவ நெறியையே எதிர்த்து மதம், குலம் சார்ந்த ஆச்சாரங்களைப் புறக்கணித்து மனிதர் மீது மனிதர் காட்டும் அன்பு எனும் ஜீவகாருண்யமே கடவுள் என்று பறைசாற்றி கோயில், சிலை, ஆகமம், சடங்குகளைப் புறக்கணித்து காவி உடைக்கு மாற்றாக வெண்ணிற உடை தரித்து பார்ப்பன வேத அடையாளங்களை நீக்கி கோயில் என்ற நிறுவனத்தைப் புறக்கணித்து புலால் மது அருந்தாத எந்த ஜாதியும் நேரடியாக ஒளி வடிவ கடவுளை வணங்கலாம் என்ற சமத்துவத்தை உருவாக்கி அர்ச்சகர் எனும் இடைத்தரகர்களை ஒழித்து வாழ்ந்து காட்டிய வள்ளலார் ஒரு புரட்சித் துறவி! பார்ப்பன எதிர்ப்பு மரபின் வரலாற்றுத் தொடர்ச்சி!

ஆதார நூல்கள் :

1)           இராமலிங்க அடிகள் திருவரலாறு - ஊரன்அடிகளார்

2)           அருட்பா × மறுட்பா - பா.சரவணன்.

3)           தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் - இரு நூற்றாண்டு வரலாறு - பேராசிரியர் அருணன்

4)           வடலூரும் ஈரோடும் - திருக்குறள் முனுசாமி

5)           வள்ளலாரின் ஆறாம் திருமறை பாடல்தொகுப்பு - குடி அரசு வெளியீடு

6)           திரு.வி.க. வாழ்க்கை குறிப்புகள்

7)           ஆறுமுக நாவலர் சரித்திரம் - கைலாசப் பிள்ளை

8)           வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - மா.பொ.சி

9)           கா.சுப்பிரமணியப் பிள்ளை இலக்கிய வரலாறு.                                  

(நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It